“இந்தியாவின் நிதித் தொழில்நுட்பப் புரட்சி, உள்ளடக்கிய நிதிச் சேவைகளை மேம்படுத்துவதோடு, புதுமை கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கிறது”
“இந்தியாவின் நிதித் தொழில்நுட்ப பன்முகத்தன்மை அனைவரையும் வியப்படையச் செய்கிறது”
“உள்ளடக்கய நிதிச் சேவையை ஊக்குவிப்பதில் ஜன் தன் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கறது”
“இந்தியாவின் நிதித் தொழில்நுட்ப வெற்றிக்கு யுபிஐ மிகச் சிறந்த உதாரணம்”
“பெண்களுக்கு நிதி அதிகாரமளிப்பதற்கு ஜன் தன் திட்டம் வலுவான அடித்தளமிட்டுள்ளது”
“இந்தியாவில் நிதித் தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள மாற்றம், தொழில்நுட்பத்தோடு நின்றுவிடாது. அதன் சமூகத் தாக்கம் தொலைநோக்கு உடையது”
“நிதிச் சேவைகளை ஜனநாயகமயமாக்குவதில் நிதித் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்துள்ளது”
“இந்தியாவின் நிதித் தொழில்நுட்ப சூழலியல், ஒட்டுமொத்த உலகிலும், வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்தும். நமது சிறந்த பணி இன்னும் வரவேண்டியுள்ளது”

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக நிதித் தொழில்நுட்ப திருவிழா(GFF) 2024-ல், பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.   இந்த நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.  நிதித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதோடு, இத்துறையுடன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில்,  இந்திய பணப்பட்டுவாடா கவுன்சில்,  இந்திய தேசிய பணப் பட்டுவாடா கழகம் மற்றும் நிதித் தொழில்நுட்ப சங்கம கவுன்சில் ஆகியவை, இந்த நிதித் தொழில்நுட்பத் திருவிழாவிற்கு கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. 

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டில் பண்டிகைகள் நெருங்கி வரும் வேளையில், நாட்டின் பொருளாதாரமும், சந்தைகளும் கொண்டாட்ட மனப்பாங்கில் இருக்கும்போது, கனவுகளின் நகரமான மும்பையில், இந்த நிதித் தொழில்நுட்பத் திருவிழா நடைபெறுகிறது.    நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரையும் பிரதமர் அன்புடன் வரவேற்றார்.    விழா தொடங்குவதற்கு முன்பாக, கண்காட்சியில் தமது அனுபவங்களையும், கலந்துரையாடல்களையும் நினைவுகூர்ந்த திரு. மோடி, இளைஞர்களின் புதுமை கண்டுபிடிப்புகள் மிகுந்த புதிய உலகையும், வருங்கால சாத்தியங்களையும்  அனைவரும் காணலாம் என்றார்.   இந்த நிதித் தொழில்நுட்பத் திருவிழா-2024  வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்களிப்பை வழங்கிய அனைவரையும் அவர் பாராட்டினார்.  

இந்தியாவின் நிதித் தொழில்நுட்பப் புதுமைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர்,  “இதற்கு முன்பு இந்தியா வந்த வெளிநாட்டு விருந்தினர்கள், நமது கலாச்சார பன்முகத்ன்மையைக் கண்டு வியப்பது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது அவர்கள் நமது நிதித் தொழில்நுட்ப பன்முகத்தன்மையையும் கண்டு வியக்கின்றனர்” என்றார்.   விமான நிலையத்தில் வந்திறங்கியதிலிருந்து, சாலையோர உணவுகளை ருசிப்பது முதல் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவது வரை, இந்தியாவின் நிதித் தொழில்நுட்பப் புரட்சி பரந்து விரிந்தது என்றும் திரு.மோடி குறிப்பிட்டார்.   “கடந்த 10 ஆண்டுகளில், நம்நாட்டு தொழில்துறை 31 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்திருப்பதோடு, புத்தொழில்களின் எண்ணிக்கையும் 500 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது”  என்று கூறிய அவர்,  குறைந்த விலையில் செல்போன் விற்பனை, செலவில்லா தரவு மற்றும் ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.   “தற்போது, நாட்டில் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை  60 மில்லியனிலிருந்து 940 மில்லியனாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்ட திரு. மோடி, டிஜிட்டல் அடையாள ஆவணமாகக் கருதப்படும் ஆதார் இல்லாத 18வயதான யாரும் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.   “தற்போது, நாட்டில் உள்ள 530 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் மக்கள் தொகைக்கும் சம்மான எண்ணிக்கையிலானவர்களை, 10 ஆண்டுகளில் வங்கிக் கணக்குடன் இணைத்திருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

ஜன் தன், ஆதார் மற்றும் செல்போன் ஆகிய மூன்று அம்சக் கூட்டணி, ‘ரொக்கப் பணம் தான் பெரிது’ என்ற மனப்பாண்மையை சுக்குநூறாக்கி இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலகில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தான் நடைபெறுகிறது என்றும் கூறினார்.   “இந்தியாவின் யுபிஐ உலகில் நிதித் தொழில்நுட்பத்திற்கு சிறந்த உதாரணமாக திகழகிறது” என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டிலுள்ள அனைத்துக் கிராமங்களிலும், எத்தகைய பருவநிலையிலும்  24  X 7 வங்கி சேவைகளுக்கு வழிவகுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.    கோவிட் பெருந்தொற்று பாதிப்பை நினைவுகூர்ந்த பிரதமர்,  அந்த நேரத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்படாத, உலகின் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்ந்த்தை சுட்டிக்காட்டினார்.  

ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு, சில தினங்களுக்கு முன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர்,   பெண்களுக்கு அதிகாரமளிப்பதில், இது மிகப்பெரிய ஊடகமாக மாறியுள்ளது என்றார்.   இதுவரை பெண்கள் பெயரில் 29 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக்க்  கூறிய அவர், சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு இது புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.   ஜன் தன் கணக்கு தத்துவத்தின்  அடிப்படையிலேயே, மிகப்பெரிய குறுநிதியுதவித் திட்டமான முத்ரா திட்டம் தொடங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,   இத்திட்டத்தின் கீழ இதுவரை ரூ.27 ட்ரில்லியன் அளவிற்கு கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.    “பயனாளிகளில் 70 சதவீதத்தினர் பெண்கள்” என்றும் திரு.மோடி குறிப்பிட்டார்.   சுய உதவிக் குழுவினரை வங்கி நடைமுறைகளுடன் இணைப்பதில் ஜன் தன் கணக்குகள் பெரிதும் பயன்பட்டிருப்பதோடு, 10கோடி கிராமியப் பெண்கள் பலன் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.   “பெண்களுக்கு நிதி அதிகாரமளிக்க ஜன் தன் திட்டம் வலுவான அடித்தளமிட்டுள்ளது” என்றும் பிரதமர் மோடி கூறினார்.  

 

இணை பொருளாதாரத்தால் உலகம் எதிர்கொள்ளும் அபாயம் குறித்து எச்சரித்த பிரதமர்,  இதுபோன்ற நடைமுறைகளால் ஏற்படும் பாதிப்புகளை அகற்றுவதில் நிதித் தொழில்நுட்பம்  ஆக்கப்பூர்வ பங்கு வகிப்பதோடு, வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.   டிஜிட்டல் தொழில்நுட்பம், இந்தியாவில் வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்தி இருப்பதோடு, நூற்றுக்கணக்கான அரசுத் திட்டங்களின் பலன் மக்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் செயல்படுத்தப்படுவதையும் உதாரணமாக எடுத்துக்காட்டியதுடன்,   இந்த நடைமுறை, அரசு நிர்வாக நடைமுறையில் உள்ள குறைபாடுகளைத் தடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.   “தற்போது, சீர்திருத்தங்களின் பலன் முறையான வங்கி நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதை மக்கள் காணலாம்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நிதித் தொழில்நுட்ப தொழில்துறை நாட்டில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை சுட்டிக்காட்டிய பிரதமர்,  இது இந்தியாவின் தொழில்நுட்ப நிலவரத்தை மாற்றியமைத்திருப்பதோடு மட்டுமின்றி,  சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி,  நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவிற்கு இடையேயான இடைவெளியை அகற்றியிருக்கிறது.   இதே வங்கி சேவைகளை பயன்படுத்த முன்பு ஒருநாள் முழுவதையும் செலவிட வேண்டியிருந்ததோடு, விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வந்த நிலையில், நிதித் தொழில்நுட்பம் மூலம்,  தற்போது செல்போனிலேயே இந்த சேவைகள் எளிதில் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.  

 

நிதிச் சேவைகளை ஜனநாயகமயமாக்குவதில் நிதித் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர்,   உடனடி கடன் வசதி, கிரெடிட் கார்டுகள், முதலீடுகள் மற்றும் காப்பீடு சேவை கிடைப்பது போன்ற உதாரணங்களையும் எடுத்துரைத்தார்.  கடன் வசதிகளைப் பெறுவதை, நிதித் தொழில்நுட்பம் எளிமை மற்றும் உள்ளடக்கியதாக மாற்றியிருப்பதாகக் கூறிய அவர்,   சாலையோர வியாபாரிகள் பினை உத்தரவாதமின்றி கடன் பெறுவதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் தொழிலை விரிவாக்குவதற்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் வகை செய்திருப்பதாகவும் அவர்  குறிப்பிட்டார்.   பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதியங்களை அணுகுவது,  முதலீட்டு அறிக்கைகள் மற்றும் டீமேட் கணக்கு தொடங்குவது எளிமையாகி உள்ளது என்றும் அவர் கூறினார்.   டிஜிட்டல் இந்தியாவின் எழுச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், நிதித் தொழில்நுட்ப ஆதரவின்றி, தொலைதூர மருத்துவ சேவைகள், டிஜிட்டல் கல்வி மற்றும் திறன் கற்றல் போன்றவை சாத்தியமாகி இருக்காது என்றும் தெரிவித்தார்.    “இந்தியாவின் நிதித் தொழில்நுட்பப் புரட்சி, வாழ்க்கையின் கண்ணியம் மறும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது”  என்றும் திரு.மோடி குறிப்பிட்டார்.  

 

இந்தியாவின் நிதித் தொழில்நுட்பப் புரட்சி எட்டியுள்ள சாதனைகள், புதுமை கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல, மாறாக,  பின்பற்ற்றச் செய்வதாகவும் பிரதமர் கூறினார்.  இந்தப் புரட்சியை ஏற்றுக்கொண்ட இந்திய மக்களின் வேகம் மற்றும் அளவைப் பாராட்டிய திரு.மோடி, இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு வசதியின் பங்களிப்பையும் பாராட்டியதுடன், இந்த்த் தொழீல்நுட்பங்கள் மீது நம்பிக்கயை ஏற்படுத்துவதற்காக, நாட்டில்  மிகச்சிறந்த கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

டிஜிட்டல் சேவை மட்டும் மேற்கொள்ளும் வங்கிகள் மற்றும் புதிய வங்கி நடுமுறை போனற் தற்கால அம்சங்களை சுட்டிக்காட்டிய பிரதமர்,  “21-ம் நூற்றாண்டின் உலகம் துரித கதியில் மாறி வருவதோடு, ரூபாய் நோட்டுகளில் இருந்து  க்யூஆர்(விரைவு சேவை) கோடு வரை, நம்மை வெகுதொலைவுக்கு அழைத்துச் சென்றிருப்பதோடு, நாம் தினந்தோறும் பல்வேறு புதுமைகளைக்  கண்டுவருகிறோம்”  என்றும் தெரிவித்தார்.    டிஜிட்டல் இரட்டைத் தொழில்நுட்பத்தை பாராட்டிய திரு.மோடி, நெருக்கடி மேலாண்மையை மதிப்பிடுவதில் இது உலகின் போக்கை மாற்றுவதோடு, மோசடிகளைக் கண்டறிவதை மதிப்பிடுதல் மற்றும் நுகர்வோர் அனுபவத்தை வழங்கும் என்றும் கூறினார்.   டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி கட்டமைப்பின் சாதகங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்,  இது, ஆன்லைன் வர்த்தகத்தை உள்ளடக்கியதாகவும், சிறு வியாபாரத்துடன் இணைப்பதாகவும்,  தொழில் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்பு அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.    தற்போது, கணக்கு தொகுப்பாளர்கள், நிறுவனங்களின் சுமூக செயல்பாட்டிற்கு தரவுகளை பயன்படுத்துவதுடன்,  வர்த்தக இணையதளங்கள் மற்றும் இ-ரூபி போன்ற டிஜிட்டல் பற்றுச்சீட்டு காரணமாக,  சிறிய நிறுவனங்களின் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்த திரு.மோடி,   இதுபோன்ற சேவைகள் , உலகின் பிற நாடுகளுக்கும் அதே அளவிற்கு பயனளிக்கும் என்றும்  கூறினார்.   

“உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை ஏற்படுத்த இந்தியா அழைப்பு விடுத்துள்ளது” என்று குறிப்பிட்ட பிரதமர்,   இதுபோன்ற ஒரு புதுமை கண்டுபிடிப்பாகத்தான் க்யூ ஆர் கோடுடன் சவுண்ட் பாக்ஸ பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.   இந்தியாவின் நிதித் தொழில்நுட்பத் துறை, அரசாங்கத்தின் வங்கித் தோழன் திட்டம் குறித்து ஆராய வேண்டுமென்ற கேட்டுக்கொண்ட அவர்,  அனைத்துக் கிராமங்களிலும் வங்கி சேவையை விரிவுபடுத்தி,  டிஜிட்டல் விழிப்புணர்வை  ஏற்படுத்துவதில் நமது புதல்விகளின் முயற்சிகளை சுட்டிக்காட்டி, இவை நிதித் தொழில்நுட்பத்திற்கு புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.  

 

நிதித் தொழில்நுட்பத்திற்கு உதவ கொள்கை அளவில் தேவையான அனைத்து மாற்றங்களையும் கொண்டுவர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர்,  இதற்கு உதாரணமாக, ஏஞ்சல் வரி ரத்து, நாட்டில்  ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதுடன்,  டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார்.    இணையக் குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர்,  டிஜிட்டல் எழுத்தறிவை ஊக்குவிக்க பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கட்டுப்பாட்டு அமைப்புகளை கேட்டுக் கொண்டார்.    நாட்டில் நிதித் தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில்களின் வளர்ச்சியில், இணையக் குற்றங்கள் குறுக்கிடக் கூடாது என்பதை உறுதி செய்வதும் அதே அளவிற்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.  

“நிலையான  பொருளாதார வளர்ச்சி தான் இந்தியாவின் தற்போதைய முன்னுரிமை”  என்றும் பிரதமர் தெரிவித்தார்.    நிதிச் சந்தைகளை, அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் வலுப்படுத்த தேவையான விரிவான, வெளிப்படையான மற்றும் திறமையான நடுமுறைகளை அரசு உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   பசுமை நிதி மற்றும் உள்ளடக்கய நிதி தன்னிறைவுடன் நிலையான வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

 

நிறைவாகப் பேசிய பிரதமர்,   இந்திய மக்களுக்கு தரமான வாழ்க்கை முறையை வழங்குவதில், இந்தியாவின் நிதித் தொழில்நுட்ப சூழலியல் பெரும் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெவித்தார்.   “இந்தியாவின் நிதித் தொழில்நுட்ப சூழலியல், உலகம் முழுவதிலும் வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்தும்.  நாம் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்” என்றும் பிரதமர் கூறினார்.   ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள 10-வது உலக நிதித் தொழில்நுட்பத் திருவிழாவிலும் தாம் கலந்து கொள்வேன் என்று பிரதமர் நம்பிக்கை  தெரிவித்தார்.  நிகழ்ச்சி நிறைவடைவதற்கு முன்பாக, செயற்கை நுண்ணறிவு உதவியுடன், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் செல்வி புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன்,  இந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பவர்கள்,  நமோ செயலியின் புகைப்பட பிரிவிற்குச் சென்று அதனைப் பார்ப்பதுடன், தங்களது செல்பிகளை பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவித்தார். 

 

ரிசர்வ் வங்கி ஆளுனர் திரு.சக்திகாந்த தாஸ், உலக நிதித் தொழில்நுட்பத் திருவிழாவின் தலைவர் திரு.கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.     

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
UPI reigns supreme in digital payments kingdom

Media Coverage

UPI reigns supreme in digital payments kingdom
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Assam Chief Minister meets PM Modi
December 02, 2024