பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திரு அந்தோணி அல்பானீஸுடன் தொலைபேசி மூலம் உரையாடி ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். கடந்த ஐந்து ஆண்டுகளில், விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மை மூலம் பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பு வளர்ச்சியடைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்துவதில் ஆர்வமிக்க இந்திய வம்சாவளியினர் ஆற்றிய பங்களிப்பை அவர்கள் குறிப்பிட்டனர்.
பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் சுதந்திரமான, வெளிப்படையான, நிலையான, விதிகள் சார்ந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதியை ஊக்குவிப்பதில் இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஆண்டு உச்சி மாநாடு மற்றும் குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் அல்பானீசுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்புகொள்ள ஒப்புக்கொண்டனர்.
Spoke with my friend @AlboMP to personally congratulate him on his party’s historic victory. We agreed to work together with renewed vigour to advance the India-Australia Comprehensive Strategic Partnership and explore new areas of cooperation.
— Narendra Modi (@narendramodi) May 6, 2025


