வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளித் துறைமுக சரக்குப் பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்
10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 75 கலங்கரை விளக்கங்களில் சுற்றுலா வசதிகளை அர்ப்பணித்தார்
இந்தியாவின் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை அறிமுகப்படுத்தினார்
பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களை அர்ப்பணித்தார்
“தூத்துக்குடியில், தமிழ்நாடு, வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது”
“இன்று, நாடு 'முழுமையான அரசு' அணுகுமுறையுடன் செயல்படுகிறது”
“இணைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சிகள் வாழ்க்கையை எளிதாக்குவதை அதிகரித்து வருகின்றன”
“கடல்சார் துறையின் வளர்ச்சி என்பது தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தின் வளர்ச்சி”
“ஒரே நேரத்தில் 75 இடங்களில் வளர்ச்சிப் பணிகள், இது தான் புதிய இந்தியா”

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ரூ.17,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளித் துறைமுக சரக்குப் பெட்டக முனையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பசுமைக் கப்பல் முன்முயற்சியின் கீழ் இந்தியாவின் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் உள்நாட்டு நீர்வழி கப்பலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 75 கலங்கரை விளக்கங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளை அவர் அர்ப்பணித்தார். வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம் – ஆரல்வாய்மொழி பிரிவுகளை உள்ளடக்கிய வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில்  இரட்டை ரயில் பாதைத் திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழ்நாட்டில் சுமார் ரூ.4,586 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 4 சாலைத் திட்டங்களை பிரதமர் திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

 நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வளர்ந்த இந்தியாவின் பாதையை நோக்கிய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தமிழ்நாடு எழுதி வருவதாகக் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வைக் காண முடியும் என்று அவர் கூறினார். இந்தத் திட்டங்கள் தூத்துக்குடியில்  அமைந்திருந்தாலும், இந்தியா முழுவதும் பல இடங்களில் வளர்ச்சிக்கு இது உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

 வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் பயணம் மற்றும் அதில் தமிழ்நாட்டின் பங்கு குறித்து பிரதமர் வலியுறுத்தினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரனார் துறைமுகத்தின் கொள்ளளவை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர், அதை ஒரு பெரிய கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்ததை நினைவு கூர்ந்தார். அந்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படுகிறது என்றார் அவர். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளித் துறைமுக சரக்குப் பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டம் ரூ.7,000 கோடி முதலீட்டில் அமையும் என்று தெரிவித்தார். இன்று ரூ. 900 கோடி மதிப்பிலான திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.  13 துறைமுகங்களில் ரூ. 2500 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டிற்குப் பயனளிப்பதுடன், மாநிலத்தில் வேலைவாய்ப்புக்கான வழிவகைகளையும் உருவாக்கும். 

 

தற்போதைய அரசால் இன்று கொண்டு வரப்படும் வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் கோரிக்கைகளின்  அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்றும்,  முந்தைய அரசுகள் அவற்றில் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை என்றும் பிரதமர்  கூறினார். "நிலத்தின் சேவைக்காகவும், அதன் தலைவிதியை மாற்றுவதற்காகவும் நான் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன்" என்று பிரதமர் கூறினார்.

 பசுமைக் கப்பல்  முயற்சியின் கீழ், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பல் பற்றிப் பேசிய பிரதமர் திரு மோடி, இது காசிக்கு  தமிழ்நாட்டு மக்கள் அளித்த பரிசு என்று கூறினார். காசி தமிழ்ச் சங்கமத்தில் தமிழ்நாட்டு மக்களின் உற்சாகத்தையும், அன்பையும் கண்டதாக அவர் கூறினார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் மையத் துறைமுகமாக மாற்றும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் கப்பல்களுக்கு எரிபொருளை வழங்கும் வசதி ஆகியவை அடங்கும். "இன்று உலகம் ஆராய்ந்து கொண்டிருக்கும் மாற்று வழிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு நீண்ட தூரம் செல்லும்" என்று அவர்  நம்பிக்கை தெரிவித்தார். 

 இன்று திறந்து வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ரயில் மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், மின்மயமாக்கல் மற்றும் இரட்டை ரயில் பாதைகள், தென் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்றும், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் சாலைப் பிரிவுகளில் நெரிசலைக் குறைக்கும் என்றும் கூறினார்.  தமிழ்நாட்டில் இன்று சுமார் ரூ.4,000 கோடி மதிப்புள்ள சாலைப் பாதைகளை நவீனப்படுத்துவதற்கான நான்கு முக்கியத் திட்டங்கள் இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இது இணைப்புக்கு ஊக்கமளிக்கும், பயண நேரத்தைக் குறைக்கும் மற்றும் மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று கூறினார்.

 

 

 முழுமையான அரசு என்ற  புதிய இந்தியாவின் அணுகுமுறை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், தமிழ்நாட்டில் சிறந்த இணைப்பையும்,  மேம்படுத்தப்பட்ட வாய்ப்புகளையும் உருவாக்க சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்வழித் துறைகள்  தீவிரமாகப் பணியாற்றி வருவதாகக் கூறினார். எனவே, ரயில்வே, சாலைகள் மற்றும் கடல்சார் திட்டங்கள் இணைந்து தொடங்கப்படுகின்றன. பன்முக அணுகுமுறை மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

நாட்டின் முக்கிய கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த வேண்டும் என்று  மனதின் குரல் நிகழ்ச்சியில் தாம் யோசனை தெரிவித்திருந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 75 கலங்கரை விளக்கங்களில்  மேம்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளை அர்ப்பணிப்பதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார். "ஒரே நேரத்தில் 75 இடங்களில்  வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன, இதுதான்  புதிய இந்தியா" என்று  கூறிய பிரதமர், இந்த 75 இடங்களும் வரும் காலங்களில் மிகப்பெரிய சுற்றுலா மையங்களாக மாறும் என்று  உறுதிப்படத் தெரிவித்தார்.

மத்திய அரசின் முன்முயற்சிகளை நினைவுகூர்ந்த பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 1300 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். 2000 கி.மீ ரயில்வே  வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டதுடன், மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு, பல ரயில் நிலையங்கள்  மேம்படுத்தப்பட்டன. உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் 5 வந்தே பாரத் ரயில்கள் மாநிலத்தில் இயக்கப்படுவதாக அவர் கூறினார்.  தமிழ்நாட்டில் சாலை உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்கிறது. "இணைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சிகள் வாழ்க்கையை எளிதாக்குகின்றன" என்று அவர் கூறினார்.

 

பல தசாப்தங்களாக இந்தியாவின் நீர்வழிகள் மற்றும் கடல்சார் துறையின் பெரும் எதிர்பார்ப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இந்தத் துறைகள் இன்று வளர்ச்சி அடைந்த  பாரதத்தின் அடித்தளமாக மாறி வருவதாகவும், இதன் மிகப்பெரிய பயனாளிகளாக தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் உள்ளது என்றும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், அனைத்துத் தென் மாநிலங்களுக்குமான வாய்ப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். "கடல்சார் துறையின் வளர்ச்சி என்பது தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தின் வளர்ச்சியாகும்" என்று கூறிய பிரதமர், கடந்த பத்தாண்டுகளில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் போக்குவரத்து 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார். துறைமுகம் கடந்த ஆண்டு 38 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது, இது 11 சதவீத வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்தது என்று அவர் மேலும் கூறினார். "இதேபோன்ற முடிவுகளை நாட்டின் பிற முக்கியத் துறைமுகங்களிலும் காணலாம்" என்று கூறிய பிரதமர் திரு மோடி , சாகர்மாலா போன்ற திட்டங்களின் ஆதரவைப் பாராட்டினார்.

நீர்வழிகள் மற்றும் கடல்சார் துறைகளில் இந்தியா புதிய சாதனைகளைப் படைத்து வருவதாக பிரதமர் உறுதிபடக் கூறினார். சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீடு மற்றும் துறைமுகத் திறன் ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதை அவர் குறிப்பிட்டார். இந்தக் காலகட்டத்தில் தேசிய நீர்வழிகளில் எட்டு மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கப்பல் பயணிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மாலுமிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். இந்த முன்னேற்றங்கள் தமிழ்நாட்டிற்கும்,  நம் நாட்டு இளைஞர்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் கூறினார். “தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் என்று நான் நம்புகிறேன், மூன்றாவது முறையாக சேவை செய்ய தேசம் எங்களுக்கு வாய்ப்பளிக்கும்போது நான் புதிய உற்சாகத்துடன் உங்களுக்கு சேவை செய்வேன் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்”, என்று அவர் தெரிவித்தார். 

 

தமது தற்போதைய பயணத்தின் போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் அன்பு, பாசம், உற்சாகம் மற்றும் ஆசீர்வாதங்கள் குறித்துப் பேசிய பிரதமர், அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்து, மக்களின் அன்புடன் மாநிலத்தின் வளர்ச்சியைத் தாம்  பொருத்துவேன் என்று கூறினார்.

 தமது உரையின் நிறைவுப் பகுதியில், தமிழ்நாடும், இந்திய அரசும் வளர்ச்சி திருவிழாவைக் கொண்டாடுவதை உணர்த்தும் வகையில்  ஒவ்வொருவரும் தங்களது  செல்பேசி விளக்குகளை  பிரகாசிக்கச் செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, மத்திய துறைமுகங்கள், கப்பல்  போக்குவரத்து  மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மற்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளித் துறைமுக சரக்குப் பெட்டக முனையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த சரக்குப் பெட்டக முனையம், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை கிழக்குக் கடற்கரைக்கான போக்குவரத்து முனையமாக மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகும். இந்தியாவின் நீண்ட கடற்கரை மற்றும் சாதகமான புவியியல் அமைவிடத்தை மேம்படுத்துவதும், உலக வர்த்தக அரங்கில் இந்தியாவின் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் மையத் துறைமுகமாக மாற்றும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி, கப்பல்களுக்கு எரிபொருளை வழங்கும் வசதி போன்றவை அடங்கும்.

 

பசுமைக் கப்பல் முன்முயற்சியின் கீழ், இந்தியாவின் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்படுகிறது. தூய்மையான எரிசக்தி தீர்வுகளைத் தழுவுவதற்கும் நாட்டின் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு வெளியீட்டை அடைவதற்கும் ஒரு முன்னோடி  நடவடிக்கையாக இது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் உள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமர் அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம் – ஆரல்வாய்மொழி பிரிவுகளை உள்ளடக்கிய வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் இரட்டை ரயில்பாதை திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ .1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இரட்டிப்பு திட்டம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ரயில்களின் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.

தமிழ்நாட்டில் சுமார் ரூ.4,586 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 4 சாலைத் திட்டங்களை பிரதமர் திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை 844-ல் ஜித்தண்டஹள்ளி-தர்மபுரி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 81-ல் மீன்சுருட்டி - சிதம்பரம் பிரிவில் இருவழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 83-ல் ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 83-ல் நாகப்பட்டினம் - தஞ்சாவூர் பிரிவை இருவழிப்பாதையாக மாற்றுதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்கள் போக்குவரத்தை மேம்படுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல், சமூகப்-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், புனித யாத்திரைப் பயணங்களை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's 'Make In India' Defence Push Gains Momentum As France Shows Interest

Media Coverage

India's 'Make In India' Defence Push Gains Momentum As France Shows Interest
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 14, 2024
November 14, 2024

Visionary Leadership: PM Modi Drives India's Green and Digital Revolution