நமது அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சிற்பி பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்றைய நாள், நம் அனைவருக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிக முக்கியமான நாளாமாகும்: பிரதமர்
இன்று ஹரியானா மாநிலத்தில் இருந்து அயோத்தி தாமுக்கு விமான சேவை தொடங்கியுள்ளது. அதாவது, தற்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித பூமியான ஹரியானா, பகவான் ஸ்ரீ ராமர் நகரத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது: பிரதமர்
மத்திய அரசு போக்குவரத்து இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்துவரும் அதே வேளையில், ஏழைகளின் நலன், சமூக நீதியையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது: பிரதமர்

வணக்கம்!

பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க என்று நான் சொல்வேன்.. நீங்கள் எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள்..

பாபாசாகேப் அம்பேத்கர், வாழ்க! வாழ்க!

பாபாசாகேப் அம்பேத்கர், வாழ்க! வாழ்க!

பாபாசாகேப் அம்பேத்கர், வாழ்க! வாழ்க!

ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு முரளிதர் மொஹல் அவர்களே, ஹரியானா அரசின் அனைத்து அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே,

வீரம் செறிந்த ஹரியானா மக்களுக்கு வணக்கம்! ராம் ராம்!

சிறந்த வீரர்கள்.. சிறந்த சகோதரத்துவம், இதுதான் ஹரியானாவின் அடையாளம்!

 எங்களை ஆசீர்வதிக்க நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்துள்ளீர்கள். மக்களாகிய உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

 

நண்பர்களே

ஹிசாரில் எனக்கு பல நினைவுகள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி எனக்கு ஹரியானாவின் பொறுப்பை வழங்கியபோது, நான் இங்கு பல சகாக்களுடன் நீண்ட காலம் பணியாற்றி உள்ளேன். இந்த சகாக்கள் அனைவரின் கடின உழைப்பு ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது. இன்று வளர்ந்த ஹரியானா - வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி பிஜேபி முழு தீவிரத்துடன் செயல்படுவதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.

நண்பர்களே,

இன்று நம் அனைவருக்கும், நாடு முழுமைக்கும், குறிப்பாக தலித்துகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும், சுரண்டப்பட்டவர்களுக்கும் மிக முக்கியமான நாள். இது அவர்கள் வாழ்வில் இரண்டாவது தீபாவளி. இன்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாள். அவரது வாழ்க்கை, அவரது போராட்டம், அவரது வாழ்க்கைச் செய்தி ஆகியவை நமது அரசின் 11 ஆண்டுகால பயணத்தின் உத்வேகம் அளிக்கும் தூணாக மாறியிருக்கின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு கொள்கையும் பாபாசாகேப் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வஞ்சிக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சுரண்டப்படுவோர், ஏழைகள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, அவர்களின் கனவுகளை நனவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இதற்கு, தொடர்ச்சியான வளர்ச்சி, விரைவான வளர்ச்சி என்பதுதான் பிஜேபி அரசின் தாரக மந்திரம்.

நண்பர்களே,

இந்த மந்திரத்தைப் பின்பற்றி ஹரியானாவில் இருந்து அயோத்திதாமுக்கு இன்று விமான சேவை புறப்பட்டுள்ளது. அதாவது, இப்போது ஸ்ரீ கிருஷ்ணரின் புனித பூமியானது ராமரின் நகரத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அக்ராசென் விமான நிலையத்திலிருந்து வால்மீகி விமான நிலையத்திற்கு இப்போது நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. மிக விரைவில் மற்ற நகரங்களுக்கும் விமான சேவைகள் இங்கிருந்து தொடங்கும். இன்று ஹிசார் விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஹரியானாவின் விருப்பங்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான தொடக்கம் இதுவாகும். இந்தப் புதிய தொடக்கத்திற்காக ஹரியானா மக்களை நான் வாழ்த்துகிறேன்.

 

நண்பர்களே,

எளிய மக்களும் விமானத்தில் பறப்பார்கள் என்ற வாக்குறுதி நாடு முழுவதும் நிறைவேறுவதை நாங்கள் காண்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர். பல புதிய விமான நிலையங்களை நாங்கள் கட்டியுள்ளோம். 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. 70 ஆண்டுகளில் 74 ஆக அதன் எண்ணிக்கை இருந்த நிலையில், இப்போது நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 150-ஐத் தாண்டியுள்ளது. நாட்டின் கிட்டத்தட்ட 90 விமான நிலையங்கள் உடான் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. உடான் திட்டத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. மக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்வதால், ஆண்டுதோறும் விமானப் பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது. நமது விமான நிறுவனங்களும் சாதனை எண்ணிக்கையாக இரண்டாயிரம் புதிய விமானங்களை ஆர்டர் செய்துள்ளன. மேலும் புதிய விமானங்கள் எவ்வளவு அதிகமாக வருகிறதோ, அவ்வளவு வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும். அது விமானிகளாக இருந்தாலும் சரி, விமானப் பணிப்பெண்களாக இருந்தாலும் சரி. நூற்றுக்கணக்கான புதிய சேவைகளும் உள்ளன. ஒரு விமானம் பறக்கும்போது, பல ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோன்ற பல சேவைகளால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், விமானங்களின் பராமரிப்பு தொடர்பான ஒரு பெரிய துறையும் எண்ணற்ற வேலைகளை உருவாக்கும். ஹிசார் விமான நிலையம் ஹரியானா இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய உச்சத்தை கொடுக்கும்.

நண்பர்களே,

ஒருபுறம் எங்கள் அரசு போக்குவரத்து இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மறுபுறம் இது ஏழைகளின் நலன், சமூக நீதியை உறுதியும் செய்கிறது. இதுவே பாபாசாகேப் அம்பேத்கரின் கனவாக இருந்தது. இதுதான் நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் விருப்பம். இது நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தவர்களின் கனவாக இருந்தது. ஆனால் பாபாசாகேப் அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்ததை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. பாபாசாகேப் உயிருடன் இருந்தவரை காங்கிரஸ் அவரை அவமானப்படுத்தியது. அவர் இரண்டு முறை தேர்தலில் தோல்வியடைய நேர்ந்தது. ஒட்டுமொத்த காங்கிரஸ் அரசும் அவரை அவமதிப்பதில் ஈடுபட்டது. அவரை இந்த அமைப்பில் இருந்து விலக்கி வைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டது. பாபாசாகேப் நம்மிடையே இல்லாத காலத்தில், அவரது நினைவை அழிப்பதற்கும்கூட காங்கிரஸ் முயன்றது. பாபாசாகேப்பின் கருத்துக்களை நிரந்தரமாக அழிக்க முயன்றது. அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக அம்பேத்கர் திகழ்ந்தார்.  அம்பேத்கர் சமத்துவத்தைக் கொண்டுவர விரும்பினார். ஆனால் காங்கிரஸ் நாடு முழுவதும் வாக்கு வங்கி என்ற வைரஸைப் பரப்பியது.

நண்பர்களே,

ஒவ்வொரு ஏழையும், வறிய ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் வாழ வேண்டும், தலை நிமிர்ந்து வாழ வேண்டும், அவர்களும் கனவு காண வேண்டும், தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். ஆனால் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களை இரண்டாந்தர குடிமக்களாக உருவாக்கியது. காங்கிரஸின் நீண்ட ஆட்சியின் போது, காங்கிரஸ் தலைவர்களின் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் சென்றது. ஆனால் கிராமங்களில் குழாய் வழிக் குடிநீர் இல்லை. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், கிராமங்களில் 16 சதவீத வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இருந்தது. கற்பனை செய்து பாருங்கள், 100 வீடுகளில் 16 வீடுகள் மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது! இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்? இதனால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதுதான் எங்களின் ஒரே கவலையாக இருந்தது. இன்று தெருத் தெருவாகச் சென்று எங்களுக்கு எதிராக சொற்பொழிவாற்றுபவர்கள், எனது எஸ்சி, எஸ்டி, ஓபிசி சகோதரர்களின் வீடுகளுக்காவது தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். எங்கள் அரசு 6 முதல் 7 ஆண்டுகளில் 12 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கியுள்ளது. இப்போது, கிராமங்களில் 80 சதவீத வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. அதாவது முன்பு 100-ல் 16 வீடுகள், இப்போது 100-ல் 80 வீடுகளில் குழாய் நீர் உள்ளது. பாபாசாகேப்பின் ஆசியுடன் நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரை வழங்குவோம். கழிப்பறைகள் இல்லாத நிலையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிக மோசமான நிலையில் இருந்தனர். எங்கள் அரசு 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டி, ஏழைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்கியுள்ளது.

நண்பர்களே,

காங்கிரஸ் ஆட்சியின் போது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மக்களுக்கு வங்கிகளின் கதவுகள் கூட திறக்கப்படவில்லை. காப்பீடு, கடன்கள், உதவி, இவை அனைத்தும் ஒரு கனவு. ஆனால் இப்போது, ஜன் தன் கணக்குகளின் மிகப்பெரிய பயனாளிகள் எனது எஸ்சி, எஸ்டி, ஓபிசி சகோதர சகோதரிகள். இன்று நமது எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் பெருமையுடன்  ரூபே அட்டைகளை வெளியே எடுத்துக் காட்டுகிறார்கள். பணக்காரர்களின் பாக்கெட்டுகளில் இருந்த ரூபே அட்டைகள், இப்போது ஏழைகளால் காட்டப்படுகின்றன.

 

நண்பர்களே,

காங்கிரஸ் நமது புனிதமான அரசியலமைப்பை அதிகாரத்தைப் பெறுவதற்கான ஆயுதமாக மாற்றியது. காங்கிரஸ் அதிகார நெருக்கடியைக் கண்ட போதெல்லாம், அவர்கள் அரசியலமைப்பை நசுக்கினர். நெருக்கடி நிலையின் போது எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் சாசனத்தை காங்கிரஸ் நசுக்கியது.

நண்பர்களே,

நமது அரசியல் சாசனம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதா இல்லையா? அவர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கான வசதிகள் கிடைக்கத் தொடங்கியதா? இல்லையா? என்பதைப் பற்றி காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை.

நண்பர்களே,

 காங்கிரசின்  மோசமான கொள்கைக்கு மிகப்பெரிய சான்று வக்பு சட்டம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, வக்பு சட்டம் 2013 வரை அமலில் இருந்தது. ஆனால் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக, திருப்திப்படுத்தும் அரசியலுக்காக, வாக்கு வங்கி அரசியலுக்காக, 2013 ஆம் ஆண்டின் இறுதியில்,  பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வக்பு சட்டத்தை காங்கிரஸ் அவசர அவசரமாக திருத்தியது. முஸ்லிம்களின் நலன் கருதியே இதைச் செய்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.  அவர்களின் நோக்கம் ஒருபோதும் யாருக்கும் நன்மை செய்வதாகவோ, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதாகவோ இருந்ததில்லை. இதுதான் காங்கிரஸைப் பற்றிய சிறந்த உண்மை.

நண்பர்களே,

2014-ம் ஆண்டுக்குப் பிறகு, பாபாசாகேப் அம்பேத்கரின் உத்வேகத்தை வரும் தலைமுறையினரிடையே பரப்ப எங்கள் அரசு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தது. நாட்டிலும் உலகிலும் பாபாசாகேப் வாழ்ந்த இடங்கள் அனைத்தும் முன்பு புறக்கணிக்கப்பட்டு

இருந்தன. அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்கள், அம்பேத்கருடன் தொடர்புடைய ஒவ்வொரு இடத்தையும் அவமதித்துள்ளனர், அவரை வரலாற்றிலிருந்து அழிக்க முயன்றுள்ளனர்.  எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தவுடன், பாபாசாகேப் அம்பேத்கர் தொடர்புடைய அனைத்து இடங்களையும் நாங்கள் மேம்படுத்தினோம். இவை பஞ்சதீர்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

காங்கிரஸ் கட்சியினர்  பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் சவுத்ரி சரண் சிங் ஜி ஆகிய இந்த இரண்டு சிறப்பு வாய்ந்தவர்களுக்கு பாரத ரத்னாவை வழங்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மத்தியில் பிஜேபி ஆதரவுடன் ஆட்சி அமைந்தபோது பாபாசாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே நேரத்தில், சவுத்ரி சரண் சிங் ஜிக்கு பாரத ரத்னா விருதை பிஜேபி அரசு வழங்கியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

 

நண்பர்களே,

வளர்ந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை ஹரியானா பலப்படுத்தும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. விளையாட்டு அல்லது விவசாயம் என எதுவாக இருந்தாலும், ஹரியானா உலகம் முழுவதும் அதன் நறுமணத்தை தொடர்ந்து பரப்பும். ஹரியானாவின் எனது மகன்கள், மகள்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தப் புதிய விமான நிலையம் ஹரியானாவின் கனவுகளை நிறைவேற்ற உத்வேகம் அளிக்கும். மேலும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன், வாழ்த்துகள்!

 

பாரத் மாதா கீ ஜெ! பாரத் மாதா கீ ஜெ! பாரத் மாதா கீ ஜெ!

மிக்க நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How NPS transformed in 2025: 80% withdrawals, 100% equity, and everything else that made it a future ready retirement planning tool

Media Coverage

How NPS transformed in 2025: 80% withdrawals, 100% equity, and everything else that made it a future ready retirement planning tool
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 20, 2025
December 20, 2025

Empowering Roots, Elevating Horizons: PM Modi's Leadership in Diplomacy, Economy, and Ecology