புதிதாகப் பணிகளில் சேர்க்கப்பட்ட சுமார் 70,000 பேருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை காலை 10.30 மணி அளவில் காணாலி மூலம் நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்துவார்.
இந்த வேலைவாய்ப்பு மேளா நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பணிகளில் சேருவார்கள். நிதிச்சேவைத் துறை, அஞ்சல்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அணுசக்தித்துறை, ரயில்வே அமைச்சகம், கணக்கு மற்றும் தணிக்கைத்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தப் பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
வேலை உருவாக்கம் என்னும் பிரதமரின் உயர் முன்னுரிமைத் திட்டத்தை நிறைவேற்றுவதன் ஒரு படியாக இந்த வேலைவாய்ப்பு மேளா நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு மேளா, மேலும் வேலை உருவாக்கத்திற்கு உந்துசக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இளைஞர்களுக்கு அதிகாரமளித்து, தேசிய வளர்ச்சியில் பங்கேற்கும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை இது வழங்குகிறது.
புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் ஆன்லைன் தளமான கர்மயோகி பிராரம்ப் மூலம் தங்களுக்குத் தாங்களே பயிற்சி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த ஐ-காட் கர்மயோகி தளத்தில் 400-க்கும் மேற்பட்ட ஈ கற்றல் வகுப்புகள் உள்ளன.


