மதிப்பிற்குரிய எனது நண்பர் அதிபர் மெக்ரான் அவர்களே, இதர நாடுகளின் பிரதிநிதிகளே, நண்பர்களே, வணக்கம்!
தேசிய தினத்தை முன்னிட்டு ஃபிரான்ஸ் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். நமது உத்தி சார்ந்த கூட்டுமுயற்சியின் 25-வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். கடந்த 25 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை நாம் தயாரித்து வருகிறோம். இது சம்பந்தமாக துணிச்சல் மிக்க மற்றும் லட்சியமிக்க இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கவும் நாட்டு மக்கள் உறுதி ஏற்றுள்ளனர். நமது பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்கு இருவருமே முன்னுரிமை அளிக்கிறோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான முன்முயற்சிகளை நாம் கண்டறிகிறோம். இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடையீட்டு சேவையை ஃபிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தொடர்ந்து நமது முன்னுரிமைகளாக இருந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு நாம் உருவாக்கிய சர்வதேச சூரிய சக்தி கூட்டணி தற்போது ஒரு இயக்கமாக மாறி உள்ளது.
நண்பர்களே,
பாதுகாப்பு ஒத்துழைப்பு நமது உறவின் வலுவான தூணாக விளங்குகிறது. இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களில் ஃபிரான்ஸ் முக்கிய கூட்டாளியாக செயல்படுகிறது. நீர்மூழ்கி கப்பல்கள் முதல் போர்க்கப்பல்கள் வரை நமது தேவைகளை மட்டுமல்லாமல் நட்பு நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக நாங்கள் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.
இந்தியா, ஃபிரான்ஸ் மக்களிடையே நீண்டகால உறவு இருந்து வருகிறது. தெற்கு ஃபிரான்சில் உள்ள மார்செய்ல் நகரத்தில் புதிய இந்திய தூதரகத்தை திறக்க உள்ளோம். ஃபிரான்சில் படிக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு நீண்ட கால விசா அளிக்கும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவில் தங்கள் வளாகங்களை நிறுவுமாறு ஃபிரான்ஸ் பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் போன்றவை உலகளாவிய தெற்கு பகுதியில் உள்ள நாடுகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நிரந்தரமான அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு வேண்டிய ஆதரவை அளிக்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவும், ஃபிரான்சும் எப்போதுமே தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை களைய ஆக்கபூர்வமான செயல்பாடுகள் அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். அதிபர் மெக்ரான் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.