ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்ப கட்ட மூலதன உதவி வழங்கப்பட்டது
உலக உணவு இந்தியா 2023-ன் ஒரு பகுதியாக உணவு வீதியைப் பிரதமர் திறந்து வைத்தார்
"தொழில்நுட்பம் மற்றும் சுவையின் இணைவு எதிர்காலப் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும்"
"முதலீட்டாளர்களுக்கு ஏற்ற அரசின் கொள்கைகள் உணவுத் துறையை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்கின்றன"
"உணவு பதப்படுத்துதல் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது"
"உணவு பதப்படுத்துதல் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கான மூன்று தூண்களாக சிறு விவசாயிகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பெண்கள் உள்ளனர்"
"ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு போன்ற திட்டங்கள் சிறு விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களுக்குப் புதிய அடையாளத்தை வழங்குகின்றன"
"உணவு பதப்படுத்தும் தொழிலை வழிநடத்தும் இயல்பான திறன் இந்தியப் பெண்களுக்கு உள்ளது"
"இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை உலக முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு"
"இந்தியாவின் நிலையான உணவு கல
மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையில் செயலாக்க உள்கட்டமைப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு போன்ற திட்டங்கள் சிறு விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்குகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டாவது 'உலக உணவு இந்தியா 2023' என்ற மாபெரும் உணவு கண்காட்சித் திருவிழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-11-2023) தொடங்கி வைத்தார். சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பகட்ட மூலதன உதவிகளையும் அவர் வழங்கினார். விழாவில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவை 'உலகின் உணவுக் கூடை'' என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் இந்த நிகழ்ச்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப புத்தொழில் அரங்கம், உணவு வீதி ஆகியவற்றைப் பாராட்டிய பிரதமர், தொழில்நுட்பம் மற்றும் சுவையின் இணைவு எதிர்காலப் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் என்றார். மாறிவரும் இன்றைய உலகில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எடுத்துரைத்த பிரதமர், உலக உணவு இந்தியா 2023-ன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.

 

இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை புதிய வளர்ச்சி அடையும் துறையாக' அங்கீகரிக்கப்பட்டதற்கு உலக உணவு இந்தியா நிகழ்வு ஒரு பெரிய எடுத்துக்காட்டு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில், அரசின் தொழில் சார்பு கொள்கைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகளின் விளைவாக இந்தத் துறை ரூ. 50,000 கோடிக்கு மேல் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். உணவு பதப்படுத்துதல் துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், இது இந்தத் தொழில்துறையில் புதிய நிறுவனங்களுக்குப் பெரும் உதவிகளை வழங்குகிறது என்றார். வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்புக்கான ஆயிரக்கணக்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையில் செயலாக்க உள்கட்டமைப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அரசின் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற கொள்கைகள் உணவுத் துறையை புதிய உயரங்களுக்குக்  கொண்டு செல்கின்றன என்று திரு நரேந்திர மோடி கூறினார். கடந்த 9 ஆண்டுகளில், இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பங்கு 13 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஒட்டுமொத்தமாக 150 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். இன்று, இந்தியா 50,000 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான விவசாய உற்பத்திப் பொருள்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்புடன் 7 வது இடத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். உணவுப் பதப்படுத்துதல் துறையில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளதாகக் கூறிய அவர், உணவுப் பதப்படுத்தும் துறையுடன் தொடர்புடைய ஒவ்வொரு நிறுவனத்திற்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று கூறினார்.

 

உணவு பதப்படுத்துதல் துறையில் விரைவான வளர்ச்சிக்கு அரசின் தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகள் காரணம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவில் முதல் முறையாக வேளாண் ஏற்றுமதிக் கொள்கை உருவாக்கம், நாடு தழுவிய போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, மாவட்டங்களை உலக சந்தைகளுடன் இணைக்கும் 100 க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான மையங்கள் உருவாக்கம், மெகா உணவுப் பூங்காக்களின் எண்ணிக்கையை 2 முதல் 20 க்கும் கூடுதலாக அதிகரித்தல், இந்தியாவின் உணவு பதப்படுத்தும் திறன் 12 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 200 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிப்பு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் இருந்து முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களைப் பட்டியலிட்ட பிரதமர், இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து கருப்புப் பூண்டு, ஜம்மு காஷ்மீரில் இருந்து டிராகன் பழம், மத்திய பிரதேசத்திலிருந்து சோயா பால் பவுடர், லடாக்கில் இருந்து கார்க்கிச்சோ ஆப்பிள்கள், பஞ்சாபிலிருந்து கேவண்டிஷ் வாழைப்பழம், ஜம்முவிலிருந்து குச்சிக் காளான்கள், கர்நாடகாவிலிருந்து  தேன் ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

 

இந்தியாவின் விரைவான நகரமயமாக்கல் குறித்துப் பேசிய பிரதமர், விவசாயிகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உணவுத்துறையில் பல அம்சங்கள் உள்ளதாக கூறினார். இந்த சாத்தியக்கூறுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டமிடலின் அவசியத்தைத் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்

 

உணவு பதப்படுத்துதல் துறையில் இந்தியாவின் வளர்ச்சியின் மூன்று முக்கிய தூண்களாக சிறு விவசாயிகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும்  பெண்கள்  இருப்பதாகப் பிரதமர் கூறினார்.  சிறு விவசாயிகளின் பங்களிப்பையும் லாபத்தையும் அதிகரிப்பதற்கான ஒரு தளமாக வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் திறம்பட செயல்படுவதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் 10 ஆயிரம் புதிய வேளாண் உற்பத்தி நிறுவனங்களை உருவாக்கத் திட்டமிட்டு 7 ஆயிரம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்தார். அதிகரித்த சந்தை வாய்ப்புகள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகப் பதப்படுத்தும் வசதிகள் கிடைப்பதைக் குறிப்பிட்ட அவர், சிறு தொழில்களின் பங்களிப்பை அதிகரிக்க உணவுப் பதப்படுத்தும் தொழிலில் சுமார் 2 லட்சம் குறுந்தொழில்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு போன்ற திட்டங்கள் சிறு விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்குகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

 

இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைத்த பிரதமர், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும், அதன் மூலம் உணவுப் பதப்படுத்தும் தொழில் பயனடைவதையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் 9 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர் என அவர் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் உணவு அறிவியலில் பெண்கள் முன்னணியில் உள்ளனர் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்திய உணவு வகைகள் மற்றும் உணவுப் பன்முகத்தன்மை இந்திய பெண்களின் திறன்கள் மற்றும் அறிவின் விளைவு என்று கூறினார். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், முரப்பா போன்ற பல பொருட்களின் சந்தைகளைப் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தே நடத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். உணவுப் பதப்படுத்தும் தொழிலை வழிநடத்தும் இயல்பான திறன் இந்தியப் பெண்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, பெண்களுக்கான குடிசைத் தொழில்களும் சுய உதவிக் குழுக்களும் ஒவ்வொரு மட்டத்திலும் ஊக்குவிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார். இன்றைய நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆரம்ப கட்ட மூலதனம் வழங்கப்பட்டதைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

 

கலாச்சார பன்முகத்தன்மை எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவுக்கு இந்தியாவில் உணவு பன்முகத்தன்மையும் உள்ளது என அவர் தெரிவித்தார்.  இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை உலகின் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஒரு வாய்ப்பாகும் என்று பிரதமர் கூறினார். இந்தியா மீதான உலகின் ஆர்வம் அதிகரித்து வருவது பற்றி  குறிப்பிட்ட பிரதமர், உலகெங்கிலும் உள்ள உணவுத் தொழில்கள் இந்தியாவின் உணவு மரபுகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்றார். இந்தியாவின் நிலையான உணவு கலாச்சாரம் அதன் ஆயிரக்கணக்கான ஆண்டு வளர்ச்சிப் பயணத்தின் விளைவாகும் என்று அவர் கூறினார். இந்தியாவின் நிலையான உணவு கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசிய பிரதமர், நம் முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர் என்று கூறினார். "ஆயுர்வேதத்தில், பருவத்திற்கு ஏற்ப சாப்பிடுவது, சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவுகள் போன்றவை உள்ளதாகவும் இவை இந்தியாவின் அறிவியல் புரிதலின் முக்கிய பகுதிகள் என்றும் அவர் விளக்கினார்.

உணவு தானியங்கள், குறிப்பாக உலக நாடுகளுக்கு இந்தியாவின் மசாலாப் பொருட்கள் வர்த்தகம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறித்துப் பேசிய பிரதமர், நிலையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த பழங்கால அறிவைப் புரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக உலகம் கொண்டாடுவதை திரு நரேந்திர மோடி நினைவூட்டினார். சிறுதானியங்கள் இந்தியாவின் சிறந்த உணவுக் கூடையின் ஒரு பகுதியாகும் எனவும் அரசு இதை ஸ்ரீ அன்னா என்று அடையாளப்படுத்தியுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். பல நூற்றாண்டுகளாகப் பெரும்பாலான நாகரிகங்களில் சிறுதானியங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்ட போதிலும், கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உணவுப் பழக்கத்திலிருந்து அது தவிர்க்கப்பட்டுள்ளதையும் இதனால் உலகளாவிய சுகாதாரம், நிலையான விவசாயம் மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும்  பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் முன்முயற்சியால், உலகில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், சர்வதேச யோகா தினத்தின் தாக்கத்தைப் போலவே சிறுதானியங்கள் தற்போது உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைகின்றன என்று தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் போது இந்தியாவுக்கு வருகை தந்த முக்கியப் பிரமுகர்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ அன்னா எனப்படும் சிறுதானியங்களின் பங்கை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும், உணவுத் தொழில்துறையினர் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக ஒரு கூட்டு செயல்திட்டத்தை தயாரிக்கவும் பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த நிகழ்வில் பங்கேற்ற துறைசார் பிரமுகர்களை வலியுறுத்தினார்.

 

ஜி 20 தில்லிப் பிரகடனத்தில் நிலையான விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறிய திரு நரேந்திர மோடி, உணவு பதப்படுத்தலுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் முக்கியப் பங்கையும் எடுத்துரைத்தார். உணவு விநியோகத் திட்டத்தை பன்முகப்படுத்தப்பட்ட உணவுத் தொகுப்பை நோக்கி நகர்த்துவதையும், இறுதியில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதையும் அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வீண் விரயத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். உணவு வீணாவதைக் குறைக்கவும், விவசாயிகள் பயனடையவும், விலை ஏற்ற இறக்கங்களைத் தடுக்கவும் அழுகும் பொருட்களின் பதப்படுத்தலை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். விவசாயிகளின் நலன்களுக்கும், நுகர்வோரின் திருப்திக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.  இங்கு எடுக்கப்படும் முடிவுகள் உலகிற்கு நிலையான மற்றும் உணவு பாதுகாப்புடன் கூடிய எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் என்று  நம்பிக்கை தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பராஸ், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் வகையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பக் கட்ட மூலதன உதவியை பிரதமர் இந்நிகழ்ச்சியில் வழங்கினார். மேம்பட்ட பேக்கேஜிங் மற்றும் தரமான உற்பத்தி மூலம் சுய உதவிக் குழுக்கள், சந்தையில் சிறந்த விலையைப் பெற இந்த ஆதரவு உதவும். உலக உணவு இந்தியா 2023-ன் ஒரு பகுதியாக உணவு வீதியையும் பிரதமர் திறந்து வைத்தார். இதில் பிராந்திய உணவு வகைகள் மற்றும் அரச சமையல் பாரம்பரிய வகைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 200 க்கும் மேற்பட்ட சமையல்க் கலை வல்லுநர்கள் பங்கேற்று பாரம்பரிய இந்திய உணவுகளை வழங்குகின்றனர். இது ஒரு தனித்துவமான சமையல் அனுபவமாக இருக்கும்.

 

இந்தியாவை 'உலகின் உணவுக்  கூடை' என்று எடுத்துக் காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.  அரசு அமைப்புகள், தொழில்துறை வல்லுநர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சம்பந்தப்பட்ட  தரப்பினர் ஆலோசனைகளில் ஈடுபடவும், கூட்டுச் செயல்பாடுகளை நிறுவவும், வேளாண் உணவுத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் ஒரு கட்டமைப்பு மற்றும் வணிகத் தளத்தை இந்த உலக உணவு இந்தியா 2023 கண்காட்சித் திருவிழா வழங்கும். நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்கும் வட்டமேசை மாநாடுகள், முதலீடுகள் மற்றும் எளிதாகத் தொழில் தொடங்குவது குறித்து கவனம் செலுத்தும்.

 

இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையின் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் வலிமையை வெளிப்படுத்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உணவுப் பதப்படுத்தும் தொழிலின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட 48 அமர்வுகளுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நிதி அதிகாரமளித்தல், தர உத்தரவாதம், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறும்.

 

இந்த நிகழ்ச்சியில் முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உட்பட 80-க்கும் அதிகமான  நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இது 80 க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 1200 க்கும் அதிகமானோர் பங்கேற்கும் விற்பனையாளர் சந்திப்பையும் கொண்டிருக்கும். இதில் நெதர்லாந்து கூட்டு செயல்பாட்டு நாடாக உள்ளது. ஜப்பான் இந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தும் நாடாக உள்ளது.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's Q2 FY26 GDP soars 8.2%: A structural shift reshaping the economy like ’83 cricket triumph

Media Coverage

India's Q2 FY26 GDP soars 8.2%: A structural shift reshaping the economy like ’83 cricket triumph
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
December 05, 2025

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, December 28th. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.