மத்திய மற்றும் மாநில அரசுகளை உள்ளடக்கிய, ஐ.சி.டி அடிப்படையிலான, செயலில் ஆளுகை மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்தலுக்கான பல-மாதிரி தளமான பிரகதியின் 49-வது கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார். முக்கிய திட்டங்களை துரிதப்படுத்துவது, இடர்பாடுகளை உடனடியாகத் தீர்ப்பது,உரிய காலத்திற்குள் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்வதில் மத்திய மாநில அரசுகளை இந்தத் தளம் ஒன்று சேர்க்கிறது.
கூட்டத்தின்போது சுரங்கங்கள், ரயில்வே, நீர் வளங்கள், தொழில்துறை வழித்தடங்கள் மற்றும் எரிசக்தி துறைகள் சம்பந்தமான எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் ஆய்வு செய்தார். இந்தத் திட்டங்கள் 65 ஆயிரம் கோடி ரூபாய் மொத்த முதலீட்டில் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ளன. பொருளாதார வளர்ச்சி மற்றும் பொது நலனின் முக்கிய இயக்கிகளாக அங்கீகரிக்கப்படும் இந்தத் திட்டங்கள், தெளிவான கால வரையறை, முகமைகளுக்கு இடையே செயல்திறன் வாய்ந்த ஒருங்கிணைப்பு மற்றும் இடர்பாடுகளுக்கு உடனடித் தீர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ஆய்வு செய்யப்பட்டன.
திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் உண்டாகும் செலவு இரண்டு மடங்கு ஆகிறது என்று பிரதமர் கூறினார். இதனால் திட்டச் செலவினங்கள் அதிகரிப்பதுடன், அத்தியாவசிய சேவைகளை குடிமக்கள் சரியான நேரத்தில் பெற முடியாமல் போகிறது என்று பிரதமர் மீண்டும் கூறினார். குடிமக்களுக்கு எளிதான வாழ்க்கை மற்றும் நிறுவனங்களுக்கு எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை உறுதி செய்யும் இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், வாய்ப்புகளை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மாற்றி, முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுமாறு மத்திய மாநில அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், முதன்மைத் திட்டங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிப்பதற்கான வழிமுறைகளை நிறுவனமயமாக்க வேண்டும் என்றும், சரியான நேரத்தில் செயல்படுத்துவதையும், தடைகளைத் திறம்படத் தீர்ப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். போட்டித்தன்மையை மேம்படுத்துதல், செயல்திறனை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களுக்கு அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் வலுவான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், இந்த சீர்திருத்தங்கள் மூலமான சிறந்த தயார்நிலை, வளர்ந்து வரும் வாய்ப்புகளை விரைவாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


