"மேம்பட்ட மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் அமிர்த காலத் தலைமுறையை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்”
"கனவுகள் தீர்மானமாக மாறும் போது, வாழ்க்கை அதற்கே அர்ப்பணிக்கப்பட்டால், வெற்றி நிச்சயம் - இது இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளின் காலம்”
"இந்தியாவுக்கான நேரம் வந்துவிட்டது"
"இளைஞர் சக்தி இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் உந்து சக்தியாகத் திகழ்கிறது"
"நாடு இளைஞர்களின் ஆற்றலாலும் உற்சாகத்தாலும் நிரம்பி வழியும் போது, நாட்டின் முன்னுரிமைகள் எப்போதும் இளைஞர்களுக்காகவே இருக்கும்"
"குறிப்பாக பாதுகாப்பு படைகள் மற்றும் முகமைகளில் நாட்டின் மகள்களான பெண்களுக்கு இது சிறந்த வாய்ப்புகளின் காலமாகும்"

தில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற வருடாந்திர தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த ஆண்டு, என்சிசி அதன் 75-வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வின் போது, ​​என்சிசி-யின் வெற்றிகரமான 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், சிறப்பு தின உறை மற்றும் 75 ரூபாய் மதிப்பிலான பிரத்யேக நாணயத்தை பிரதமர் வெளியிட்டார். கன்னியாகுமரி முதல் தில்லி வரையில் எடுத்துவரப்பட்ட ஒற்றுமைச் சுடர் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டு கரியப்பா மைதானத்தில் ஏற்றப்பட்டது. இந்த அணிவகுப்புப் பேரணியானது இரவு மற்றும் பகல் என இருவேளைகளைக் கொண்ட கலப்பு நிகழ்வாக நடத்தப்பட்டதுடன், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் கருப்பொருளில் கலாச்சார நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றது. வசுதைவ குடும்பகம் எனப்படும் உலகம் ஒரே குடும்பம் என்ற உண்மையான இந்திய உணர்வுடன், 19 வெளிநாடுகளைச் சேர்ந்த 196 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

அணிவகுப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியா 75 ஆம் ஆண்டு விடுதலைப் பெருவிழாவை கொண்டாடிய நிலையில் என்சிசி-யும் இந்த ஆண்டு 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை குறிப்பிட்டார். மேலும் என்சிசி-யை வழிநடத்தி அதன் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களித்தவர்களின் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டினார். என்சிசி வீரர்கள் மற்றும் தேசத்தின் இளைஞர்கள் ஆகிய இருவரும் நாட்டின் அமிர்த காலத் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் கூறினார். இது வரும் 25 ஆண்டுகளில் தேசத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் தெரிவித்தார். மேம்பட்ட மற்றும் தற்சார்பு பாரதத்தை உருவாக்குவதில் இது முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் கூறினார். கன்னியாகுமரி முதல் தில்லி வரை தினமும் 50 கிலோமீட்டர் தூரம் ஓடி, 60 நாட்களில் ஒற்றுமைச் சுடரைக் கொண்டு வந்த என்சிசி வீரர்களைப் பிரதமர் பாராட்டினார். மாலையில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டார். 

குடியரசு தின அணிவகுப்பில் என்சிசி வீரர்கள் பங்கேற்றதைக் குறிப்பிட்ட பிரதமர், முதல் முறையாக கடமைப் (கர்தவ்யா) பாதையில் நடைபெறும் அணிவகுப்பின் சிறப்பை எடுத்துரைத்தார். என்சிசி வீரர்கள், தேசிய போர் நினைவகம், காவல்துறை நினைவகம், செங்கோட்டையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம், பிரதமர்கள் அருங்காட்சியகம், சர்தார் படேல் அருங்காட்சியகம் மற்றும் பி ஆர் அம்பேத்கர் அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

ஒரு தேசத்தை இயக்கும் முக்கிய ஆற்றல் இளைஞர்களை மையமாகக் கொண்டுள்ளது என பிரதமர் கூறினார். கனவுகள் தீர்மானமாக மாறும் போது, வாழ்க்கை அதற்கே அர்ப்பணிக்கப்பட்டால் வெற்றி நிச்சயம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இது இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளின் காலம் என்று அவர் கூறினார். இந்தியாவின் நேரம் வந்துவிட்டது என்பது எல்லா இடங்களிலும் தெரிவதாக அவர் குறிப்பிட்டார். முழு உலகமும் இந்தியாவை நோக்கிப் பார்ப்பதாகவும் இதற்கு இந்தியாவின் இளைஞர்கள்தான் காரணம் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தில் இளைஞர்களின் உற்சாகம் குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

 நாடு இளைஞர்களின் ஆற்றலாலும், ஆர்வத்தாலும் நிரம்பி வழியும் போது, நாட்டின் முன்னுரிமைகள் எப்போதும் இளைஞர்களுக்காகவே இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்கள் தங்கள் கனவுகளை அடைவதற்கு அரசு ஏற்படுத்தியுள்ள தளங்களை அவர் எடுத்துரைத்தார். டிஜிட்டல் புரட்சி, புத்தொழில் புரட்சி என பல்வேறு துறைகளில் தேசத்தின் இளைஞர்களுக்காக புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் இளைஞர்கள்தான் இதன் மிகப் பெரிய பயனாளிகள் என்பதைச் சுட்டிக் காட்டினார். துப்பாக்கிகள் மற்றும் குண்டு துளைக்காத ஆடைகள் கூட ஒரு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போது பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை எடுத்துரைத்தார். இன்று இந்தியா நூற்றுக்கணக்கான பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.  வேகமாக நடைபெற்று வரும் எல்லைக் கட்டமைப்புப் பணிகளைச் சுட்டிக் காட்டிய அவர், இது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறினார்.

இளைஞர்களின் திறன்களில் நம்பிக்கை வைப்பதன் மூலம் நேர்மறையான பலன்களைக் காண்பதில் சிறந்த உதாரணமாக இந்தியாவின் விண்வெளித் துறை திகழ்வதாக பிரதமர் கூறினார். இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் விண்வெளித் துறையின் கதவுகள் திறக்கப்பட்டதால், முதலாவது தனியார் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது போன்ற சிறந்த விளைவுகள் ஏற்பட்டதாக அவர் கூறினார். இதேபோல், கேமிங் எனப்படும் விளையாட்டு மற்றும் அனிமேஷன் எனப்படும் இயங்குபடத் துறைகள், இந்தியாவின் திறமையான இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். ட்ரோன் தொழில்நுட்ப முன்னேற்றங்களால், பொழுதுபோக்கு, சரக்குப் போக்குவரத்து, விவசாயம் என பலதுறைகள் புதிய பரிமாணங்களை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புப் படைகள் மற்றும் முகமைகளுடன் இளைஞர்கள் தொடர்பில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் பிரதமர் விருப்பம் தெரிவித்தார். இக்காலம், குறிப்பாக நாட்டின் மகள்களான பெண்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ள காலம் என்று அவர் கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார். முப்படைகளிலும் பெண்கள் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடற்படையில் பெண்களை மாலுமிகளாக சேர்ப்பது குறித்தும் அவர் குறிப்பிட்டார். ஆயுதப் படைகளில் பெண்கள் போர்ப் பிரிவுகளில் நுழையத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். பெண் வீரர்களின் முதல் குழு புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியைத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். சைனிக் பள்ளிகளில் 1500 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பள்ளிகளில் முதல்முறையாக மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். என்சிசி-யும் கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களின் பங்கேற்பில் சீரான உயர்வைக் கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர் சக்தியின் ஆற்றலை எடுத்துரைத்த பிரதமர், நாட்டின் எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் என்சிசி-யில் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். இவ்வளவு பெரிய அளவிலான இளைஞர்கள் தேச வளர்ச்சிக்காக ஒன்றிணையும்போது, தேசத்தின் எந்த நோக்கமும் வெற்றிபெறாமல் போகாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வீரர்கள் தனிப்பட்ட முறையில் மற்றும் ஒரு குழுவாக தேசத்தின் வளர்ச்சியில் தங்கள் பங்கை மேலும் அதிகரிப்பார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில், பல துணிச்சல் மிக்கவர்கள் தேசத்திற்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்ததாக அவர் கூறினார். ஆனால் இன்று நாட்டிற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் தேசத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து பிளவை உருவாக்கும் முயற்சிகளுக்கு எதிராக பிரதமர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். இத்தகைய முயற்சிகள் இருந்தபோதிலும், இந்திய மக்களிடையே ஒருபோதும் வேறுபாடுகள் ஏற்படாது என்று அவர் கூறினார். ஒற்றுமை என்ற மந்திரம் ஒரு உறுதிமொழியாகும் என அவர் தெரிவித்தார். இந்தியாவின் பலம், இதுதான் எனவும் இதன் மூலம் மட்டுமே இந்தியா சிறந்த மகத்துவத்தை அடைய முடியும் என்றும் பிரதமர் கூறினார்.

அமிர்த காலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல எனவும் இது இந்திய இளைஞர்களின் அமிர்த காலம் என்றும் அவர் தெரிவித்தார். நாடு விடுதலை பெற்றதன் 100-வது ஆண்டு நிறைவடையும் போது, ​​வெற்றியின் உச்சத்தில் இருக்கப்போவது இளைஞர்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். நாம் எந்த வாய்ப்புகளையும் இழக்காமல், இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதியுடன் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், என்சிசி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், முப்படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், விமானப்படைத் தளபதி திரு விஆர் சௌத்ரி, பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
A big deal: The India-EU partnership will open up new opportunities

Media Coverage

A big deal: The India-EU partnership will open up new opportunities
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 28, 2026
January 28, 2026

India-EU 'Mother of All Deals' Ushers in a New Era of Prosperity and Global Influence Under PM Modi