உயர்திரு இளவரசர் அவர்களே,

மதிப்பிற்குரிய நார்வே நாட்டுப் பிரதமர் அவர்களே,

இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தக சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே,

இன்று, நார்வே மற்றும் இந்தியாவின் வணிகம் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு பிரமாண்டமான முறையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக நார்வே பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நார்வே மற்றும் இந்தியாவின் வணிகம் மற்றும் ஆராய்ச்சி சமூகத்தினரிடையே இன்று நான் இங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பங்கேற்ற சிலரின் கருத்துக்களைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் பேச்சைக் கேட்கும்போது, நமது நல்லுறவின் அடித்தளம் மிகவும் வலுவாக உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது.

இது வெறும் சாத்தியக்கூறுகளுக்கான நல்லுறவு மட்டுமல்ல; ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒரு கூட்டு செயல்பாடாகும். உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பு ஆகியவை உலகளாவிய சவால்களாக மாறியுள்ள இன்றைய சூழலில், அவற்றை எதிர்கொள்ள இந்தியாவும் நார்வேயும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவின் உணவுத் துறையில் 'ஆர்க்லா' நிறுவனத்தின் முதலீடுகள், இந்தியாவிற்கு எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி வழங்கும் 'ஈக்வினோர்' நிறுவனத்தின் பங்களிப்பு, அல்லது இந்தியாவின் உரத்துறையில் 'யாரா இன்டர்நேஷனல்'  நிறுவனத்தின் பங்களிப்பு என எதுவாக இருந்தாலும் – இந்த கூட்டுமுயற்சிகள் அனைத்தும் நமது உறவை மேலும் வலுப்படுத்துகின்றன.

இங்கு வந்திருக்கும் தலைமைச் செயல் அதிகாரிகளாகிய உங்களில் பலர், இந்தியாவின் துடிப்புமிக்க குஜராத்' மற்றும் பிற முதலீட்டாளர்கள் மாநாடுகளில் தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது, நாம் இந்த கூட்டு செயல்பாட்டின்  வேகத்தை அதிகரித்து, இதனை புதிய எல்லைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் இனி, நாம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மெதுவாக முன்னேறுவது மட்டும் போதாது. நமது வேகத்தை நாம் அதிகரிக்க வேண்டும், அதோடு நமது இலக்குகளையும் மிக உயரமாக நிர்ணயிக்க வேண்டும்.

நண்பர்களே,

இந்தியாவுடன் இணைந்திருக்கும் நீங்கள் அனைவரும், இந்தியாவைப் பற்றி இங்கு நடத்திய கலந்துரையாடல்களும் – இதற்கு இதைவிட ஒரு சிறந்த நேரம் இருக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். சரியான நேரத்தில் சரியான வாய்ப்பைப் பயன்படுத்துவது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், இன்றைய பொழுது நமக்குக் கிடைத்துள்ள ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஐரோப்பிய தடையற்ற  வர்த்தகக் கூட்டமைப்புடன் 'வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை' நாம் நடைமுறைப்படுத்தினோம். இந்த தனித்துவமான மற்றும் சிறப்பான ஒப்பந்தம் என்பது நமக்கு இடையிலான திறமை, தொழில்நுட்பம் மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஐரோப்பிய தடையற்ற வர்த்தகக் கூட்டமைப்பு நாடுகள் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் நூறு பில்லியன் டாலர் முதலீடு செய்யவும், பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளன. இது ஒரு லட்சிய இலக்கு தான், ஆனால் இதனை நிச்சயம் சாதிக்க முடியும். இந்தியாவில் நீங்கள் செய்யும் முதலீடுகளைப் பயனுள்ள முடிவுகளாக மாற்றுவது எங்கள் உத்தரவாதம் என்று நான் உங்களுக்கு நம்பிக்கையோடு உறுதியளிக்கிறேன்.

நண்பர்களே,

உங்களுக்கு குறிப்பாகப் பயனளிக்கக்கூடிய இரண்டு துறைகளைப் பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத் துறைகளில் பெரும் தேவையை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நார்வே நாட்டின் உணவு, மீன்வளம் மற்றும் சுகாதார நிறுவனங்கள் வலுவான கூட்டாளிகளாக மாற முடியும்.

இதேபோல், தூய்மையான எரிசக்தி துறையில், இந்தியாவின் லட்சியங்கள் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இணையற்றதாக உள்ளன. வரும் 2030-ம் ஆண்டிற்குள், 500 கிகாவாட் தூய்மையான எரிசக்தியையும், ஐம்பது லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனையும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தூய்மையான எரிசக்தி முதலீடு என்பது நார்வே நாட்டு நல்வாழ்வு நிதியத்திற்கும் ஒரு முன்னுரிமையான துறையாகும். இந்தியாவின் தூய்மையான எரிசக்தி எதிர்காலத்தில் ஒரு முக்கிய பங்காளராக இணையுமாறு நார்வே நாட்டிற்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

நண்பர்களே,

சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்" என்ற தாரக மந்திரத்தின் வழிகாட்டுதலோடு நாம் முன்னோக்கிச் செல்லும்போது, கடந்த 12 ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், இந்தியாவின் பொருளாதாரத் தன்மையையே நாம் அடிப்படை ரீதியாக மாற்றியமைத்திருப்பதைக் காண முடியும்.

நாங்கள் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் தொடர்ந்து எளிதாக்கி வருகிறோம். அதோடு, எளிதாக வணிகம் செய்வதை மேலும் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில், வரி விதிப்பு, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் உற்பத்தியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சில மிகச்சிறந்த வாய்ப்புகளை இப்போது நாங்கள் வழங்குகிறோம் என்று நான் நம்புகிறேன். மேலும் பல முக்கிய துறைகளில் ஊக்கத்தொகைகளையும் வழங்கி வருகிறோம்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் நமது கப்பல் கட்டும் துறையாகும். இத்துறையை ஒரு மூலோபாய உற்பத்தித் துறையாக மேம்படுத்த நாம் மிக வேகமாகப் பணியாற்றி வருகிறோம். கப்பல் கட்டும் தொழில் குழுமங்களை உருவாக்கி, அதன் வளர்ச்சிக்குத் தேவையான முழுமையான உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம்.

கப்பல் கட்டுவதோடு மட்டுமல்லாமல், பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், பசுமை கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் சேவைகளுக்கான உலகளாவிய மையமாகவும் இந்தியா உருவெடுத்து வருகிறது.

இன்று, நார்வே நாட்டின் கப்பல்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் இந்தியாவில் கட்டப்படுபவை ஆகும். இதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருபத்தைந்து சதவீதமாக நாம் உயர்த்த முடியுமா? இது ஒரு கடினமான பணி அல்ல என்றே நான் நம்புகிறேன். நாம் ஏற்கனவே நல்ல வேகத்தைப் பெற்றுள்ளோம். நமக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் பெரிய லட்சியங்களுடன் கூடிய இன்னும் பெரிய படிகள் மட்டுமே.

இந்தியாவின் நிலையான கொள்கைகள் மற்றும் ஊக்கத்தொகைகளைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தத் துறையில் ஒரு முக்கிய பங்காளராக மாறுமாறு உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

நண்பர்களே,

இன்று, பிரதமரும் நானும் இந்திய-நார்வே உறவை 'பசுமை தொழில்நுட்பத்தில்  உத்திசார்ந்த கூட்டுறவு' என்ற அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளோம். இந்த உத்திசார் கூட்டு செயல்பாட்டின் மூலம், முக்கியமான தாதுக்கள், செயற்கை நுண்ணறிவு, சைபர் தொழில்நுட்பங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் நார்வே நாட்டு நிறுவனங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும். இந்த அனைத்துத் துறைகளிலும், இந்தியாவை உங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் உற்பத்திக்கான தளமாக மாற்றுமாறு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

நண்பர்களே,

இன்று, நாம் இந்திய-நார்வே உறவை ஆய்வகங்களுக்கு இடையிலான, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மற்றும் விஞ்ஞானிகளுக்கு இடையிலான கூட்டுறவாகவும் மாற்றி வருகிறோம். இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், புத்தொழில் நிதியங்கள் மற்றும் நார்வே நாட்டின் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை தங்களுக்குள் தங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. இது இரு நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் புத்தொழில் உள்கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

நண்பர்களே,

உங்களது தேவைகளைத் துல்லியமாகக் கவனித்துச் செயல்படுத்துவதற்காக, 'இன்வெஸ்ட் இந்தியா' அமைப்பிற்குள் நார்வே நாட்டிற்கெனத் தனித்துவமான வர்த்தக வசதி மையத்தை நாம் அமைத்துள்ளோம். இந்த மையம் இந்தியாவில் நீங்கள் முதலீடு செய்வதற்கான பயணத்தை மிகவும் எளிதானதாகவும், வேகமானதாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் மாற்றும்.

இத்தகைய அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு உங்களுக்கு மிகப்பெரிய வசதியை அளிக்கிறது. இது மாநில அரசுகளுடன் நீங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் மிகவும் எளிதாக்குகிறது. மேலும், முடிவெடுக்கும் செயல்முறைகளில் எப்போதெல்லாம் மாற்றங்களோ அல்லது ஆதரவோ தேவைப்படுகிறதோ, அவற்றையும் மிக அதிவேகமாகச் செய்ய முடியும். இதற்காகத்தான் இந்தச் சிறப்பு ஏற்பாட்டை நாம் உருவாக்கியுள்ளோம்.

இப்போது, உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்பும் முக்கியச் செய்தி இதுதான்: வாருங்கள், இந்தியாவில் உங்களது செயல்பாட்டு எல்லையையும், லட்சியங்களையும் விரிவுபடுத்துங்கள். உங்களை இந்தியாவிற்கு நான் அன்போடு அழைக்கிறேன்.

இந்த அனுபவங்களை நீங்களே நேரடியாகக் கண்டறியும் வாய்ப்பையும் பெறுவீர்கள். நானும் எனது தரப்பிலிருந்து உங்களுக்கு எனது உறுதியையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளேன். ஒருவகையில், பந்து இப்போது உங்கள் பக்கத்தில் உள்ளது.

நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity

Media Coverage

PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 17, 2026
August 17, 2026

India Ascendant: Citizens Hail PM Modi's Vision and India’s Multi-Sectoral Growth