பகிர்ந்து
 
Comments

ஒரு நாடு மற்றும் ஒரு குடும்பம் என்ற வகையில், நீங்களும் நாங்களும், சேர்ந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு நடைமுறை; அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக இருந்த ஒரு நடைமுறை இப்போது ஒழிக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் கண்ட கனவு, பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவு, சியாமபிரசாத் முகர்ஜி, அடல்ஜி மற்றும் கோடிக்கணக்கான குடிமக்கள் கண்ட கனவு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் புதிய காலம் தொடங்கியுள்ளது. இப்போது நாட்டில் அனைத்து குடிமக்களுக்குமான உரிமைகள் மற்றும் பொறுப்பேற்பு நிலைகள் ஒரே மாதிரியாகிவிட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

சில சமயங்களில் சமூக வாழ்வில் சில விஷயங்கள் சிக்கலாகி, அதுதான் நிரந்தரம் என்பது போல ஆகிவிடுகின்றன. அது மெத்தன உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. எதுவுமே மாறப் போவதில்லை என்று நினைப்பு ஏற்பட்டுவிடுகிறது. அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு குறித்த விஷயத்திலும் அதுபோன்ற உணர்வு நிலவியது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்படவோ அல்லது விவாதிக்கப்படவோ இல்லை. அரசியல் சட்டத்தின் 370வது பிரிவின் மூலமாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைத்தன என்பதை யாராலும் பட்டியலிட முடியவில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.

சகோதர சகோதரிகளே,

அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம், பயங்கரவாதம், உறவினர்களுக்கு ஆதரவான கொள்கை மற்றும் பெருமளவு ஊழல் என்பதைத் தவிர வேறு எதையும் தரவில்லை. சில மக்களிடம் உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கு இந்த இரு சட்டப் பிரிவுகளையும் ஆயுதங்களாக பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த சுமார் 30 ஆண்டுகளில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் வளர்ந்திருக்க வேண்டிய அளவுக்கு அங்கு வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியாமல் போனது. நடைமுறையில் உள்ள இந்தக் குறைபாட்டை நீக்கிய பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களின் நிகழ்காலம் நல்லதாக மாறுவது மட்டுமின்றி, எதிர்காலமும் வளமிக்கதாக இருக்கும்.

நண்பர்களே,

எந்த அரசு அதிகாரத்தில் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றுவதன் மூலம் நாட்டின் நன்மைக்காகப் பாடுபடுகிறது. எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி அதிகாரத்தில் இருக்கிறது என்ற வித்தியாசம் இல்லாமல், இந்தப் பணி ஒருபோதும் நிற்பது கிடையாது. சட்டங்கள் உருவாக்கப்படும் போது நாடாளுமன்றத்திலும், வெளியிலும் நிறைய விவாதங்கள் நடைபெறும். நிறைய விவாதங்களும் சிந்தனை உரைகளும் இடம் பெறும். அதன் முக்கியத்துவம் மற்றும் தாக்கம் குறித்து தீவிரமான வாதங்கள் முன்வைக்கப்படும். இந்த நடைமுறைகளுக்குப் பிறகு உருவாக்கப்படும் சட்டங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை தரக் கூடியவையாக இருக்கும். இருந்தபோதிலும் நாடாளுமன்றத்தில் நிறைய சட்டங்கள் உருவாக்கப்படும் நிலையில், நாட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு உருவாக்கப் படுவதில்லை என்பது புரிந்து கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. முந்தைய அரசுகள் கூட ஒரு சட்டத்தை உருவாக்கும் போது, அதே சட்டம் ஜம்மு காஷ்மீரிலும் அமல் செய்யப்படும் என்று கூறிக் கொள்ள முடியாது.

இந்திய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களின் பயன்களை ஜம்மு காஷ்மீரில் உள்ள 1.5 கோடிக்கும் அதிகமான மக்களால் பெற முடியாமல் போனது. நாட்டின் பிற பகுதிகளில் குழந்தைகளுக்குக் கல்வி உரிமை அமலில் உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் இந்த உரிமை மறுக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். பிற மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு உள்ள உரிமைகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மறுக்கப் படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் துப்புரவுப் பணியாளர்களுக்காக – சபாய் கர்மாச்சாரி சட்டம் – நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் துப்புரவுப் பணியாளர்களுக்கு இதன் பலன் மறுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் தலித்களுக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அதுபோன்ற எந்தச் சட்டத்தையும் ஜம்மு காஷ்மீரில் அமல் செய்ய முடியவில்லை. பாடுபட்டு உழைக்கும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உருவாக்கப் பட்டு அனைத்து மாநிலங்களிலும் அமல் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இந்தச் சட்டம் தாள் அளவில் மட்டுமே உள்ளது. மற்ற மாநிலங்களில் மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள் தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு பெற்றுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் அதுபோன்ற எதையும் அவர்கள் கேள்விப்பட்டதே கிடையாது.

நண்பர்களே,

அரசியல் சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35-ஏ நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பாதிப்புகளில் இருந்து ஜம்மு காஷ்மீர் விரைவில் வெளியே வந்துவிடும் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு உள்ளது.

சகோதர சகோதரிகளே,

புதிய நடைமுறையின்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாநில அரசு அலுவலர்கள், மற்ற மாநிலங்களில் உள்ள காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாநில அரசு அலுவலர்கள் பெறக்கூடிய அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை தரும். யூனியன் பிரதேசங்களில், எல்.டி.சி., வீட்டு வாடகை அலவன்ஸ், பிள்ளைகளுக்குக் கல்வி உதவித் தொகை சுகாதாரத் திட்டங்கள் போன்றவற்றுக்கு அரசு நிதி வசதிகள் அளிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலர்களுக்கு வழங்கப் படுவதில்லை. ஆய்வுகள் செய்த பிறகு ஜம்மு காஷ்மீர் அரசு மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கும் இந்த வசதிகள் அளிக்கப்படும்.

நண்பர்களே, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் விரைவில் நடவடிக்கைகள் தொடங்கப்படும். உள்ளூர் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை அளிப்பதாக இது இருக்கும். அத்துடன் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஊக்கம் தரப்படும். மேலே குறிப்பிட்டவற்றைத் தவிர, உள்ளூர் இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்காக ராணுவமும், துணை நிலை ராணுவமும் ஏற்பாடுகளைச் செய்யும். நிறைய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தை அரசு அமல் செய்யும். ஜம்மு காஷ்மீரில் பெருமளவு வருவாய் இழப்பு உள்ளது. இதன் தாக்கத்தைக் குறைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.

சகோதர சகோதரிகளே,

370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஆழ்ந்த சிந்தனையைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தை தானே வைத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த மாநிலம் ஆளுநர் ஆட்சியின் கீழ் வந்ததில் இருந்தே, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. நல்ல ஆட்சி நிர்வாகம் காரணமாக, கள அளவில் வளர்ச்சியைக் காண முடிந்துள்ளது. முன்பு கோப்புகளில் மட்டும் இடம் பெற்றிருந்த திட்டங்கள், இப்போது கள அளவில் அமல் செய்யப் பட்டுள்ளன. பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தில் புதிய பணி கலாச்சாரத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறோம். இதன் விளைவாக ஐ.ஐ.டி.யாக இருந்தாலும், ஐ.ஐ.எம். ஆக இருந்தாலும், எய்ம்ஸ் ஆக இருந்தாலும், பல்வேறு பாசனத் திட்டங்களாக அல்லது மின் திட்டங்கள் அல்லது ஊழல்தடுப்புப் பிரிவாக இருந்தாலும், அவற்றின் செயல்பாடுகளை விரைவுபடுத்த எங்களால் முடிந்துள்ளது. அது தவிர, போக்குவரத்து இணைப்புக்கு, சாலைகள் அல்லது புதிய ரயில் பாதைகள், விமான நிலையங்களை நவீனமாக்குதல் என அனைத்துமே துரிதப்படுத்தப் பட்டுள்ளன.

நண்பர்களே,

நமது நாட்டில் ஜனநாயகம் என்பது மிகவும் வலுவாக இருக்கிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரில் வாழும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் மக்களவைத் தேர்தல்களில் மட்டுமே வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்கள், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அவர்கள் 1947 பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்தவர்கள். இந்த அநீதி இப்படியே தொடர நாம் அனுமதிக்க வேண்டுமா?

நண்பர்களே,

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்னொரு முக்கியமான விஷயத்தைத் தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன். உங்களுடைய பிரதிநிதியை நீங்களே தேர்வு செய்வீர்கள், அவர் உங்களில் ஒருவராக இருப்பார். முன்பு இருந்ததைப் போலவே எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அடுத்து வரக் கூடிய அமைச்சரவை முன்பு இருந்ததைப் போலவே இருக்கும். முதல்வர்களும் முன்பிருந்ததைப் போலவே இருப்பார்கள்.

நண்பர்களே,

புதிய நடைமுறையின் கீழ், நாம் கூட்டாகச் சேர்ந்து ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் இல்லாத மாநிலமாக ஆக்கிடுவோம் என்று முழுமையாக நம்புகிறேன்.

பூலோக சொர்க்கமான – நமது ஜம்மு காஷ்மீர், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டிய பிறகு, ஒட்டுமொத்த உலகையே ஈர்க்கும். குடிமக்களின் வாழ்க்கை நிலை எளிதானதாக மாறும்போது, தடையின்றி தங்கள் உரிமைகளை மக்கள் பெறும்போது, மக்களுக்கு சாதகமாக ஆட்சி நிர்வாக அம்சங்கள் விரைவுபடுத்தப்படும் போது, மத்திய அரசின் கீழான நடைமுறையைத் தொடர்வதற்கான அவசியம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

சகோதர சகோதரிகளே,

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த வேண்டும், புதிய அரசு உருவாக்கப்பட வேண்டும், புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புகிறோம். உங்களுடைய பிரதிநிதிகளை முழுக்க நேர்மையான, வெளிப்படைத்தன்மையான சூழலில் நீங்கள் தேர்வு செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள் என ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப் பட்டதைப் போல, ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படும். கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும், வட்டார வளர்ச்சிக் கவுன்சில்களை, கூடிய சீக்கிரத்தில் உருவாக்க வேண்டும் என்று மாநில ஆளுநரை நான் வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே,

நான்கைந்து மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் நன்றாகப் பணியாற்றி வருவதை நான் நேரடியாகக் கவனித்தேன். சில மாதங்களுக்கு முன்பு நான் ஸ்ரீநகருக்குச் சென்றபோது, அவர்களுடன் நீண்டநேரம் உரையாடினேன். அவர்கள் டெல்லிக்கு வந்தபோது, என் இல்லத்தில் அவர்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடினேன். இந்த நண்பர்கள் மூலமாகத்தான் ஜம்மு காஷ்மீரில் கிராம அளவில் வளர்ச்சிப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி அளிப்பது அல்லது திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலமாக ஆக்கும் முயற்சி என அனைத்திலுமே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முக்கியப் பங்காற்றுகின்றனர். 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைப்பு முறையில் பணியாற்ற இந்த உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அவர்கள் அற்புதங்கள் செய்வார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதத்தை முறியடித்து புதிய நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். நல்ல ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத் தன்மை என்ற சூழலில் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்துடன் தங்களுடைய லட்சியங்களை ஜம்மு காஷ்மீர் மக்கள் எட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். நண்பர்களே, குடும்ப ஆட்சி காரணமாக ஜம்மு காஷ்மீரில் எந்த இளம் குடிமக்களுக்கும் தலைமைப் பொறுப்புக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது, என்னுடைய இந்த இளம் மக்கள் ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிக்கான தலைமையை ஏற்று, புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வார்கள். ஜம்மு காஷ்மீரில் தங்கள் பகுதியின் வளர்ச்சிக்கான பொறுப்பை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இளைஞர்கள், சகோதரிகள் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் மிகப் பெரிய சுற்றுலாத் தலங்களாக மாறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இதற்குத் தேவையான சூழ்நிலை, ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம், என அனைத்தும் கவனிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கு நாட்டு மக்கள் அனைவரின் ஆதரவும் தேவை. பாலிவுட் திரைப்படங்கள் எடுப்பதற்கு, விருப்பத்துக்குரிய மாநிலமாக காஷ்மீர் இருந்த காலம் உண்டு. அந்தக் காலத்தில், காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றால், படங்கள் தயாரிக்கப்படவில்லை என்பது அர்த்தமாக இருந்திருக்கலாம். இப்போது, ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பும்; இந்தியாவில் இருந்து மட்டுமல்ல, உலகெங்கும் இருந்து படப்பிடிப்புகளுக்கு இங்கே வருவார்கள். ஒவ்வொரு புதிய படத்துக்குமான படப்பிடிப்பு மூலம் காஷ்மீர் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறையினர் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறையினர் இங்கு முதலீடு செய்வது பற்றி, திரைப்படங்கள் எடுப்பது, தியேட்டர் மற்றும் மற்ற வசதிகளை உருவாக்குவது ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்வது பற்றி நிச்சயமாக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஜம்மு காஷ்மீரில் தொழில்நுட்பத்தை எப்படி பரவச் செய்வது என்பது பற்றி, தொழில்நுட்பம், நிர்வாகம் அல்லது தனியார் துறையினர் தங்களுடைய கொள்கைகளில் மற்றும் முடிவுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். டிஜிட்டல் தொடர்பு பலப்படுத்தப்படும் போது, பி.பி.ஓ. மையம், பொது சேவை மையங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் ஜம்மு காஷ்மீரில் நமது சகோதர சகோதரிகளின் வருமானம் பெருகி, வாழ்க்கை எளிதாகிவிடும்.

நண்பர்களே,

அரசு எடுத்திருக்கும் முடிவு விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இளைஞர்களுக்குப் பயன் தருவதாக இருக்கும். புதிய விளையாட்டு அகாடமிகள், புதிய விளையாட்டு அரங்கம், அறிவியல் பூர்வமான சூழ்நிலையில் பயிற்சி ஆகியவை தங்களுடைய திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டுவதற்கு இவர்களுக்கு உதவும். இளைஞர்களே, குங்குமப் பூவின் நிறமாக இருந்தாலும் அல்லது காபியின் மணமாக இருந்தாலும் அல்லது ஆப்பிளின் இனிப்பாக இருந்தாலும் அல்லது அத்தியின் சுவையாக இருந்தாலும் அல்லது மரப்பட்டைகளாக இருந்தாலும் லடாக்கின் இயற்கை விளைபொருட்களாக இருந்தாலும் அல்லது ஜம்மு காஷ்மீரின் மூலிகை மருந்துகளாக இருந்தாலும் இவை அனைத்துமே ஒட்டுமொத்த உலகிற்குமே தெரிவிக்கப்பட வேண்டும். உங்களுக்கு நான் ஓர் உதாரணம் சொல்கிறேன். லடாக்கில் – சோலோ – என்று ஒரு தாவரம் உள்ளது. உயரமான மலைப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கும், கடும் பனி நிறைந்த சிகரங்களில் பணியில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கும் இது சஞ்சீவினியைப் போன்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக்சிஜன் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளில் நோய்த் தடுப்பு ஆற்றலைப் பராமரிப்பதில் இந்தத் தாவரங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இந்த அபூர்வமான பொருட்கள் உலகிற்கு விற்பனை செய்யப்பட வேண்டாமா என நினைத்துப் பாருங்கள். எந்த இந்தியர் இதை விரும்பாமல் இருப்பார்கள்?

நண்பர்களே, ஒரு தாவரம் பற்றி மட்டுமே நான் குறிப்பிட்டேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஏராளமான தாவரங்கள், மூலிகைப் பொருட்கள் பரவிக் கிடக்கின்றன. அவையெல்லாம் அடையாளம் காணப்படும். அவற்றை விற்பனை செய்தால், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறுவார்கள். எனவே, இந்தத் தொழில் துறை, ஏற்றுமதி, உணவுப் பதப்படுத்தல் துறைகளுடன் தொடர்புள்ளவர்கள், இதில் ஆர்வம் காட்டி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை உலகெங்கும் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே, யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு, லடாக் மக்களின் வளர்ச்சி என்பது மத்திய அரசின் இயல்பான பொறுப்பாக மாறிவிட்டது. உள்ளூர் பிரதிநிதிகள், லடாக் மற்றும் கார்கில் வளர்ச்சிக் கவுன்சில் ஒத்துழைப்புடன், அனைத்து வளர்ச்சித் திட்டங்களின் பயன்களும் விரைவாக கிடைக்கச் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாக இருக்கும். லடாக் பகுதி ஆன்மிக சுற்றுலா, சாகச சுற்றுலா மற்றும் சூழலியல் சுற்றுலா மையமாக உருவாவதற்கு மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன. சூரியசக்தி மின் உற்பத்திக்கு உகந்த இடமாக லடாக் இருக்கும். இப்போது, லடாக் மக்களின் திறமைகள் பொருத்தமான வகையில் பயன்படுத்தப்படும். எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அங்கு உருவாக்கப்படும். லடாக் இளைஞர்களின் புதுமை சிந்தனைகள் இப்போது ஊக்குவிக்கப்படும். நல்ல கல்விக்கான புதிய கல்வி நிலையங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். மக்களுக்கு நல்ல மருத்துவமனைகள் கிடைக்கும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் உருவாக்கப்படும்.

நண்பர்களே,

ஜனநாயகத்தில் இந்த முடிவை சிலர் ஆதரிப்பார்கள், சிலர் எதிர்ப்பார்கள், அதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களுடைய ஆட்சேபங்களுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டவை எதுவாக இருந்தாலும், அவை குறித்து மத்திய அரசு கவனிக்கும், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்யும். அது நம்முடைய ஜனநாயகப் பொறுப்பு. ஆனால், தேசத்தின் நலனுக்கு உயர் முன்னுரிமை கொடுத்து அவர்கள் செயல்பட வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கு புதிய வழிகாட்டுதலை அரசு அளிக்க உதவியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். முன்வந்து நாட்டுக்கு உதவிடுங்கள்.

நாடாளுமன்றத்தில் யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை, மசோதாவுக்கு யார் ஆதரவு அளித்தார்கள், யார் ஆதரவு அளிக்கவில்லை என்ற உண்மைகளைக் கடந்து, ஜம்மு- காஷ்மீர் – லடாக் நலன் கருதி நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது. ஜம்மு – காஷ்மீர் – லடாக் மக்களுடைய கவலைகள் நம் எல்லோருடைய கவலைகளாக இருக்கும் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவிக்க நான் விரும்புகிறேன். இது 130 கோடி குடிமக்களின் கவலைகள். அவர்களுடைய மகிழ்ச்சி அல்லது துயரங்கள் மற்றும் துன்பங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. 370வது பிரிவு நீக்கம் என்பது உண்மையாகிவிட்டது. ஆனால், இப்போது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, இந்த வரலாற்று முக்கியத்துவமான நடவடிக்கையால் நடைபெற்றவை அனைத்தும் அவர்களால் தான் சாதிக்கப்பட வேண்டும்.

அங்குள்ள சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் வெகு சிலருக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகள் பொறுமையுடன் பதில் அளித்து வருகின்றனர். பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் பாகிஸ்தானின் சதிச் செயல்களை, ஜம்மு காஷ்மீர் தேசபக்தியாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கு, நல்ல வாழ்வு பெறுவதற்கான நியாயமான உரிமை உள்ளது. அவர்கள் குறித்து நாம் பெருமைப் படுகிறோம். படிப்படியாக சூழ்நிலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி, அவர்களுடைய தொந்தரவுகள் குறையும் என்று ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த இந்த நண்பர்களுக்கு இன்று நான் உறுதி அளிக்கிறேன்.

நண்பர்களே, ஈகைப் பெருவிழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈகைத் திருநாளை ஒட்டி அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஈகைத் திருநாளைக் கொண்டாடும்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஜம்மு – காஷ்மீருக்கு வெளியே வாழும் அந்த நண்பர்கள், ஈகைத் திருநாளைக் கொண்டாட தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வர விரும்பும் அந்த நண்பர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அரசு அளித்து வருகிறது.

நண்பர்களே, இன்று இந்தத் தருணத்தில், ஜம்மு – காஷ்மீர் மக்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நமது நண்பர்களுக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பகுதியில் சூழ்நிலைகளைக் கையாளும் நிர்வாக அதிகாரிகள், மாநில அலுவலர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் காவல் துறையினர் அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள். மாற்றங்கள் நிகழும் என்ற எனது நம்பிக்கையை அதிகரிப்பதாக உங்களுடைய இந்தத் தளராத ஊக்கம் இருக்கிறது.

சகோதர சகோதரிகளே,

நமது நாட்டின் கிரீடமாக ஜம்மு -காஷ்மீர் இருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்காக ஜம்மு – காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த தைரியமான பல புத்திரர்களும், புத்திரிகளும், உயிரைப் பணயம் வைத்து தியாகங்கள் செய்திருக்கிறார்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 1965 போரின் போது பாகிஸ்தானிய ஊடுருவல் குறித்து இந்திய ராணுவத்துக்குத் தகவல் அளித்தவர் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மவுல்வி குலாம் தின். அவருக்கு அசோகச் சக்கரா விருது வழங்கப்பட்டது. கார்கில் போரின் போது எதிரிகளை மண்ணைக் கவ்வ வைத்த லடாக் மாவட்டத்தைச் சேர்ந்த கர்னல் சோனம் வாங்சுங், அவருக்கு மகாவீர் சக்கரா விருது வழங்கப்பட்டுள்ளது. முக்கிய பயங்கரவாதி ஒருவரைக் கொன்ற ரஜோரியைச் சேர்ந்த ருக்சனா கவுசருக்கு கீர்த்தி சக்கரா விருது அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த வீரத் தியாகி அவுரங்கசீப், அவருடைய இரு சகோதரர்களும் ராணுவத்தில் சேர்ந்து இப்போது சேவையாற்றி வருகிறார்கள். இதுபோன்ற வீரம் மிக்க புத்திரர்கள், புத்திரிகளின் பட்டியல் மிகவும் நீளமானது. பல ஜம்மு – காஷ்மீர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஜவான்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிடும் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். நாட்டின் வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோரை நாம் இழந்திருக்கிறோம். அவர்கள் அனைவருமே அமைதியான, பாதுகாப்பான, வளமையான ஜம்மு – காஷ்மீரை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர்கள்.நாம், ஒன்றுபட்டு, இந்தக் கனவை நனவாக்க வேண்டும். நண்பர்களே! இந்த முடிவு ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் உடன் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவிகரமாக இருக்கும். பூமியில் இந்தப் பகுதியில் அமைதியும், வளமையும் ஏற்படும்போது, உலகம் முழுக்க அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இயல்பாகவே வலுப்பெறும்.

நமக்கு எவ்வளவு பலம், தைரியம் மற்றும் விருப்பம் உள்ளது என்பதை உலகிற்குக் காட்ட ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளை நான் கேட்டுக் கொள்கிறேன். புதிய இந்தியாவையும், புதிய ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கையும் உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.
மிக்க நன்றி.

பாரத மாதாவுக்கு வணக்கம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
Capital expenditure of States more than doubles to ₹1.71-lakh crore as of Q2

Media Coverage

Capital expenditure of States more than doubles to ₹1.71-lakh crore as of Q2
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 6, 2021
December 06, 2021
பகிர்ந்து
 
Comments

India takes pride in the world’s largest vaccination drive reaching 50% double dose coverage!

Citizens hail Modi Govt’s commitment to ‘reform, perform and transform’.