பிரதமர், ராய்பூரில் உள்ள தேசிய உயிர்வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட வளாகத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தார்
வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதுகளை பிரதமர் வழங்குகினார்
"விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பாதுகாப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்களின் வளர்ச்சி விரைவாகிறது"
"அறிவியலும் அரசும் சமூகமும் இணைந்து செயல்படும் போது, முடிவுகள் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் இத்தகைய கூட்டணி புதிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டை வலுப்படுத்தும் "
"பயிர்கள் அடிப்படையிலான வருமானத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்று மதிப்பு கூட்டல் மற்றும் பிற விவசாய வருமானத்திற்கு விவசாயிகளை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன"
"நமது பழங்கால விவசாய மரபுகளுடன், எதிர்காலத்தை நோக்கிச் செல்வது சம அளவில் முக்கியம்"

வணக்கம்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு புபேஷ் பாகல் மற்றும் எனது அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். அனைத்து துணைவேந்தர்கள், வேளாண் கல்வியோடு தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் விவசாய சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம்.

நண்பர்களே,

இந்திய விவசாயம் என்பது தொடக்க காலத்தில் இருந்து அறிவியல்ரீதியாகவே இருந்து வந்துள்ளது.  வேளாண்மையையும் விஞ்ஞானத்தையும் ஒருங்கிணைப்பது என்பது 21ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ள இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.  அதனை நோக்கிய முக்கிய நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டு உள்ளது. நமது நாட்டின் நவீன விவசாயிகளுக்கு இது அர்ப்பணிக்கப்படுகிறது.  சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இந்த மாபெரும் பரிசினை நாட்டின் விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். இன்று பல்வேறு பயிர்களின் 35 புதிய வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இன்று ராய்ப்பூரில் தேசிய உயிர்வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனம் தொடங்கப்படுகிறது. நான்கு வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதுகள் வழங்கப்படுகின்றன.  உங்களை அதாவது நாட்டின் விவசாயிகளை, வேளாண் விஞ்ஞானிகளை நான் பாராட்டுகிறேன்.

கூடுதலான ஊட்டச்சத்து நிறைந்த விதைகளை உருவாக்குதல், மாறி வரும் பருவநிலையை கவனத்தில் கொண்டு புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைத்தல் ஆகியவற்றுக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்.  அண்மைக்காலங்களில் 1300 க்கும் மேலான பல்வேறு பயிர்களின் விதைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 35 பயிர் வகைகள் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன. பருவநிலை மாற்றத்தின் பாதிப்பில் இருந்து விவசாயத்தை இந்த விதைகள் பாதுகாப்பதோடு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்கும் பிரச்சாரத்திற்கும் உதவியாக இருக்கும். இந்தப் புதிய பயிர் வகைகள் பல்வேறு சீதோஷ்ண நிலைமைகளை தாங்கி வளர்வதோடு கூடுதலான ஊட்டச்சத்தையும் வழங்கும்.  சத்தீஸ்கரில் தொடங்கப்பட்டுள்ள தேசிய உயிர்வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனமானது விஞ்ஞான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கும்.  பருவநிலை மாறுதலினால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு இந்த நிறுவனம் உறுதுணையாக இருக்கும்.

நம் நாட்டில் விளையும் பெரும்பகுதி பயிர்கள் பூச்சிகளால் அழிக்கப்படுகின்றன. இது விவசாயிகளுக்கு பெருமளவிலான நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு நாம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தபோது பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைப் பார்த்தோம்.  வெட்டுக்கிளிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும் விவசாயிகளுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்த புதிய நிறுவனம் இத்தகையப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்று நம்புகிறேன்.

நண்பர்களே,

விவசாயிகளின் நிலத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு காலகட்டங்களில் இதுவரை 11 கோடி மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு பலன்களை அடைந்துள்ளனர். அதேபோல் 100 சதவிகிதம் வேம்பு பூச்சுள்ள யூரியா காம்போசிட் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு நீர்ப்பாதுகாப்பை வழங்கும் வகையில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை தொடங்கி உள்ளோம். பல பத்தாண்டுகளாக நிலுவையில் உள்ள சுமார் 100 நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவு செய்வதற்கான முயற்சியை எடுத்துள்ளோம். நுண்நீர் பாசனம் மற்றும் நீர்த்தெளிப்பான்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறோம். பூச்சிகளில் இருந்து பாதுகாக்கவும் அதிக அளவிலான விளைச்சல் தரவும் விவசாயிகளுக்கு புதிய விதை வகைகளை வழங்கி வருகிறோம். பிஎம் குசம் திட்டம் விவசாயத்தோடு சேர்ந்து விவசாயிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கான மின்சாரத் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதோடு விற்கவும் செய்யலாம். லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. பருவநிலை மாறுதல்கள் மற்றும் இயற்கை பேரிடர் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.  இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் பிரதம மந்திரி பயிர் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அதிகபட்ச பலனையும் பாதுகாப்பையும் பெறுகின்றனர். நெருக்கடியான காலகட்டங்களில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் சென்று சேர்ந்துள்ளது.

நண்பர்களே,

ரஃபி பருவத்தில் 430 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.  விவசாயிகளுக்கு 85,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமான  விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் 1.60 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. இன்று விவசாயிகள் பருவநிலை குறித்த தகவல்களை சிறப்பான முறையில் பெறுகின்றனர். தற்போது மீன் வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் வேளாண் கடன் அட்டை வழங்கப்படுகிறது. 10,000க்கும் அதிகமான உழவர் உற்பத்தி அமைப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஈ-நாம் திட்டத்தின் கீழ் கூடுதலான வேளாண் சந்தைகள் இணைக்கப்பட்டு உள்ளன. கடந்த 6-7 ஆண்டுகளில் விவசாயிகள் மற்றும் வேளாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கான அஸ்திவாரமாக அமையும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா தனது சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டை கொண்டாட இருப்பதை இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நண்பர்களே,

வேளாண்மை என்பது மாநிலம் சார்ந்த விஷயம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பல ஆண்டுகள் குஜராத்தின் முதல்வராக இருந்ததினால் இது எனக்கும் தெரியும்.  மாநிலத்திற்கு கூடுதல் பொறுப்புணர்வு உள்ளது.  முதலமைச்சராக நான் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடிந்த அளவிலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். திரு நரேந்திர சிங் தோமர் குஜராத்தில் நான் முதல்வராக இருந்த போது செய்தவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.  ஒரு காலத்தில் குஜராத்தில் குறிப்பிட்ட சில பயிர் வகைகள் மட்டுமே பயிரிடப்பட்டன. குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்ததன் காரணமாக விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டனர்.  அனைவரும் ஒருங்கிணைந்தால் இத்தகையச் சூழலை மாற்ற முடியும் என்ற தாரக மந்திரத்துடன் அந்தச் சமயத்தில் நாங்கள் செயல்பட்டோம்.  விஞ்ஞானம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கினோம். அதன் விளைவாக இன்று நாட்டின் வேளாண்மை மற்றும் தோட்டக் கலையில் குஜராத் மிகப்பெரும் பங்கினை வகிக்கிறது.  வறண்ட பிரதேசமான கூச் பகுதியில் விளையும் பழங்களும் காய்கறிகளும் இன்று ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சகோதர சகோதரிகளே,

உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாமல் குஜராத் முழுவதும் குளிர் சாதன சேமிப்பு கிடங்கு வலைப்பின்னலை உருவாக்கவும் கவனம் செலுத்தப்பட்டது. இதன் காரணமாக வேளாண் வாய்ப்பு பரவலாகி உள்ளது, வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளில் புதிய வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகி உள்ளன. பருவநிலை மாறுதல் என்பது விவசாயத்திற்கான மிகப்பெரும் சவால் மட்டும் அல்ல. அது ஒட்டுமொத்த சூழல்சார் அமைப்புக்கே சவாலாக உள்ளது.  நமது மீன் உற்பத்தி, கால்நடை வளம் மற்றும் உற்பத்தி திறனை பருவநிலை மாறுதல் பெருமளவில் பாதிக்கிறது. இதனால் விவசாயிகளும் மீனவர்களும் பொருளாதார இழப்புக்கு ஆளாகின்றனர். பருவநிலை மாறுதல் புதுவகையிலான பூச்சி இனங்களையும் நோய்களையும் உருவாக்கி உள்ளது. இது மனிதர்கள் கால்நடைகள் மற்றும் பயிர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.  விஞ்ஞானம், அரசாங்கம் மற்றும் சமுதாயம் அனைத்தும் ஒருங்கிணைந்து செயலாற்றினால் கிடைக்கும் பலன் மிகச் சிறப்பானதாக இருக்கும்.  புதிய சவால்களை எதிர்கொள்ள விவசாயிகளும் விஞ்ஞானிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.  மாவட்ட அளவில் விஞ்ஞான அடிப்படையிலான வேளாண் மாதிரிகள் கடைபிடிக்கப்பட்டால் விவசாயம் தொழில் நிபுணத்துவம் சார்ந்ததாகவும் லாபகரமானதாகவும் மாறும்.

சகோதர, சகோதரிகளே!

அடிப்படைகளுக்கு திரும்புதல் மற்றும் எதிர்காலத்தை நோக்கி நடைபோடுதல் ஆகிய இரண்டிற்கும் இடையில் நாம் சமநிலையைக் காக்க வேண்டும்.  நமது பாரம்பரியமான விவசாயம் சிறப்புக்குரியதாகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் ஆகியவற்றை மரபுரீதியாக நாம் ஒன்றாகவே செய்து வந்திருந்தோம். ஒரே நிலத்தில் ஒரே நேரத்தில் பலவகையிலான பயிர்களை பயிரிட்டு வளர்த்தோம்.  அதாவது நமது தொடக்ககால வேளாண்மை என்பது பன்மைப் பயிர் கலாச்சாரமாக இருந்தது. அது படிப்படியாக ஒற்றைப் பயிர் கலாச்சாரமாக மாறி விட்டது. பல்வேறு காரணங்களால் விவசாயிகள் ஒரே பயிரை விளைவித்து வருகிறார்கள்.  இத்தகைய சூழலை நாம் மாற்றியாக வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் நாம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மதிப்பு கூட்டல் மற்றும் இதர வேளாண் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறோம். கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் ஆகியவற்றோடு தேனீ வளர்ப்பு, பண்ணைகளில் சூரிய மின்சார உற்பத்தி, எத்தனால், உயிரி எரிபொருள் போன்ற கழிவில் இருந்து செல்வத்திற்கு என்ற நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறோம்.

நண்பர்களே,

உள்ளூர் சீதோஷ்ண நிலைமைகளுக்கு ஏற்ப பயிர்களை விளைவிப்பது என்பதுதான் நமது பாரம்பரிய விவசாயத்தின் வலிமை ஆகும். இத்தகைய பருவநிலை பயிர்களில் ஊட்டச்சத்து மதிப்பு அதிகம் இருந்தது. அவை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தின.  இன்றைய வாழ்க்கை முறையினால் உருவாகி உள்ள பல்வேறு நோய்களை கருத்தில் கொள்ளும் போது இத்தகைய சிறுதானியங்களுக்கான தேவை பல மடங்கு பெருகி வருகிறது. இந்தியாவின் முயற்சிகளின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை அடுத்த ஆண்டை அதாவது 2023ஐ சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்து உள்ளது. நமது சிறுதானிய பயிர் விளைச்சல் மரபை சர்வதேச ரீதியில் எடுத்துக்காட்ட இது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.  நாட்டில் உள்ள சமூக மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு திருவிழாக்களை நடத்த வேண்டும்.  சிறுதானியங்களில் இருந்து புதிய உணவு வகைகளை தயாரிக்கும் போட்டிகளையும் நடத்த வேண்டும்.  சிறுதானியங்கள் தொடர்பான வலைத்தளங்கள் உருவாக்கப்பட வேண்டும்.  சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு முறைகளை மக்கள் பகிர்ந்து கொள்ளும் வகையில் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மாநிலங்கள் தங்களது வேளாண் துறை  மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் மற்றும் முற்போக்கு விவசாயிகள் இடம்பெறும் பணிக் குழுக்களை அமைக்க வேண்டும்.

நண்பர்களே,

பாரம்பரியமான விவசாயத்தோடு எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதும் முக்கியமானது ஆகும். நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய வேளாண் கருவிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எதிர்காலம் இருக்கும். எதிர்காலம் என்பது ஸ்மார்ட் இயந்திரங்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகளைச் சார்ந்ததாக இருக்கும்.  விதைப்பில் இருந்து சந்தை வரையிலான ஒட்டுமொத்த சூழல்சார் அமைப்பையும் நாம் தொடர்ந்து நவீனமயமாக்கி வர வேண்டும்.  புத்தாக்கங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்புகள் கிராமங்களுக்கு தொழில்நுட்பங்களை எடுத்துச் செல்லும் வகையில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.  நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் புதிய தொழில்நுட்பத்தையும் புதிய கருவிகளையும் பயன்படுத்தத் தொடங்கினால் வேளாண்துறை உருமாற்றம் பெற்று விடும்.  வேளாண் சார்ந்த நவீன விஞ்ஞானத்தை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். 

நண்பர்களே,

இன்று நாம் தொடங்கி உள்ள பிரச்சாரம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்கு வலு சேர்க்கும். பள்ளிகளில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியே வழங்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்து உள்ளது.   ஊட்டச்சத்து குறைபாடு குறித்து ஒலிம்பிக் சாம்பியன்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.  ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 75 பள்ளிக்கூடங்களிலாவது மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியன குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். விவசாயிகளுக்கு புதிய பயிர் வகைகள், செறிவூட்டப்பட்ட விதைகள், பருவநிலை மாறுதலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு ஆகியன குறித்து தெரிவிக்க வேண்டும்.

நன்றி!

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India on track to become $10 trillion economy, set for 3rd largest slot: WEF President Borge Brende

Media Coverage

India on track to become $10 trillion economy, set for 3rd largest slot: WEF President Borge Brende
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 23 பிப்ரவரி 2024
February 23, 2024

Vikas Bhi, Virasat Bhi - Era of Development and Progress under leadership of PM Modi