21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த முக்கியப் பங்கு வகிப்பார்கள்: பிரதமர் மோடி
இளைஞர்கள் எப்போதும் முழுமையான சக்தியையும், சுறுசுறுப்பையும் கொண்டிருப்பதோடு, பெரிய மாற்றங்களை அவர்கள் வரவேற்பார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்: பிரதமர்
ஏழைகளுக்கு சேவை செய்ய விவேகானந்தர் நினைவுப் பாறை அனைவருக்கும் உந்துதல் அளிக்கிறது: பிரதமர் மோடி
சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டினைக் குறிக்கும் 2022-ஐ நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நாம், உள்ளூர் தயாரிப்புப் பொருட்களையே வாங்க உறுதியேற்போம்: பிரதமர் மோடி
ஹிமாயத் திட்டத்தின்கீழ், கடந்த 2 ஆண்டுகளில் 77 வகையான தொழில்களில் 18000 இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது: மனதின் குரலில் பிரதமர் மோடி
வானியல் துறையில் இந்தியாவின் முன்முயற்சிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கது: பிரதமர் மோடி
17-ஆவது மக்களவையின் கடந்த ஆறு மாதங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தன: மனதின் குரலில் பிரதமர் மோ

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  2019ஆம் ஆண்டின் இறுதிக் கணங்கள் நம்முன்னே இருக்கின்றன.  இன்னும் மூன்று நாட்களில் 2019ற்கு நாம் பிரியாவிடை அளித்து விடுவோம், பின்னர் நாம் 2020ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைப்பதோடு மட்டுமல்லாமல், புதிய ஆண்டில் கால் பதிப்போம், இன்னுமொரு புதிய பத்தாண்டில் தடம் பதிப்போம், 21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டில் நாம் நுழைவோம்.   நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் 2020ஆம் ஆண்டிற்கான இதயம்கனிந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.  இந்தப் பத்தாண்டு பற்றி ஒரு விஷயம் உறுதியாகச் சொல்ல முடியும்; நாட்டின் முன்னேற்றத்துக்கு வேகம் கொடுக்க 21ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிப்பார்கள்.   அவர்கள் இந்த நூற்றாண்டின் அனைத்து விஷயங்களையும் புரிந்து கொண்டு வளர்ந்து வருகிறார்கள்.   அப்படிப்பட்ட இளைய சமுதாயம் பல பெயர்களால் இன்று அறியப்படுகிறது.   சிலர் அவர்களை Millennials என்கிறார்கள், சிலரோ அவர்களை, Generation Z அல்லது Gen Z என்று அழைக்கிறார்கள்.   எது எப்படியோ, மக்கள் மனதில் ஒரு விஷயம் பரவலாகப் பதிந்து விட்டிருக்கிறது – அதாவது இவர்கள் சமூக ஊடகத் தலைமுறையினர் என்பது.  இவர்கள் படுசுட்டிகள்.   புதியனவற்றைச் செய்வது, வித்தியாசமாகச் செய்வது தான் இவர்கள் கனவாக இருக்கிறது.   இவர்களுக்கு எனச் சொந்தமாக கருத்து இருக்கிறது என்பதோடு, மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், குறிப்பாக இந்தியா பற்றி நான் கூற விரும்புகிறேன்.   அதாவது இப்போதெல்லாம் இளைஞர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும் வேளையில், அவர்கள் ஒழுங்கினை விரும்புகிறார்கள், அமைப்புமுறையை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.   இதுமட்டுமல்ல, அவர்கள் ஒழுங்குமுறையைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள்.  ஏதோ சில வேளைகளில் என்பது அல்ல; அந்த அமைப்புமுறை சரியாக பதிலளிக்கவில்லை என்றால், பொறுத்துக் கொள்வதில்லை, தைரியமாக ஏன் ஒழுங்கீனமாக இருக்கிறது என்று கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள்.    இதை நான் சிறப்பானதாகவே காண்கிறேன்.   ஒரு விஷயம் என்னவோ உறுதி – நம் தேசத்து இளைஞர்களைப் பார்க்கும் போது, அவர்களுக்கு அராஜகப் போக்கின் மீது வெறுப்பு இருக்கிறது என்பது தெளிவு.   ஒழுங்கீனம், ஸ்திரமற்ற நிலை ஆகியவற்றை அவர்கள் விரும்பவில்லை.   குடும்ப அரசியல், சாதி அரசியல், வேண்டியவர்கள் வேண்டாதவர்கள், ஆண் பெண் போன்ற வேறுபாடுகளை அவர்கள் விரும்புவதில்லை.    சில வேளைகளில் நாமேகூட பார்க்கலாம், விமான நிலையத்தில் நிற்கும் போதோ, திரையரங்குகளில் இருக்கும் போதோ, வரிசையில் நின்று கொண்டிருக்கும் வேளையில் யாரோ ஒருவர் இடையில் நுழைவதைப் பார்த்தால், முதலில் ஓங்கிக் குரல் கொடுப்பவர்கள் யாரென்றால், இத்தகைய இளைஞர்கள் தாம்.   மேலும் ஒரு விஷயத்தை நாம் பார்த்திருக்கலாம், இப்படி ஏதோ ஒரு சம்பவம் நடக்கும் போது, வேறு ஒரு இளைஞர் உடனடியாகத் தனது மொபைலை எடுத்து அதனைப் படம்பிடிக்கத் தொடங்கி விடுவதோடு மட்டுமல்லாமல், அந்தக் காணொளியை தீயைப் போலப் பரப்பி விடுவார்.    தவறு இழைத்தவர் உடனடியாகத் தான் செய்த தவறு பற்றி உணர்வார்.   ஆக இது ஒருவகையான ஒழுங்கு, புதியயுகம், புதிய வகையான எண்ணப்பாடு, இதைத் தான் நமது இளைய சமுதாயம் பிரதிபலிக்கிறது.   இன்று பாரதத்துக்கு இந்தத் தலைமுறையிடமிருந்து ஏராளமான எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன.    இந்த இளைஞர்கள் தாம் தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும்.   ஸ்வாமி விவேகானந்தர் கூறினார் – My Faith is in the Younger Generation, the Modern Generation, out of them, will come my workers.  அதாவது இளையதலைமுறை, புதிய தலைமுறையினர் மீது எனது நம்பிக்கை இருக்கிறது; அவர்களிலிருந்து தான் என் செயல்வீரர்கள் தோன்றுவார்கள் என்றார் ஸ்வாமி விவேகானந்தர்.    இளைஞர்கள் பற்றிப் பேசுகையில் அவர் மேலும் என்ன கூறினார் தெரியுமா?  “இளமையின் விலையை அளக்கவும் முடியாது, அதை விவரிக்கவும் இயலாது” என்றார்.   இது வாழ்க்கையின் மிக விலைமதிப்பில்லாத காலகட்டமாகும்.   நீங்கள் உங்கள் இளமையை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது, உங்கள் எதிர்காலம், உங்கள் வாழ்க்கை ஆகியவற்றையே நம்பியிருக்கிறது.   ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி, இளமை என்பது ஆற்றல், சுறுசுறுப்பு ஆகியவை நிரம்பியது; அதிலே மாற்றமேற்படுத்தும் பலம் அடங்கியிருக்கிறது.   பாரதநாட்டிலே இந்த பத்தாண்டுக்காலத்தில், இளைஞர்கள் மட்டும் முன்னேறப் போவதில்லை, அவர்களோடு கூடவே, அவர்களின் திறமைகள், நாட்டின் வளர்ச்சி ஆகியவையும் மலரும், பாரதத்தை நவீனமயமாக்குவதில் இந்தத் தலைமுறை மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது, இதை நான் தெளிவாக அனுபவிக்கிறேன்.   வரவிருக்கும் ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று விவேகானந்தரின் பிறந்த நாளன்று, தேசம் இளைஞர்கள் தினத்தைக் கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு இளைஞரும், இந்தப் பத்தாண்டிலே, தனது இந்தப் பொறுப்பின் மீது கண்டிப்பாகத் தன் சிந்தையைச் செலுத்துவதோடு, இந்தப் பத்தாண்டின் பொருட்டு, அவசியம் ஒரு மனவுறுதியையும் மேற்கொள்வார்.  

 

     எனதருமை நாட்டுமக்களே, கன்னியாகுமரியில் ஸ்வாமி விவேகானந்தர் 50 ஆண்டுகளுக்கு முன்பாக எந்தப் பாறையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டாரோ, அந்த இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நினைவுப் பாறைக்கு உங்களில் பலர் சென்றிருக்கலாம்.   கடந்த 50 ஆண்டுகளாக இந்த இடம் பாரதநாட்டின் கௌரவமாக ஆகியிருக்கிறது.   கன்னியாகுமரி…… தேசத்தையும் உலகையும் ஈர்க்கும் மையம்.   தேசபக்தி உணர்வும், ஆன்மீக விழிப்புணர்வும் ஒருசேரப் பெற நினைப்பவர்கள் அனைவரும், இதை ஒரு தீர்த்த யாத்திரைத்தலமாகவே ஆக்கியிருக்கிறார்கள், வழிபாட்டு மையமாக உணர்ந்து வருகிறார்கள்.   ஸ்வாமிஜியின் நினைவுச் சின்னம், அனைத்துப் பிரிவினர், அனைத்து வயதினர், அனைத்து வகைப்பட்டவர் ஆகியோருக்கு தேசபக்திக்கான உத்வேகம் அளிப்பதாக அமைந்திருக்கிறது.    ‘’பரம ஏழைகளுக்குச் சேவை’’ என்ற இந்த மந்திரத்தின்படி வாழ்ந்து பார்க்கும் பாதையைக் காட்டுகிறது.   அங்கே யார் சென்றாலும், அவர்களுக்குள்ளே ஒரு சக்தி பாய்வதை அவர்களால் உணர முடியும், ஆக்கப்பூர்வமான உணர்வு பெருக்கெடுக்கும், தேசத்துக்காக ஏதோ ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என்ற தாகம் பிறக்கும், இவை மிக இயல்பான உணர்வுகள். 

 

நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர்கூட கடந்த நாட்களில், இந்த 50 ஆண்டுக்கால பழமையான பாறை நினைவகத்தைப் பார்த்து விட்டு வந்தார்; அதே போல நமது குடியரசுத் துணைத்தலைவரும்கூட, குஜராத்தின் கட்சின் ரண் பகுதியில் நடைபெறும் மிகச் சிறப்பான ரணோத்ஸவத்தைத் தொடக்கி வைத்துவிட்டு வந்திருக்கிறார் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.   நமது குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் இந்தியாவின் இத்தகைய மகத்துவம் வாய்ந்த சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் போது, நாட்டுமக்களான நம்மனைவருக்கும் கருத்தூக்கம் பிறக்கிறது.   நீங்களும் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். 

எனதருமை நாட்டுமக்களே, நாம் பல்வேறு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், பள்ளிகளில் படிக்கலாம்; ஆனால் படிப்பு நிறைவடைந்த பிறகு, முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என்பது மிகவும் சுகமான அனுபவம், இந்த சந்திப்பின் போது அனைத்து இளைஞர்களுமாக இணைந்து, தங்களின் பழைய நினைவுகளில் ஆழ்ந்து போகிறார்கள், 10, 20, 25 ஆண்டுகள் பின்னோக்கித் தங்கள் நினைவுக் குதிரைகளைத் தட்டி விடுகிறார்கள்.   ஆனால் சில வேளைகளில் இத்தகைய முன்னாள் மாணவர்களின் சந்திப்பு, விசேஷமான ஈர்ப்புக்கான காரணமாக ஆகி விடுகிறது, நாட்டுமக்களின் கவனமும் இதன்பால் ஈர்க்கப்படுவது அவசியமான ஒன்று தான்.    கடந்தகால மாணவர்கள் சந்திப்பு என்பது, அந்த நாளைய நண்பர்களைச் சந்திப்பது, பசுமை நிறைந்த நினைவுகளை அனுபவிப்பது….. இவையெல்லாம் ஒரு தனி ஆனந்தத்தை மனதிலே நிறைப்பதாகும்.   ஆனால் இவற்றோடு கூடவே, பொதுவானதொரு நோக்கம் ஏற்படும் போது, ஒரு தீர்மானம் உருவாகும் போது, ஒரு உணர்வுபூர்வமான ஈடுபாடு இணையும் போது, அப்போது நிறமும் வடிவமும் முற்றிலுமாக மாறிப் போகும்.   சில சமயங்களில் சில பழைய மாணவர்கள் குழுக்கள் தங்களின் பள்ளிக்கூடங்களுக்கு ஏதாவது ஒரு பங்களிப்பை அளிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.   ஒருவர் கணினிமயமாக்க முறைகளை ஏற்படுத்தலாம், சிலர் நூலகத்தின் வளத்தைப் பெருக்கலாம், வேறு சிலர் நல்ல குடிநீர் வசதிகளை ஏற்படுத்தலாம், சிலரோ புதிய அறைகளை உருவாக்கலாம், இன்னும் சிலர் விளையாட்டு அமைப்புக்களை ஏற்படுத்தித் தரலாம்.    இப்படி ஏதாவது ஒன்றை அமைத்துக் கொடுக்கிறார்கள்.    எந்த இடத்திலே நாம் படித்தோமோ, எங்கே நமது வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்பட்டதோ, அதற்காக வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் செய்வது என்ற ஆசை அனைவரின் மனதில் இருக்கிறது, அப்படி இருக்கவும் வேண்டும்.   ஆனால் நான் இன்று ஒரு விசேஷமான சம்பவத்தை உங்கள் முன்னே அளிக்க விரும்புகிறேன்.   சில நாட்கள் முன்பாக, ஊடகத்தின் வாயிலாக, பிஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த பைரவ்கஞ்ஜ் உடல்நல மையம் பற்றிய செய்தியை நான் கேள்விப்பட்ட போது, என் மனதிலே இனிமையான உணர்வு ஏற்பட்டது, இதனை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   இந்த பைரவ்கஞ்ஜ் உடல்நல மையத்திலே இலவசமாக உடல்நல பரிசோதனை செய்து கொள்ள, அக்கம்பக்கத்தின் கிராமங்களிலிருந்து எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள்  கூட்டம் சேர்ந்து விடும்.    இந்த விஷயம் உங்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.    அட, இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கூடப்படலாம்.   மக்கள் வரலாம், என்ன ஆச்சரியம்!!   இல்லை நண்பர்களே, இங்கே புதுமை இருக்கிறது.  இது அரசு மருத்துவமனை இல்லை, அரசின் முயற்சியால் உருவாக்கப்பட்ட உடல்நல மையமுமல்ல.   இது அங்கே கே.ஆர். உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இதன் பெயர் ’’சங்கல்ப் தொண்ணூற்று ஐந்து’’.   அதாவது  இந்தத் தீர்மானம் தொண்ணூற்று ஐந்து என்பதன் பொருள் என்னவென்றால், இந்த உயர்நிலைப் பள்ளியில் 1995ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் தீர்மானம்.   அதாவது இந்தத் தொகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்கள், வித்தியாசமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்று யோசித்தார்கள்.    இதில் அந்த முன்னாள் மாணவர்கள், சமூகத்துக்காக ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற வகையில், பொதுமக்களுக்கான உடல்நல விழிப்புணர்வு என்ற கடப்பாட்டை மேற்கொண்டார்கள்.   ’’சங்கல்ப் தொண்ணூற்று ஐந்து’’ என்ற இந்த இயக்கத்தில், பேத்தியாவின் அரசு மருத்துவக் கல்லூரியும், பல மருத்துவமனைகளும் தங்களை இணைத்துக் கொண்டன.    இதன் பின்னர், மக்களின் உடல்நலம் தொடர்பான முழுவீச்சிலான இயக்கம் முடுக்கி விடப்பட்டது.   இலவச மருத்துவப் பரிசோதனை, இலவச மருந்துகள் விநியோகம் அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றில் ‘’சங்கல்ப் தொண்ணூற்று ஐந்து’’ அனைவருக்குமே ஒரு எடுத்துக்காட்டாக ஆகிப் போனது.   நாட்டின் குடிமகன் ஒவ்வொருவரும் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், இந்த நாடு 130 கோடி அடிகள் முன்னெடுத்து வைக்கும் என்று நாம் அடிக்கடி கூறி வருகிறோம் இல்லையா!!   இப்படிப்பட்ட விஷயங்களை சமுதாயத்தில் கண்கூடாக நம்மால் பார்க்க முடிகிறது, அனைவருக்கும் ஆனந்தம் மேலிடுகிறது, சந்தோஷம் உண்டாகிறது, வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற கருத்தூக்கம் துளிர்க்கிறது.    ஒருபுறம், பிஹாரின் பேத்தியாவில் முன்னாள் மாணவர்களின் குழுவானது உடல்நலச் சேவை என்ற சவாலை எதிர்கொண்டது என்றால், உத்திரப் பிரதேசத்தின் ஃபூல்புரைச் சேர்ந்த சில பெண்கள் தங்கள் உயிர்ப்பான செயல்பாடு காரணமாக இந்தப் பகுதிக்கே உத்வேகம் அளிப்பவர்களாக இருக்கின்றார்கள்.   ஒன்றுபட்டு ஒரு மனவுறுதியை மேற்கொண்டால், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படுவதைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை என்பதை இந்தப் பெண்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள்.  சில காலம் முன்பு வரை, ஃபூல்புரைச் சேர்ந்த இந்தப் பெண்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கிப் போனவர்களாக, ஏழ்மையில் வாடுபவர்களாக இருந்தார்கள்; ஆனால் அவர்களுக்குள்ளே தங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஏதோ ஒன்றைச் சாதித்துக் கொடுக்க வேண்டும் என்ற தீராத ஆவல் இருந்தது.   இவர்கள் அனைவரும், காதீபுரைச் சேர்ந்த சுயவுதவிக் குழுவோடு இணைந்து காலணிகள் தயாரிக்கும் திறனை வளர்த்துக் கொண்டார்கள்; இதன் வாயிலாக இவர்கள் தங்கள் கால்களைத் தைத்த கடினமான முட்களை மற்றும் வீசியெறியவில்லை, சுயசார்புடையவர்களாக ஆகி, தங்கள் குடும்பங்களையும் பராமரிப்பவர்களாக ஆனார்கள்.   கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் துணையோடு, இப்போது அங்கே காலணிகள் தைக்கும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு விட்டது, அங்கே நவீன இயந்திரங்கள் வாயிலாக காலணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.   நான் சிறப்பான வகையிலே அந்தப் பகுதியின் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவர்கள் தங்களுக்காகவும் தங்கள் உறவினர்களுக்காகவும், இந்தப் பெண்கள் தயாரிக்கும் காலணிகளை வாங்கி இவர்களுக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள்.    இன்று, இந்தப் பெண்களின் உறுதிப்பாட்டினால், அவர்கள் குடும்பங்களின் பொருளாதார நிலை மட்டும் பலப்படவில்லை, இவர்களின் வாழ்க்கைத் தரமுமே கூட உயர்ந்திருக்கிறது.       இப்போது ஃபூல்புரைச் சேர்ந்த காவல்துறையினர் அல்லது அவர்களின் உறவினர்கள் பற்றிக் கேள்விப்படும் போது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தில்லியின் செங்கோட்டையிலிருந்து நான் ஒரு விஷயம் குறித்து வேண்டுகோள் விடுத்திருந்தேனே, உங்களுக்கு நினைவிருக்கலாம்.    அதாவது உள்ளூரில் தயாராகும் பொருட்களை வாங்குங்கள் என்று நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டேன் அல்லவா!!   இன்று மீண்டும் ஒருமுறை என்னுடைய ஆலோசனை என்னவென்றால், அந்தந்த வட்டாரத்தில் தயாராகும் பொருட்களை வாங்கி நம்மால் ஊக்குவிக்க முடியாதா சொல்லுங்கள்?   நம்மால் உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு முதன்மை அளிக்க முடியாதா சொல்லுங்கள்??    நாம் உள்ளூர் பொருட்களோடு நம்முடைய கௌரவத்தையும் அந்தஸ்தையும் இணைக்க முடியாதா??   இப்படிப்பட்ட உணர்வின் வாயிலாக நமது சக குடிமக்களின் வாழ்வினில் நிறைவை ஏற்படுத்த முடியாதா?   நண்பர்களே, காந்தியடிகள், இந்த சுதேஸி உணர்வை, ஒரு இலட்சிய தீபமாகப் பார்த்தார்கள்; இந்த தீபமானது இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வினில் ஒளியேற்றி வைக்கும் திறன் படைத்தது.   பரம ஏழையின் வாழ்வினில் நிறைவை நம்மால் ஏற்படுத்த முடியும்.   நூறாண்டுகள் முன்னதாக காந்தியடிகள், ஒரு மிகப்பெரிய மக்கள் பேரியக்கத்தைத் தொடக்கி வைத்தார்.   இதன் நோக்கம் ஒன்று தான், இந்தியத் தயாரிப்புக்களுக்கு ஊக்கமளித்தல்.   சுயசார்பு நிலையை எட்ட இந்தப் பாதையைத் தான் அண்ணல் நமக்கெல்லாம் காட்டித் தந்திருக்கிறார்.   2022ஆம் ஆண்டிலே, நாம் நமது சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டினை நிறைவு செய்ய இருக்கிறோம்.  எந்தச் சுதந்திர பாரதத்தில் நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோமோ, அந்த பாரதத்தை விடுவிக்க, இலட்சக்கணக்கான சத்புத்திரர்களும், மைந்தர்களும், ஏகப்பட்ட கொடுமைகளை அனுபவித்தார்கள், பலர் தங்கள் இன்னுயிரை வேள்வியில் ஆகுதியாக அளித்தார்கள்.    இப்படிப்பட்ட கர்மவீரர்களின் சீலம், தவம், உயிர்த்தியாகம் ஆகியவற்றின் காரணமாக நமக்குக் கிடைத்த சுதந்திரத்தின் முழுமையான பலனை நாம் அனுபவித்து வருகிறோம்.   இத்தகைய வேளையிலே, இப்படிப்பட்ட சுதந்திரத்தை நமக்களித்த, நாட்டுக்காகத் தங்கள் அனைத்தையும் இழந்தவர்கள், தங்கள் வாழ்க்கையையே இன்முகத்தோடு அளித்தவர்கள்…… இப்படிப்பட்ட ஏராளமானோர், முகமோ பெயரோ முகவரியோ எதுவுமே தெரியாத மனிதர்கள்….. இப்படிப்பட்ட தியாகிகளில் வெகுசிலரின் பெயர்களையே நாம் அறிந்திருக்கிறோம், ஆனால், எந்த இலட்சியத்தின் பொருட்டு அவர்கள் தியாகங்கள் செய்தார்கள் – அவர்களின் அந்தக் கனவுகளை நினைவிலே ஏந்தி, சுதந்திர இந்தியாவின் கனவுகளை மனதிலே தாங்கி, தன்னிறைவான, சுகமான, நிறைவான, சுதந்திர இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம் வாருங்கள். 

எனதருமை நாட்டுமக்களே, 2022ஆம் ஆண்டிலே, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் வேளையிலே, குறைந்தபட்சம், இந்த 2-3 ஆண்டுகள், நாம் நம் வட்டாரங்களில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கத் தீர்மானம் மேற்கொள்வோமா?   பாரதநாட்டில் உருவான, நம் மக்களின் கைகளால் உருவாக்கம் பெற்ற, நமது நாட்டு மக்களின் வியர்வையில் துளிர்த்த பொருட்களை நாம் வாங்க, மற்றவர்களிடம் வேண்டுகோள் விடுக்க முடியுமா?   நான் அதிக நாட்களுக்கு இப்படி வேண்டுகோள் விடுக்க செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்கவில்லை, 2022ஆம் ஆண்டு வரை, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் வரை மட்டுமே.    இது அரசுரீதியானதாக இருக்க கூடாது, அந்தந்த இடங்களைச் சேர்ந்த இளைஞர்கள் முன்வர வேண்டும், சின்னச்சின்ன அமைப்புக்களை உருவாக்குங்கள், மக்களுக்கு உத்வேகம் அளியுங்கள், புரிய வையுங்கள், தீர்மானம் செய்யுங்கள் – வாருங்கள், நாம் உள்ளூர் பொருட்களையே வாங்குவோம், உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்கமளிப்போம், நாட்டுமக்களின் வியர்வையில் உருவானவை மட்டுமே, என் சுதந்திர இந்தியாவின் இனிமையான கணங்கள் என்ற இந்தக் கனவுகளைத் தாங்கி நாம் பயணிப்போம்.

     என் இனிமைநிறை நாட்டுமக்களே, நாட்டின் குடிமக்கள், தன்னிறைவு பெற்றவர்களாக, கௌரவத்தோடு வாழ்வது என்பது நம்மனைவருக்குமே மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷயமாகும்.   நான் இப்போது பேசவிருக்கும் விஷயம், என் கவனத்தை ஈர்த்த முன்னெடுப்பு, அது ஜம்மு கஷ்மீரம் மற்றும் லட்டாக்கின் திறன்மேம்பாட்டுத் திட்டம்.    திறன்மேம்பாடு என்பது வேலைவாய்ப்போடு தொடர்புடையது.   இதிலே 15 முதல் 35 வயது நிரம்பியவர்கள் இடம் பெறுகிறார்கள்.   இவர்கள் யாரென்றால், படிப்பை ஏதோ காரணத்துக்காக விடுத்தவர்கள், அதை நிறைவு செய்ய முடியாதவர்கள், பள்ளி அல்லது கல்லூரியில் இடைநிற்றலால் பாதிக்கப்பட்டவர்கள்.

     என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்தத் திட்டத்தின்படி, கடந்த ஈராண்டுகளில், 18,000 இளைஞர்கள் 77 விதமான திறன்களில் பயிற்றுவிக்கப்பட்டார்கள்.  இவர்களில் சுமார் 5000 பேர்கள், ஏதோ ஓரிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் பலர் சுய வேலைவாய்ப்பினை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.   திறன்மேம்பாட்டுத் திட்டத்தால் தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்ட வேளையில், என் மனதில் உள்ளபடியே நெகிழ்ச்சி ஏற்பட்டது. 

     பர்வீன் ஃபாத்திமா என்பவர் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயத்த ஆடை தயாரிக்கும் அலகில் பதவி உயர்வு கிடைத்த பிறகு, மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியிருக்கிறார்.    ஓராண்டு முன்பு வரை, அவர் கர்கிலில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார்.   இன்று அவரது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, தன்னம்பிக்கை உருவாகியிருக்கிறது, தனது குடும்பம் முழுவதற்கும் பொருளாதார முன்னேற்றத்தை இது தாங்கி வந்திருக்கிறது.   பர்வீன் ஃபாத்திமாவைப் போலவே, திறன் மேம்பாட்டுத் திட்டமானது, லே-லட்டாக் பகுதியைச் சேர்ந்தவர்களின், பிற வட்டாரப் பெண்களின் எதிர்காலத்தையே மாற்றியமைத்திருக்கிறது, இவர்கள் அனைவரும் இப்போது தமிழ்நாட்டின் அதே மையத்தில் தான் பணியாற்றி வருகிறார்கள்.   இதைப் போலவே திறன்மேம்பாட்டுத் திட்டம் டோடாவைச் சேர்ந்த ஃபியாஸ் அஹ்மதுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்திருக்கிறது.   ஃபியாஸ், 2012ஆம் ஆண்டிலே, 12ஆவது வகுப்புத் தேர்விலே தேர்ச்சி பெற்றார்; ஆனால் உடல் நோய்வாய்ப்பட்ட காரணத்தால், அவரால் படிப்பை மேற்கொண்டு தொடர முடியவில்லை.   ஃபியாஸ், ஈராண்டுகள் வரை இருதய நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்.   இதற்கிடையில், அவரது ஒரு சகோதரர், ஒரு சகோதரி ஆகியோர் இறந்து போனார்கள்.   ஒருவகையில் அவரது குடும்பத்தில் தொடர்ந்து பேரிடிகள் இறங்கின.   அந்த நேரத்தில் தான் திறன்மேம்பாட்டின் உதவி அவர்களுக்குக் கிடைத்தது.   திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் Information Technology enabled services, ITES, அதாவது தகவல் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படுத்தப்படும் சேவைகளில் பயிற்சி கிடைத்தது, அவர் இன்று பஞ்சாபில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.  

     ஃபியாஸ் அஹ்மதின் பட்டப்படிப்பினை, அவர் வேலை பார்த்துக் கொண்டே தொடர்ந்தார், அதுவும் நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது.   தற்போது, திறன்மேம்பாட்டின் ஒரு நிகழ்ச்சியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.   தனது கதையைக் கூறும் வேளையில், அவரது கண்களில் கண்ணீர் பனித்தது.   இவரைப் போலவே, அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த ரகீப்-உல்-ரஹமானாலும், பொருளாதார நிலை காரணமாகத் தன் படிப்பினை மேற்கொண்டு தொடர முடியாமல் போனது.   ஒரு நாள், ரகீபின் வட்டத்திலே ஒரு ஆட்சேர்ப்புப் பணி நடைபெற்றது, இதன் வாயிலாக அவருக்கு திறன்மேம்பாட்டுத் திட்டம் பற்றித் தெரிய வந்தது.   ரகீப் உடனடியாக retail team leader படிப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.    இதிலே பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு, அவர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.   திறன்மேம்பாட்டுத் திட்டத்தால் பயனடைந்த, திறமைமிகு இளைஞர்களின் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன, இவர்கள் ஜம்மு கஷ்மீரத்து மக்களுக்கிடையே மாற்றத்தின் எடுத்துக்காட்டுக்களாகத் திகழ்கிறார்கள்.   திறன்மேம்பாட்டுத் திட்டமானது அரசு, பயிற்சிக் கூட்டாளி, பணிக்கமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் ஜம்மு கஷ்மீரத்து மக்களுக்கிடையே ஒரு அருமையான ஒருங்கிணைப்புக்கான ஆதர்ஸமான எடுத்துக்காட்டு.

     இந்தத் திட்டம் காரணமாக, ஜம்மு கஷ்மீரத்தின் இளைஞர்களின் மனங்களில் ஒரு புதிய தன்னம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, முன்னேற்றப் பாதையை இது மேலும் துலக்கிக் காட்டியிருக்கிறது. 

     என் இதயம்நிறை நாட்டுமக்களே, 26ஆம் தேதியன்று நாம் இந்தப் பத்தாண்டின் கடைசி சூரிய கிரஹணத்தைப் பார்த்தோம்.   இந்த சூரிய கிரஹணம் காரணமாகவே, MYGOVஇலே ரிபுன் மிக சுவாரசியமான ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.    அவர் என்ன எழுதுகிறார் என்றால், ‘’ வணக்கம் ஐயாஎன் பெயர் ரிபுன்…. நான் வடகிழக்கிலே வசிப்பவன், ஆனால் இப்போதெல்லாம் தென்னாட்டிலே பணியாற்றி வருகிறேன்.   நான் ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   எங்கள் பகுதியில் வானம் தெளிவாகக் காணப்படுவதால் நாங்கள் மணிக்கணக்காக, வானிலே தாரகைகள் மின்னுவதைப் பார்த்தவாறு இருப்போம்.   இப்படி நட்சத்திரங்களைப் பார்த்தவண்ணம் இருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.   இப்போது நான் ஒரு தொழில் வல்லுனராக இருக்கிறேன், என்னுடைய தினசரி வாடிக்கை காரணமாக, இந்த விஷயங்களில் என்னால் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை…….. இது தொடர்பாக நீங்கள் ஏதாவது கூற முடியுமா?   விசேஷமாக வானவியலை எப்படி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கலாம் என்பது தொடர்பாக?

     எனதருமை நாட்டுமக்களே, என்னிடம் பல ஆலோசனைகள் வருகின்றன ஆனால் இது போன்றதொரு ஆலோசனை எனக்கு வருவது இதுதான் முதல்முறை என்பதை என்னால் கூற முடியும்.   அதாவது அறிவியலின் பல அம்சங்கள் குறித்துப் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது.   சிறப்பாக இளைய சமுதாயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.   ஆனால் இது பேசப்படாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. மேலும் 26ஆம் தேதியன்று சூரிய கிரஹணம் நடந்திருக்கும் இந்த வேளையில், ஒருவேளை இந்த விஷயம் குறித்து உங்களுக்கும் ஏதோ ஒருவகை நாட்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று தான் நான் நினைக்கிறேன்.    நாட்டுமக்களே, குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களைப் போலவே எனக்குமே கூட, சூரிய கிரஹணமான 26ஆம் தேதியன்று மிகுந்த உற்சாகம் இருந்தது, நானும் சூரிய கிரஹணத்தைப் பார்க்க ஆவலாக இருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய நாளிலே தில்லியின் வானத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன, என்னால் கிரஹணத்தை ரசிக்க முடியவில்லை என்றாலும் கூட, தொலைக்காட்சியில் கோழிக்கோட்டிலும், பாரதத்தின் மற்ற பகுதிகளிலும் தெரியும் சூரிய கிரஹணத்தின் அழகான படங்கள் காணக் கிடைத்தன.   சூரியன், ஒளிரும் வளைய வடிவிலே தெரிந்தது.   அன்றைய தினம் இது தொடர்பான வல்லுனர்கள் சிலரோடு பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது; அவர்கள் சொன்னார்கள், இப்படி ஏன் ஏற்படுகிறது என்றால், நிலவு, பூமியிலிருந்து மிகத் தொலைவாக இருப்பதால், இதனால் முழுமையாக சூரியனின் உருவத்தை மறைக்க முடியவில்லை.   இதனால் தான் ஒரு வளையத்தின் வடிவமாகத் தெரிகிறது என்றார்கள்.   இந்தச் சூரிய கிரஹணத்தை, வளைசூரிய கிரஹணம் என்றும் குண்டல கிரஹணம் என்றும் அழைக்கிறார்கள்.   கிரஹணமானது நமக்கு வேறு ஒரு விஷயத்தையும் நினைவுபடுத்துகிறது – அதாவது நாம் பூமியில் இருந்து கொண்டே விண்வெளியில் பயணித்து வருகிறோம் என்பதை.   விண்வெளியில் சூரியன், சந்திரன், பிற கோள்கள் மற்றும் விண்வெளிப் பொருட்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.   சந்திரனின் நிழல் காரணமாகவே கிரஹணத்தின் பல்வேறு வடிவங்களை நம்மால் காண முடிகிறது.   நண்பர்களே, வானவியலில் மிகவும் பண்டைய மற்றும் பெருமையான சரித்திரம் பாரதத்துக்கு உண்டு.   வானத்தில் மினுமினுக்கும் விண்மீன்களோடு நம்முடைய தொடர்பின் பழமை, நமது பண்டைய நாகரீகத்துக்கு இணையானது.   உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம், இந்தியாவின் பல்வேறு இடங்களிலே மிகவும் பிரும்மாண்டமான இரவையும் பகலையும் சமமாகக் காட்டும் சூரியக் கடியாரங்கள் உண்டு, ஜந்தர் மந்தர்கள் என்று அழைக்கப்படும் இவை பார்த்தேயாக வேண்டியவை.   மேலும் இந்த சூரியக் கடியாரங்களுக்கும், வானவியலுக்கும் ஆழமான தொடர்பு உண்டு.  மகத்தான ஆர்யபட்டரின் தனிப்பெரும் திறமை பற்றி அறியாதவர்கள் யார் இருப்பார்கள்!!!   காலக் கிரியையிலே அவர் சூரிய கிரஹணம் தவிர, சந்திர கிரஹணம் பற்றியும் விளக்கமாக விரிவுரை எழுதியிருக்கிறார்.   அதுவும் எப்படி….. தத்துவரீதியாகவும், கணிதரீதியாகவும், இரு கோணங்களில் இதை அணுகியிருக்கிறார்.   பூமியின் நிழலின் அளவை எவ்வாறு கணிப்பது என்று கணிதரீதியாகக் கூறியிருக்கிறார்.   அதேபோல, கிரஹணத்தின் கால அளவு மற்றும் வீச்சு ஆகியவற்றைக் கணிப்பது தொடர்பான துல்லியமான தகவல்களையும் அளித்திருக்கிறார்.   பாஸ்கரர் போன்ற பல சீடர்கள் இந்த உணர்வையும், இந்த ஞானத்தையும் மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல முழுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.   பின்னர், 14ஆம்-15ஆம் நூற்றாண்டுகளில், கேரளத்தில், சங்கம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன், பேரண்டத்தில் இருக்கும் கோள்களின் நிலையைக் கணிக்க Calculus என்ற நுண்கணிதத்தைப் பயன்படுத்தினார்.  இரவில் தெரியும் வானமானது, ஆர்வத்தைத் தூண்டும் விஷயமாக மட்டும் இருக்கவில்லை; அது கணித நோக்கிலே சிந்திப்பவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஒரு மகத்துவமான ஆதாரமாக விளங்கியது.   சில ஆண்டுகள் முன்னால், நான் Pre Modern Kutchi Navigation Techniques and Voyages என்ற புத்தகத்தை வெளியிட்டேன்.   இந்தப் புத்தகம் ஒருவகையில் ‘’மாலமின் நாட்குறிப்பு’’.   மாலம் என்ற ஒரு மாலுமியின் அனுபவங்களை அவர் தனது பாணியில் நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.   நவீனகாலத்தில், அந்த மாலுமியான மாலமின் நாட்குறிப்பு, அதுவும் குஜராத்தி மொழி கையெழுத்துப் பிரதியின் தொகுப்பு; அதிலே கடலில் வழிகாணும் பண்டைய தொழில்நுட்பம் பற்றி வர்ணிக்கப் பட்டிருக்கிறது; மீண்டும் மீண்டும் இந்த ‘’மாலமின் நாட்குறிப்பில்’’ வானம், விண்மீன்கள், அவற்றின் வேகம் ஆகியவை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.   கடலிலே பயணிக்கும் போது, எப்படி விண்மீன்கள் உதவியோடு திசையறியப்படுகிறது என்பதை இது தெளிவுபடுத்துகிறது.   இலக்கைச் சென்றடையத் தேவையான பாதையை நட்சத்திரங்கள் காட்டுகின்றன.  

     என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, வானவியல் துறையில் பாரதம் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது, நமது முன்னெடுப்புக்கள் முன்னோடியாகவும் இருக்கின்றன.   நம்மிடம், புணேயுக்கு அருகே பிரும்மாண்டமான meter wave telescope இருக்கிறது.   இதுமட்டுமல்ல, கோடைக்கானல், உதகமண்டலம், குருஷிகர் மற்றும் ஹான்லே லட்டாக்கிலும் சக்திவாய்ந்த தொலைநோக்குக் கருவிகள் இருக்கின்றன.   2016ஆம் ஆண்டு, பெல்ஜியம் நாட்டின் அப்போதைய பிரதம மந்திரியும் நானும் நைனிதாலில் 3.6 மீட்டர் நீளமான ஒரு தொலைநோக்கியை தேவ்ஸ்தல்லில் நிறுவியிருக்கிறோம்.   இது ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி என்று கூறப்படுகிறது.   இஸ்ரோவிடத்திலே ஆஸ்ட்ரோஸாட் என்ற பெயர் கொண்ட ஒரு விண்வெளி செயற்கைக்கோள் இருக்கிறது.   சூரியன் பற்றி ஆய்வு செய்ய, இஸ்ரோ ‘’ஆதித்யா’’ என்ற பெயர் கொண்ட மற்றுமொரு செயற்கைக்கோளை ஏவ இருக்கிறது.   வானவியல் தொடர்பாக நமது பண்டைய ஞானமாகட்டும், நவீனகால சாதனைகளாகட்டும், நாம் இவற்றை நன்கு புரிந்து கொள்வதும் அவசியம், இவை குறித்து பெருமிதம் அடைவதும் முக்கியம்.    இன்று நமது இளைய விஞ்ஞானிகளில், நம்முடைய விஞ்ஞான சரித்திரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருக்கவும் செய்கிறது, வானவியலின் எதிர்காலம் தொடர்பான ஒரு உறுதியான பேரார்வமும் இருக்கிறது. 

     நம்முடைய நாட்டிலே கோளரங்கங்கள், இரவுநேரத்து வானத்தைப் புரிந்து கொள்ளவும், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பணியையும் செய்து வருகின்றன.   பலர் அமெச்சூர் தொலைநோக்கிகளை வீட்டின் மாடிகளிலும், மாடி முகப்புகளிலும் பொருத்துகிறார்கள்.   Star Gazing என்ற நட்சத்திரங்களைக் கூர்ந்து நோக்குதல் காரணமாக, ஊரகப்பகுதி முகாம்கள், ஊரகப்பகுதிச் சுற்றுலா ஆகியவற்றுக்கும் ஊக்கம் கிடைக்கிறது.   பல பள்ளிகளும், கல்லூரிகளும் வானவியல் க்ளப்புகளை உருவாக்கி நடத்தி வருகிறார்கள், இந்த முயற்சிகளும் முன்னேற்றம் காண வேண்டும்.  

     எனதருமை நாட்டுமக்களே, நமது நாடாளுமன்றத்தை, மக்களாட்சியின் கோயிலாகவே நாம் கருதுகிறோம்.    ஒரு விஷயத்தை நான் இன்று மிகுந்த பெருமிதத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.   நீங்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பிரதிநிதிகள், கடந்த 60 ஆண்டுகளின் அனைத்துப் பதிவுகளையும் தகர்த்திருக்கிறார்கள்.    கடந்த ஆறு மாதங்களில், 17ஆவது மக்களவையின் இரு அவைகளுமே, மிகவும் ஆக்கவளம் கொண்டவையாக அமைந்திருந்தன.   மக்களவை 114 சதவீதம் பணியாற்றியது, மாநிலங்களவை 94 சதவீதம் பணியாற்றியது.   இதற்கு முன்பாக, வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரின் போது, சுமார் 135 சதவீதம் பணியாற்றியது.   இரவிலே நெடுநேரம் வரை நாடாளுமன்றம் செயல்பட்டது.   இந்த விஷயத்தை நான் ஏன் கூறுகிறேன் என்றால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்களுக்குச் சொந்தக்காரர்கள்.   நீங்கள் அனுப்பி வைத்த மக்கள் பிரதிநிதிகள், 60 ஆண்டுக்கால பதிவுகளை தகர்த்திருக்கிறார்கள்.   இத்தனை பணியாற்றுவது என்பது உள்ளபடியே, பாரதத்தின் ஜனநாயகத்தின் பலத்தையும், மக்களாட்சியின் மேல் கொண்ட நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகிறது.   இந்த இரு அவைகளையும் நெறிப்படுத்தியவர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து உறுப்பினர்கள், இவர்கள் அனைவரின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புக்காக பலப்பல பாராட்டுக்களை நான் தெரிவிக்க விரும்புகிறேன். 

     என் மனம்நிறை நாட்டுமக்களே, சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் வேகம், கிரஹணத்தை மட்டுமே தீர்மானிப்பதில்லை; பல விஷயங்களும் இவற்றோடு தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.   சூரியனின் வேகத்தின் அடிப்படையில், ஜனவரியின் இடைப்பட்ட பகுதியில் பாரதம் முழுவதிலும் பலவகையான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.   பஞ்சாபிலிருந்து தொடங்கி, தமிழ்நாடு வரையிலும், குஜராத் தொடங்கி, ஆஸாம் வரையிலும், மக்கள், பல பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வார்கள்.    ஜனவரியில் விமர்சையாக மகர சங்கராந்தியும், உத்தராயணமும் கொண்டாடப்படும்.    இவை ஆற்றலின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.    இதே வேளையில், பஞ்சாபில் லோஹ்டீ, தமிழ்நாட்டில் பொங்கல், ஆஸாமில் மாக-பிஹூ ஆகியவையும் கொண்டாடப்படும்.   இந்தப் பண்டிகைகள், விவசாயிகளின் நிறைவளம், அறுவடை ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையவை.   இந்தப் பண்டிகைகள் பாரதத்தின் ஒற்றுமை மற்றும் பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை பற்றி நமக்கு நினைவுபடுத்துகின்றன.   பொங்கல் பண்டிகையின் இறுதி நாளன்று, மகத்தான திருவள்ளுவரின் தினத்தைக் கொண்டாடும் பேறு நம் நாட்டுமக்களுக்குக் கிடைக்கிறது.   இந்த நாள் மகத்தான எழுத்தாளரும், சிந்தனையாளருமான புனிதர் திருவள்ளுவருக்கும், அவரது வாழ்க்கைக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. 

     எனதருமை நாட்டுமக்களே, 2019ஆம் ஆண்டிற்கான கடைசி மனதின் குரல் இது.   2020ஆம் ஆண்டிலே நாம் மீண்டும் சந்திப்போம்.   புதிய ஆண்டு, புதிய பத்தாண்டுகள், புதிய தீர்மானங்கள், புதிய ஆற்றல், புதிய உற்சாகம், புதுத் தெம்பு – வாருங்கள் பயணிப்போம்!!   உறுதிப்பாட்டின் நிறைவுக்காக திறன்களை பெருக்கிக் கொள்வோம்.   தொலைதூரம் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது, ஏகப்பட்ட விஷயங்களைச் சாதிக்க வேண்டியிருக்கிறது, தேசத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.  130 கோடி நாட்டுமக்களின் முயற்சிகளால், அவர்களின் திறமைகளால், அவர்களின் உறுதிப்பாட்டால், எல்லையில்லா சிரத்தை துணை கொண்டு வாருங்கள், நாம் பயணிப்போம்.   பலப்பல நன்றிகள்.  பலப்பல நல்வாழ்த்துக்கள்.  

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Very warm conversation': PM Modi speaks with Trump; trade, defence in focus

Media Coverage

'Very warm conversation': PM Modi speaks with Trump; trade, defence in focus
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives due to a bus mishap in the Alluri Sitharama Raju district of Andhra Pradesh
December 12, 2025
PM announces ex-gratia from PMNRF

Prime Minister Shri Narendra Modi today condoled the loss of lives due to a bus mishap in the Alluri Sitharama Raju district of Andhra Pradesh. He announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased and Rs. 50,000 to the injured.

The PMO India handle in post on X said:

“Pained by the loss of lives due to a bus mishap in the Alluri Sitharama Raju district of Andhra Pradesh. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi”

“ఆంధ్రప్రదేశ్‌లోని అల్లూరి సీతారామరాజు జిల్లాలో జరిగిన బస్సు ప్రమాదంలో ప్రాణనష్టం సంభవించడం చాలా బాధాకరం. ఈ క్లిష్ట సమయంలో బాధిత ప్రజలు మరియు వారి కుటుంబాలకు నా ప్రగాఢ సానుభూతిని తెలియజేస్తూ, గాయపడినవారు త్వరగా కోలుకోవాలని ప్రార్థిస్తున్నాను. ప్రమాదంలో మరణించిన వారి కుటుంబాలకు రూ. 2 లక్షలు, గాయపడిన వారికి రూ. 50,000 ఎక్స్ గ్రేషియా పిఎంఎన్ఆర్ఎఫ్ నుండి ఇవ్వబడుతుంది: PM @narendramodi“