ஜூலை 23-24, 2025 அன்று இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வமாக விஜயம் செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று இங்கிலாந்து பிரதமர் மாண்புமிகு சர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார். பக்கிங்ஹாம்ஷையரின் செக்கர்ஸில் உள்ள இங்கிலாந்து பிரதமரின் இல்லத்திற்கு வந்த அவரை, பிரதமர் திரு ஸ்டார்மர் அன்புடன் வரவேற்றார். இரு தலைவர்களும் நேரடி சந்திப்பையும், பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ) கையெழுத்தானதை இரு பிரதமர்களும் வரவேற்றனர். இது விரிவான உத்திசார் கூட்டாண்மையை புதிய நிலைக்கு உயர்த்துவதோடு, இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் கணிசமாக மேம்படுத்தும். இரு தரப்பினரும் இரட்டை பங்களிப்பு மாநாட்டு பேச்சுவார்த்தையை நடத்தவும் ஒப்புக்கொண்டனர். இது சிஇடிஏ உடன் இணைந்து நடைமுறைக்கு வரும். போட்டித்தன்மையை ஊக்குவிப்பதன் மூலமும், வணிக நிறுவனங்களுக்கு வணிகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலமும் இரு நாடுகளிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் சேவைத் துறைக்கு இது உதவும். மூலதனச் சந்தைகள் மற்றும் நிதிச் சேவைகள் துறைகளில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பைக் குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, இந்தியாவின் முதல் சர்வதேச நிதிச் சேவை மையமான குஜராத்தில் உள்ள கிஃப்ட் நகரத்திற்கும், இங்கிலாந்தின் துடிப்பான நிதிச் சூழலுக்கும் இடையே அதிக தொடர்புகளை ஊக்குவிக்க, இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இருதரப்பு உறவின் முழு வரம்பையும் இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்து, இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035 ஐ ஏற்றுக்கொண்டனர். தொலைநோக்குப் பார்வை 2035 ஆவணம், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி, தொழில்நுட்பம், புதுமை, ஆராய்ச்சி மற்றும் கல்வி, பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, சுகாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உறவை வழிநடத்துவதன் மூலம் விரிவான உத்திசார் கூட்டாண்மையில் அதிக லட்சியத்தையும் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தையும் ஏற்படுத்தும்.
இரு நாடுகளிலும், உலக சந்தையிலும் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பாதுகாப்புப் பொருட்களின் கூட்டு வடிவமைப்பு, கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தியில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான பாதுகாப்பு தொழில்துறை செயல்திட்டத்தை இறுதி செய்ததையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். இரு நாடுகளின் ஆயுதப் படைகளின் வழக்கமான ஈடுபாட்டை வரவேற்ற அவர்கள், ஆழமடைந்து வரும் பாதுகாப்பு கூட்டாண்மையில் திருப்தி தெரிவித்தனர்.
புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதிகரித்துவரும் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர், மேலும் தொலைத்தொடர்பு, முக்கியமான கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுகாதார தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், மேம்பட்ட பொருட்கள் மற்றும் குவாண்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு முயற்சியை (டிஎஸ்ஐ) விரைவாக செயல்படுத்த அழைப்பு விடுத்தனர். டிஎஸ்ஐ, இன்று ஒரு வருடத்தை நிறைவு செய்தது.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஆறு இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து பணியாற்றி வருவதால், கல்வித் துறையில் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மையையும் இரு பிரதமர்களும் வரவேற்றனர். ஜூன் 16, 2025 அன்று குருகிராமில் தனது வளாகத்தைத் திறந்த சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவில் அதன் வளாகத்தைத் திறந்த முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாகும்.
கல்வி, கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், விளையாட்டு, வணிகம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் இங்கிலாந்தில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் மதிப்புமிக்க பங்களிப்பை இரு தரப்பினரும் பாராட்டினர். இந்த வாழும் பாலம், இந்தியா-இங்கிலாந்து உறவுகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய தூண் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மக்களுக்கு அளித்த வலுவான ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காக பிரதமர் திரு ஸ்டார்மருக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியளித்தனர். தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாக்கல், இரு சமூகங்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதைக் குறிப்பிட்ட அதே வேளையில், அச்சுறுத்தலைச் சமாளிக்க இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். பொருளாதார குற்றவாளிகள் மற்றும் தப்பியோடியவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு பிரிட்டனின் ஒத்துழைப்பையும் பிரதமர் திரு மோடி கோரினார்.
இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியா மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பிரதமர் திரு ஸ்டார்மரின் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு அவரை அழைத்தார்.
இந்தப் பயணத்தின் போது இரு தரப்பினரும் பின்வரும் ஆவணங்களில் கையெழுத்திட்டனர்/ஏற்றுக்கொண்டனர்:
● விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் [சிஇடிஏ]
● இந்தியா-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035 [இணைப்பு]
● பாதுகாப்பு தொழில்துறை செயல்திட்டம்
● தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு முன்முயற்சி குறித்த அறிக்கை [இணைப்பு]
● இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்


