இந்திய வாகனத் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட இரண்டு முக்கிய முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன
"குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாகனத் துறையை வளர்ச்சியடையச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன - நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை இன்றியமையாதவை"
"வாகனத் தொழில் பொருளாதாரத்தின் ஒரு அதிகார மையமாகும்”
“நமது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் வலுவான பகுதியாக மாற சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன”
“குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை தேசத்தின் எதிர்காலமாக நாடு பார்க்கிறது”
“மத்திய அரசு ஒவ்வொரு தொழில்துறைக்கும் உறுதுணையாக நிற்கிறது”
“புதுமை மற்றும் போட்டித்தன்மையை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்- அரசு உங்களோடு இருக்கிறது"

வணக்கம்! வாழ்த்துகள்

முதலாவதாக, நான் இங்கு வரத் தாமதித்து, உங்களை காத்திருக்க வைத்ததற்காக உங்கள் அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்று காலை திட்டமிட்டபடி தில்லியில் இருந்து புறப்பட்டேன். ஆனால் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இங்கு வந்ததால் தாமதம் ஏற்பட்டு விட்டது.

 

நண்பர்களே,

தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் இதுபோன்ற கூட்டத்தில் பங்கேற்றிருப்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு ஆய்வகத்திற்குள் நான் காலடி எடுத்து வைத்தது போல் உணர்கிறேன். தொழில்நுட்பத்தில், குறிப்பாக உலகளாவிய வாகனத் தொழிலில் தமிழ்நாடு தனது வலிமையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்காலத்தை உருவாக்குதல் என்று பொருத்தமாக நீங்கள் பெயரிட்டிருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  எண்ணற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களையும், எண்ணற்ற திறமையான இளைஞர்களையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். இந்த முன்முயற்சி வாகனத் தொழிலை மட்டுமல்லாமல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மோட்டார் வாகனத் துறையின் பங்கு 7 சதவீதமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். போக்குவரத்தை எளிதாக்குவதில் மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 

 

நண்பர்களே,

நாட்டின் பொருளாதாரத்திற்கு வாகனத் தொழில் துறை முக்கியமானது. அதில் இந்தத் துறையில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பும் மிகப்பெரியது. இந்தியா, ஆண்டுக்கு சுமார் 45 லட்சம் கார்கள், 2 கோடி இரு சக்கர வாகனங்கள், 10 லட்சம் வணிக வாகனங்கள் மற்றும் 8.5 லட்சம் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. எந்தவொரு பயணிகள் வாகனமும் 3000 முதல் 4000 பாகங்களைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதாவது, இதுபோன்ற வாகனங்களை தயாரிக்க ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான உதிரி பாகங்கள் அல்லது பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த பாகங்கள் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 

நண்பர்களே,

நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தற்போது குறிப்பிடத்தக்க வாய்ப்பைப் பெற்றுள்ளன.  பாரதம் உலக அரங்கில் தனது முத்திரையைப் பதிக்க வேண்டுமானால், அது ஒரு அடிப்படைக் கொள்கையை முழு மனதுடன் பின்பற்ற வேண்டும். குறைபாடுகள் இல்லாத சுற்றுச்சூழல் தாக்கம் இல்லாத மிகத் தரமான பொருட்களை உருவாக்குவதே அந்த கொள்கையாகும். இந்த அடிப்படை மந்திரத்தை கடைப்பிடிப்பது நமது வெற்றிக்கு இன்றியமையாதது.

நண்பர்களே,

கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில், பாரதத்தின் சிறு தொழில்கள் அவற்றின் திறனை நிரூபித்தன.  இன்று, பல்வேறு துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சிறிய அளவிலான தொழில்களை ஆதரிப்பதற்கும், வளர்ந்து வரும் துறைகளில் புதுமையை ஊக்குவிப்பதற்கும் எங்கள் அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.  முன்பு வழக்கமாக பார்க்கப்பட்ட திறன் மேம்பாடு, தற்போது கூடிய கவனத்தை ஈர்த்துள்ளது. எனது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. எதிர்கால தலைமுறையை வடிவமைப்பதில் திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

 

நண்பர்களே,

மின்சார வாகனங்களின்  ஊக்குவிப்பு அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கான தேவைக்கு ஏற்ப  திறனை மேம்படுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசு அண்மையில் சூரிய சக்தி மேற்கூரை தொடர்பாக ஒரு குறிப்பிடத்தக்க கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த முயற்சி ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தை வழங்கும்.   முதற்கட்டமாக ஒரு கோடி வீடுகளில் இதை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த கொள்கை தனிநபர்களின் வீடுகளில் மின்-வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கும் உதவும் என்று நாங்கள் கருதுகிறோம். இது மேற்கூரை சூரிய சக்தியால் இயக்கப்படும். இது போக்குவரத்து செலவை பூஜ்ஜியம் ஆக்கும். 

 

நண்பர்களே,

வாகன தொழில் துறையில் சுமார் ரூ .26,000 கோடி மதிப்புள்ள உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் உற்பத்தியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், ஹைட்ரஜன் வாகனங்களையும் ஊக்குவிக்கிறது. இது 100-க்கும் அதிகமான மேம்பட்ட தானியங்கி தொழில்நுட்பங்களை மேம்படுத்த உதவியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், தொடர்புடைய துறைகளில் உலகளாவிய முதலீடுகள் அதிகரிக்கும்.

நண்பர்களே,

வாய்ப்புகள் இருக்கும் இடங்களில் சவால்களும் எழுகின்றன.  பல சவால்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. சரியான நேரத்தில் மற்றும் உத்திசார் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், இந்த சவால்களை நாம் வாய்ப்புகளாக மாற்ற முடியும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வரையறையில் திருத்தம் செய்வது உட்பட இது தொடர்பாக எங்கள் அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த முடிவு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான தடைகளை நீக்கி அவற்றின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.

 

நண்பர்களே,

வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய மத்திய அரசு ஒவ்வொரு தொழிலுக்கும் உறுதியான ஆதரவை அளித்து வருகிறது.  இன்று, அரசு ஒவ்வொரு துறையின் கவலைகளையும் நிவர்த்தி செய்கிறது.

நண்பர்களே,

புதிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையாக இருந்தாலும் சரி, சரக்கு மற்றும் சேவை வரியாக இருந்தாலும் சரி, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சிறு தொழில்களுக்கு, குறிப்பாக வாகனத் துறைக்கு அதிகம் பயனளித்துள்ளன. வாகனத்துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையினர் அரசின் ஆதரவைப் பயன்படுத்திக் கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளையும், போட்டித்தன்மையையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அரசு உங்கள் பின்னால் உறுதியாக நிற்கிறது. இந்த விஷயத்தில் டிவிஎஸ் எடுத்துள்ள முயற்சி உங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

மேலும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாகன ஸ்கிராப்பேஜ் தொடர்பாக மத்திய அரசு ஒரு கொள்கையை அமல்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அனைத்து பழைய வாகனங்களையும் அகற்றி, புதிய, நவீன வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். இது இப்போது இந்தத் தொழில்துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது.  மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் கணிசமான சந்தையை உருவாக்கியுள்ளன.

 

ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல்  போக்குவரத்து பற்றி விவாதிப்பது முழுமையடையாது.  ஒரு முன்னோடித் திட்டமாக, முக்கிய நெடுஞ்சாலைகளில் 1000 ஓய்வுவறை மையங்களை நிறுவ உத்தேசித்துள்ளோம். இந்த மையங்கள் ஓட்டுநர்களுக்கான விரிவான வசதிகள், விபத்துக்களைக் குறைத்தல், ஓய்வு எடுத்தல் மற்றும் அவர்களுக்கான அத்தியாவசிய வசதிகளை உறுதி செய்யும். இந்த மையங்களை உலகத் தரத்திற்கு இணையாக உருவாக்கும் பணியை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.

நண்பர்களே

உங்கள் அனைவருடனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் என்ன திட்டங்களை வைத்திருந்தாலும், நம்பிக்கையுடன் தொடருங்கள். நான் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து, நாட்டை அதிக உயரங்களுக்கு கொண்டு செல்வோம். உங்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்காக மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s steel exports rise 11% in October; imports moderate for the first time this fiscal

Media Coverage

India’s steel exports rise 11% in October; imports moderate for the first time this fiscal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 10, 2024
November 10, 2024

Sustainable Future: PM Modi's Commitment to Environmental Responsibility