Swami Vivekananda truly embodied the spirit of India: PM
India's youth are driving global growth: PM
It is for today's generation to turn Swami Vivekananda's vision of India into reality: PM

அனைவருக்கும் வணக்கம்

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன், பேலூர் மடத்தின் தலைவர், பூஜ்ய சுவாமி கவுதமானந்த மகாராஜ் அவர்களே, மைசூர் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தின் தலைவர், பூஜ்ய சுவாமி முக்திதானந்த் அவர்களே, ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் அறங்காவலர், பூஜ்ய சுவாமி யத்வேந்திரானந்த் அவர்களே, ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் அவர்களே, முதலமைச்சர் திரு டி.கே. சிவகுமார் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா வாடியார் அவர்களே, சட்டப்பேரவை உறுப்பினர் திரு விஜயேந்திர எடியூரப்பா அவர்களே, திரு கே. ஹரிஷ் கவுடா அவர்களே, பிற சிறப்பு விருந்தினர்கள், மதிப்பிற்குரிய துறவியர்கள் மற்றும் எனது அன்பு சகோதர, சகோதரிகளே.

முதலில், மைசூரின் காவல் தெய்வமான அன்னை சாமுண்டேஸ்வரிக்கு என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நாம் அனைவரும் குரு பௌர்ணமி விழாவைக் கொண்டாடினோம். என் வாழ்க்கைப் பயணம் எங்கு தொடங்கியது, இன்று நான் இருக்கும் நிலையை அடைவதில் இராமகிருஷ்ண மடம் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு நான் ஹௌராவில் உள்ள பேலூர் மடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு மதிப்பிற்குரிய துறவிகளுடன் ஆன்மிகச் சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று மீண்டும் மைசூரிலுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமத்தைச் சேர்ந்த புனிதத் துறவிகளையும், என் குரு சகோதரர்களையும் சந்தித்து, அவர்களுடைய ஆசிகளைப் பெறும் அரிய வாய்ப்பு கிடைத்திருப்பது என் பெரும் பாக்கியம். நீங்கள் அனைவரும் இங்கு இருப்பதால், இந்தப் புனிதமான மைசூர் மண்ணில் இன்று நான் ஒரு தனித்துவமான ஆன்மிக ஆற்றலை உணர்கிறேன். உங்கள் அனைவரின் திருவடிகளில் என் பணிவான வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

நண்பர்களே,

மைசூர், இந்தியாவின் அழியாத பண்பாட்டு உணர்வின் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. இங்குள்ள கோயில்கள், மரபுகள், திருவிழாக்கள், புகழ்பெற்ற மைசூர் தசரா விழா, பிரமாண்டமான அரண்மனைகள், இசை, இலக்கியம் என இந்த நகரின் ஒவ்வொரு துகளிலும் இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்துள்ளது. இதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுகிறது. இந்த நகரம் அந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, தலைமுறைகளாகப் பேணி வளர்த்துள்ளது.

ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமமும், சுவாமி விவேகானந்தரின் நினைவுகளும் மைசூரின் பெருமைமிக்க பாரம்பரியத்தின் ஓர் அங்கமாகும். சிறிது நேரத்திற்கு முன்பு, சுவாமி விவேகானந்தர் மைசூரில் தங்கியிருந்தபோது சில காலம் தங்கிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்திற்கும் நான் சென்று வந்தேன். கர்நாடகத்தின் பல அறிஞர்களும் சிந்தனையாளர்களும் இந்த இடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். தேசியக் கவிஞர் குவெம்பு போன்ற மாமனிதர்கள் மைசூரில் வாழ்ந்த காலத்தில், அவருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமத்துடன் ஆழமான உறவு இருந்தது.

இன்று, சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு இளைஞர் மையம், அதாவது 'விவேக நினைவகம்' திறந்து வைக்கப்படுவதன் மூலம், இந்தப் பணிக்கு நாம் ஒரு புதிய பரிமாணத்தை அளித்து வருகிறோம். இதற்காக ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமத்திற்கும், அதனுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து அறிஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

ஒரு சாதாரண மனிதர் மகத்தான ஆளுமையாக உயர்வது ஒரே நாளில் நடக்கும் நிகழ்வு அல்ல. அதற்காக வாழ்க்கையில் எண்ணற்ற சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும். இடைவிடாத சாதனையிலும் தவத்திலும் ஈடுபட வேண்டும். தன்னையே அர்ப்பணித்து, தன்னையே உருக்கி வடிக்க வேண்டும். புகழ் பெற்ற பிறகு உலகமே ஒருவரின் பின்னால் நிற்கும். ஆனால், அவர் தவம் செய்து கொண்டிருக்கும் காலத்தில் அவரது மகத்துவத்தை உணர்வது எளிதல்ல. அந்தத் தவத்தின் நடுவே ஒரு சாதகரின் திறமையையும் உயர்வையும் உணர்ந்து, அவருக்கு துணையாக நிற்பவரும் அவரது வெற்றியில் பங்குகொள்பவராகவே மாறுகிறார்.

அதனால்தான், சகோதரர்களே, சகோதரிகளே, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் மைசூருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு, இளம் துறவியாக நாடு முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தபோது சுவாமி விவேகானந்தர் மைசூருக்கு வந்தார். அப்போது அவருக்கு இன்றுள்ள புகழ் இல்லை. ஆனால், அவரது சிந்தனைகள் அப்போதே உயர்ந்தவையாக இருந்தன. அந்த மகத்துவத்தை உணர்ந்து அவருக்கு ஆதரவாக நின்றவர்களில் முக்கியமானவர் அன்றைய மைசூர் மகாராஜா. பின்னர் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோது, அன்றைய மைசூர் மகாராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், மகாராஜா தனக்கு அளித்த உதவியையும் ஆதரவையும் சுவாமி விவேகானந்தரே நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மிக உணர்வை முழுமையாக உள்வாங்கியவர். “பிறர் நலனுக்காக வாழ்பவனே உண்மையில் வாழ்கிறான்” என்று கூறும் நம் சாஸ்திரங்களின் உயர்ந்த போதனையை அவர் தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர். அந்த உயரிய கொள்கையையே வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்ட மைசூரிலுள்ள இந்த ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமம், கடந்த ஆண்டு தனது நூறாவது ஆண்டை நிறைவு செய்தது. கல்வி, மருத்துவம் போன்ற மக்கள் நலப் பணிகளாக இருந்தாலும், இயற்கைப் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளாக இருந்தாலும், ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமம் சுவாமி விவேகானந்தரின் சேவை மரபை தொடர்ந்து உயிர்ப்புடன் காத்து வருகிறது. 'விவேக நினைவகம்' ஆன்மிக உயர்வை நாடும் சாதகர்களுக்கும் பக்தர்களுக்கும் ஒரு புனித யாத்திரைத் தலமாக அமையும் என்று நான் நம்புகிறேன். சுவாமி விவேகானந்தரின் வாழ்வுச் செய்தி, “சிவனை உணர்ந்து உயிர்களுக்கு சேவை செய்வதே இறைவனுக்குச் சேவை செய்வதாகும்” என்பதுதான். அதனால்தான் இந்த விவேகானந்தர் நினைவகத்தில், தங்களுடைய சொந்த இன்பத் துன்பங்களை விட சமுதாயத்தின் நலனையும், நாட்டின் முன்னேற்றத்தையும், ஏழை எளிய மக்களின் துயரத்தையும் மேலாகக் கருதும் இளைஞர்களை உருவாக்க வேண்டும். “நாடே முதன்மை” என்பதையே உயர்ந்த வாழ்வுக் கொள்கையாகக் கொண்டு, பாரதத் தாய்க்குச் சேவை செய்வதையே தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாக ஏற்றுக் கொள்ளும் இளைஞர்களை இங்கு உருவாக்க வேண்டும்.

நண்பர்களே,

நாட்டை வலிமையாகக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான அடித்தளம் இளைஞர்களின் கல்விதான் என்று சுவாமி விவேகானந்தர் நம்பினார். உலகின் பல நாடுகள் தங்களுடைய இளைஞர்களுக்கு எவ்வாறு கல்வி அளிக்கின்றன என்பதை அவர் நேரில் கண்டு அறிந்திருந்தார். ஆனால், அந்தக் காலத்தில் இந்தியா காலனி ஆட்சியின் கீழ் இருந்தது. அதனால், இந்திய இளைஞர்களும் அடிமைத்தனத்தின் சங்கிலிகளில் கட்டுண்டு கிடந்தனர். அந்த நிலையிலிருந்து இன்று வரை இந்திய இளைஞர்கள் மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளனர். ஒருகாலத்தில் அடிமைத்தனத்தின் சங்கிலிகளில் இருந்த இந்திய இளைஞர்களே, இன்று உலகின் முன்னேற்றத்திற்கு புதிய வேகத்தை அளித்து வருகின்றனர். இன்று உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. அதற்குக் காரணம் யார்? இந்திய இளைஞர்களின் திறமையும் உழைப்பும்தான். இன்று உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய புத்தொழில் நிறுவனங்களின் சூழலை இந்தியா உருவாக்கி யுள்ளது. அதற்குக் காரணம் யார்? இந்திய இளைஞர்களின் திறமையும் உழைப்பும்தான். இன்று உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய கைப்பேசி உற்பத்தி நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. அதற்குக் காரணம் யார்? இந்திய இளைஞர்களின் திறமையும் உழைப்பும்தான். இன்று இந்தியாவில் உருவாக்கப்பட்ட மின்னணு தொழில்நுட்பத் தீர்வுகள் உலகின் பல நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. அதற்குக் காரணம் யார்? இந்திய இளைஞர்களின் திறமையும் உழைப்பும்தான். இன்று செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா புதிய பயணத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறது. அதற்குக் காரணம் யார்? இந்திய இளைஞர்களின் திறமையும் உழைப்பும்தான். இன்று செயற்கை நுண்ணறிவு, ஆழ்ந்த தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளில் இந்தியா புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது. அதற்குக் காரணம் யார்? இந்திய இளைஞர்களின் திறமையும் உழைப்பும்தான்.

சமீபத்தில், இந்திய இளைஞர்கள் விண்வெளித் துறையில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியதை நாம் அனைவரும் பார்த்தோம். முதல் முறையாக, இந்திய இளைஞர்கள் உருவாக்கிய தனியார் நிறுவனத்தின் ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தது. இன்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், இந்திய இளைஞர்கள் தங்களுடைய திறமையையும் ஆற்றலையும் உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மைச் சுற்றி நாம் காண்பது என்ன? மிகச் சிறிய தொழில் செய்து வரும் ஒரு இளைஞர்கூட இந்தியாவின் மின்னணு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறார். முத்ரா கடன் திட்டத்தின் மூலம் புதிய தொழில்களைத் தொடங்கி முன்னேறுகிறார். நாட்டில் புத்தொழில் புரட்சிக்கு தலைமை தாங்குகிறார். “தற்சார்பு இந்தியா” இயக்கமாக இருந்தாலும், “இந்தியாவில் உருவாக்குவோம்” என்ற இயக்கமாக இருந்தாலும், அவற்றின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது இந்திய இளைஞர்களின் ஆற்றல்தான்.

நண்பர்களே,

எந்த ஒரு நாட்டிலும் இளைஞர்களின் திறமை, அந்த நாட்டின் வலிமையாக மாற வேண்டுமெனில், அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். சரியான வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும். தங்கள் சொந்த மண்ணிலேயே பெரிய கனவுகளைக் காணவும், அவற்றை நனவாக்கும் தன்னம்பிக்கையும் கிடைக்க வேண்டும். இந்தப் பணியில் நமது கல்வி நிறுவனங்கள் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. இன்று இந்தியாவில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சுமார் 14 ஆயிரம் புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 9 புதிய இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள், 7 புதிய இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், 13 புதிய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று நாட்டில் மருத்துவப் பட்டப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் 823 ஆக அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

ஒருபுறம் கல்விக்கான அடிப்படை வசதிகளை நவீனப்படுத்தி வருகிறோம். அதே நேரத்தில், இன்றைய காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி முறையையும் மாற்றி அமைத்து வருகிறோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய இளைஞர்களை உருவாக்குவதற்கான வலிமையான கருவியாக புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவெடுத்து வருகிறது.

நண்பர்களே,

பள்ளிக் கல்வித் துறையிலும் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதமரின் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கல்வி என்பது புத்தகங்களுக்குள் மட்டும் சுருங்கிவிடாமல், மாணவர்களிடம் புதுமை சிந்தனையும் அறிவியல் மனப்பான்மையும் வளர வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடல் புதுமைக் கண்டுபிடிப்பு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சமத்துவமும் அவசியம் என்று சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தினார். கல்வியில் பாகுபாடு இருக்கக் கூடாது; வாய்ப்புகளிலும் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதே இன்று நம் நாட்டின் நோக்கமாக உள்ளது. இன்று மகளிரும் சைனிக் பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்கின்றனர். தேசிய பாதுகாப்பு அகாதமியிலும் அவர்கள் நாட்டுக்காகப் பணியாற்றி வருகின்றனர். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியைத் தாய்மொழியிலேயே கற்கும் வசதியும் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மொழியின் அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலை படிப்படியாக நீங்கி வருகிறது.

நண்பர்களே,

இளைஞர்கள் ஆரோக்கியமாகவும், ஒழுக்கத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதும் மிகவும் அவசியம். விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் இந்த மூன்று பண்புகளும் இளைஞர்களிடம் இயல்பாகவே வளர்கின்றன. அதனால்தான் இன்று விளையாட்டுத் துறையும் நாட்டை வலுப்படுத்தும் முக்கியமான சக்தியாகக் கருதப்படுகிறது. 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் போன்றவை, நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த மேடையாக அமைந்துள்ளன. இன்று நாடு முழுவதும் நவீன விளையாட்டு உள்கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது. 'கேலோ இந்தியா' மையங்கள் மூலம் விளையாட்டு வசதிகள் அதிகரித்து வருகின்றன. கிராமங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை புதிய திறமையாளர்கள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

நண்பர்களே,

இன்று இந்த முயற்சிகளின் பலன்கள் தெளிவாகக் கண்முன்னே தெரிகின்றன. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சாதனைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. நமது வீரர், வீராங்கனைகள் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். குறிப்பாக நமது மகளிர், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தி வருகின்றனர்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தரைப் போலவே, இந்த ‘விவேகானந்தர் நினைவகம்’ நம்மை உயர்ந்த இலட்சியத்திற்காக உழைக்கத் தூண்டுகிறது. இத்தகைய புனிதமான இடத்தில், நமது இளைஞர்களிடம் சில வேண்டுகோள்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரங்களில் ஒன்றாக மைசூர் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. அதற்காக இங்குள்ள மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல தருணத்தில் நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி ஏற்கலாமா? இனி வரும் காலங்களிலும் தூய்மையைப் பேணும் நமது உறுதியை இன்னும் வலுப்படுத்துவோம். இங்குள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்போம். சுற்றுச்சூழலைக் காப்பதற்கான உறுதிமொழிகளை ஏற்றுக் கொள்வோம். ஒவ்வொரு துளி நீரையும் பாதுகாக்கும் பணியில் ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுவோம்.

நண்பர்களே,

இன்று ‘வால்மீகி இராமாயணம்’ நூலின் கன்னட மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கன்னட மொழியைப் பற்றியும் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். கர்நாடகம் மகத்தான எழுத்தாளர்களும் கவிஞர்களும் பிறந்த மண்ணாகும். கன்னட மொழி பேசும் மக்கள் வாசிப்புப் பழக்கத்திற்காக எப்போதும் போற்றப்பட்டவர்கள். இந்த கைப்பேசி யுகத்திலும் அந்த உயர்ந்த பண்பை நாம் இன்னும் அதிகமாக வளர்க்க வேண்டும். இளம் தலைமுறையினர் கன்னட இலக்கியத்துடன் ஆழமாக இணைவதற்கு நாம் அனைவரும் ஊக்கமளிக்க வேண்டும்.

நண்பர்களே,

மைசூர் பட்டுப் பொருட்கள், சந்தனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றிற்காக உலகம் முழுவதும் புகழ்பெற்றது. நாம் யாருக்காவது பரிசு வழங்கும்போது, அது இந்தியக் கைவினைஞர்களின் உழைப்பால் உருவான பொருளாக இருக்க வேண்டும் என்ற உறுதியை ஏற்போமா? இதன் மூலம் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க முடியும். அதே நேரத்தில், இன்னொரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும் நாம் துணை நிற்க முடியும்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு இன்றைய தலைமுறையின் தோள்களில் இருக்கிறது. அந்தப் பயணத்திற்கு ‘விவேகானந்தர் நினைவகம்’ ஒரு வலிமையான ஊக்க சக்தியாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மீண்டும் ஒருமுறை, இங்கு திரண்டுள்ள மதிப்பிற்குரிய துறவிகளுக்கும், என் குரு சகோதரர்களுக்கும், மைசூர் மக்களுக்கும் என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு, என் உரையை நிறைவு செய்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'BRICS 2026 becomes major Bharat achievement for PM Narendra Modi'

Media Coverage

'BRICS 2026 becomes major Bharat achievement for PM Narendra Modi'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 15, 2026
September 15, 2026

A Mandate of Performance: Civic Wins, IPO Surge and Neighbourly Power Reflect Faith in PM Modi’s Leadership