ஸ்வர்கேட் மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவைப் பிரதமர் திறந்து வைத்தார்
பிட்கின் தொழில்துறை பகுதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
சோலாப்பூர் விமான நிலையத்தைத் திறந்து வைத்தார்
பிதேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் பூலேவின் முதல் பெண்கள் பள்ளிக்கான நினைவுச் சின்னத்திற்கு அடிக்கல் நாட்டினார்
"மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்குவது நகர்ப்புற வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதுடன் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்"
"புனே நகரில் வாழ்க்கையை எளிதாக்குவது தொடர்பான கனவை நோக்கி நாங்கள் வேகமாக நகர்கிறோம்"
"சோலாப்பூருக்கு நேரடி விமான இணைப்பை வழங்குவதற்காக விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன"
"இந்தியா நவீனமாக இருக்க வேண்டும், இந்தியா நவீனமயமாக்கப்பட வேண்டும், ஆனால் அது நமது அடிப்படை மதிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்"
"சாவித்ரிபாய் பூலே போன்ற பெரிய ஆளுமைகள் மகள்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியின் கதவுகளைத் திறந்தனர்"

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இரண்டு நாட்களுக்கு முன்பு மோசமான வானிலை காரணமாக புனேவில் தமது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் இன்றைய மெய்நிகர் நிகழ்வுக்கு வழவகுத்த தொழில்நுட்பத்தை அவர் பாராட்டினார். சிறந்த ஆளுமைகளுக்கு உத்வேகம் அளிக்கும் இந்த நிலம் மகாராஷ்டிரா வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தைக் காண்கிறது என்று அவர் கூறினார். ஸ்வர்கேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவு தொடங்கப்பட்டதையும், புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட் – கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பிதேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே முதல் பெண்கள் பள்ளியில் நினைவு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டியது குறித்தும் அவர் பேசினார். புனேயில் வாழ்க்கையை எளிதாக்கும் நடைமுறைகளை அதிகரிப்பதில் ஏற்பட்டுள்ள வேகமான முன்னேற்றம் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

 

பகவான் விட்டலின் பக்தர்களுக்கு இன்று ஒரு சிறப்பு பரிசும் கிடைத்துள்ளது என்று கூறிய பிரதமர், சோலாப்பூர் நகருடன் நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்காக விமான நிலையம் திறக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். தற்போதுள்ள விமான நிலையத்தின் மேம்படுத்தல் பணிகள் நிறைவடைந்த பின்னர் முனையத்தின் திறன் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். பயணிகளுக்காக புதிய சேவைகள், வசதிகள் உருவாக்கப்பட்டு, பகவான் விட்டலின் பக்தர்களுக்கு வசதி அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த விமான நிலையம் வணிகங்கள், தொழில்கள், சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறிய அவர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக மகாராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இன்று, மகாராஷ்டிராவுக்கு புதிய தீர்மானங்களுடன் பெரிய இலக்குகள் தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், புனே போன்ற நகரங்களை முன்னேற்றம், நகர்ப்புற வளர்ச்சியின் மையமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். புனேயின் முன்னேற்றம் மற்றும் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் அழுத்தம் குறித்து பேசிய பிரதமர், வளர்ச்சி, திறனை அதிகரிக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். இந்த இலக்கை அடைய, தற்போதைய மாநில அரசு புனேவின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் அணுகுமுறையுடன் செயல்பட்டு வருவதாகவும், நகரம் விரிவடைவதால் இணைப்புக்கு ஊக்கம் அளிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

 

புனே மெட்ரோ குறித்த விவாதங்கள் 2008-ம் ஆண்டு தொடங்கியதையும், 2016-ம் ஆண்டு தமது அரசு எடுத்த விரைவான முடிவுகளால் அடிக்கல் நாட்டப்பட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். இதன் விளைவாக, இன்று புனே மெட்ரோ வேகம் பெற்று விரிவடைந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். இன்றைய திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஒருபுறம் ஸ்வர்கேட் வரையிலான மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், மறுபுறம் ஸ்வர்கேட் முதல் கத்ரஜ் வரையிலான வழித்தடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூபி ஹால் கிளினிக்கிலிருந்து ராம்வாடிக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்ததை அவர் நினைவு கூர்ந்தார். 2016 ம் ஆண்டு முதல் தற்போது வரை புனே மெட்ரோ விரிவாக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பிரதமர் பாராட்டினார். ஏனெனில் விரைவான முடிவுகள் எடுக்கப்பட்டு தடைகள் நீக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். தற்போதைய அரசு புனேயில் நவீன மெட்ரோ கட்டமைப்பை உருவாக்கியதைச் சுட்டிக்காட்டிய அவர், முந்தைய அரசு 8 ஆண்டுகளில் ஒரு மெட்ரோ தூணை கூட கட்டவில்லை என்றார்.

மகாராஷ்டிராவின் முன்னேற்றத்தை உறுதி செய்வதில் வளர்ச்சி சார்ந்த நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, இந்தத் தொடர்ச்சியில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றார். மெட்ரோ திட்டங்கள் முதல் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் வரை முன்பு கிடப்பில் போடப்பட்டிருந்த பல்வேறு திட்டங்களை அவர் எடுத்துரைத்தார்.

அப்போதைய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆரிக் நகரத்தின் முக்கிய அங்கமான பிட்கின் தொழில்துறை பகுதி குறித்து பிரதமர் பேசினார். டெல்லி-மும்பை தொழில்துறை வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த திட்டம் தடைகளை எதிர்கொண்டது என்று அவர் கூறினார். ஆனால் முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசின் தலைமையில் புத்துயிர் பெற்றது என அவர் தெரிவித்தார். பிட்கின் தொழில்துறை முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்தப் பிராந்தியத்திற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகள், வேலை வாய்ப்புகளை கொண்டு வருவதற்கான அதன் திறனை சுட்டிக்காட்டினார். 8,000 ஏக்கர் பரப்பளவில் பிட்கின் தொழில்துறை பகுதியை மேம்படுத்துவதன் மூலம், ஆயிரக்கணக்கான கோடி முதலீடு மகாராஷ்டிராவுக்கு வரும் எனவும் அது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார். முதலீடு மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடைமுறை இன்று மகாராஷ்டிராவில் இளைஞர்களின் மிகப்பெரிய பலமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார். நவீனமயமாக்கல் நாட்டின் அடிப்படை மதிப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, இந்தியா தனது வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில் நவீனமயமாக்கப்பட்டு வளர்ச்சியடையும் என்று கூறினார். எதிர்காலத்திற்கு உகந்த கட்டமைப்பு வசதியும் வளர்ச்சியின் பயன்களும் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய அவர், நாட்டின் வளர்ச்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பங்கேற்கும் போது இது நனவாக மாறும் என்று சுட்டிக் காட்டினார்.

 

சமூக மாற்றத்தில் பெண்களின் தலைமை முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் கூறினார். பெண்களுக்கு அதிகாரமளித்தலில் மகாராஷ்டிராவின் பாரம்பரியத்திற்கு அவர் புகழாரம் சூட்டினார். குறிப்பாக முதல் பெண்கள் பள்ளியைத் திறந்ததன் மூலம் பெண் கல்விக்கான இயக்கத்தைத் தொடங்கிய சாவித்ரிபாய் பூலேவின் முயற்சிகளுக்கு அவர் புகழாரம் சூட்டினார். திறன் மேம்பாட்டு மையம், நூலகம், பிற அத்தியாவசிய வசதிகளை உள்ளடக்கிய சாவித்ரிபாய் புலே நினைவுச் வளாகத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நினைவகம் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு நீடித்த மரியாதையாக, எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் என்றும் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை, குறிப்பாக கல்வியைப் பெறுவதில் இருந்த சவால்களை எடுத்துரைத்த பிரதமர், பெண்களுக்கு கல்விக்கான கதவுகளை திறந்ததற்காக சாவித்ரிபாய் பூலே போன்ற தொலைநோக்கு அறிஞர்களைப் பாராட்டினார். சுதந்திரம் பெற்ற போதிலும், கடந்த காலத்தின் மனநிலையை முழுமையாக அகற்றுவதற்கு நாடு போராடியது என்று குறிப்பிட்ட பிரதமர், பல துறைகளில் பெண்கள் முன்னேற்றத்தை முந்தைய அரசுகள் கட்டுப்படுத்தியே வைத்திருந்ததாகச் சுட்டிக்காட்டினார். பள்ளிகளில் கழிப்பறைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாதது பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். சைனிக் பள்ளிகளில் பெண்களைச் சேர்ப்பது, ராணுவத்தில் உள்ள பங்களிப்பு உள்ளிட்ட முறைகளை தற்போதைய அரசு மேற்கொண்டுள்ளது என்று கூறிய திரு நரேந்திர மோடி, கர்ப்பிணிப் பெண்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டிய பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளதாகவும் கூறினார். தூய்மை இந்தியா இயக்கத்தின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், திறந்தவெளி கழிப்பிடத்தின் கஷ்டங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மகள்கள், பெண்கள் இதன் மிகப்பெரிய பயனாளிகள் என்று கூறினார். பள்ளி துப்புரவு மேம்பாடுகள் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்களுக்குப் பாதுகாப்புக்கான கடுமையான சட்டங்கள் குறித்தும், இந்திய ஜனநாயக நடைமுறையில் பெண்களின் தலைமைத்துவத்தை உறுதி செய்யும் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் குறித்தும் திரு நரேந்திர மோடி பேசினார். ஒவ்வொரு துறையின் கதவுகளும் நமது மகள்களுக்காக திறக்கப்படும்போதுதான், நாட்டின் முன்னேற்றத்திற்கான உண்மையான கதவுகள் திறக்கப்படும் என்று கூறிய திரு நரேந்திர மோடி, சாவித்ரிபாய் புலே நினைவகம் இந்தத் தீர்மானங்களுக்கும், பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான இயக்கத்திற்கும் மேலும் சக்தியை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

 நாட்டை வளர்ச்சியை நோக்கி வழிநடத்துவதில் மகாராஷ்டிராவின் முக்கிய பங்கு குறித்த தனது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார், "நாம் ஒன்றாக வளர்ச்சி அடைந்த மகாராஷ்டிரா, வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற இந்த இலக்கை அடைவோம் என்று கூறிப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், திரு அஜித் பவார், பிற பிரமுகர்கள் காணொலிக் காட்சி மூலம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

ஸ்வர்கேட் மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இது புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் (முதல் கட்டம்) நிறைவைக் குறிக்கிறது.. மாவட்ட நீதிமன்றம் முதல் ஸ்வர்கேட் வரையிலான நிலத்தடி பிரிவின் திட்ட மதிப்பு சுமார் ரூ.1,810 கோடி. மேலும், ரூ.2,955 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட்-கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். சுமார் 5.46 கி.மீ நீளமுள்ள இந்த தெற்கு நீட்டிப்பு மார்க்கெட் யார்டு, பத்மாவதி மற்றும் கத்ராஜ் ஆகிய மூன்று நிலையங்களுடன் முற்றிலும் நிலத்தடியில் உள்ளது.

 

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகருக்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மத்திய அரசின் தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 7,855 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள பிட்கின் தொழில்துறை பகுதியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தில்லி மும்பை தொழில் வழித்தடத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், மராத்வாடா பிராந்தியத்தில் ஒரு துடிப்பான பொருளாதார மையமாக அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. ரூ.6,400 கோடிக்கும் அதிகமான திட்ட செலவில் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சோலாப்பூர் விமான நிலையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் சோலாப்பூருக்கு இணைப்பை கணிசமாக மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகள், வர்த்தகப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அமையும். தற்போதுள்ள சோலாப்பூர் முனைய கட்டடம் ஆண்டுக்கு சுமார் 4.1 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பிதேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே அவர்களின் முதல் பெண்கள் பள்ளி நினைவு வளாகத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 

Click here to read full text speech

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
ISRO achieves milestone with successful sea-level test of CE20 cryogenic engine

Media Coverage

ISRO achieves milestone with successful sea-level test of CE20 cryogenic engine
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 13, 2024
December 13, 2024

Milestones of Progress: Appreciation for PM Modi’s Achievements