பகிர்ந்து
 
Comments

1. இந்தியப் பிரதமர்  மேதகு திரு. நரேந்திர மோடி அழைப்பின் பேரில், வங்கதேச பிரதமர் மேதகு ஷேக் ஹசீனா 2019 அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கண்டார். புதுடெல்லியில் அரசு முறை அலுவல்களுக்கு அப்பாற்பட்டு, உலகப் பொருளாதார அமைப்பு சார்பில் 2019 அக்டோபர் 03-04ல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியப் பொருளாதார மாநாட்டில் முதன்மை விருந்தினராகவும் பிரதமர் ஷேக் ஹசீனா அழைக்கப்பட்டிருந்தார்.

2. இரு பிரதமர்களும் சுமுகமான, கனிவான சூழ்நிலையில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அதன்பிறகு இந்தப் பயணத்தின் போது கையெழுத்தான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு இரு பிரதமர்களும் தலைமை வகித்து, மூன்று இருதரப்பு திட்டங்களை வீடியோ மூலம் தொடங்கி வைத்தனர்.  முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை உருவாக்கிய, இறையாண்மை, சமத்துவம், நம்பகத்தன்மை மற்றும் புரிதலின் அடிப்படையில் உருவான அனைத்தையும் உள்ளடக்கிய இருதரப்பு பங்களிப்புகளைப் பிரதிபலிப்பதாக உள்ள, ஆழமான வரலாற்று மற்றும் ஒன்றுபட்ட உறவுகளின் அடிப்படையில் அமைந்த இருதரப்பு உறவுகள் நல்ல நிலையில் இருப்பது குறித்து இந்தச் சந்திப்பின் போது இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். அவர்கள் ஆக்கபூர்வமான, விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தியதில், இரு தரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, பிராந்திய பிரச்சினைகள் பற்றி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மரபுசார்ந்த மற்றும் மரபுக்கு அப்பாற்பட்ட துறைகளில் பரஸ்பரம் ஆதாயம் தரும் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், வங்கதேசத்தின் விடுதலைப் போரில் தொடங்கிய மரபை மேம்படுத்தும் வகையில், திரும்பப் பெற முடியாத பங்களிப்பை மேம்படுத்துவதை உறுதி செய்யவும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவும் வங்கதேசமும் – பிணைப்பால் உருவான முக்கிய உறவு

3. பங்களிப்பில் சிறப்பம்சமாக உள்ள வரலாறு, கலாச்சாரம், மொழி, மதச்சார்பின்மை மற்றும் இதர பிரத்யேகமான பொது அம்சங்களை இரு பிரதமர்களும் நினைவுகூர்ந்தனர். விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த, போரில் ஈடுபட்ட முக்திஜோதாக்கள், இந்திய ராணுவ வீரர்கள் ஆகியோருக்கும், வங்கதேச குடிமக்களுக்கும், 1971 போரில் மகத்தான தியாகங்கள் செய்து, ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தின் மாண்புகள் வங்கதேதச் தலைமைக்கு கிடைக்கச் செய்தமைக்காக அவர்கள் மரியாதை செலுத்தினர். வங்கதேசத்தின் தந்தையாகக் கருதப்படும் வங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் கனவுகளுக்கு ஏற்ப, பங்களிப்புள்ள இந்த மாண்புகளை மதித்து நடப்பது என்பதில் இரு தலைவர்களும் உறுதி தெரிவித்தனர். வளமான, அமைதியான, வளர்ச்சி அடைந்த வங்கதேசத்தை உருவாக்க வேண்டும் என்பதில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கனவை நனவாக்குவதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்தார்.

எல்லைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்

4. பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற வங்கதேச அரசின் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இந்தப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பிரதமர் ஷேக் ஹசீனா மேற்கொண்டு வரும் உறுதியான முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பயங்கரவாதம் முக்கியமான ஓர் அச்சுறுத்தலாக இருப்பதைக் குறிப்பிட்ட இரு பிரதமர்களும், எல்லா வகையிலான பயங்கரவாதச் செயல்களையும் அழிப்பதற்கு வலுவான உறுதிப்பாட்டைத் தெரிவித்தனர். எந்தவிதமான பயங்கரவாதச் செயலையும் நியாயப்படுத்துவதற்கு எந்தக் காரணமும் இருக்கக் கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். வங்கதேச உள்துறை அமைச்சர் 2019 ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வந்த போது, இரு நாடுகளின் உள்துறை அமைச்சர்களுக்கு இடையில் நடந்த வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் பற்றி இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். தீவிரவாத, அடிப்படைவாத குழுக்கள், பயங்கரவாதிகள், கடத்தல்காரர்களுக்கு எதிராகவும், கரன்சி கடத்துதல், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரு தரப்பு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

5. இரு நாடுகளுக்கும் இடையில் மக்கள் போக்குவரத்தை எளிமையாக்குவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். சாலை அல்லது ரயில் மார்க்கமாக இந்தியாவுக்கு வரும் வங்கதேசத்தவர்களுக்குத் தேவைப்படும் பயண ஆவணங்களை எளிமைப்படுத்த இந்தியா உறுதி எடுத்துக் கொண்டிருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார். அதே கருத்தில், தற்போதுள்ள துறைமுகங்களைப் பயன்படுத்தும் வங்கதேசப் பயணிகளுக்கு அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் வழியாக வங்கதேசத்தவர்கள் வருகை / புறப்பாடு சமயங்களில், கட்டாயப்படுத்தப்படும் மீதியுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது அக்காவுரா (திரிபுரா) மற்றும் கோஜடங்கா (மேற்குவங்கம்) துறைமுகங்களில் முதலில் தொடங்கும் எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

6. அமைதியான, ஸ்திரத்தன்மையான, குற்றங்கள் இல்லாத எல்லைகள் அமைவதை உறுதி செய்வதற்கு, எல்லைப் பகுதி நிர்வாகத்தை செம்மையாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்த இலக்கை எட்டும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையில் சர்வதேச எல்லையில், பணி முடிக்கப்படாமல்  உள்ள பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு, இரு தலைவர்களும் தங்கள் நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரை கேட்டுக்கொண்டனர். எல்லைப் பகுதியில் பொது மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவது குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். எல்லைப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் முழுமையாகத் தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படையினரை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

7. பேரிடர் மேலாண்மை குறித்த விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, குறித்த காலக் கெடுவுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்ற யோசனையை அவர்கள் வரவேற்றனர்.

பரஸ்பரம் வாய்ப்புகளில் பங்களிப்பை நோக்கி

8. வங்கதேசம் எல்.டி.சி. நிலையில் இருந்து மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை இந்தியா வரவேற்று, பாராட்டு தெரிவித்தது. இதைப் பொருத்தவரை, இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையில் இருதரப்பு விரிவான பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தம் (சிஇபிஏ) உருவாக்குவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய கூட்டு ஆய்வு ஒன்றை விரைந்து தொடங்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

9. அக்காவுரா – அகர்தலா துறைமுகம் வழியாக வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை வாபஸ் பெறுவது குறித்த இந்தியாவின் கோரிக்கைக்குப் பதில் அளிக்கும் வகையில், வழக்கமான வர்த்தகத்தில் பெரும்பாலான பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் வெகு விரைவில் நீக்கப்படும் என வங்கதேசத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

10. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சணல் பொருட்கள் உள்ளிட்ட பலவகைப் பொருட்களுக்கு குவித்தலைத் தடுக்கும் /  தவிர்க்கும் முறையிலான இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் பிரச்சினைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று வங்கதேசத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இப்போது அமலில் உள்ள சட்டங்களின்படி, வர்த்தக குறைதீர்வு புலனாய்வுகள் நடைபெற்று வருவதாக இந்தியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் திறன் அதிகரிப்பு நடவடிக்கைகளுக்காக வர்த்தகக் குறைதீர்வு நடவடிக்கைகள் குறித்த விஷயங்களில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை விரைந்து உருவாக்க வேண்டும் என்று தங்கள் அதிகாரிகளுக்கு இரு தலைவர்களும் அறிவுறுத்தினர்.

11. எல்லையில் தொலைதூரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்க்கையில் எல்லைப்புற சந்தைகள் ஏற்படுத்தியுள்ள ஆக்கபூர்வமான தாக்கம் குறித்து பாராட்டு தெரிவித்த இரு தலைவர்களும், இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு எல்லையில் 12 சந்தைகள் உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

12. இந்திய தர நிர்ணய அமைப்புக்கும் (பி.ஐ.எஸ்.), வங்கதேச தரங்கள் மற்றும் பரிசோதனை நிறுவனத்துக்கும் (பி.எஸ்.டி.ஐ.) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் சமச்சீரான வகையில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும் என்பதில் இருவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். இரு நாடுகளும் ஆசிய பசிபிக் அங்கீகாரம் அளித்தல் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதாலும், என்.ஏ.பி.எல். தரநிலைகளுக்கு ஒத்திசைவாக சில வசதிகளை உருவாக்க பி.எஸ்.டி.ஐ. முயற்சி மேற்கொண்டிருப்பதாலும், பி.ஏ.பி. மற்றும் என்.ஏ.பி.எல். சான்றளிப்புகளை முறையே பரஸ்பரம் அங்கீகரிப்பது பற்றி பரிசீலிக்க இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

13. இந்திய சந்தைகளுக்கு சுங்கம் இல்லாத, ஒதுக்கீடு இல்லாத வகையில் வங்கதேச ஏற்றுமதிகள் செய்வதற்கான வசதியை நீட்டிக்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்ததற்கு பிரதமர் ஷேக் ஹசீனா பாராட்டு தெரிவித்தார். இந்தியாவுக்கான வங்கதேச ஏற்றுமதி முதன்முறையாக 2019ல் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவைக் கடந்துவிட்டதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். கடந்த ஆண்டைவிட இது ஏற்றுமதியில் 52 சதவீத வளர்ச்சியாகும்.

14. இரு நாடுகளிலும் ஜவுளி மற்றும் சணல் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இந்திய ஜவுளி அமைச்சகத்துக்கும், வங்கதேச சணல் மற்றும் ஜவுளி அமைச்சகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யுமாறு இரு பிரதமர்களும் வலியுறுத்தினர்.

தொடர்பு வசதியை – சாலைநீர்வழி மற்றும் வான் மார்க்கமாக ஊக்குவித்தல்

15. ஆகாயம், நீர்வழி, ரயில், சாலை மார்க்கமாக தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது வங்கதேசத்துக்கும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதைத் தாண்டிய பகுதிகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த பரஸ்பரம் வாய்ப்பு தருவதாக அமையும் என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்தும், குறிப்பாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கும் அங்கிருந்தும் சரக்குகள் போக்குவரத்துக்கு சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு தரநிலைப்படுத்திய செயல்பாட்டு விதிமுறைகளை இறுதி செய்ததற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இதனால் இரு நாட்டு பொருளாதாரங்களும் முன்னேற சம வாய்ப்பு கிடைக்கும்.

16. உள்நாட்டு நீர்வழி மற்றும் கடலோர கப்பல் வர்த்தகம் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது பற்றி இரு தலைவர்களும் கோடிட்டுக் காட்டினர். இந்த வகையில், தூலியன் – கடகரி – ராஜ்ஷாஹி – டாவுலாட்தியா – ஆரிச்சா வழித்தடத்தை (இரு வழி மார்க்கமாக) செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் முடிவுக்கு இருவரும் வரவேற்பு தெரிவித்தனர். இதில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் குறித்த நெறிமுறைகளின் கீழ் வரும் டாவுட்கன்டி – சோனமுரா வழித்தடமும் (இரு வழி மார்க்கமாக) அடங்கும்.

17. பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு மற்ற கடல் துறைமுகங்களைப் பயன்படுத்துவதால் தங்கள் சரக்குகள் ஏற்றுமதிகளுக்குக் கிடைக்கும் பயன்களைக் கருத்தில் கொண்டு, தேவையான வழிமுறைகளை உருவாக்கும் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கு இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

18. இரு நாடுகளுக்கு இடையில் நல்ல தொடர்பு வசதியை அதிகரிக்கவும், சரக்குகள் மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தவும், ஆயத்தமாக உள்ள உறுப்பு நாடுகளுக்கு இடையில் சரக்குகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து தொடர்பாக பி.பி.ஐ.என். மோட்டார் வாகனங்கள் ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் அல்லது இருதரப்பு இந்திய – வங்கதேச மோட்டார் வாகனங்கள் ஒப்பந்தம் என பொருத்தமானதை செய்வது என்பதில் இரு தலைவர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்;

19. இரு நாடுகளுக்கும் இடையில் சாலைத் தொடர்பு வசதியை மேம்படுத்தும் அடுத்த நடவடிக்கையாக, டாக்கா – சிலிகுரி பேருந்து சேவை தொடங்குவதற்கான திட்டங்களை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

20. டாக்காவில் 2019 ஆகஸ்ட்டில் இரு நாடுகளின் நீர் வளத் துறை செயலாளர்கள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கூட்டு தொழில்நுட்ப கமிட்டி அமைக்கப்பட்டதற்கும், கங்கை – பத்மா கால்வாய் திட்டத்தை வங்கதேசத்தில் அமல் செய்து, கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தம் 1996-ன் படி கிடைக்கும் நீரை அதிகபட்ச அளவுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வு வரம்புகள் உருவாக்கப்பட்டதற்கும் இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

21. மனு, முகுரி, கோவாய், கும்ட்டி, தார்லா மற்றும் தூத்குமார் என்ற ஆறு நதிகளின் நீர் குறித்த சமீபத்தில் தகவல் தொகுப்பு பரிமாற்றத்துக்கும் இடைக்கால பகிர்வு ஒப்பந்தங்களுக்கான வரைவு வரையறையை உருவாக்கவும், பெனி நதியின் இடைக்கால நீர் பகிர்வு ஒப்பந்தத்துக்கான வரைவு வரையறையை உறுதிப்படுத்தவும்,  விரைந்து செயல்படுமாறு கூட்டு நதிகள் ஆணையத்தின் தொழில்நுணுக்க அளவிலான கமிட்டிக்கு இரு தலைவர்களும் உத்தரவிட்டனர்.

22. 2011ல் இரு அரசுகளும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், தீஸ்டா நீரை பகிர்ந்து கொள்வதற்கான வரையறையை உருவாக்கி விரைவில் கையெழுத்திட்டு அமல்படுத்த வேண்டும் என வங்கதேச மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டுக் காட்டினார். கூடிய விரைவில் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, இந்தியாவில் இந்த விஷயத்தில் உரிமைத் தொடர்பு உள்ள அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

23. பெனி ஆற்றில் இருந்து திரிபுராவில் சப்ரூம் நகர மக்களின் குடிநீர் தேவைக்காக 1.82 கனஅடி தண்ணீர் எடுத்துக் கொள்வதற்கான பணிகளை விரைவில் தொடங்குவது குறித்து, டாக்காவில் நடந்த நீர்வளத் துறை செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதற்கு இரு தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

24. ரயில்வே துறையில் இரு நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்புக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளின் ரயில்வே அமைச்சர்களுக்கு இடையில் ஆகஸ்ட் 2019ல் நடந்த ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் குறித்து இருவரும் திருப்தி தெரிவித்தனர்.

25. மக்கள் அளவிலான தொடர்புகள் இரு நாடுகளுக்கு இடையில் மேம்பட வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இதற்கான நடவடிக்கையாக, மைட்ரீ எக்ஸ்பிரஸ் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை வாரத்தில் 4ல் இருந்து 5 முறையாகவும், பந்தன் எக்ஸ்பிரஸ் பயணத்தை வாரத்துக்கு 1-ல் இருந்து 2 முறையாகவும் அதிகரிப்பதை இரு பிரதமர்களும் வரவேற்றனர்.

26. ரயில்வே செயல்பாட்டுக்கு கையிருப்புப் பொருட்களை வங்கதேசத்துக்கு இந்தியா வழங்குவதற்கும்,  வங்கதேசத்தில் சயித்பூர் பணிமனையை நவீனமாக்குவது குறித்தும், விதிமுறைகளை இறுதி செய்யும் பணிகளை விரைவுபடுத்துமாறு இரு தலைவர்களும், தங்கள் நாட்டு அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.

27. வங்கதேசத்துக்கு அன்பளிப்பு அடிப்படையில் அகலப்பாதை மற்றும் குறுகிய பாதை ரயில்களுக்கான என்ஜின்களை வழங்குவது பற்றி பிரதமர் மோடி பரிசீலிப்பதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகத்தை மேம்படுத்த இது உதவும்.

28. 2019 கோடைக்கால அட்டவணையில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து எண்ணிக்கையை வாரத்திற்கு 61 என்பதில் இருந்து 91 சேவைகளாக திறன் மேம்பாடு செய்வதற்கான முடிவை இரு தலைவர்களும் வரவேற்றனர். 2020 குளிர்பருவத்தில் இருந்து இது வாரத்திற்கு 120 சேவைகளாக உயர்த்தப்படுவதற்கும் அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை செம்மைப்படுத்தல்

29. வங்கதேசத்தின் விடுதலைக்கு 1971 டிசம்பரில் நடைபெற்ற போரில் இரு படைகளும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை மூலமான ஒத்துழைப்பின் சிறப்பான வரலாற்றைக் கருத்தில் கொண்டு, அருகாமை நாடுகளுக்கு இடையில் அதிக ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்புக்காக பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

30. கடல்சார் பாதுகாப்பில் நெருக்கமான பங்கேற்பு உருவாக்குவதற்கான முயற்சிகளை இரு பிரதமர்களும் வரவேற்றனர். வங்கதேசத்தில் கடலோர கண்காணிப்பு ரேடார் முறைமை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்திட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

31. வங்கதேசத்துக்கு இந்தியா அளித்துள்ள 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கான பாதுகாப்புத் துறை கடன் வசதியைப் பயன்படுத்துவது தொடர்பான பணிகளை விரைவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகள் 2019 ஏப்ரலில் இறுதி செய்யப்பட்டுள்ளன.

மேம்பாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

32. வங்கதேசத்தில் சமூக – பொருளாதார வளர்ச்சியை அடித்தட்டு மக்கள் நிலைக்குக் கொண்டு செல்வதற்கான பங்களிப்பாக, மானியத் திட்டங்களாக உயர் தாக்கம் ஏற்படுத்தும் பல்வேறு சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை (எச்.ஐ.சி.டி.பி.) இந்தியா மேற்கொள்வதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

33. மூன்று கடன் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டது பற்றி இரு பிரதமர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்தக் கடன் திட்டங்களின் கீழ் தொடங்கப்பட்ட திட்டங்களின் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

34. எக்ஸிம் பாங்க் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதி அலுவலகத்தை டாக்காவில் நிறுவுவதற்கான பணிகளை மேம்படுத்த, வங்கதேசத்துக்கு இந்திய அரசு அளித்த கடன் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக கட்டமைப்பு ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவது தொடர்பான பணிகள் குறித்து இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது.

35. இருதரப்பு மேம்பாட்டு பங்களிப்புத் திட்டங்கள் மூன்றை இரு தலைவர்களும் வீடியோ மூலம் அக்டோபர் 5ல் தொடங்கி வைத்தனர். அவை:

  1. வங்கதேசத்தில் இருந்து மொத்தமாக எல்.பி.ஜி. இறக்குமதி செய்வது
  2. டாக்காவில் ராமகிருஷ்ணா மிஷன் வளாகத்தில் விவேகானந்தா மாணவர் விடுதி தொடக்கம்
  3. குல்னாவில் வங்கதேச பட்டயப் பொறியாளர்கள் கல்வி நிலையத்தில் வங்கதேச – இந்திய திறன் மேம்பாட்டு கல்வி நிலையம் (பி.ஐ.பி.எஸ்.டி.ஐ.) தொடக்கம்

36.  வங்கதேச சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டுக்கு தற்போது நடைபெற்று வரும் இரு தரப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. சட்டக்கோட்பாடுகளில் பாரம்பரியம் கொண்ட இந்திய அரசாங்கம், எதிர்காலத்தில் வங்கதேச நீதித் துறை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எல்லை கடந்த எரிசக்தி ஒத்துழைப்பு

37. வங்கதேசத்தில் இருந்து திரிபுராவுக்கு வங்கதேச லாரிகள் மூலம் பெருமளவில் எல்.பி.ஜி. கொண்டு செல்லும் திட்டத்தை இரு பிரதமர்களும் தொடக்கி வைத்தனர். இதுபோன்ற எரிசக்தித் தொடர்புகள் எல்லை கடந்த எரிசக்தி வர்த்தகத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

38. டாக்காவில் சமீபத்தில் நடைபெற்ற 17வது ஜே.எஸ்.சி. கூட்டத்தில், மின் துறையில் இந்திய – வங்கதேச ஒத்துழைப்பு குறித்து ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. காட்டிஹர் (இந்தியா), பர்போட்டிபுர் (வங்கதேசம்) மற்றும் போர்நகர் (இந்தியா)இடையில் இரட்டை வழித்தடம் கொண்ட எல்லை கடந்த மின்சார இடைத் தொடர்பு 765 கிலோ வாட் வழித்தடத்தை உருவாக்க இது வகை செய்கிறது. அமல் செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்பட உள்ள நிலையில், இந்த வசதியால் பிராந்தியத்துக்கு உள்பட்டபகுதியில் கூடுதல் மின் திறன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியா, நேபாளம் மற்றும் பூடானில் நீர்மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும், போட்டி விலை நிர்ணயிக்கப்படும் மின் உற்பத்தியும் இதில் அடங்கும்.

கல்வி மற்றும் இளைஞர் பரிமாற்றங்கள்

39. எதிர்காலத்துக்கான முதலீடாக,  இரு நாடுகளின் இளைஞர்களுக்கு இடையில் ஒத்துழைப்பு மேம்பட வேண்டியதன் முக்கியத்துவம் இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதற்கான ஒரு முயற்சியாக, இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி அவர்கள் குறிப்பிட்டனர். வங்கதேசத்துக்கு ஏற்ற பயிற்சித் திட்டங்கள் மூலம் அதிக பயன் கிடைக்கும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

40. கல்வித் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரித்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைந்து இறுதி செய்வது குறித்து இரு நாட்டு தலைவர்களும் தங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

கலாச்சார ஒத்துழைப்பு – மகாத்மா காந்தி 150வது பிறந்த தின ஆண்டு (2019), வங்கபந்துவின் பிறந்த நூற்றாண்டு (2020) மற்றும் வங்கதேச விடுதலைப் போரின் 50வது ஆண்டு (2021)

41. இரண்டு முக்கிய ஆண்டு தினங்களைக் கொண்டாடுவதில் அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டியது குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தினர்: வங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மான் பிறந்த நூற்றாண்டு 2020; மற்றும் வங்கதேச விடுதலைப் போரின் 50 ஆண்டுகள், மற்றும் இந்திய – வங்கதேச இருதரப்பு உறவுகள் உருவாக்கப்பட்ட 50 ஆண்டுகள் 2021. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆண்டுகளைக் கொண்டாடுவதற்கு, இரு நாடுகளுக்கு இடையில் கலாச்சார பங்கேற்புகளை மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்தனர். 2019-2020 காலகட்டத்தில் பரஸ்பரம் ஏற்புடைய காலத்தில் வங்கதேசத்தில் இந்தியத் திருவிழாவுக்கு ஏற்பாடுசெய்ய இந்திய பிரதமர் திட்டம் முன்வைத்தமைக்கு வங்கதேச பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

42. கலாச்சார பரிவர்த்தனைத் திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தப்பயணத்தின் போது புதுப்பிக்கப்பட்டதை இரு பிரதமர்களும் வரவேற்றனர்.

43. வங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மான் குறித்து என்.எப்.டி.சி. மற்றும் பி.எப்.டி.சி. இணைந்து கூட்டாக திரைப்படம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் குறித்த பணிகளை விரைவுபடுத்துமாறு இரு பிரதமர்களும் தங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.அவருடைய நூற்றாண்டு 2020 ஆம் ஆண்டில் கொண்டாடப்படுவதை ஒட்டி இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

44. காலனி ஆட்சி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக அஹிம்சை வழி போராட்டம் மேற்கொண்டதற்காக உலகெங்கும் கொண்டாடப்படும், மகாத்மா காந்தி பிறந்த 150வது ஆண்டு நினைவை ஒட்டி, நினைவுத் தபால் தலை வெளியிட ஒப்புக்கொண்டதற்காக வங்கதேச அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

45. தேசிய அருங்காட்சியகத்துக்கும் (இந்தியா) வங்கபந்து அருங்காட்சியகத்துக்கும் (வங்கதேசம்) இடையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். விரைவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு அதிகாரிகளை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மியான்மரில் ராக்கின் மாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்

46. மியான்மரில் ராக்கின் மாநிலத்தில் இருந்து கட்டாயத்தின் பேரில் குடிபெயர்ந்த மக்களுக்கு, தங்குமிடம் அளித்து, மனிதாபிமான உதவிகளை பரந்த மனதுடன் வங்கதேசம் அளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். ரோகின்கியாக்களுக்கு காக்ஸ் பஜாரில் தற்காலிக முகாம்களில் தங்குமிடம் அளித்துள்ள வங்கதேசத்தின் மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஐந்தாவது தவணையாக மனிதாபிமான உதவிகளை இந்தியா அளிக்கும். இதில் கூடாரங்கள், நிவாரண மற்றும் மீட்புப் பொருட்களும், மியான்மரில் இருந்து கட்டாயமாக குடிபெயர்ந்தவர்களின் தொழில் திறன் மேம்பாட்டுக்காக ஓராயிரம் தையல் இயந்திரங்களும் இருக்கும். மேலும், மியான்மரில் ராக்கின் மாநிலத்தில் 250 வீடுகள் கட்டித்தரும் முதல்கட்டப் பணிகளை இந்தியா பூர்த்தி செய்துள்ளது. அந்தப் பகுதியில் அடுத்த சமூக – பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்த இந்தியா தயாராகி வருகிறது.

47. மியான்மரில் இருந்து குடிபெயர்ந்து வந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 2017 செப்டம்பரில் இருந்து இந்தியா மனிதாபிமான உதவிகள் அளித்து வருவதற்கு, வங்கதேச அரசின் சார்பில் பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார். குடிபெயர்ந்து வந்த மக்களை பத்திரமாக, பாதுகாப்பாக, விரைவாக, நீடித்து வாழும் வாய்ப்புடன் மீண்டும் ராக்கின் மாநிலத்திற்கு அனுப்புவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டியது பற்றி இருவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். மியான்மரில் ராக்கின் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டை மேம்படுத்தி, சமூக- பொருளாதார சூழ்நிலைகளை மேம்படுத்துவது உள்பட அவர்கள் அங்கே திரும்பிச் செல்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிகள் எடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி அவர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.

பிராந்தியத்திலும் உலக அளவிலும் பங்காளர்கள்

48. ஐ.நா.விலும் மற்ற பன்னாட்டு அமைப்புகளிலும் இரு நாடுகளும் நெருக்கமாக செயல்படுவதில் உறுதியாக உள்ளதாக இரு பிரதமர்களும் தெரிவித்தனர். சர்வதேச அரங்கில் இரு தரப்பினரும் ஒன்றாக செயல்படுவதில் உறுதி தெரிவித்தனர். குறிப்பாக 2030 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை அமல்படுத்துவதில் உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு வளர்ச்சி அடைந்த நாடுகளை கேட்டுக் கொள்வதில் சேர்ந்து செயல்படுவது என தெரிவிக்கப்பட்டது.

49. பிராந்திய மற்றும் துணை பிராந்திய அளவில் ஒத்துழைப்பது இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த இலக்கை நோக்கி, அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கூட்டாக வளமை சேர்க்கும் நோக்கில் துணை பிராந்திய ஒத்துழைப்பிற்கு சிறப்பான நடைமுறை ஒன்றை உருவாக்க, BIMSTEC செயல்பாட்டை சீர்படுத்துவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

50. இந்தப் பயணத்தின் போது பின்வரும் இருதரப்பு ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு, பரிமாறிக் கொள்ளப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒப்படைக்கப்பட்டன:

 

  • கடலோரக் காவல் முறைமை அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்தியாவில் இருந்தும், இந்தியாவிற்கும் சரக்குகள் போக்குவரத்துக்கு சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறை (SOP).
  • இந்தியாவில் திரிபுரா சப்ரூம் நகரில் குடிநீர் தேவைக்காக பெனி ஆற்றில் இருந்து 1.82 கனஅடி நீர் எடுத்துக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • வங்கதேசத்துக்கு இந்தியா வாக்குறுதி அளித்த கடன் திட்டங்கள் (LoC) அமலாக்கம் தொடர்பான ஒப்பந்தம்.
  • ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் டாக்கா பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்து, கலாச்சார பரிவர்த்தனை திட்ட புதுப்பித்தலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.

51. சென்னையில் வங்கதேச துணைத் தூதரக அலுவலகம் திறக்க வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

உயர்நிலைப் பயணங்கள் மூலம் உத்வேகத்தை தக்கவைப்பது

52. தமக்கும், தங்கள் குழுவில் இருந்த உறுப்பினர்களுக்கும் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் அளித்த அன்பான உபசரிப்புக்காகவும், கனிவான நட்புறவுக்காகவும் பிரதமர் மோடிக்கு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

53. வங்கதேசத்துக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயணத்துக்கான தேதிகள் தூதரக அலுவலகங்கள் மூலம் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Mann KI Baat Quiz
Explore More
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
India achieves 40% non-fossil capacity in November

Media Coverage

India achieves 40% non-fossil capacity in November
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 4, 2021
December 04, 2021
பகிர்ந்து
 
Comments

Nation cheers as we achieve the target of installing 40% non fossil capacity.

India expresses support towards the various initiatives of Modi Govt.