பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காங்டாக்கில் நடைபெற்ற ‘சிக்கிம்@50’ என்ற சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் கருப்பொருள் ‘முன்னேற்றம் இலக்கைச் சந்திக்கும் இடம் - இயற்கை, வளர்ச்சியை மேம்படுத்தும் இடம்’ என்பதாகும். இந்த நிகழ்வில் பேசிய அவர், சிக்கிம் மாநிலத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த சிறப்பு நாளில் சிக்கிம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மக்களின் உற்சாகம், ஆற்றல் ஆகியவற்றை நேரில் காண விரும்புவதாகவும், ஆனால் மோசமான வானிலை காரணமாக, நேரில் வர முடியவில்லை என்றும் அவர் கூறினார். விரைவில் சிக்கிமுக்கு வருகை தந்து மாநிலத்தின் சாதனைகளிலும் கொண்டாட்டங்களிலும் பங்கேற்க இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இன்றைய நாள் என்பது மாநிலத்தின் கடந்த 50 ஆண்டுகால சாதனைகளைக் கொண்டாடும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த பிரமாண்டமான நிகழ்வை மறக்கமுடியாததாக மாற்றிய சிக்கிம் முதலமைச்சரையும் அவரது குழுவினரின் ஆற்றலையும் பிரதமர் பாராட்டினார். சிக்கிம் மாநிலத்தின் பொன் விழா கொண்டாட்டங்களுக்கு அவர் மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்தார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு, சிக்கிம் தனக்கென ஒரு ஜனநாயக எதிர்காலத்தை வரைந்தது எனவும் சிக்கிம் மக்கள் இந்தியாவின் புவியியலுடன் மட்டுமல்லாமல் அதன் ஆன்மாவுடனும் இணைந்திருக்கின்றனர் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். ஒவ்வொருவரின் குரலும் கேட்கப்பட்டு உரிமைகள் பாதுகாக்கப்படும்போது, வளர்ச்சிக்கான சம வாய்ப்புகள் வெளிப்படும் என்ற நம்பிக்கை உருவாகிறது என்று அவர் குறிப்பிட்டார். இப்போது, சிக்கிமில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் நம்பிக்கையும் வலுவடைந்துள்ளது என்று அவர் கூறினார். சிக்கிமின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் இந்த நம்பிக்கையின் விளைவுகளை நாடு கண்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். "சிக்கிம் நாட்டின் பெருமை" என்று அவர் கூறினார். கடந்த 50 ஆண்டுகளில், சிக்கிம் இயற்கையுடன் இணைந்து முன்னேற்றத்தின் மாதிரியாக மாறியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இது பல்லுயிர் பெருக்கத்தின் பரந்த சரணாலயமாக மாறியுள்ளது எனவும் 100% இயற்கை வளத்தைக் கொண்டுள்ள இந்த மாநிலம், கலாச்சார, பாரம்பரிய செழிப்பின் அடையாளமாக உருவெடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இப்போது, சிக்கிம் மாநிலம், நாட்டில் அதிகத் தனிநபர் வருமானம் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது என்பதை திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இந்தச் சாதனைகள், சிக்கிம் மக்களின் திறன்களுக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிக்கிமில் இருந்து தோன்றிய பல சாதனையாளர்களைப் பிரதமர் சுட்டிக் காட்டி இது இந்தியாவையே ஒளிரச் செய்தது எனவும் கூறினார். சிக்கிமில் உள்ள ஒவ்வொரு சமூகமும் வளமான கலாச்சாரச செழிப்புடன் சிறந்த பங்களிப்பை வழங்கி இருப்பதாக அவர் பாராட்டினார்.

2014-ம் ஆண்டு முதல், தமது அரசாங்கம் அனைவரின் ஆதரவுடன் 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற கொள்கையைப் பின்பற்றி வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், வளர்ந்த இந்தியாவுக்கு சமச்சீர் முன்னேற்றம் தேவை என்றும், எந்தப் பகுதியும் பின்தங்கியிருக்காமல், அனைத்துப் பகுதிகளும் முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பிராந்தியமும் அதன் தனித்துவமான பலத்தைக் கொண்டுள்ளன எனவும், இந்தக் கண்ணோட்டத்தை மனதில் கொண்டு, கடந்த பத்து ஆண்டுகளில் அரசு வடகிழக்குப் பகுதியை வளர்ச்சியின் மையமாக மாற்றி வைத்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். 'வேகமாகச் செயல்படுதல்' என்ற உணர்வோடு 'கிழக்கு நோக்கிய செயல்பாடு' என்ற கொள்கையை அரசு முன்னெடுத்து வருகிறது" என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். அண்மையில் தில்லியில் நடைபெற்ற வடகிழக்குப் பகுதி முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை நினைவு கூர்ந்த பிரதமர், சிக்கிம் உட்பட வடகிழக்குப் பகுதி முழுவதும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் முன்னணி தொழிலதிபர்களும் முக்கிய முதலீட்டாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றதாகக் கூறினார். வரும் ஆண்டுகளில், இது சிக்கிம் மாநிலத்திற்கும் வடகிழக்கு பிராந்திய இளைஞர்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
இன்றைய நிகழ்வு சிக்கிமின் எதிர்காலப் பயணத்தைப் பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையை வழங்குகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இன்றைய நிகழ்ச்சியில் சிக்கிமின் வளர்ச்சி தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்பட்டு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டங்கள் இந்தப் பகுதியில் சுகாதாரம், சுற்றுலா, கலாச்சாரம், விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் என்று அவர் கூறினார். இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டதற்கு அனைவருக்கும் அவர் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சிக்கிம், முழு வடகிழக்கு மாநிலங்களுடன் இணைந்து, இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் ஒரு பிரகாசமான அத்தியாயமாக மாறி வருகிறது என்று பிரதமர் கூறினார். தலைநகர் தில்லிக்கும் இப்பகுதிக்கும் இடையேயான தூரம், ஒரு காலத்தில் இப்பகுதியின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தது எனவும், அதே பகுதி இப்போது வாய்ப்புகளின் புதிய கதவுகளைத் திறக்கிறது என்றும் அவர் எடுத்துரைத்தார். இந்த மாற்றத்திற்கான மிகப்பெரிய காரணம் போக்குவரத்து இணைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் எனவும் இதை சிக்கிம் மக்கள் நேரடியாகக் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புக்கான இப்பகுதியின் பயணம் ஒரு பெரிய சவாலாக இருந்த காலத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் நிலைமை கணிசமாக மாறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்தக் காலகட்டத்தில் சிக்கிமில் கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். கிராமங்களில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன எனவும் அடல் சேது கட்டுமானம் சிக்கிமின் டார்ஜிலிங்குடனான இணைப்பை மேம்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சிக்கிமை கலிம்பொங்குடன் இணைக்கும் சாலைப் பணிகள் வேகமாக முன்னேறி வருவதாக அவர் கூறினார். பாக்டோக்ரா-கேங்டாக் விரைவுச்சாலை பிற பகுதிகளில் இருந்து சிக்கிமுக்குச் செல்வதையும், சிக்கிமில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்வதையும் மிகவும் எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில், இந்த விரைவுச்சாலையை கோரக்பூர்-சிலிகுரி விரைவுச்சாலையுடன் இணைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்தார். இது பிராந்தியத்தின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை ரயில்வே கட்டமைப்புடன் இணைப்பதற்கான முயற்சிகள் வேகமாக முன்னேறி வருவதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, செவோக்-ராங்போ ரயில் பாதை சிக்கிமை தேசிய ரயில் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கும் என்பதைச் சுட்டிக் காட்டினார். சாலைகள் அமைக்க முடியாத இடங்களில், மாற்றாக கம்பி வழித் தடங்கள் (ரோப்வே) கட்டப்பட்டு வருகின்றன என்பதை அவர் குறிப்பிட்டார். சிக்கிம் மக்களின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில் இன்று பல ரோப்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா புதிய தீர்மானங்களுடன் முன்னேறியுள்ளது என்றும், சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவது ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த 10-11 ஆண்டுகளில், ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிய மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். சிக்கிமில் மிகத் தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதற்காக சிக்கிம் மக்களுக்கு 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அர்ப்பணிக்கப்படுவதாக அவர் கூறினார்.
மருத்துவமனைகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், குறைந்த செலவில், உயர்தர சுகாதார சேவைகள் கிடைப்பதையும் அரசு உறுதி செய்வதாகப் பிரதமர் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சிக்கிமில் 25,000-க்கும் மேற்பட்டோர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதை அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதும், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் இப்போது ₹5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள் என்று அவர் கூறினார். சிக்கிமில் உள்ள குடும்பங்கள் இனி தங்கள் இல்லத்தில் உள்ள முதியவர்களின் சுகாதாரம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும், அவர்களின் சிகிச்சையை அரசு கவனித்துக் கொள்ளும் என்றும் அவர் மேலும் உறுதியளித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமானது ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு அதிகாரமளித்தலில் உள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். நாடு இந்த நான்கு தூண்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் விவசாய முன்னேற்றங்களுக்கு சிக்கிம் விவசாயிகள் ஆற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் பாராட்டினார். விவசாய வளர்ச்சியின் புதிய அலையில் சிக்கிம் முன்னணியில் உள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். சிக்கிமில் இருந்து இயற்கை பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக அவர் கூறினார். சமீபத்தில் சிக்கிமில் இருந்து பிரபலமான டாலே குர்சானி மிளகாய் முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், முதல் தொகுப்பு மார்ச் 2025-ல் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில் சிக்கிமில் இருந்து இன்னும் பல பொருட்கள் உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த முயற்சிகளை ஆதரிக்க மத்திய அரசு, மாநில அரசுடன் தோளோடு தோள் சேர்ந்து செயல்படும் என்று அவர் உறுதியளித்தார்.
சிக்கிமின் இயற்கை வேளாண்மையை மேலும் வளப்படுத்த மத்திய அரசு மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர், நாட்டின் முதல் இயற்கை மீன்பிடித் தொகுப்பு, சோரெங் மாவட்டத்தில் நிறுவப்படுவதைக் குறிப்பிட்டார். இந்த முயற்சி சிக்கிமுக்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் ஒரு புதிய அடையாளத்தை வழங்கும் என்று அவர் கூறினார். இயற்கை வேளாண்மையுடன், சிக்கிம் இப்போது இயற்கை மீன்பிடித்தலுக்கும் அங்கீகாரம் பெறும் என்று பிரதமர் தெரிவித்தார். மீன் மற்றும் மீன் பொருட்களுக்கு உலகளாவிய தேவை உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த வளர்ச்சி சிக்கிம் இளைஞர்களுக்கு மீன்வளத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாநிலமும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் சுற்றுலாத் தலத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மையமாகக் கொண்டு சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற நித்தி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, சிக்கிம் வெறும் மலைவாசஸ்தலமாக இருப்பதைத் தாண்டி, உலகளாவிய சுற்றுலா மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார். சிக்கிமின் ஆற்றல் ஒப்பிடமுடியாதது எனவும் முழுமையான சுற்றுலாத் தொகுப்பை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். சிக்கிம் இயற்கை அழகு, ஆன்மீகம், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், அமைதியான புத்த மடாலயங்கள் என அனைத்திற்கும் தாயகமாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, உலகளாவிய பெருமை கொண்ட ஒரு பாரம்பரியம் என்று திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இன்று தொடங்கப்படும் திட்டங்கள் அனைத்தும் சிக்கிமின் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை அடையாளப்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.

சாகச சுற்றுலா, விளையாட்டு சுற்றுலா ஆகியவற்றில் சிக்கிம் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். மலையேற்றம், மலையேற்ற பைக்கிங் போன்ற நடவடிக்கைகள் இப்பகுதியில் செழித்து வளர முடியும் என்று அவர் கூறினார். சிக்கிமை மாநாட்டு சுற்றுலா, நல்வாழ்வு சுற்றுலா, இசை நிகழ்ச்சி சுற்றுலா ஆகியவற்றுக்கான மையமாக உருவாக்குவது தமது தொலைநோக்குப் பார்வை என்று அவர் கூறினார். இந்த எதிர்கால திட்டத்தில் பொன்விழா மாநாட்டு மையம் ஒரு முக்கிய பகுதியாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், புகழ்பெற்ற உலகளாவிய கலைஞர்கள் கேங்டாக்கின் அழகிய நிலப்பரப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். சிக்கிம் இயற்கை, கலாச்சாரம் ஆகியவற்றின் இணைப்பை முழுமையாக வெளிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஜி-20 உச்சிமாநாட்டுக் கூட்டங்களை வடகிழக்குப் பகுதியில் நடத்தியது; இந்தப் பிராந்தியத்தின் திறனை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான ஒரு படியாகும் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, சிக்கிம் அரசு இந்த தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பித்துத் தந்ததற்குப் பாராட்டுத் தெரிவித்தார். இந்தியா இப்போது ஒரு பெரிய உலகளாவிய பொருளாதார சக்தியாகவும், விளையாட்டு வல்லரசாகவும் மாறும் பாதையில் இருப்பதாகவும் அவர் கூறினார். வடகிழக்குப் பகுதி இளைஞர்கள், குறிப்பாக சிக்கிம் இளைஞர்கள் இந்தக் கனவை அடைவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். கால்பந்து ஜாம்பவான் பைச்சுங் பூட்டியா, ஒலிம்பிக் வீரர் தருண்தீப் ராய், தடகள வீரர் ஜஸ்லால் பிரதான் போன்றவர்களைக் குறிப்பிட்டு, சிக்கிமின் வளமான விளையாட்டு மரபை திரு நரேந்திர மோடி எடுத்துக்காட்டினார். சிக்கிமில் உள்ள ஒவ்வொரு கிராமமும் நகரமும் ஒரு புதிய சாம்பியனை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். விளையாட்டில் பங்கேற்பு மட்டுமல்லாமல் உறுதியுடன் வெற்றி பெறுவதிலும் இலக்குடன் செயல்பட வேண்டும் என்று திரு நரேந்திர மோடி கூறினார். கேங்டாக்கில் உள்ள புதிய விளையாட்டு வளாகம் எதிர்கால சாம்பியன்களுக்கான பயிற்சி மைதானமாக மாறும் என்று அவர் குறிப்பிட்டார். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிக்கிம் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்பதை அவர் குறிப்பிட்டார். திறமையை அடையாளம் காணுதல், பயிற்சி, தொழில்நுட்பம் என ஒவ்வொரு மட்டத்திலும் ஆதரவு அளிக்கப்படுகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். சிக்கிம் இளைஞர்களின் ஆற்றலும் ஆர்வமும் இந்தியாவை ஒலிம்பிக்கில் பெருமையான இடத்துக்கு இட்டுச் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிக்கிம் மக்கள் சுற்றுலாவின் சக்தியைப் புரிந்துகொள்கிறார்கள் எனவும் சுற்றுலா வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் பன்முகத்தன்மையின் கொண்டாட்டமும் ஆகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்தியர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்லாமல், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவ உணர்வின் மீதான தாக்குதல் என்பதை சுட்டிக் காட்டிய அவர், பயங்கரவாதிகள் பல குடும்பங்களின் மகிழ்ச்சியைத் அழித்தது மட்டுமல்லாமல், இந்திய மக்களைப் பிரிக்கவும் முயன்றனர் என்பதை எடுத்துரைத்தார். இன்று, உலகம் இந்தியாவின் ஒற்றுமையைக் காண்கிறது எனவும் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தெளிவான செய்தியை தெரிவிப்பதில் நாடு ஒன்று சேர்ந்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். இந்திய மகள்களின் நெற்றியில் இருந்து சிந்தூரை (குங்குமத்தை) அழித்ததன் மூலம் பயங்கரவாதிகள், மக்களுக்கு வலியை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். ஆனால் இந்தியா குற்றவாளிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலளித்தது என அவர் தெரிவித்தார். பயங்கரவாத கட்டமைப்பு தளங்கள் அழிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் இந்திய பொதுமக்களையும் வீரர்களையும் தாக்குவதற்கு குறிவைக்க முயன்றதாகவும் ஆனால் அந்த செயல்பாட்டில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு அம்பலமானது என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானின் பல விமான தளங்களை இந்தியா தாக்கியதாகவும், இது நமது நாட்டின் திறன்களை நிரூபித்தது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சிக்கிம் ஒரு மாநிலமாக 50 ஆண்டுகால மைல்கல் பயணத்தை நிறைவு செய்வது அனைவருக்கும் ஒரு உத்வேகமாக உள்ளது எனவும், வளர்ச்சிப் பயணம் இப்போது மேலும் துரிதப்படுத்தப்படும்" என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். 2047-ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்தின் 100 ஆண்டுகளையும், சிக்கிம் ஒரு மாநிலமாக 75 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், அந்த மைல்கல் தருணத்தில் சிக்கிம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சிக்கிமின் எதிர்காலத்திற்கான ஒரு திட்டத்தைக் கற்பனை செய்யவும், திட்டமிடவும், அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும் கூட்டு முயற்சிகளை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, சிக்கிமின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், அதை ஒரு 'சுகாதார மாநிலமாக' வடிவமைப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். சிக்கிமின் இளம் தலைமுறையினர் உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். உலக அளவில் இளைஞர்கள் அதிகம் தேவைப்படும் துறைகளில் புதிய திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக் காட்டினார்.
அடுத்த 25 ஆண்டுகளில் சிக்கிமை வளர்ச்சி, பாரம்பரியம் ஆகியவற்றுடன் உலகளாவிய அங்கீகாரத்தின் மிக உயர்ந்த சிகரத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் கூட்டு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். சிக்கிம் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதற்கும் ஒரு பசுமை மாதிரி மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் கனவு என்று பிரதமர் கூறினார். சிக்கிமின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான வீட்டை உறுதி செய்யும் இலக்கை அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு வீட்டிற்கும் சூரிய சக்தி மின்சாரத்தை கொண்டு வருவதற்கான தொலைநோக்கு பார்வையையும் அவர் சுட்டிக் காட்டினார். வேளாண் புத்தொழில் நிறுவனங்கள், சுற்றுலா புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் சிக்கிம் ஒரு முன்னணி மாநிலமாக உருவாக வேண்டும் என அவர் கூறினார். இயற்கை உணவு ஏற்றுமதியில் உலகளவில் அதன் அடையாளத்தை சிக்கிம் நிலைநாட்ட வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்தார். ஒவ்வொருவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் இடமாகவும், கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்கும் முயற்சிகள் புதிய உயரங்களுக்கு உயர்த்தப்படும் மாநிலமாகவும் சிக்கிம் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். அடுத்த 25 ஆண்டுகள் இந்த லட்சிய இலக்குகளை அடைவதற்கும், உலக அரங்கில் சிக்கிமின் சிறப்பை நிலைநாட்டுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த உணர்வோடு அனைவரும் முன்னேறிச் சென்று வளமான பாரம்பரியத்தைத் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் எனவும் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
50 ஆண்டுகால மாநில அந்தஸ்தை கொண்டாடும் விதமாக, 'சிக்கிம்@50' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். சிக்கிமின் கலாச்சார செழுமை, பாரம்பரியம், இயற்கை சிறப்பம்சம் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், சிக்கிம் மாநில அரசு ஒரு வருடம் நீடிக்கும் தொடர் கொண்டாட்டங்களுக்குத் திட்டமிட்டுள்ளது.
சிக்கிமில் பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நம்ச்சி மாவட்டத்தில் ₹ 750 கோடி மதிப்புள்ள 500 படுக்கைகள் கொண்ட புதிய மாவட்ட மருத்துவமனை, கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள சங்கச்சோலிங்கில் பயணிகள் ரோப்வே, காங்டாக் மாவட்டத்தில் உள்ள சங்க்கோலாவில் உள்ள அடல் அம்ரித் உத்யானில் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலை உள்ளிட்ட பல திட்டங்கள் இதில் அடங்கும்.
50 ஆண்டுகால மாநில அந்தஸ்து குறித்த நினைவு நாணயம், நினைவு தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Sikkim is the pride of the country: PM @narendramodi pic.twitter.com/qiybL5ugiQ
— PMO India (@PMOIndia) May 29, 2025
Over the past decade, our government has placed the Northeast at the core of India's development journey.
— PMO India (@PMOIndia) May 29, 2025
We are advancing the 'Act East' policy with the spirit of 'Act Fast': PM @narendramodi pic.twitter.com/ui8YZqUp27
Sikkim and the entire Northeast are emerging as a shining chapter in India's progress. pic.twitter.com/gPngdyYzPS
— PMO India (@PMOIndia) May 29, 2025
We endeavour to make Sikkim a global tourism destination. pic.twitter.com/k8gUCUZFVe
— PMO India (@PMOIndia) May 29, 2025
In the coming years, India is poised to emerge as a global sports superpower. The Yuva Shakti of the Northeast and Sikkim will play a pivotal role in realising this dream. pic.twitter.com/10MVtVFNp0
— PMO India (@PMOIndia) May 29, 2025



