அனைத்து நார்டிக் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களே மற்றும் பிரதிநிதிகளே,

ஊடகத் துறை நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!

இன்று இந்தியா-நார்டிக் 3வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவதாக, இந்த உச்சி மாநாட்டை நடத்தியதற்காக நார்வே பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்துள்ள அனைத்து நார்டிக் நாட்டுத் தலைவர்களையும் நான் அன்போடு வரவேற்கிறேன்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பலதரப்புவாதம்  ஆகியவற்றின் மீதான நமது கூட்டு அர்ப்பணிப்பு, நம்மை இயற்கையான கூட்டாளிகளாக மாற்றுகிறது. அதே நேரத்தில், தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் நமக்கு இருக்கும் பொதுவான முன்னுரிமைகள், நமது உறவில் மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால்தான், நார்டிக் நாடுகளுடனான நமது உறவுகளுக்கு கூடுதல் ஆற்றலையும் வேகத்தையும் தருவதற்காக, 8 ஆண்டுகளுக்கு முன்பு நாம் இந்த அமைப்பை உருவாக்கினோம்.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளில், நமது உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் அடைந்துள்ளோம் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், நமது இருதரப்பு வர்த்தகம் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் அதிவேக வளர்ச்சிப் பயணத்தில் நார்டிக் நாடுகளின் முதலீட்டு நிதியங்களும் முக்கியப் பங்காளிகளாக மாறி வருகின்றன. கடந்த தசாப்தத்தில், நார்டிக் நாடுகளிலிருந்து இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் கிட்டத்தட்ட இருநூறு சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளன.

வேகமாக வளர்ந்து வரும் இந்த வர்த்தகமும் முதலீடும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு பங்களித்தது மட்டுமன்றி, நார்டிக் நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகச் சாதகமான பங்காற்றி, ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. இந்த வலுவான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டு, நமது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காகச் சமீபத்தில் பல முக்கிய முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

நண்பர்களே,

கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் பிற ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பு நாடுகளுடன் 'வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை' நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம். மேலும், சில மாதங்களுக்கு முன்புதான், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் பங்காளிகளாக இருக்கும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நாம் வெற்றிகரமாக முடித்துள்ளோம். இந்த லட்சிய வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம், இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு புதிய பொற்காலத்தை நாம் தொடங்கி வைக்கிறோம்.

நண்பர்களே,

இன்று, நாம் இந்தியா-நார்டிக் உறவை 'பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உத்திசார்ந்த கூட்டு செயல்பாடாக' மாற்ற முடிவு செய்துள்ளோம். இந்த பசுமைத் தொழில்நுட்பக் கூட்டுறவின் மூலம், புவிவெப்ப ஆற்றல் மற்றும் மீன்வளத் துறையில் ஐஸ்லாந்தின் நிபுணத்துவம், கடல்சார் பொருளாதாரம் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நார்வேயின் பலம், மற்றும் அனைத்து நார்டிக் நாடுகளின் கடல்சார் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த நிபுணத்துவம் ஆகியவற்றை இந்தியாவின் பிரமாண்டமான சந்தை வாய்ப்புகளோடு நாம் ஒன்றிணைக்கப் போகிறோம். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை நாம் உறுதி செய்ய முடியும்.

மேலும், நமக்கிடையே இந்தத் தனித்துவமான உத்திசார்ந்த கூட்டு செயல்பாட்டை உருவாக்குவதன் மூலம், ஸ்வீடனின் மேம்பட்ட உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் திறன்கள், பின்லாந்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப நிபுணத்துவம், மற்றும் டென்மார்க்கின் சைபர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தொழில்நுட்ப பலம் ஆகியவற்றை இந்தியாவின் திறமைமிக்க மனிதவளத்தோடு நாம் ஒன்றிணைக்க உள்ளோம். இதன் மூலம் உலகிற்கான நம்பகமான தீர்வுகளை நாம் உருவாக்க முடியும்.

நண்பர்களே,

இந்தியா-நார்டிக் கூட்டுறவின் ஒரு முக்கிய தூணாக விளங்குவது நமது விரிவான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் தொடர்புகள் ஆகும். இவற்றை மேலும் வலுப்படுத்துவதற்காக, பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள் மற்றும் புத்தொழில் உள்கட்டமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்த நாம் இணைந்து செயல்படுவோம். ஆர்க்டிக் மற்றும் துருவப் பகுதி ஆராய்ச்சிகளில் நமது ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவோம். அத்தோடு, இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையே திறன் மேம்பாடு மற்றும் திறமை வாய்ந்த மனிதவளப் பரிமாற்றத்திற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குவோம்.

நண்பர்களே,

இன்று, நாம் அனைவரும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். உலகளாவிய பதற்றங்களும் மோதல்களும் நிறைந்த இந்தச் சூழலில், விதிகளின் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கை வலுப்படுத்த இந்தியாவும் நார்டிக் நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும். உக்ரைனாக இருந்தாலும் சரி, அல்லது மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிப்போம்.

பலதரப்பு அமைப்புகளின் சீர்திருத்தம் என்பது அவசியமானது மற்றும் அவசரமானது என்பதில் நாம் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் நமது நிலைப்பாடு தெளிவாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது - அதில் எந்த சமரசமும் இல்லை, இரட்டை நிலைகளும் இல்லை.

மதிப்பிற்குரிய தலைவர்களே,

நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், சில சமயங்களில் நமது இயற்கையான கூட்டுறவைப் பிரதிபலிக்க ஒரே ஒரு வார்த்தையே போதுமானதாக இருக்கிறது. இன்று, நான் "சம்பந்த்" என்ற வார்த்தையைப் பலமுறை பயன்படுத்தினேன். பல நார்டிக் மொழிகளில், "சம்பந்த்" என்ற வார்த்தை தொடர்பு, உறவுகள் அல்லது ஒரு பிணைப்பைக் குறிக்கிறது. இந்தியிலும், "சம்பந்த்" என்ற வார்த்தை இதே அர்த்தத்தைத் தான் கொண்டுள்ளது.

இது வெறும் வார்த்தைகளின் ஒற்றுமை மட்டுமல்ல, இது நமது சிந்தனைகளின் நெருக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நமக்கிடையேயான இந்த உறவை ஒவ்வொரு துறையிலும் நாம் மேலும் ஆழப்படுத்துவோம், அதோடு இந்தியா-நார்டிக் கூட்டுறவைப் பகிர்ந்தளிக்கப்பட்ட வளம், கண்டுபிடிப்பு மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான ஒரு முன்மாதிரியாக மாற்றுவோம்.

மிக்க நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity

Media Coverage

PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 17, 2026
August 17, 2026

India Ascendant: Citizens Hail PM Modi's Vision and India’s Multi-Sectoral Growth