நாட்டின் 79-வது சுதந்திர தினத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுக்கு உணர்ச்சிபூர்வமாக மரியாதை செலுத்தினார். அவர்கள் நாட்டின் சுயசார்புக்கான பயணத்தின் முதுகெலும்பு என்று அவர் கூறினார். காலனித்துவ ஆட்சி நாட்டை எவ்வாறு வறுமையில் ஆழ்த்தியது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் விவசாயிகளின் அயராத முயற்சிகள்தான் இந்தியாவின் தானியக் கிடங்குகளை நிரப்பி, நாட்டின் உணவு இறையாண்மையைப் பாதுகாத்தன என அவர் குறிப்பிட்டார். அவரது உரையில் இந்திய விவசாயத்தின் எதிர்காலத்திற்கான தெளிவான பாதையுடன் மனமார்ந்த நன்றியுணர்வும் இணைந்திருந்தது.
விவசாயிகள் - பாரதத்தின் செழிப்பின் முதுகெலும்பு:
இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்களுக்கு நேரடியாக பயனளிக்கிறது என்று பிரதமர் கூறினார்.
கீழ்க்கண்ட அம்சங்களையும் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
* பால், பருப்பு வகைகள், சணல் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் .
* அரிசி, கோதுமை, பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளில் 2-வது இடம் .
* விவசாய ஏற்றுமதி தற்போது ₹4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
* பிராந்திய இடைவெளிகளை மேலும் நிரப்ப, மிகவும் பின்தங்கிய 100 விவசாய மாவட்டங்களை இலக்காகக் கொண்டு பிரதமரின் தன தானிய திட்டம் செயல்படுத்தப்படும்.
விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு, எப்போதும் பாதுகாப்புச் சுவராக தமது அரசு செயல்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தார்.


