தேசிய பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து தேசிய தயார்நிலை குறித்தும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்வதற்காகவும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்களுடனான உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (08.05.2025) நடைபெற்றது.
தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளுக்கிடையே தடையற்ற ஒருங்கிணைப்பின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க அமைச்சகங்களின் திட்டமிடலைப் பிரதமர் ஆய்வு செய்தார்.
தயார்நிலை, அவசரகால பதில் நடவடிக்கைகள், உள் தொடர்பு நெறிமுறைகளில் சிறப்பு கவனம் செலுத்துதல், போன்றவற்றில் அந்தந்த அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளவும், அத்தியாவசிய அமைப்புகளின் விரைந்த செயல்பாட்டை உறுதி செய்யவும் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் முழு அரசு அணுகுமுறையுடன் செயலாளர்கள் தங்கள் திட்டமிடலை விவரித்தனர்.
இக்கட்டான சூழ்நிலை தொடர்பாக அனைத்து அமைச்சகங்களும் தங்கள் செயல்பாட்டை அடையாளம் கண்டுள்ளதுடன், செயல்முறைகளை வலுப்படுத்தி வருகின்றன. அனைத்து வகையான சூழ்நிலைகளையும் சமாளிக்க அமைச்சகங்கள் தயாராக உள்ளன.
கூட்டத்தின் போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இவற்றில், சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்களையும், போலி செய்திகளையும் தடுப்பது, முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும். மாநில அரசுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பராமரிக்கவும் மத்திய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவு, தகவல் ஒலிபரப்பு, மின்சாரம், சுகாதாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் பயணித்து வருவதால், தொடர்ந்து விழிப்புணர்வு, நிறுவன ஒருங்கிணைப்பு, தெளிவான தகவல் தொடர்புக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். தேசிய பாதுகாப்பு, செயல்பாட்டுத் தயார்நிலை, குடிமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் எடுத்துரைத்தார்.


