இந்தியாவின் மகத்தான ஆன்மிக மற்றும் அறநெறித் தலைவர்களான ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் குறித்து புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் அனைவருக்கும் தமது மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு இன்று இந்த அரங்கம் முன்னெப்போதும் இல்லாத தேசத்தின் வரலாற்றுத் தருணத்தைக் காண்கிறது என்றார். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய திசையைக் காட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சுதந்திரத்தின் நோக்கங்களுக்கு வலுவான அர்த்தத்தையும், சுதந்திர இந்தியாவின் கனவையும் எடுத்துரைப்பதாக இருந்தது என்று அவர் கூறினார். “நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ நாராயண குருவுக்கும், மகாத்மா காந்திக்கும் இடையேயான சந்திப்பு இன்றும் ஊக்கமளிப்பதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது. மேலும் சமூக நல்லிணக்கத்திற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் கூட்டான இலக்குகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்திமிக்க ஆதாரமாக திகழ்கிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஸ்ரீ நாராயண குருவின் பாதங்களில் பணிந்து மரியாதை செலுத்திய அவர் மகாத்மா காந்திக்குப் புகழாரம் சூட்டினார்.
“ஸ்ரீ நாராயண குருவின் சிந்தனைகள் மனிதகுலம் அனைத்திற்கும் மாபெரும் பொக்கிஷமாகும்” என்று கூறிய திரு மோடி, நாட்டிற்கும், சமூகத்திற்கும் சேவையாற்ற உறுதிபூண்டுள்ளவர்களுக்கு ஸ்ரீ நாராயண குரு வழிகாட்டும் விளக்காகத் திகழ்கிறார் என்றார். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளுடன் அவர் கொண்டிருந்த நீண்ட தொடர்பை பிரதமர் பகிர்ந்துகொண்டார். இன்றும் கூட இந்த சமூகங்களின் மேம்பாட்டுக்கான முக்கிய முடிவுகளை தாம் மேற்கொள்ளும்போது குருதேவை நினைவில் கொள்வதாக பிரதமர் தெரிவித்தார். பல நூற்றாண்டுக் கால காலனிய ஆட்சியில் திரிக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சமூக நிலைமை பற்றி எடுத்துரைத்த திரு மோடி, அந்தக் காலத்தில் இருந்த சமூகத் தீமைகளுக்கு எதிராகப் பேசுவதற்கு மக்கள் அஞ்சினர் என்றார். இருப்பினும், ஸ்ரீ நாராயண குரு எதிர்ப்பால் மனம் குலையாதவராகவும் சவால்களுக்கு அஞ்சாதவராகவும் விளங்கியதை அவர் எடுத்துரைத்தார். உண்மை, சேவை, நல்லெண்ணம் ஆகியவற்றில் உறுதியான நம்பிக்கையுடன் நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றில் ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைப் பற்றினை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த ஊக்கம்தான் ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற பாதையை தமக்கு காட்டியது என்று உறுதிபட தெரிவித்த திரு மோடி, இந்த நம்பிக்கையே கடைக்கோடியில் நிற்கும் ஒரு தனிநபரை நமது உயர் முன்னுரிமையாக கொண்டு இந்தியாவை கட்டமைக்க நமக்கு வழிகாட்டியது என்றார்.

ஸ்ரீ நாராயண குரு மற்றும் சிவகிரி மடத்துடன் தமக்குள்ள ஆழமான, நிலையான பிணைப்பை இந்த மடத்துடன் தொடர்புடைய துறவிகளும், மக்களும் நன்கு அறிவார்கள் என்பதை கோடிட்டுக்காட்டிய பிரதமர், இந்த மடத்தின் மதிப்புமிகு துறவிகளின் அன்பால் தாம் எப்போதும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். கேதார்நாத்தில் 2013-ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கைப் பேரிடரை நினைவுகூர்ந்த அவர், அந்த சமயத்தில் சிவகிரி மடத்தைச் சேர்ந்த பலர் அதில் சிக்கிக் கொண்டனர் என்றும் அவர்களை பத்திரமாக மீட்பதற்கு தாங்கள் பொறுப்பேற்று கொள்வதாக அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த என்னிடம், இந்த மடத்தைச் சேர்ந்தவர்கள் உறுதியளித்தனர் என்றும் கூறினார். நெருக்கடியான நேரத்தில் ஒருவரின் கவனம் முதலில் தங்களுக்கு சொந்தமானதாக கருதுவோர் பக்கமே திரும்பும். சிவகிரி மடத்தின் துறவிகளின் உறவு மற்றும் நம்பிக்கை உணர்வை விட பெரிதாக ஆன்மிக திருப்தி அளிக்கும் விஷயம் வேறெதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
காசியுடனான தொடர்பை பகிர்ந்துகொண்ட பிரதமர், கேரளாவில் உள்ள வர்கலாவை வெகுகாலமாக தென்னிந்தியாவின் காசி என்று குறிப்பிடுவார்கள் என்றும் கூறினார். வடக்கு அல்லது தெற்கில் காசி இருந்தாலும் தம்மைப் பொறுத்தவரை அனைத்து காசியும் தமக்கு சொந்தமானது என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியங்கள், அதன் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் பற்றி அறிந்துகொள்ளும் நல்வாய்ப்பை தாம் பெற்றிருப்பதாக திரு மோடி கூறினார். தேசம் எப்போதெல்லாம் பிரச்சனையை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் மகத்தான ஆளுமை உருவாகி சமூகத்திற்கு புதியவழி காட்டுவது இந்தியாவின் தனித்துவ பலமாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். சமூகத்தின் ஆன்மிக மேம்பாட்டை நோக்கி சிலர் பணியாற்றும் போது மற்றவர்கள் சமூக சீர்திருத்தங்களை வேகப்படுத்துகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ நாராயண குரு அத்தகைய துறவிகளில் ஒருவர் என்று பிரதமர் கூறினார். ‘நிவ்ரித்தி பஞ்சகம்’, ‘ஆத்மோபதேச சதகம்’ போன்ற ஸ்ரீ நாராயண குருவின் படைப்புகள் அத்வைதம் மற்றும் ஆன்மிக ஆய்வுக்கு அத்தியாவசியமான வழிகாட்டிகளாக திகழ்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ நாராயண குரு யோகா, வேதாந்தம், ஆன்மீக பயிற்சி மற்றும் வீடுபேறு ஆகியவற்றை அவர் தனது முக்கிய பேசுபொருளாக கொண்டுள்ளதாக குறிப்பிட்ட திரு மோடி, தீமைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு சமூகத்தின் ஆன்மீக மேம்பாட்டை சமூக முன்னேற்றத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதை ஸ்ரீ நாராயண குரு அறிந்து வைத்திருந்ததாக கூறினார். ஸ்ரீ நாராயண குரு ஆன்மீகத்தை சமூக சீர்திருத்தம் மற்றும் பொது நலனுக்கான ஊடகமாக பயன்படுத்தி வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். காந்திஜியும் ஸ்ரீ நாராயண குருவின் செயல்பாடுகளிலிருந்து உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் போன்ற அறிஞர்களும் கூட ஸ்ரீ நாராயண குருவுடனான கலந்துரையாடல்களிலிருந்து பயனடைந்தனர் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
ஸ்ரீ நாராயண குருவின் ஆத்ம உபதேச சதகத்தை ரமண மகரிஷிக்கு ஓதிக் காட்டிய காலகட்டம் குறித்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், அதனைக் கேட்டதும், ரமண மகரிஷி "அவர் அனைத்தையும் அறிந்தவர்" என்று கூறியதை சுட்டிக் காட்டினார். வெளிநாட்டு சித்தாந்தங்கள் இந்தியாவின் நாகரிகம், கலாச்சாரம், தத்துவத்தை குறைத்து மதிப்பிட முயன்ற காலகட்டத்தில், ஸ்ரீ நாராயண குரு, தவறுகள் நமது அசல் மரபுகளில் இல்லை என்றும், மாறாக நமது ஆன்மீகத்தை உண்மையிலேயே உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் நம் அனைவருக்கும் அவர் உணர்த்தினார். ஒவ்வொரு மனிதனிலும் நாராயணனையும், ஒவ்வொரு உயிரினத்திலும் சிவனையும் காணும் மக்களாக நாம் வாழ்ந்து வருகிறோம் என்று அவர் கூறினார். இரட்டை நிலைப்பாடுகள் இன்றி, வேற்றுமையில் ஒற்றுமையையும், வெளிப்படையான வேறுபாடுகளில் கூட ஒன்றாக இருப்பதை நாம் உணர்கிறோம் என்று பிரதமர் கூறினார்.
‘ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே தெய்வம், என்று பொருள்படும் மனுஷ்யானம் குறித்த ஸ்ரீ நாராயண குருவின் மந்திரத்தை அனைவரும் அறிந்திருப்பதாக திரு மோடி தெரிவித்தார். இது மனிதகுலம் மற்றும் அனைத்து உயிரினங்கள் ஒற்றுமையுடன் வாழ்வதை பிரதிபலிப்பதாகவுள்ளது என்று கூறினார். இந்த தத்துவம் நாட்டின் நாகரீக நெறிமுறைகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். இந்தியா இந்த தத்துவத்தை இன்று உலக அளவில் அனைவரது நலனுக்கான உணர்வுடன் விரிவுபடுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். அண்மையில், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டத்தை பிரதமர் எடுத்துரைத்தார். இது பூமி மற்றும் உலகளவில் அனைவரின் நலவாழ்வு என்ற தொலைநோக்கு பார்வையைக் குறிப்பதாகவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக, மனிதகுலத்தின் நலனுக்காக ‘ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்’ போன்ற சர்வதேச அளவிலான முயற்சிகளையும் இந்தியா தொடங்கியிருப்பதாக பிரதமர் கூறினார். 'ஒரே சூரியன், ஒரே பூமி, ஒரே அமைப்பு' என்ற நீடித்த வளர்ச்சிக்கான செயல்பாடுகளை உலகளவிலான இயக்கமாக இந்தியா தற்போது வழிநடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் கருப்பொருளான 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த முயற்சிகள் 'வசுதைவ குடும்பகம்' என்ற உணர்வில் வேரூன்றியிருப்பதாகவும், இந்த தத்துவம் ஸ்ரீ நாராயண குரு போன்ற துறவிகளையும் ஈர்த்துள்ளது என்றும் கூறினார்.

"ஸ்ரீ நாராயண குரு பாகுபாடு இல்லாத சமூகத்தை கற்பனை செய்ததாகவும், இன்று, நாடு ஒரு முறையான அணுகுமுறையைப் பின்பற்றுவதன் வாயிலாக பாகுபாடுகளுக்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் நீக்கப்பட்டு வருவதாக" திரு மோடி கூறினார். கடந்த 10-11 ஆண்டுகளுக்கு முன்பு, நாடு சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் நிறைவடைந்த பிறகும், லட்சக்கணக்கான மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்ததையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு தங்குமிடம் இல்லாமல், எண்ணற்ற கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க பெறாமலும், சுகாதாரப் பராமரிப்பு இல்லாததன் காரணமாக சிறு நோய்களுக்கு கூட சிகிச்சையளிக்க முடியாத நிலையும் இருந்து வந்தது என்றும், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களை, காப்பாற்ற முடியாத சூழல் இருந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். லட்சக்கணக்கான ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், ஆகியோருக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவர்களது கண்ணியமான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். இந்த கடினமான சூழல் பல தலைமுறைகளாக நீடித்து வருவதால், சிறந்த வாழ்வாதாரம் மீதான நம்பிக்கையை இழக்க வைத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் தொகையில் அதிக அளவில் ஏராளமான மக்கள் வேதனையிலும், விரக்தியிலும் வாழும் நிலையில் ஒரு நாடு எவ்வாறு முன்னேற முடியும் என்று அவர் வினவினார். இதனை கருத்தில்கொண்டு மக்களை மையமாகக் கொண்ட அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை வழங்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இதன் காரணமாக, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான ஏழை, தலித், விளிம்புநிலை மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் வழங்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். எனவே, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இல்லந்தோறும் தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையாத தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும் அவை சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பயனடையும் வகையில், பிரதமரின் ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மத்திய அரசின் இத்தகைய முயற்சிகள் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் கூறினார். இதன் விளைவாக, பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்தியில் மேற்கொண்டு வரும் இத்தகைய முயற்சிகள் அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீ நாராயண குரு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தாராக மந்திரத்துடன் மத்திய அரசு அதைத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் நிறைவடைந்த பிறகும், இந்தியாவில் பெண்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிய முடியாத நிலை இருந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பல்வேறு புதிய துறைகளில் பெண்களுக்கான உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அவற்றில் இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். விளையாட்டு முதல் விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் முத்திரை பதித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து வருவதாக அவர் கூறினார். புதிய நம்பிக்கையுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கனவை நனவாக்கும் வகையில் அனைத்து துறைகளும் முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் கூறினார். இதனை உறுதி செய்யும் வகையில் தூய்மை இந்தியா இயக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான அம்ரித் ஏரிகள் கட்டுமானத் திட்டம், சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு இயக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் வலிமை மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய பங்களிப்பு மூலம் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

'கல்வி மூலம் ஞானம், அமைப்பின் மூலம் வலிமை, தொழில்துறை மூலம் செழுமை' என்று பிரகடனப்படுத்திய ஸ்ரீ நாராயண குருவின் காலத்தால் அழியாத தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த திரு மோடி, 'ஸ்ரீ நாராயண குரு இந்த தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், அதை நனவாக்க முக்கிய நிறுவனங்களின் அடித்தளத்தையும் அமைத்தார்' என்று கூறினார். சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சாரதா மடத்தை குருஜி சிவகிரியில் நிறுவினார் என்று பிரதமர் குறிப்பிட்டார். கல்வி என்பது விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் வழிவகுக்க வேண்டும் என்ற நம்பிக்கையை இந்த நிறுவனம் குறிப்பிடுவதாக அவர் கூறினார். குருதேவ் தொடங்கிய முயற்சிகள் தற்போதும் விரிவடைந்து வருவது குறித்து திரு மோடி திருப்தி தெரிவித்தார். நாடு முழுவதும் ஏராளமான நகரங்கள், குருதேவ் மையங்கள் மற்றும் ஸ்ரீ நாராயண கலாச்சார மையம் ஆகியவை மனிதசமுதாயத்தின் நலனுக்காக துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
"கல்வி, அமைப்பு மற்றும் தொழில்துறை முன்னேற்றம் மூலம் சமூக நலனின் தொலைநோக்குப் பார்வை நாட்டின் தற்போதைய கொள்கைகள் மற்றும் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கிறது" என்று பிரதமர் கூறினார், பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். இந்தக் கொள்கை கல்வியை நவீனமயமாக்கி, அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், தாய்மொழியில் கற்றலை ஊக்குவிக்கிறது. சமூகத்தின் நலிந்த மற்றும் விளிம்பு நிலை பிரிவினர் இந்த முயற்சியின் மூலம் அதிக அளவில் பயனடையும் பயனாளிகள் என்று அவர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில், நாடு முழுவதும் நிறுவப்பட்ட புதிய ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் எய்ம்ஸ்களின் எண்ணிக்கை, சுதந்திரத்திற்குப் பிறகு முதல் 60 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று திரு மோடி கூறினார். இதன் விளைவாக, ஏழை மற்றும் பின்தங்கிய இளைஞர்களுக்கு உயர்கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பழங்குடியினர் பகுதிகளில் 400-க்கும் அதிகமான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். பல தலைமுறைகளாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட பழங்குடியின சமூகங்களின் குழந்தைகள் தற்போது முன்னேறி வருவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். கல்வி என்பது திறன்கள் மற்றும் வாய்ப்புகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். திறன் இந்தியா போன்ற பணிகள் இளைஞர்கள் சுயசார்புடையவர்களாக மாற அதிகாரம் அளிக்கின்றன. நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்தை சுட்டிக் காட்டிய திரு மோடி, தனியார் துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் முத்ரா திட்டம், ஸ்டாண்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்குகின்றன என்று கூறினார்.
"ஸ்ரீ நாராயண குரு ஒரு வலுவான மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியாவை கனவு கண்டார் என்றும், இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, இந்தியா பொருளாதார, சமூக மற்றும் ராணுவத் துறைகளில் முன்னணியில் இருக்க வேண்டும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். நாடு இந்தப் பாதையில் சீராக செல்வதாகவும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி விரைவாக முன்னேறி செல்வதாகவும் அவர் கூறினார். அண்மையில் இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் கண்டதாக திரு மோடி குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான மற்றும் சமரசமற்ற கொள்கையை உலக அரங்கில் ஆபரேஷன் சிந்தூர் தெளிவாக நிரூபித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்திய குடிமக்களின் ரத்தத்தை சிந்த வைத்த பயங்கரவாதிகளுக்கு எந்த புகலிடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

"தற்கால இந்தியா நாட்டின் நலனுக்கு எது சரியானதோ அதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கிறது" என்று திரு மோடி கூறினார். ராணுவத் தேவைகளுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது படிப்படியாகக் குறைந்து வருவதாக குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையில் இந்தியா தற்சார்பு பெற்று வருவதாக எடுத்துரைத்தார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியப் படைகள் 22 நிமிடங்களுக்குள் எதிரியை சரணடையும்படி செய்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்த மாற்றம் தெளிவாகத் தெரிந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். வரும் காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உலகளாவிய அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் விருப்பங்களை நிறைவேற்ற, ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் எடுத்துரைப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர், இந்த திசையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய புனித யாத்திரைத் தலங்களை இணைக்க சிவகிரி சுற்றுலா திட்டம் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் எடுத்துரைத்தார். ஸ்ரீ நாராயண குருவின் ஆசிகளும் போதனைகளும் அமிர்தக் காலத்தின் வழியாக நாட்டிற்கான பயணத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார். வளர்ச்சியடைந்த நாடு என்ற கனவை இந்திய மக்கள் ஒன்றாக இணைந்து நனவாக்குவார்கள் என்று அவர் உறுதிபடக் கூறினார். ஸ்ரீ நாராயண குருவின் ஆசிகளை அனைவரும் பெற வேண்டும் என்று வாழ்த்தி, சிவகிரி மடத்தின் அனைத்து துறவிகளுக்கும் மீண்டும் ஒருமுறை தமது வணக்கத்தைத் தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், ஸ்ரீ நாராயண தர்ம சங்கம் அறக்கட்டளையின் துறவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீக பண்புடைய, நன்னெறி கொண்ட தலைவர்களான ஸ்ரீ நாராயண குருவுக்கும், மகாத்மா காந்திக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் 1925 மார்ச் 12 அன்று மகாத்மா காந்தியின் வருகையின் போது சிவகிரி மடத்தில் நடந்தது. வைக்கம் போராட்டம், மத மாற்றங்கள், அகிம்சை, தீண்டாமை ஒழிப்பு, இன்மையும், மறுமையும் இல்லாத நிலையை அடைதல், விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து உரையாடல் நிகழ்ந்தது.
ஸ்ரீ நாராயண தர்ம சங்கம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள இந்த கொண்டாட்டம், இந்தியாவின் சமூக மற்றும் தார்மீகக் கட்டமைப்பை தொடர்ந்து வடிவமைக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட உரையாடலைப் பற்றி சிந்திக்கவும் நினைவுகூரவும் ஆன்மீகத் தலைவர்களையும் பிற உறுப்பினர்களையும் ஒன்றிணைப்பதாக அமைந்துள்ளது. ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இருவரும் முன்வைத்த சமூக நீதி, ஒற்றுமை மற்றும் ஆன்மீக நல்லிணக்கம் ஆகியவற்றின் பகிரப்பட்ட பார்வைக்கு இது ஒரு சக்திவாய்ந்த அஞ்சலியாக உள்ளது.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
The ideals of Sree Narayana Guru are a great treasure for all of humanity. pic.twitter.com/YmgAsjwVRA
— PMO India (@PMOIndia) June 24, 2025
India has been blessed with remarkable saints, sages and social reformers who have brought about transformative changes in society. pic.twitter.com/j9ZL7D6vJw
— PMO India (@PMOIndia) June 24, 2025
Sree Narayana Guru envisioned a society free from all forms of discrimination.
— PMO India (@PMOIndia) June 24, 2025
Today, by adopting the saturation approach, the country is working to eliminate every possibility of discrimination. pic.twitter.com/L4Z5ywIe69
Missions like Skill India are empowering the youth and making them self-reliant. pic.twitter.com/d1eu9IpP5d
— PMO India (@PMOIndia) June 24, 2025
To empower India, we must lead on every front - economic, social and military. Today, the nation is moving forward on this very path. pic.twitter.com/1zQFJK9CcA
— PMO India (@PMOIndia) June 24, 2025


