பசுமை வளர்ச்சி குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான முதல் வலைதள கருத்தரங்கில் பிப்ரவரி 23-ஆம் தேதி காலை 10 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை சிறப்பாக அமல்படுத்துவதற்கு தேவையான கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட உள்ள 12 தொடர் வலைதள கருத்தரங்குகளில் இது முதலாவதாகும்.
மத்திய எரிசக்தி அமைச்சகம் நடத்தும் இந்த கருத்தரங்கில் பசுமை வளர்ச்சியின் எரிசக்தி சாராத மற்றும் எரிசக்தி சார்ந்த விஷயங்களின் பங்கு குறித்து விவாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களின் அமைச்சர்கள், செயலாளர்களுடன் மாநில அரசு, தொழில்துறை, கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அடங்கிய பங்குதாரர்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்வார்கள்.
பசுமை வளர்ச்சி என்பது 2023-24 மத்திய நிதிநிலை அறிக்கையின் ஏழு முக்கிய முன்னுரிமைகளுள் ஒன்று. இது, பசுமை தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை மற்றும் நிலையான எரிசக்தி ஆகியவற்றுக்கு வழிவகை செய்கிறது. இது தவிர பசுமை சார்ந்த வேலைவாய்ப்புகளையும் அதிகளவில் இது உருவாக்கும். பல்வேறு துறைகளில் ஏராளமான திட்டங்களையும் முன்முயற்சிகளையும் மேற்கொள்வது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


