மாலத்தீவுகள் குடியரசின் அதிபர் திரு.இப்ராஹிம் முகமது சோலிஹ், இலங்கை ஜனநாயகசோஷலிசக் குடியரசின் அதிபர் திரு. மைத்ரிபால சிறிசேனா ஆகியோரது அழைப்பை ஏற்று,இந்த நாடுகளுக்கு 2019, ஜூன் 8, 9 தேதிகளில் நான் பயணம் மேற்கொள்கிறேன். எனது மறுதேர்வுக்குப்பின், இது எனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாகும்.
கடந்த ஆண்டு டிசம்பரில், அதிபர் சோலிஹ்-ஐ வரவேற்பதில் நாம் மகிழ்ச்சி அடைந்தோம். 2018 நவம்பரில் அதிபர் சோலிஹின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பையும் நான் பெற்றிருந்தேன். கடல்சார்ந்த அண்டை நாடுகளாகவும், நீடித்த நண்பர்களாகவும் இருக்கும் நிலையில், மாலத்தீவுகளுக்கான எனது பயணம் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.
வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் ஆழமான பிணைப்புகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நாம் மாலத்தீவுகளை மதிப்புமிக்க கூட்டாளியாகக் கருதுகிறோம். அண்மைக்காலத்தில், மாலத்தீவுகளுடனான நமது உறவுகள் மிகவும் வலுவடைந்துள்ளன. பன்முகத்தன்மைக் கொண்ட நமது ஒத்துழைப்பு, எனது பயணத்தால் மேலும் ஆழமாகும் என்று நான் நம்புகிறேன்.
2019 ஏப்ரல் 21ல், கடந்த ஈஸ்டர் தினத்தில் அதி பயங்கரமான பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், எனது இலங்கைப் பயணம் இலங்கையின் அரசுடனும், மக்களுடனும் நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கையுடன் இந்தியா துணை நிற்கும்.
கடந்த சில ஆண்டுகளில், இலங்கையுடனான நமது இருதரப்பு உறவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு அண்மையில் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுடனான சந்திப்பால் நான் மகிழ்ச்சியடைந்தேன். எனது பயணத்தின்போது, இலங்கையின் அதிபருடனான சந்திப்பை நான் எதிர்நோக்கியிருக்கிறேன்.
இந்தப் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற தொலைநோக்கு, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற நமது கொள்கை வழியில், கடற்பகுதியில் உள்ள நமது அண்டை நாடுகளான மாலத்தீவுகளுக்கும், இலங்கைக்குமான எனது பயணம் நெருக்கமான, இணக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.