பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை இன்று (07 ஆகஸ்ட், 2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது பங்களிப்பு ஒரே சகாப்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். புகழ்பெற்ற விஞ்ஞானியான எம் எஸ் சுவாமிநாதன் அறிவியலை பொதுச் சேவைக்கான ஊடகமாக மாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டார். நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். நாட்டின் கொள்கைகளை வகுப்பதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளிலும் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது சீரிய சிந்தனைகள் தொடர்ந்து வழிகாட்டியாக அமையும் என்று பிரதமர் கூறினார். எம் எஸ் சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.
தேசிய கைத்தறி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியையொட்டி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் கைத்தறித் துறை வலுவடைந்து வருவதாகவும், அத்துறைக்கு புதிய அங்கீகாரம் கிடைத்து வருவதாகவும் கூறினார். தேசிய கைத்தறித் தினத்தையொட்டி கைத்தறித் துறையைச் சேர்ந்த நெசவாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் கூறினார்.

டாக்டர் எம் எஸ் சுவாமிநாதனுடன் பல ஆண்டுகளாக தனக்கு இருந்த நட்பை பகிர்ந்துகொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் புயல் மற்றும் வறட்சியால் வேளாண்துறை எதிர்கொண்ட கடுமையான சவால்கள் குறித்து அப்போது அவர் நினைவுகூர்ந்தார். தாம் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டபோது பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதன் மாநில அரசின் முன்முயற்சிக்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவித்ததாகவும் திறந்த மனதுடன் அவர் அளித்த ஆலோசனைகள் மற்றும் பங்களிப்பு காரணமாக இத்திட்டம் வெற்றியடைந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனின் ஆராய்ச்சி அறக்கட்டளை மையத்திற்கு தான் சென்றதை பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் எழுதிய ”பசியில்லாத உலகிற்கான தேடல்” என்ற புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக பிரதமர் கூறினார். 2018-ம் ஆண்டு வராணாசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டல மையத்தை தொடங்கி வைத்ததை நினைவுகூர்ந்த அவர் பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனின் வழிகாட்டுதல்கள் விலைமதிப்பில்லாதவை என்று குறிப்பிட்டார். பேராசிரியர் சுவாமிநாதனுடன் தாம் மேற்கொண்ட ஒவ்வொரு கலந்துரையாடலும், புதிய கற்றல் அனுபவத்தை அளித்ததாக அவர் கூறினார். அறிவியல் என்பது வெறும் கண்டுபிடிப்பு மட்டுமின்றி அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம் என்று பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதை நினைவுகூர்ந்த பிரதமர் தனது பணியின் மூலம் அதனை அவர் நிரூபித்ததாக கூறினார். பேராசிரியர் சுவாமிநாதன் வேளாண் துறையில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது மட்டுமின்றி அவரது வேளாண் நடைமுறைகள் விவசாயிகளிடையே மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் தெரிவித்தார். தற்போது நாட்டின் வேளாண் துறையில் பேராசிரியர் சுவாமிநாதனின் அணுகுமுறைகள் மற்றும் யோசனைகள் கண்கூடாக தெரிகிறது என்று அவர் கூறினார். தாய்நாட்டிற்காக அவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக தமது ஆட்சிக்காலத்தில் பேராசிரியர் சுவாமிநாதனுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் தலைமையிலான பிரச்சாரம் உணவு உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக உருவெடுக்கச் செய்யும் என்று கூறிய பிரதமர், பசுமைப்புரட்சிக்கும் அப்பால் அவரது அடையாளம் விரிவடைந்துள்ளதாக கூறினார். விவசாயத்தில் ரசாயன பயன்பாடு அதிகரிப்பு மற்றும் ஒற்றைப் பயிர் முறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் இடையே அவர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்ததாக பிரதமர் கூறினார். சிறுதானிய உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் பணியாற்றியுள்ள அவர் தாய்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் உயர் முன்னுரிமை அளித்து வந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். வேளாண் துறை வளர்ச்சிக்கான குறிக்கோளுடன் அது தொடர்பாக அதிகரித்து வரும் சவால்களுக்கு தீர்வு காண்பதிலும் முன்னுரிமை அளித்து வந்ததாகவும் பசுமைப்புரட்சிக்கான கருத்துகளை அவர் அறிமுகப்படுத்தியதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இயற்கை வளமிக்க கிராமப்புறங்களை உருவாக்குவதற்கான யோசனைகளை முன்மொழிந்துள்ளதாக பிரதமர் கூறினார். சமுதாய விதை வங்கிகள் பருவகாலப் பயிர்கள் போன்ற புதுமையான யோசனைகளையும், அவர் வழங்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சவால்களுக்கான தீர்வுகள் மறக்கப்பட்ட பயிர் வகைகளிலேயே இருப்பதாக அவர் நம்பிக்கை கொண்டிருந்ததையும், வறட்சி மற்றும் உப்புத்தன்மையை தாங்கி வளரக்கூடிய வகையிலான பயிர்களை பயிரிடுவதில் அவர் முழு கவனம் செலுத்தி வந்ததையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். சிறுதானிய பயிர் வகைகளை பயிரிடுவதில் அவர் கவனம் செலுத்தினார். சதுப்புநிலக் காடுகளில் வளரும் தாவர வகைகளில் தரமான மரபணு வகைகள் பருவ நிலையை தாங்கி வளரக்கூடிய பயிர் வகைகளை உருவாக்க உதவிடும் என்று அவர் ஆலோசனை வழங்கியதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இன்று பருவநிலைகளை தாங்கி வளரக்கூடிய பயிர் ரகங்களை உருவாக்குவதில் உலக நாடுகள் முன்னுரிமை அளித்து வருவது பேராசிரியர் சுவாமிநாதனின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பல்லுயிர் பெருக்கம் குறித்து உலக நாடுகள் விவாதித்து வரும் நிலையில் அவற்றை பாதுகாப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் சுவாமிநாதன் “இயற்கையுடன் இயைந்த வாழ்வியல் முறைகள்” குறித்த யோசனையை அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார். இந்த யோசனையை கொண்டாடும் வகையில் இந்த மாநாடு நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்களை கொண்டு வரும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். உள்ளூர் வள ஆதாரங்களை பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு புதிய வாழ்வியல் முறைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று பேராசிரியரின் யோசனைகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். இதனை அடிப்படை நிலையில் செயல்படுத்துவதே பேராசிரியரின் இயற்கையான பண்பாக இருந்தது என்று அவர் கூறினார். புதிய கண்டுபிடிப்புகளின் பயன்கள் விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் சுவாமிநாதன் தொடர்ந்து பணியாற்றி வந்ததாக அவர் கூறினார். அவரது முயற்சிகள் காரணமாக சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளதாக பிரதமர் கூறினார்.

பேராசிரியர் சுவாமிநாதனுக்கு மரியாதை அளிக்கும் வகையில் உணவு மற்றும் அமைதிக்கான எம் எஸ் சுவாமிநாதன் விருது வழங்கப்படுவதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். உணவுப் பாதுகாப்புத் துறையில் தலைசிறந்த பங்களிப்பை அளிக்கும் வளரும் நாடுகளைச் சேர்ந்த தனிநபருக்கு இந்த சர்வதேச விருது வழங்கப்படவுள்ளதாக பிரதமர் கூறினார். உணவு மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகள் தத்துவம் மட்டுமின்றி வலுவான நடைமுறை சார்ந்த ஒன்றாக உள்ளது என்று அவர் கூறினார். உபநிடதங்களிலிருந்து மேற்கோள்காட்டி பேசிய திரு நரேந்திர மோடி உணவு புனிதமான ஒன்று என்றும் அது வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார். எனவே, உணவு வகைகளை ஒருபோதும் புறக்கணிக்கவோ, அவமதிப்பதோ கூடாது என்று எடுத்துரைத்தார். எந்தவொரு உணவுப்பொருளுக்கும் ஏற்படும் தட்டுப்பாடு வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், உலக நாடுகளிடையே பதற்றம் உருவாகும் என்றும் பிரதமர் கூறினார். இன்றைய உலகில் உணவு மற்றும் அமைதிக்கான எம் எஸ் சுவாமிநாதன் பெயரில் வழங்கப்படும் விருதின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். முதலாவது விருதை பெற்றுள்ள நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அடெமோலா அடனெலேவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். தலைசிறந்த விஞ்ஞானியான அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
தற்போது நாட்டின் வேளாண்துறை அடைந்துள்ள சாதனை அளவிலான வளர்ச்சியை கண்டு டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் பெருமிதம் கொண்டிருப்பார் என்று கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, பால், பருப்பு வகைகள் மற்றும் சணல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார். அரிசி, கோதுமை, பருத்தி, பழ வகைகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், மீன் உற்பத்தியில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருப்பதாகவும் பிரதமர் கூறினார். கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளதாக பிரதமர் கூறினார். எண்ணெய் வித்துகளின் உற்பத்தியிலும், சோயாபீன், கடுகு, மற்றும் நிலக்கடலை உற்பத்தியிலும் இந்தியா சாதனை படைத்துள்ளதாக பிரதமர் கூறினார்.

விவசாயிகளின் நலனே நாட்டின் உயர் முன்னுரிமையாக உள்ளது என்றும், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார். விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதிலும் வேளாண் உற்பத்திக்கான செலவுகளை குறைப்பதிலும் புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதிலும் மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
விவசாயிகளின் வளம் என்பதே நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என அரசு எப்போதும் கருதுகிறது என தெரிவித்த பிரதமர், அண்மை ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கொள்கைகள் வெறும் உதவியாக இல்லாமல் விவசாயிகளிடையே நம்பிக்கையை நிலைநாட்டுவதாக உள்ளன என்றார். பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி என்பது நேரடி நிதி ஆதரவு மூலம் சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது என்றும், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது வேளாண்மையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்றும் பிரதமரின் வேளாண் பாசன திட்டம் என்பது பாசனம் தொடர்பான சவால்களுக்கு தீர்வாக அமைகிறது என்றும் அவர் கூறினார். 10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது சிறு விவசாயிகளின் கூட்டு சக்தியை பலப்படுத்துகிறது என்று திரு மோடி உறுதிபட தெரிவித்தார். கூட்டுறவுகளுக்கும், சுயஉதவிக் குழுக்களுக்கும் நிதியுதவி செய்வது கிராமப்புற பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார். இ-நாம் தளம் பற்றி குறிப்பிட்ட திரு மோடி, விவசாயிகளின் விளைபொருட்கள் விற்பனையை இது எளிதாக்குகிறது என்றார். பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டம் என்பது புதிய உணவுப்பதன பிரிவுகள் மற்றும் இருப்புவைக்கும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை அதிகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார். விவசாயம் பின்தங்கியுள்ள 100 மாவட்டங்களை முன்னேற்றும் நோக்கத்துடன் பிரதமரின் தன் தானிய திட்டத்திற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது பற்றி அவர் குறிப்பிட்டார். இந்த மாவட்டங்களில் வசதிகளை வழங்குவதோடு நிதியுதவியும் அளிப்பதன் மூலம் வேளாண்மையில் புதிய நம்பிக்கையை அரசு நிலைநாட்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டின் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினர் மற்றும் அனைத்து தொழில்முறையினரின் பங்களிப்பு மூலமே இந்த இலக்கு எட்டப்படும் என்பதை திரு மோடி எடுத்துரைத்தார். டாக்டர் எம் எஸ் சுவாமிநாதனிடமிருந்து ஊக்கம் பெற்றுள்ள இந்திய விஞ்ஞானிகள் வரலாற்றை உருவாக்கும் மற்றொரு வாய்ப்பை தற்போது பெற்றிருப்பதாக பிரதமர் கூறினார். முந்தைய தலைமுறை விஞ்ஞானிகள் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்த நிலையில், தற்போதைய விஞ்ஞானிகள் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்வதை நோக்கி மாறியிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். பொது சுகாதாரத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட பயிர் வகைகளை அதிகளவில் மேம்படுத்துவதற்கு அழைப்பு விடுத்த திரு மோடி வேளாண்மையில் ரசாயனங்களின் பயன்பாட்டை குறைக்குமாறு யோசனை தெரிவித்தார். இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், இந்த திசையில் மிகவும் அவசரமான, ஆக்கப்பூர்வமான முயற்சிகள் தேவைப்படுகின்றன என்றார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் நன்கு அறியப்பட்டவை என்று கூறிய பிரதமர் பருவ நிலை மாற்றத்தை தாங்கவல்ல பயிர்வகைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம் என்றார். வறட்சியை தாங்குகின்ற, வெப்பத்தை எதிர்க்கின்ற, வெள்ளத்தில் சேதமடையாத பயிர் வகைகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்பதை அவர் எடுத்துரைத்தார். பயிர் சுழற்சி மற்றும் மண்ணுக்கு பொருத்தமான பயிர்வகை ஆகியவற்றுக்கான ஆராய்ச்சியை அதிகப்படுத்துமாறு அழைப்பு விடுத்த திரு மோடி, குறைந்த செலவில் மண் பரிசோதனை கருவிகளை உருவாக்குவதும், தீவிர ஊட்டச்சத்து நிர்வாக தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் அவசியம் என்று கூறினார்.

சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் நுண்ணீர் பாசனத்திற்கான முயற்சிகள் தேவை என்பதை வலியுறுத்திய பிரதமர், சொட்டு நீர் பாசனத்தை மேலும் பரவலாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். செயற்கைக்கோள் தரவு, செயற்கை நுண்ணறிவு, எந்திரக் கற்றல் ஆகியவற்றை வேளாண் நடைமுறையில் ஒருங்கிணைப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்த திரு மோடி, பயிர்களின் விளைச்சல் முன்னறிவிப்பு, பூச்சிகளை கண்காணித்தல், விதைப்பு நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கான அமைப்பு முறையை உருவாக்க இயலுமா என்று வினவினார். வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களுக்கு தொடர்ச்சியாக வழிகாட்டுமாறு நிபுணர்களை பிரதமர் வலியுறுத்தினார். வேளாண் துறை சவால்களுக்கு தீர்வு காண புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏராளமான இளைஞர்கள் பணியாற்றுவது பற்றி குறிப்பிட்ட அவர், அனுபவம் மிக்க தொழில்முறையாளர்களின் வழிகாட்டுதலுடன் இந்த இளைஞர்களால் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகள் தாக்கம் மிக்கவையாக இருக்கும் என்றார்.
இந்தியாவின் வேளாண் சமூகங்கள் வளமான, பாரம்பரிய அறிவுக் களஞ்சியத்தைப் பெற்றுள்ளனர். இந்த பாரம்பரிய நடைமுறைகளுடன் நவீன விஞ்ஞானம் இணைக்கப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த ஞானத்தை உருவாக்க முடியும் என்று பிரதமர் கூறினார். பயிர்வகை பன்மைத்துவம் தேசிய முன்னுரிமை என்பதை கோடிட்டுக்காட்டிய திரு மோடி, இதன் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு தெரிவிப்பது அவசியம் என்றார். பன்மைத்துவத்தின் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதனை ஏற்காததால் உண்டாகும் விளைவுகள் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதில் நிபுணர்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2024 ஆகஸ்ட் 11 அன்று தாம் பயணம் செய்ததை நினைவுகூர்ந்த பிரதமர், வேளாண் தொழில்நுட்பத்தை சோதனை கூடத்திலிருந்து நிலத்திற்கு கொண்டு செல்வதற்கு தீவிர முயற்சிகள் தேவை என்பதை தாம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். 2025 மே, ஜூன் மாதங்களில் வளர்ச்சியடைந்த வேளாண் உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு மோடி, முதல் முறையாக 2,200-க்கும் அதிகமான விஞ்ஞானிகள் குழுவினர் 700-க்கும் அதிகமான மாவட்டங்களில் இந்தத் திட்டத்தில் பங்கேற்றதாக கூறினார். 60,000-க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்றும் இதன் மூலம் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் விவசாயிகள், விஞ்ஞானிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டனர் என்றும் அவர் கூறினார்.
வேளாண்மை என்பது வெறும் பயிர்கள் பற்றியது அல்ல, அது வாழ்க்கை பற்றியது என்று டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் நமக்கு கற்றுத்தந்துள்ளார் என்று திரு மோடி கூறினார். விஞ்ஞானத்தையும், சமூகத்தையும் இணைக்க வேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிட்ட அவர், சிறு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றார். இந்தத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பது முக்கியம் என்று அவர் கூறினார். இந்த கண்ணோட்டத்தை தேசம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் டாக்டர் சுவாமிநாதனின் ஊக்கம் நம் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டும் என்றும் கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த், எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் திருமதி சௌமியா சுவாமிநாதன் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Dr. Swaminathan led the movement to make India self-reliant in food production. pic.twitter.com/5jl9FhduhE
— PMO India (@PMOIndia) August 7, 2025
Dr. Swaminathan went beyond biodiversity and gave the visionary concept of bio-happiness. pic.twitter.com/yLA2MLbaxL
— PMO India (@PMOIndia) August 7, 2025
India will never compromise on the interests of its farmers. pic.twitter.com/WExdyvkLRU
— PMO India (@PMOIndia) August 7, 2025
Our government has recognised farmers' strength as the foundation of the nation's progress: PM @narendramodi pic.twitter.com/m9I3iwlBiT
— PMO India (@PMOIndia) August 7, 2025
Building on the legacy of food security, the next frontier for our agricultural scientists is ensuring nutritional security for all. pic.twitter.com/YFFvD9vwmo
— PMO India (@PMOIndia) August 7, 2025


