மேதகு அதிபர் தோ லாம் அவர்களே,

இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்டப் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

சின் சாவ்!

அதிபர் தோ லாம் அவர்களின் இந்திய வருகையை முன்னிட்டு, அவரை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வியட்நாம் அதிபராகப் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள்ளேயே, உயர்மட்டக் குழுவினர் மற்றும் பல வணிகத் தலைவர்களுடன் அவர் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பது, இந்திய-வியட்நாம் உறவுகளுக்கு அவர் அளிக்கும் முன்னுரிமையைச் சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, அவர் தனது இந்தியப் பயணத்தைப் புத்த கயாவிலிருந்து தொடங்கியது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நாகரிக மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. அவரது இந்த வருகை மற்றும் எங்களது ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம், இருதரப்பு நன்மதிப்பை உறுதியான பலன்களாக நாங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

 

நண்பர்களே,

இந்தியா-வியட்நாம் இடையிலான கூட்டு செயல்பாடுகளில், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த ஆண்டு, இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதத் தடயங்கள்  வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டபோது, வியட்நாம் மக்கள் தொகையில் சுமார் பதினைந்து சதவீதத்தினர், அதாவது ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் அந்த  நினைவுச் சின்னங்களுக்கு தங்கள் மரியாதையைச் செலுத்தினர். நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக, வியட்நாமில் உள்ள 'மை சன்'  மற்றும் 'ஞான் கோபுரங்கள்'  ஆகிய பண்டைய சாம்  நாகரிகக் கோயில்களைப் புனரமைக்கும் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இப்போது சாம் நாகரிகத்தின் கையெழுத்துப் பிரதிகளை மின்மயமாக்க உள்ளோம், இதன் மூலம் இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க முடியும்.

நண்பர்களே,

பத்தாண்டுகளுக்கு முன்பு, நான் வியட்நாம் சென்றிருந்தபோது, ஆசியான்  நாடுகளில் இந்தியாவின் முதல் 'விரிவான உத்திசார் கூட்டாளி'யாக  வியட்நாம் உருவெடுத்தது. அதன்பிறகு, நமது உறவுகள் விரைவான மற்றும் விரிவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. நமது நாகரிகத் தொடர்புகளுடன் இணைந்து, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளிலும் நமது ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது.

இந்த வலுவான அடித்தளத்தின் மீது நின்று, இன்று நமது உறவை 'மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசார் கூட்டாண்மை'  என்ற நிலைக்கு உயர்த்துகிறோம். இனி நமது கூட்டாண்மையை இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னெடுத்துச் செல்வோம். கலாச்சாரம், இணைப்பு  மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுடன், பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் விநியோகச் சங்கிலி மீள்திறன் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நமது ஒத்துழைப்பு புதிய உயரங்களை எட்டும்.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இரண்டு மடங்காக அதிகரித்து, 16 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இதனை 2030-ம் ஆண்டிற்குள் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கு இன்று நாங்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இரு நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு அதிகார அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாமில் இந்திய மருந்துப் பொருட்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடைப் பொருட்கள் வியட்நாமிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது இனி மேலும் எளிதாக்கப்படும். மிக விரைவில், வியட்நாம் மக்கள் இந்தியத் திராட்சை மற்றும் மாதுளம் பழங்களைச் சுவைப்பார்கள்; அதேபோல், நாம் வியட்நாமின் துரியன் மற்றும் பம்பளிமாஸ்  பழங்களைச் சுவைப்போம்.

 

மேலும், இந்தியா-ஆசியான் வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இது இந்தியாவிற்கும் அனைத்து ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டில் புதிய ஆற்றலைப் பாய்ச்சும். முக்கியமான தாதுக்கள், அரிய மண் தனிமங்கள்  மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு ஆகியவற்றில் புதிய முயற்சிகள் மூலம், இரு தரப்பிலும் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி மீள்திறனை உறுதி செய்வோம்.

நண்பர்களே,

தொடர்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை நமது கூட்டாண்மையின் முக்கிய தூண்களாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்துத் தொடர்பு தொடர்ந்து விரிவடைந்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நிதித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த, நமது மத்திய வங்கிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்தியாவின் 'யுபிஐ' மற்றும் வியட்நாமின் விரைவான கட்டண முறை ஆகியவையும் விரைவில் இணைக்கப்படும். கூடுதலாக, இரு நாடுகளுக்கும் இடையே மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் நகரங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நாங்கள் ஆழப்படுத்துவோம்.

நண்பர்களே,

இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை’  மற்றும்  பெருங்கடல் தொலைநோக்குப் பார்வையில் வியட்நாம் ஒரு முக்கியத் தூணாகும். இந்தோ-பசிபிக் மண்டலத்தை பொறுத்தவரை நாம் பொதுவான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளோம். நமது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், சட்டத்தின் ஆட்சி, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமை ஆகியவற்றிற்குத் தொடர்ந்து பங்களிப்போம். வியட்நாமின் கூட்டாண்மையுடன், ஆசியான்  அமைப்பில் இந்தியா தனது ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தும்.

மேதகு அதிபர் அவர்களே,

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததற்கும், பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் எங்களுடன் உறுதுணையாக நிற்பதற்கும் வியட்நாமிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

உலகளாவிய கொந்தளிப்பு மற்றும் பொருளாதார சவால்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில், திறமை, சிறந்த நிர்வாகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டு பொருளாதாரங்களாக உருவெடுத்து வருகின்றன. எங்களின் மேம்படுத்தப்பட்ட உத்திசார் கூட்டு செயல்பாடு மூலம், ஒருவருக்கொருவர் விரைவான வளர்ச்சிக்கு உந்துசக்தியாக செயல்படுவோம்.

 

புத்தரின் போதனையில் பிரதிபலிப்பது போல, "நீங்கள் மற்றவருக்காக ஒரு விளக்கை ஏற்றினால், அது உங்கள் பாதையையும் ஒளிரச் செய்யும்." இந்தக் கொள்கையினால் வழிநடத்தப்பட்டு, ஒருவருக்கொருவர் தொலைநோக்குப் பார்வைகளையும் இலக்குகளையும் ஆதரிப்பதன் மூலம், வளர்ந்த நாடுகளாக மாற வேண்டும் என்ற நமது லட்சியங்களை கூட்டாக நனவாக்குவோம்.

நாங்கள் ஒன்றிணைந்து நடப்போம், ஒன்றிணைந்து வளர்வோம், ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை ஹிந்தியில் நிகழ்த்தப்பட்டது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'PM Modi Is One Of Our Greatest Friends': Netanyahu Says Israel Is 'Investing Heavily' In India Ties

Media Coverage

'PM Modi Is One Of Our Greatest Friends': Netanyahu Says Israel Is 'Investing Heavily' In India Ties
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 04, 2026
August 04, 2026

From Auto PLI to Ramsar Sites: How India is Winning on Every Front Under PM Modi