பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில், பிரத்தியேக பொருளாதார மண்டலம் (இஇஇசட்) மற்றும் சமுத்திரங்களில் மீன்பிடித்தல் குறித்து கவனம் செலுத்தும் வகையில், மீன்வளத் துறையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
மீன் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும், மீனவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கவும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்தினார்.
சீர்மிகு துறைமுகங்கள் மற்றும் சந்தைகள் மூலம் துறையை நவீனமயமாக்குதல், மீன்பிடி போக்குவரத்து மற்றும் அதன் சந்தைப்படுத்தலில் ட்ரோன்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை பிரதமர் வலியுறுத்தினார். விநியோகச் சங்கிலியில் மதிப்பைச் சேர்க்க, ஆரோக்கியமான செயல்பாட்டு முறையை நோக்கி நகர வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், சிவில் விமானப் போக்குவரத்துடன் கலந்தாலோசித்து, மாநகரங்கள் / நகரங்களில் உள்ள பெரிய சந்தைகளுக்கு புதிய மீன்களைக் கொண்டு செல்வதற்கு, தொழில்நுட்ப நெறிமுறைகளின்படி ட்ரோன்களின் பயன்பாட்டை ஆய்வு செய்ய பிரதமர் பரிந்துரைத்தார்.
விளைபொருட்களை பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் செய்வதில் மேம்பாடுகளின் அவசியத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தனியார் துறையின் முதலீடுகளை எளிதாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து, வேளாண் துறையில் வேளாண் தொழில்நுட்பத்தைப் போலவே, மீன்வளத் துறையிலும் மீன்வள தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
அமிர்த நீர்நிலைகளில் மீன்வள உற்பத்தியை மேற்கொள்வது, இந்த நீர்நிலைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்று பிரதமர் கூறினார். வருமானம் ஈட்டுவதற்கான ஒரு வழியாக அலங்கார மீன்வளத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
மீன்களின் தேவை அதிகமாக இருந்தும் போதுமான அளவு விநியோகம் இல்லாத, நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு உத்தி வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
மருந்துகள் மற்றும் பிற துறைகளில் எரிபொருள் நோக்கங்களுக்காக, ஊட்டச்சத்து உள்ளீடுகளாக, கடற்பாசிகளைப் பயன்படுத்துவது ஆராயப்பட வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்தார். கடற்பாசி துறையில் தேவையான வெளியீடுகள் மற்றும் விளைவுகளை உருவாக்க, முழுமையான உரிமையை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நவீன மீன்பிடி முறைகளில் மீனவர்களின் திறன் மேம்பாட்டை மேற்கொள்ளவும் பிரதமர் பரிந்துரைத்தார். இந்தத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கும் பொருட்களின் எதிர்மறையான பட்டியலைப் பராமரிக்கவும் அவர் பரிந்துரைத்தார், இதனால், மீனவர்களின் வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்குதல் ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை உருவாக்க முடியும்.
கூட்டத்தின் போது, முக்கியமான முயற்சிகளில் ஏற்பட்ட முன்னேற்றம், கடந்த ஆய்வின் போது கொடுக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு இணங்குதல் மற்றும் இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் ஆழ்கடல்களில் இருந்து மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட செயல்படுத்தும் கட்டமைப்பு குறித்தும் விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.
2015 முதல், இந்திய அரசின் நீலப் புரட்சித் திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், பிரதமரின் மத்ஸ்ய சம்ரிதி சா திட்டம் மற்றும் கிசான் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 38,572 கோடியாக முதலீடு அதிகரித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா ஆண்டுக்கு 195 லட்சம் டன் மீன் உற்பத்தியை பதிவு செய்துள்ளது, இதனால் துறை வளர்ச்சி விகிதம் 9% க்கும் அதிகமாகும்.
இந்தக் கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பிரதமரின் முதன்மைச் செயலாளர்கள் டாக்டர் பி.கே. மிஸ்ரா,திரு சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகர் திரு. அமித் கரே, மீன்வளத் துறை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Chaired a meeting on ways to further strengthen the fisheries sector. We attach great importance to this area and have worked extensively to improve infrastructure relating to the sector and also ensure greater access to credit as well as markets for our fishermen. Today’s… pic.twitter.com/wcTycWhPzO
— Narendra Modi (@narendramodi) May 15, 2025