எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.  நமது குடியரசுத் திருநாளை ஜனவரி மாதம் 26ஆம் தேதி, நாட்டின் மூலை முடுக்கெங்கும் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் நாம் கொண்டாடினோம். பாரதத்தின் அரசியல் அமைப்புச் சட்டம், குடிமக்களின் கடமைகள், அதிகாரங்கள், மக்களாட்சி முறை மீது நாம் கொண்டிருக்கும் முனைப்பு, என ஒருவகையில் இது கலாச்சார உற்சவமாக திகழ்வதோடு, இனிவரும் தலைமுறையினருக்கு ஜனநாயகப் பொறுப்புக்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை செம்மைப்படுத்துகிறது. ஆனால் இப்போதும் நமது நாட்டில் குடிமக்களின் கடமைகள், உரிமைகள் ஆகியன பற்றி எந்த அளவுக்குப் பரவலாகவும் ஆழமாகவும் வாதவிவாதங்கள் நடைபெற வேண்டுமோ அந்த அளவுக்கு இன்னமும் நடைபெறவில்லை. ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனை முக்கியத்துவம் அதிகாரங்களுக்கு அளிக்கப்பட்டதோ, அதே அளவு முக்கியத்துவம் கடமைகள் மீதும் கொடுக்கப்பட்டு வந்தது. அதிகாரங்களும் உரிமைகளும் இரு தண்டவாளங்கள். இந்த இரு தண்டவாளங்களின் மீது தான் பாரத ஜனநாயகம் என்ற ரயில்வண்டி விரைந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

நாளை ஜனவரி 30ஆம் தேதி, நமது வணக்கத்துக்குரிய அண்ணல் மறைந்த நாள். ஜனவரி மாதம் 30ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு நாம் அனைவரும் 2 நிமிட மவுனம் அனுஷ்டித்து, தேசத்துக்காக உயிர் துறந்த தியாகிகளுக்கு நம் நினைவஞ்சலிகளைக் காணிக்கையாக்குவோம். ஒரு சமுதாயம் என்ற வகையிலும், ஒரு நாடு என்ற முறையிலும், ஜனவரி மாதம் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துதல் என்பது நமது அனிச்சை இயல்பாக ஆக வேண்டும். அது இரண்டு நிமிடமே ஆனாலும், அதில் சமூகத் தன்மையும் இருக்கிறது, மனவுறுதியும் இருக்கிறது, தியாகிகள் மீதான நமது அக்கறையின் வெளிப்பாடும் இருக்கிறது.

நம் நாட்டின் இராணுவம் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் இயல்பான மரியாதையை வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இந்த குடியரசுத் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்ட வீரதீரச் செயல்புரிந்தோருக்கான பல்வேறு பதக்கங்களால் கவுரவிக்கப்பட்ட வீரர்கள், அவர்களின் உறவினர்கள் ஆகியோருக்கு நான் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதக்கங்களில் கீர்த்தி சக்கரம், ஷவுர்ய சக்கரம், பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் என பல படிநிலைகள் இருக்கின்றன. நான் குறிப்பாக இளைஞர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நீங்கள் சமூகவலைத்தளங்களில் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற வகையில் நீங்கள் ஒரு வேலை செய்யலாம். இந்த முறை எந்தெந்த வீரர்களெல்லாம் கவுரவிக்கப்பட்டிருக்கின்றார்களோ, அவர்களைப் பற்றி நீங்கள் வலைத்தளத்தில் தேடி இரண்டொரு நல்ல வார்த்தைகளை எழுதுங்கள், உங்கள் நண்பர்களோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த வீரர்களின் சாகசம், வீரம், பராக்கிரமம் பற்றிய செய்திகளை நாம் ஆழமாகத் தெரிந்து கொள்ளும் போது, நமக்கு ஆச்சரியமும், பெருமிதமும், உத்வேகமும் ஒருசேர ஏற்படும்.

ஜனவரி 26ஆம் தேதி தொடர்பான செய்திகளால் நாம் பெரும் உற்சாகத்தைம் பெருமகிழ்ச்சியையும் அனுபவித்து வந்த அதே நேரத்தில், இன்னொரு புறத்தில் கச்மீரத்தில் நமது நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் நமது இராணுவ வீரர்களில் சிலர் பனிச்சரிவு காரணமாக வீர மரணம் அடைந்திருக்கின்றார்கள். நான் இதில் உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கும் என் மரியாதைகலந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன், வணங்குகிறேன்.

எனது இளைஞர் நண்பர்களே, நான் தொடர்ந்து மனதின் குரலை ஒலித்து வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், இந்த 4 மாதங்களும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சவாலான மாதங்களாக விளங்குகின்றன. வீட்டில் ஏதாவது ஒரு குழந்தைக்குத் தான் தேர்வு இருக்கிறது என்றாலும், ஒட்டுமொத்த குடும்பமுமே தேர்வுகளின் சுமையில் அழுந்திப் போகின்றது. இந்த நிலையில் எனது மாணவ நண்பர்களோடும், அவர்களின் பெற்றோரோடும், அவர்களின் ஆசிரியர்களோடும் நான் இரண்டொரு வார்த்தைகள் பேச விரும்புகிறேன். ஏனென்றால் பல ஆண்டுகளாக நான் சென்ற அனைத்து இடங்களிலும், சந்தித்த அனைவரிடமும் இது அழுத்தத்தின் ஒரு பெரிய காரணமாக அமைந்திருப்பதைக் காண முடிந்தது.

குடும்பம், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் மனோரீதியான அழுத்தம் நிறைந்த சூழ்நிலை காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளிவர வேண்டும் என்று நான் எப்போதுமே உணர்வதுண்டு; ஆகையால் நான் இன்று எனது இளைய நண்பர்களோடு சில விஷயங்களை விரிவாகப் பேச விரும்புகிறேன். நான் இந்த விஷயம் குறித்து அறிவித்த பின்னர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என பலர் எனக்கு தகவல் அனுப்பினார்கள், என்னிடம் கேள்விகள் எழுப்பினார்கள், ஆலோசனைகள் வழங்கினார்கள், தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்; இவற்றையெல்லாம் பார்த்த பிறகு நான் என் மனதின் குரலை இன்று வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது.

”ஐயா, தேர்வுக் காலங்களில் எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், நமது சமூகத்தில் மிகப் பெரிய பயங்கரமான, அச்சமேற்படுத்தும் சூழல் நிலவுகிறது; இதன் காரணமாக மாணவர்களுக்கான உத்வேகம் குறைவுபடுவது மட்டுமல்லாமல், அது மிகவும் வீழ்ச்சியும் அடைகிறது. இப்படிப்பட்டதொரு சூழலை எப்படி மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்குவது என்பதே உங்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி.”

இந்தக் கேள்வியை சிருஷ்டி கேட்டிருக்கிறார் என்றாலும் இந்தக் கேள்வி உங்கள் அனைவரின் மனங்களிலும் இருக்கிறது என்பதை நான் அறிவேன். தேர்வுகள் என்பவை சந்தோஷம் நிறைந்த ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்த பிறகு, மிகுந்த உற்சாகம் கொப்பளிக்க வேண்டிய ஒரு காலகட்டமாக இது அமைய வேண்டும். மிகக் குறைவானவர்களுக்கே தேர்வுக்காலம் சந்தோஷம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது; பெரும்பாலானோருக்கு தேர்வுக்காலம் அழுத்தம் நிறைந்த ஒரு காலமாக அமைந்து விடுகிறது. நீங்கள் இதை சந்தோஷம் தரும் காலமாகக் கருதுகிறீர்களா இல்லை அழுத்தம் தரும் காலமாக உணர்கிறீர்களா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். யாரெல்லாம் சந்தோஷமான காலமாக இதைக் கருதுகிறார்களோ, அவர்கள் வெற்றி அடைகிறார்கள்; யாரெல்லாம் அழுத்தம் நிறைந்த காலமாக கருதுகிறார்களோ, அவர்கள் வருத்தப் படுகிறார்கள் – pleasure or pressure. ஆகையால் தேர்வுக்காலம் என்பது ஒரு கொண்டாட்டம், ஒரு பண்டிகை என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. பண்டிகை, கொண்டாட்டம் என்பதை எப்போது வருகிறதோ, அப்போது தான் நமக்குள் இருக்கும் சிறப்பான தன்மை வெளிப்படுகிறது. கொண்டாட்ட நேரங்களில் தான் சமுதாயத்தின் சக்தியையும் நம்மால் உணர முடிகிறது. மிகச் சிறப்பான பண்புகள் அப்போது பளிச்சிடுகின்றன. சாதாரண காலங்களில் நாம் ஒழுங்கு குறைவானவர்களாகவே நமக்குத் தோன்றும், ஆனால் 40-45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் கும்பமேளாவைப் பார்த்தால், அமைப்பு தற்காலிகமாக இருந்தாலும், மக்கள் மத்தியில் ஒழுங்குமுறை எப்படிப் பளிச்சிடுகிறது என்பது நன்றாகத் தெரியும். தேர்வுகளில் கூட ஒட்டுமொத்த குடும்பத்தில், நண்பர்களிடத்தில், அக்கம்பக்கத்தாரிடத்தில் ஒரு கொண்டாட்டச் சூழலே நிலவ வேண்டும். pressure, pleasureஆக, அதாவது மன அழுத்தம் சந்தோஷமாக மாறுவதை நீங்கள் அப்போது பார்க்கலாம். கொண்டாட்டமான சூழல் உங்கள் சுமையைக் குறைத்து விடும். இந்த 3-4 மாதங்களில் கொண்டாட்டம் நிறைந்த சூழலை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தாருங்கள் என்று நான் பெற்றோரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒட்டுமொத்த குடும்பமுமே ஒரு குழுவாக செயல்பட்டு, இந்தக் கொண்டாட்டத்தை வெற்றியடைச் செய்வதில் தத்தமது பங்களிப்பை உற்சாகத்தோடு ஆற்ற வேண்டும். நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு விடும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, கச்சிலிருந்து காமரூபம் வரை, அம்ரேலியிலிருந்து அருணாச்சல பிரதேசம் வரை, இந்த 3-4 மாதங்களில் ஒரே தேர்வுமயமாக இருக்கிறது. அவரவர் தத்தமது வழிகளில், தத்தமது பாரம்பரியத்தை அடியொற்றி, தத்தமது குடும்பச் சூழலுக்கு ஏற்ப, இந்த 3-4 மாதங்களைக் கொண்டாட்டமாக மாற்றியமைப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.

ஆகையால் தான் smile more score more, புன்சிரிப்போடு தேர்வை எதிர்கொள்ளுங்கள், அதிக மதிப்பெண்களைப் பெறுங்கள் என்று நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். எவ்வளவு அதிக மகிழ்ச்சியாக இந்த நேரத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான மதிப்பெண்கள் உங்களை வந்து சேரும், செய்து தான் பாருங்களேன். நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள் என்று சொன்னால், புன்சிரிப்பு தவழும் முகத்தோடு இருந்தீர்கள் என்றால், நீங்கள் ஆசுவாசத்தை உணர்வீர்கள்; இந்த நிலையில் பல ஆண்டுகாலப் பழைய விஷயங்கள் கூட எளிதில் உங்கள் நினைவுகளில் துலங்கத் தொடங்கும். ஓராண்டுக்கு முன்பாக வகுப்பறையில் ஆசிரியர் என்ன சொன்னார் என்பது தெள்ளத்தெளிவாக உங்கள் மனத்திரையில் பளிச்சிடும். நீங்கள் ஆசுவாசமாக உணரும் காலங்களில் தான் உங்கள் நினைவாற்றல் நன்கு பிரகாசிக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் மனவழுத்தத்தோடு இருந்தீர்கள் என்று சொன்னால், அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டுக் கிடக்கும், வெளியிலிருப்பவை உள்ளே நுழையாது, உள்ளிருப்பவையும் வெளியே செல்லாது. சிந்தனாசக்தி ஸ்தம்பித்துப் போவதோடு, அதுவே ஒரு சுமையாகவும் கனக்கத் தொடங்கும். தேர்வுகளில் கூட உங்களுக்கு அனைத்தும் நினைவுக்கு வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். புத்தகம் நினைவுக்கு வரும், அத்தியாயம் நினைவுக்கு வரும், பக்கத்தின் எண் நினைவுக்கு வரும், பக்கத்தின் மேல் பகுதியில், அடிப்பகுதியில் கண்டவையெல்லாம் நினைவுக்கு வரும், ஆனால் அந்தக் குறிப்பிட்ட சொல் மட்டும் நினைவிலிருந்து தப்பிச் செல்லும். இது எப்போது நினைவுக்கு வரும்? தேர்வு முடிந்து வெளியே வந்து சிறிது நேரம் அறைக்கு வெளியே இருக்கும் போது, அட, இது தான் அந்தச் சொல் என்று திடீரென்று உங்கள் நினைவில் வந்து குதிக்கும். இதே சொல் ஏன் தேர்வு எழுதும் அறைக்குள்ளே நினைவுக்கு வரவில்லை?  அதற்கான காரணம் அழுத்தம், pressure. வெளியே வந்தவுடன் எப்படி நினைவுக்கு வந்தது? வேறு யாரும் உங்களிடம் வந்து சொல்லவில்லையே, உங்களுக்கு தானாகவே அல்லவா உதித்தது!! ஏன் வந்தது என்றால், நீங்கள் ஆசுவாசமாக உணர்ந்தீர்கள் என்பதால் தான். ஆகையால் தான் நினைவுபடுத்திப் பார்க்க மிகச் சிறந்த மருந்து என்று ஒன்று இருக்குமேயானால், அது ஆசுவாசப்படுத்திக் கொள்வது தான். இதை நான் அனுபவித்து உணர்ந்து கூறுகிறேன்; மனவழுத்தம் இருந்தால், நாம் விஷயங்களை மறந்து விடுகிறோம், ஆசுவாசமாக இருந்தோமேயானால், மிகவும் பயனுள்ள பல விஷயங்கள் எப்படி திடீர் திடீரென்று மனதில் வந்து உதிக்கும் என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. உங்களிடம் தகவல்-ஞானம் இல்லை என்பதோ, நீங்கள் கடினமாக உழைக்கவில்லை என்பதோ அல்ல. ஆனால் எப்போது அழுத்தம் ஏற்படுகிறதோ, அப்போது உங்கள் அறிவு, உங்கள் தகவல் ஞானம் அனைத்தும் அமிழ்ந்து போய் விடும், அழுத்தம் உங்கள் மீது சவாரி செய்யும். ஆகையால் தான் a happy mind is the secret for a good mark-sheet, ஒரு சந்தோஷமான மனது தான் அதிக மதிப்பெண்களுக்கான திறவுகோல் என்று நான் கூறுவேன். தேர்வுகளை நாம் சரியான கண்ணோட்டத்தில் அணுகுவதில்லை என்று சில வேளைகளில் எனக்குப் படுவதுண்டு. இது ஏதோ ஜீவமரணப் போராட்டமாக நமக்குப் படுகிறது. நீங்கள் எழுதவிருக்கும் தேர்வு என்பது நீங்கள் ஆண்டு முழுவதும் படித்தவற்றுக்கான தேர்வு. இது உங்கள் வாழ்க்கைக்கான உரைகல் அல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ நினைக்கிறீர்கள் என்பவற்றிற்கான தேர்வு அல்ல. வகுப்பறையில், நீங்கள் எழுதும் தேர்வைத் தவிர, பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்க்கையில் வந்திருக்கும். ஆகையால் தேர்வுகள் என்பவற்றை வாழ்க்கையின் வெற்றி தோல்விகளாக நாம் எடுத்துக் கொள்ளும் எண்ணத்திலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கும் பெரிய எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவர் விமானப் படையில் சேரச் சென்றார், தோல்வியடைந்தார். ஒருவேளை அவர் அந்தத் தோல்வியில் துவண்டு, வாழ்க்கையில் தோற்றுப் போயிருந்தார் என்றால், பாரத தேசத்திற்கு இவ்வளவு பெரிய விஞ்ஞானி கிடைத்திருப்பாரா? இவ்வளவு அருமையான குடியரசுத் தலைவர் கிடைத்திருப்பாரா என்று சிந்தித்துப் பாருங்கள்?

ரிச்சா ஆனந்த் அவர்கள் என்னிடத்தில் ஒரு வினா எழுப்பியிருக்கிறார்.

”இன்றைய நிலையில் கல்விக்கு முன்பாக நான் காணும் மிகப் பெரிய சவால் என்னவென்றால், கல்வி என்பது தேர்வுகளை மையமாகக் கொண்டிருப்பது தான். மதிப்பெண்கள் அதிக மகத்துவம் வாய்ந்தவையாக ஆகியிருக்கின்றன. இதன் காரணமாக போட்டாபோட்டி என்பது அதிகரித்து, மாணவர்களின் மனங்களில் மிகப் பெரிய அளவில் அழுத்தம் அதிகமாகி இருக்கிறது. இந்த நிலையில் கல்வியின் தற்காலப் போக்கையும் இதன் எதிர்காலத்தையும் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”  

ஒருவகையில் விடையை இவரே அளித்து விட்டார், ஆனால் ரிச்சா அவர்கள் இது குறித்து நானும் சில சொற்களைப் பேச வேண்டும் என்று விரும்புகிறார். மதிப்பெண்களுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் குறிப்பிட்டதொரு மகத்துவம் தான் இருக்கிறது. வாழ்ககையில் இவையே அனைத்துமாகி விடாது. வாழ்க்கை என்ற நீரோட்டத்தில் நீங்கள் எத்தனை ஞானத்தை அடைகிறீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் கற்றவற்றை ஒட்டி நீங்கள் எந்த அளவுக்கு வாழ முயற்சி செய்கிறீர்கள்? வாழ்க்கை என்ற தொடர் பயணத்தில் உங்கள் இலக்கு, உங்கள் லட்சியம், இவற்றுக்கு இடையே இசைவு இருக்கிறதா? இதைத் தான் நீங்கள் உற்று நோக்க வேண்டும். நீங்கள் இந்த விஷயங்கள் மீது நம்பிக்கை கொண்டால், மதிப்பெண்கள், காற்றாடியின் வாலைப் போல உங்கள் பின்னே அடக்கமாக அணைந்து வரும்; நீங்கள் மதிப்பெண்களைப் பின்தொடர்ந்து ஓடத் தேவையே இல்லை. வாழ்க்கையில் உங்களுக்கு அறிவு கைகொடுக்கும், திறன் துணை நிற்கும், தன்னம்பிக்கை தோள் கொடுக்கும், மனோபலம் வலு சேர்க்கும். உங்கள் குடும்பத்தில் ஒருவர் மருத்துவராக இருந்தாலோ, உங்கள் குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தாலோ, நீங்கள் அவரிடம் சென்று நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சியடைந்தீர்கள் என்றா கேட்டிருக்கிறீர்களா? யாருமே கேட்டிருக்க மாட்டார்கள் இல்லையா!!  இவர் நன்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், இவரளிக்கும் சிகிச்சை பலனளிக்கிறது என்று தானே அவரது சேவைகளைப் பயன்படுத்துகிறோம். பெரிய வழக்கை வாதாட வக்கீல் ஒருவரை அணுகும் போது, அந்த வக்கீல் பெற்ற மதிப்பெண்களையா நாம் கவனிக்கிறோம்? அந்த வக்கீலின் அனுபவம் என்ன, அவர் வழக்குகளில் பெற்ற வெற்றிப் பயணம் என்ன என்று அல்லவா பார்க்கிறோம்!! ஆகையால் தான் கூறுகிறேன், மதிப்பெண்கள் என்ற சுமை சில வேளைகளில் சரியான திசையில் நாம் செல்வதற்கு தடை போட்டு விடுகிறது. ஆனால் இதற்காக படிக்கவே வேண்டாம் என்று நான் கூற வரவில்லை. உங்களை உரைத்துப் பார்க்க தேர்வுகளின் பயன்பாடு அவசியம் தான். நேற்று வரை என் அறிவின் நிலை என்ன, இன்று நான் எங்கே வந்தடைந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள இது தேவைப்படுகிறது. சில வேளைகளில் நீங்கள் மதிப்பெண்கள் மீது மட்டும் உங்கள் கவனத்தை செலுத்தினால், நீங்கள் குறுக்குவழியைக் கையாள நேரும் அல்லது தேர்வு செய்து சில பகுதிகளை மட்டுமே படிக்க நேரலாம். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்துப் படித்தவற்றைத் தாண்டி வினாக்கள் வந்தால், உங்கள் மனோபலம் குன்றி, நீங்கள் செயல்பாட்டில் வீழ்ச்சி காண நேரும். உங்கள் கவனம் மதிப்பெண்கள் மீதிருந்தால், நீங்கள் மெல்ல மெல்ல குன்றிப் போய் மதிப்பெண்கள் என்னவோ பெற்று விடுவீர்கள்; ஆனால் வாழ்க்கையில் சில வேளைகளில் தோல்வியைத் தழுவ நேரிடும். மாறாக, நீங்கள் உங்கள் அறிவை மையப்படுத்தினால், பல விஷயங்களைக் கற்கும் முயற்சி வெற்றியடையும்.  

ரிச்சா அவர்கள் போட்டி என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார். இது மிகப் பெரிய மனோரீதியிலான போராட்டம். உண்மையில், வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல மற்றவர்களோடு போட்டி என்பது உதவி புரிவதில்லை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல என்னுடன் நான் போடும் போட்டி பேருதவியாக இருக்கிறது. கடந்து போன நாளைக் காட்டிலும் வரவிருக்கும் நாளை எப்படி நான் மேம்படுத்துவது? நடந்து முடிந்த விளைவுகளைக் காட்டிலும் ஏற்படவிருக்கும் விளைவுகளை எப்படி சிறப்பாக ஆக்குவது? இந்த எண்ணப்பாட்டை நீங்கள் பெரும்பாலும் விளையாட்டு உலகில் காணலாம். விளையாட்டு உலகம் பற்றிக் கூறினால் இது உடனே மனதில் பதியும் என்பதால் நான் இந்த எடுத்துக்காட்டை எடுத்துரைத்தேன். விளையாட்டு வீரர்கள் தங்களுடனே போட்டிகளைப் போடுவதால் தான் பெரும்பாலான வெற்றிகள் அவர்கள் வாழ்விலே நடக்கிறது. நீங்கள் சச்சின் தெண்டுல்கர் அவர்களின் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்களேன்! 20 ஆண்டுகள் அவர் பல சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறார், ஒவ்வொரு முறையும் தான் ஏற்படுத்திய முந்தைய சாதனையை விஞ்சி புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். அவரது வாழ்க்கைப் பயணம் மிக அற்புதமானது, ஏனென்றால், மற்றவர்களோடு போட்டி என்பதை விடுத்து அவர் தனக்குத் தானே சவால்களை ஏற்படுத்திக் கொள்ளும் வழியைப் பின்பற்றி வந்திருக்கிறார்.

நண்பர்களே, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நீங்கள் தேர்வு எழுத வேண்டியிருக்கும்; அப்போது நீங்கள் 2 மணி நேரம் படிக்க வேண்டிய வேளையில், 3 மணி நேரம் படிக்க முடிகிறதா?  முன்பு காலை எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்து, அது தாமதம் ஆகியிருக்கலாம், ஆனால் இப்போது தீர்மானித்த வேளையில் எழுந்திருக்க முடிகிறதா? முன்பெல்லாம் தேர்வு பற்றிய அழுத்தம் உங்கள் உறக்கத்தைக் கெடுத்திருக்கலாம், ஆனால் இப்போது நிம்மதியாக உறங்க முடிகிறதா? உங்களை நீங்களே ஆத்மபரிசோதனை செய்து பாருங்கள்; வெளிச்சூழல்கள் விடுக்கும் சவால்களில் தோல்வி, அழுத்தம், ஏமாற்றம், பொறாமை ஆகியவை ஏற்படுவதை நீங்கள் காணலாம்; ஆனால் உங்களுக்கு நீங்களே விடுக்கும் சவால்கள், சுயபரிசோதனை, சுயபரிசீலனை ஆகியவற்றைத் தோற்றுவிக்கும், மனோபலம் அதிகரிக்கும், உங்களை நீங்களே வெற்றி கொள்ளும் போது, மேலும் முன்னேற உற்சாகம் உங்களுக்குள்ளே ஊற்றெடுக்கும், வெளியிலிருந்து எந்த ஒரு கூடுதல் சக்திக்கும் தேவை இருக்காது என்பதை நீங்கள் நன்குணர்வீர்கள். உங்களுக்குள்ளிருந்து ஊற்றெடுக்கும் ஆற்றல் தானே பிரவாகமாகப் பெருகும். இதை எளிய நடையில் கூற வேண்டுமென்றால், மற்றவர்களை மையமாக வைத்துப் போட்டி போடும் போது, 3 சாத்தியக்கூறுகள் ஏற்படுகிறது. ஒன்று நீங்கள் அவரை விட மேம்பட்டவர், இரண்டாவது நீங்கள் அவரை விடத் திறன் குறைந்தவர், மூன்றாவது அவருக்கு இணையானவர். நீங்கள் அவரை விட மேம்பட்டவர் என்றால் கவலை இல்லாமல் இருப்பீர்கள், அதிக நம்பிக்கை உங்களுக்குள்ளே நிரம்பியிருக்கும். நீங்கள் மற்றவரை விடத் திறன் குறைவானவர் என்றால், துக்கமும், ஏமாற்றமும் ஏற்பட்டு, பொறாமை கொப்பளிக்கும், இந்தப் பொறாமை உங்களை அரித்துத் தின்று விடும். நீங்கள் அவருக்கு இணையானவராக இருந்தால், மேம்பாடு அடைய வேண்டிய தேவையை நீங்கள் உணரக் கூட மாட்டீர்கள். நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போக்கிலேயே சென்று கொண்டிருப்பீர்கள். ஆகையால் தான் மற்றவர்களோடு போட்டி போடுவதை விடுத்து, உங்களுக்கு நீங்களே சவால்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். முன்பு என் செயல்பாடு எப்படி இருந்தது, இனி நான் எப்படி முன்னேறுவது, சிறப்பாக எப்படி செயல்படுவது என்பது மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தோடு நீங்கள் அணுகினால் உங்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் நன்குணர முடியும்.

எஸ். சுந்தர் அவர்கள் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். தேர்வுக்காலங்களில் பெற்றோரின் பங்குபணி மிகவும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார். “எனது தாய் அதிக கல்வியறிவு பெற்றவராக இல்லாத போதிலும், அவர் என்னருகே அமர்ந்து கணித வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள என்னை ஊக்குவிப்பார். அவர் விடைகள் சரியா இல்லையா என்று பாடப்புத்தகத்தை வைத்து சரி பார்ப்பார். தவறுகளை திருத்தச் சொல்லுவார். எனது தாய் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், அவரது ஒத்துழைப்பு இல்லை என்றால் என்னால் சி.பி.எஸ்.இ. தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவே முடியாது” என்று அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

சுந்தர் அவர்களே, நீங்கள் கூறுவது முற்றிலும் சரி தான். இன்று கூட என்னிடம் கேள்வி கேட்பவர்கள், எனக்கு ஆலோசனை வழங்குபவர்கள் என்று பார்த்தால், அதில் பெண்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்; ஏனென்றால், வீடுகளில் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக தாய்மார்கள் எத்தனை விழிப்போடு இருக்கிறார்கள், ஆக்கபூர்வமாக செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, அவர்கள் பல விஷயங்களை எளிமையாக்கி விடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது. நாம் 3 விஷயங்கள் மீது அழுத்தம் தர வேண்டும் என்று நான் பெற்றோரிடம் விண்ணப்பிக்கிறேன். ஏற்றுக் கொள்ளுதல், கற்பித்தல், நேரம் ஒதுக்குதல். எது இருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் திறனை ஒட்டி, நீங்கள் வழிகாட்டியாக செயல்படுங்கள்; உங்களுக்கு எத்தனை தான் வேலைகள் இருந்தாலும், நேரம் ஒதுக்குங்கள். ஒருமுறை நீங்கள் ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டால், உங்களின் பெரும்பாலான பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் தாம் பிரச்சனைகளின் ஆணிவேராக இருக்கிறது.  இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் தான் பிரச்சினைகளின் தீர்வுக்கான வழியைத் துலக்கிக் காட்டுகிறது. எதிர்பார்ப்புகள் பாதையை மேலும் கடினமானதாக ஆக்குகிறது. நிலைமையை ஏற்றுக் கொள்வது, புதிய பாதையைத் திறப்பதற்கான திறவுகோலாக இருக்கிறது. ஆகையால் இருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். சுமைநீங்கி சுகம் பெறுவீர்கள். நாம் எப்போதும் பள்ளிக் குழந்தைகளின் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையின் சுமை பற்றி பேசி வருகிறோம்; ஆனால் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும், அபிலாஷைகளும் இருக்கிறதே, அவை பள்ளி செல்லும் குழந்தையின் பைச்சுமையைக் காட்டிலும் அதிக கனமானதாக இருக்கிறதோ என்று கூட எனக்கு சில வேளைகளில் படும்.

பல ஆண்டுகள் முன்பான ஒரு விஷயம். எங்களுக்கு அறிமுகமான ஒருவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாரதத்தின் மக்களவையின் முதல் சபாநாயகர் கணேஷ் தாதா மாவ்லங்கரின் மகனும், மக்களவை உறுப்பினராக இருந்தவருமான புருஷோத்தம் மாவ்லங்கர் வந்தார். அந்த சமயத்தில் நான் அங்கிருந்தேன். வந்தவர் அனுமதிக்கப்பட்டவரிடத்தில் அவரது உடல்நிலை பற்றி எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. வந்தவர் அமர்ந்தார், அங்கே இருந்த நிலை, உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி எதுவும் பேசாமல், நகைச்சுவை துணுக்குகளை உதிர்க்க ஆரம்பித்தார்; அங்கு நிலவிய அழுத்தத்தை முழுவதுமாக இளக்கி விட்டார். ஒரு வகையில் நாம் நோயாளியைக் காணச் சென்று நாம் நோய் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறோம். நாமும் கூட சில வேளைகளில் நம் குழந்தைகளிடம் இப்படி ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறோம் என்றே நான் பெற்றோர்களிடம் கூற விரும்புகிறேன். தேர்வு தினங்களில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு எப்போதேனும் தோன்றியிருக்கிறதா. அப்படி ஏற்படுத்துங்கள், சூழல் முழுவதுமாக மாறிவிடுவதைக் காண்பீர்கள்.

எனக்கு ஒரு அதிசயமான தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அவர் ஏன் தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை என்பதை இதைக் கேட்டால் உங்களுக்கே விளங்கி விடும்.

”வணக்கம், பிரதமர் அவர்களே, நான் என் சிறுவயதில் செய்த ஒரு செய்கை காரணமாக என் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. நான் என் சிறுவயதில் ஒரு முறை காப்பியடிக்க முயற்சி செய்தேன், இதை எப்படி செய்வது என்பது தொடர்பாகத் தெரிந்து கொள்ள பல முயற்சிகளில் ஈடுபட்டேன்; இதன் காரணமாக கணிசமான நேரம் விரயமானது. மதிப்பெண்களைப் பெற நான் விரயமாக்கிய நேரத்தில், அவற்றை நான் படித்தே கூட பெற்றிருக்க முடியும். ஆனால் நான் காப்பியடித்து சிக்கிக் கொண்டதால், என் காரணமாக அக்கம்பக்கம் இருந்த பல நண்பர்களுக்கு கணிசமாகத் தொந்தரவு ஏற்பட்டது.”    

நீங்கள் கூறுவது சரி தான். குறுக்குவழிகள், காப்பியடிக்க காரணமாக அமைந்து விடுகின்றன. சில வேளைகளில் தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால், பக்கத்தில் இருப்பவர் விடைத்தாளைப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாமே, நான் எழுதியது சரியா தவறா என்று சரி பார்த்துக் கொள்ளலாமே என்று தோன்றும்; ஆனால் பக்கத்தில் இருப்பவர் தவறாக எழுதியிருந்தால், நாம் அதை சரியென்று கருதி, அதையே எழுதி, மதிப்பெண்களை இழக்க நேரிடும். காப்பியடிப்பது நல்ல பலனைக் கொடுக்காது. To cheat is to be cheap, so please, do not cheat. ஏமாற்றுவது இழிவானது, ஆகையால் ஏமாற்றாதீர்கள். காப்பியடிக்காதீர்கள் என்ற சொல்லை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள், நானும் அதையே மறுபடி கூறுகிறேன். ஏமாற்றுவது, காப்பியடிப்பது என்பதெல்லாம் உங்களை வீழ்ச்சிப் பாதையை நோக்கி உங்களை இழுத்துச் செல்லும்; தேர்வில் மேற்பார்வையாளரிடம் நீங்கள் சிக்கிக் கொண்டால், உங்கள் எதிர்காலமே பாழாகி விடும். ஒருவேளை நீங்கள் சிக்காமல் தப்பி விட்டால், வாழ்க்கை முழுவதும் நீங்கள் உங்கள் மனதில் பெருஞ்சுமையை சுமக்க நேரிடும், நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு புரிய வைக்க நினைக்கும் போது, குற்றவுணர்வு காரணமாக அவர்கள் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க முடியாது போகும். ஒருமுறை காப்பியடிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டால், வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் தாகம் அற்றுப் போய் விடும். இந்த நிலையில் உங்களால் என்ன சாதிக்க முடியும்?

சிலர் காப்பியடிப்பதில் தங்கள் திறமையையும், படைப்பாற்றலையும் விரயமாக்கி விடுகிறார்கள். இதே திறமையையும், படைப்பாற்றலையும், நேரத்தையும் அவர்கள் தேர்வு தொடர்பான விஷயங்களில் செலுத்தினால், காப்பியடிக்க வேண்டிய தேவையே அவர்களுக்கு ஏற்படாது. தங்கள் சொந்த உழைப்பினால் விளையும் பலன் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அற்புதங்கள் ஏற்படும்.

ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது – ”வணக்கம் பிரதமர் அவர்களே, என் பெயர் மோனிகா. நான் 12ஆம் வகுப்பில் படிப்பதால், என் தேர்வுகள் குறித்து இரண்டு கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். என் முதல் கேள்வி – தேர்வுக்காலங்களில் ஏற்படும் அழுத்தத்தை எப்படிக் குறைப்பது? என் இரண்டாவது கேள்வி, ஏன் தேர்வுகள் என்றாலே படிப்புக்கான நேரம் மட்டுமே, விளையாட்டுக்கான நேரம் அல்ல என்று கருதுகிறோம் ?. நன்றி.”

நான் தேர்வு நாட்களில் விளையாடுவது பற்றிப் பேசினால், இவர் என்ன பிரதமர், பிள்ளைகளுக்குத் தேர்வுகள் இருக்கும் வேளையில், விளையாடு என்கிறாரே என்று உங்கள் ஆசிரியரும், உங்கள் பெற்றோர்களும் என் மீது கோபம் கொள்ளலாம். மாணவர்கள் விளையாட்டுக்கள் மீது கவனம் செலுத்தினால், கல்வியின் மீது கவனக்குறைவு ஏற்பட்டு விடும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இந்த அடிப்படை எண்ணமே தவறு, பிரச்சனையின் ஆணிவேரே இது தான். முழுநிறைவான வளர்ச்சி பெற வேண்டும் என்று சொன்னால், பாடப்புத்தகங்களைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, அது மிக விசாலமானது. அந்த வாழ்க்கையை வாழவும், கற்கவும் இது தான் சரியான சமயம்.

முதலில் நான் என் அனைத்துத் தேர்வுகளையும் எழுதி விட்டுப் பின்னர் விளையாடவோ, வேறு செயல்களில் ஈடுபடுவேன் என்று கூறினால், அது சாத்தியமில்லை. வாழ்க்கையைச் செப்பனிட இது தான் சரியான வேளை. இது தான் சரியான கற்றல். தேர்வுகள் தொடர்பாக 3 விஷயங்களை முக்கியமாக நான் கருதுகிறேன் – முறையான ஓய்வு, தேவையான அளவு உறக்கம், மனச் செயல்பாட்டைத் தாண்டி உடலின் செயல்பாடு என்ற இவைகள் அவசியம். நாம் எதிர்கொள்ள வேண்டியவை இத்தனை நம் முன்னே இருக்கும் போது, சில கணங்கள் வெளியே சென்று, வானத்தைப் பார்த்தால், செடிகொடிகள் பக்கம் கவனத்தைத் திருப்பினால், சற்று மனதை லகுவாக்கினால், ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். இந்த புதுத்தெம்போடு நீங்கள் உங்கள் அறைக்குள் நுழைந்து உங்கள் பாடங்களில் மூழ்கினால், விளைவு அற்புதமாக இருக்கும்.

நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், எழுந்து வெளியே சென்று வாருங்கள், சமையலறைக்குச் செல்லுங்கள், உங்களுக்குப் பிடித்தமானவை ஏதேனும் இருந்தால், அவற்றைத் தேடுங்கள், பிடித்த பிஸ்கட் இருந்தால், அதை உண்ணுங்கள், நகைச்சுவையில் ஈடுபடுங்கள். அது ஐந்தே நிமிட நேரமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக சற்று இளைப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வேலை சிரமமில்லாமல் இருப்பதை உங்களால் உணர முடியும். அனைவருக்கும் இது பிடித்திருக்குமா இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால் இது தான் எனது அனுபவம். இதுபோன்ற வேளைகளில் மூச்சை இழுத்து விடுங்கள், அதிக நன்மைகள் கிடைக்கும், உங்கள் அழுத்தம் குறையும். இப்படி ஆழமாக மூச்சை உள்ளிழுத்து விடுவதை, அறையிலேயே செய்ய வேண்டும் என்பது இல்லை. திறந்த வெளியிலே, மாடிக்குச் செல்லலாம், 5 நிமிட நேரம் மூச்சை இழுத்து விட்ட பின்னர், படிக்கச் செல்லுங்கள், உங்கள் உடல் முழுமையாக ஆசுவாசமாகி விடும், உங்கள் உடலுக்குக் கிடைக்கும் இளைப்பாறுதலை நீங்கள் முழுமையாக உணர முடியும். இதன் விளைவாக உங்கள் மனதுக்கும் இளைப்பாறுதல் கிடைக்கும். இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படித்தால், அதிகம் படிக்க முடியும் என்று சிலருக்குத் தோன்றுகிறது. அப்படி அல்ல, உடலுக்கு எத்தனை உறக்கம் தேவையோ, அதைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும், இதனால் நீங்கள் படிக்கும் நேரம் வீணாகாது, மாறாக, படிக்கும் போது உங்களுக்குத் தேவையான ஆற்றலை இது அதிகப்படுத்திக் கொடுக்கும். உங்கள் கவனம் அதிகரிக்கும், உங்களுக்குப் புத்துணர்வு பெருகும், உங்கள் ஒட்டுமொத்தத் திறனில் அதிகரிப்புக் காணப்படும். தேர்தல் காலங்களில் நான் மேடைகளில் உரையாற்றும் போது, சில வேளைகளில் என் குரல் ஒத்துழைக்க மறுக்கும். ஒரு முறை நாட்டுப்புறப் பாடகர் ஒருவர் என்னை சந்திக்க வந்தார். நீங்கள் எத்தனை நேரம் உறங்குகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். நீங்கள் என்ன மருத்துவரா என்று நான் அவரிடம் கேட்ட போது, அவர், இல்லை இல்லை, தேர்தல் காலங்களில் தொடர்ந்து உரையாற்றுவதால் உங்கள் குரலில் கோளாறு ஏற்படுகிறது, நீங்கள் நிறைவாக உறங்கினால், உங்கள் குரல் நாண்களுக்கு முழுமையான ஓய்வு கிடைக்கும் என்றார். இதுவரை என் உறக்கத்துக்கும், என் உரைக்கும், என் குரலுக்கும் இடையே தொடர்பிருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, அவர் அடிப்படை சிகிச்சையை எனக்கு அளித்தார். இப்படிபப்ட்ட அடிப்படை விஷயங்களின் மகத்துவத்தை நாம் புரிந்து கொண்டால், நமக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.
உறங்கிக் கொண்டே இருங்கள் என்பது இதன் பொருளல்ல; ஆனால் பிரதமரே கூறி விட்டார் என்பதால் எழுந்திருக்க வேண்டிய தேவையில்லை என்று சிலர் கருதலாம். அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள், இல்லையென்றால், உங்கள் குடும்பத்தார் என்னிடம் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள். உங்கள் மதிப்பெண் தாள் வரும் நாள் அன்று, நீங்கள் தென்படவில்லை என்றால், அவர்கள் கண்களுக்கு நான் தான் தென்படுவேன். தயவு செய்து அப்படிச் செய்து விடாதீர்கள். ஆகையால் தான் P for prepared, P for play, தேர்வுக்கும் தயாராக இருங்கள், விளையாடவும் தயாராக இருங்கள் என்கிறேன். The person who plays, shines, யாரொருவர் விளையாட்டில் ஈடுபடுகிறாரோ, அவரே பரிமளிக்கிறார். மனம், புத்தி, உடல் ஆகியவற்றை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது மிகப் பெரிய அருமருந்து.

    சரி, இளைய தோழர்களே, நீங்கள் உங்கள் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நான் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் இன்று கூறியவை உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பவையாக இருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால் நான் கூறியவற்றையே கூட நீங்கள் சுமையாகக் கருதி விடாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் செயல்படுத்திப் பாருங்கள், இல்லை என்றால் செய்யாதீர்கள். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எப்படி சுமையாக ஆகி விடக் கூடாது என்று கூறுகிறேனோ, அந்த விதி எனக்கும் பொருந்தும். நீங்கள் மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், தேர்வெழுதச் செல்லுங்கள், உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு சவாலை எதிர்கொள்ளும் முன்பாகவும், அந்தச் சவாலை கொண்டாட்டமாக மாற்றுங்கள். பிறகு சவால், சவாலாகவே இருக்காது. இந்த மந்திரத்தை மனதில் ஏற்றி, முன்னேறிச் செல்லுங்கள்.

எனதருமை நாட்டுமக்களே, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி, இந்திய கடலோரக் காவற் படையினரின் 40 ஆண்டுக்காலம் நிறைவடைகிறது. இந்தத் தருணத்தில் கடலோரக் காவற் படை அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோருக்கு, அவர்கள் நாட்டுக்காக ஆற்றி வரும் அரும்பணிக்காக நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். 126 கப்பல்களும், 62 விமானங்களும் கொண்ட நமது கடலோரக் காவற்படை உலகின் 4 மிகப்பெரிய கடலோரக் காவற்படைகளில் 4ஆவதாக இருக்கிறது என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். கடலோரக் காவற்படையின் மந்திரம், வயம் ரக்ஷாம் என்பதாகும். தங்களது இந்தக் குறிக்கோளை அடியொற்றி, நாட்டின் கரையோரப் பகுதிகளையும், கடல்புறங்களையும் காக்கும் பணியில் கடலோரக் காவற்படையினர் பாதகமான சூழ்நிலைகளிலும் இரவுபகலாக விழிப்போடு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு கடலோரக் காவற்படையினர் தங்கள் பொறுப்புகளைத் தவிர, நம் நாட்டின் கடல்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தை மேற்கொண்டார்கள், இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்தார்கள். கரையோரப் பாதுகாப்புடன், கரைப்பகுதித் தூய்மை பற்றியும் அவர்கள் கவனம் செலுத்தினார்கள், அவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். நமது நாட்டின் கடலோரக்யோரக் காவற்படையில் ஆண்கள் மட்டுமே இல்லை, பெண்களும் தோளோடு தோள் நின்று சமமாகத் தங்கள் கடமைகளை வெற்றிகரமாக ஆற்றி வருகிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது இருக்கலாம். கடலோரக் காவற்படையின் நமது பெண் அதிகாரிகள், அவர்கள் விமானிகளாகவோ, கண்காணிப்பாளர்களாகவோ இருப்பதோடு, ஹோவர்கிராப்டையும் இயக்கி வருகிறார்கள். கடலோரக் காவல் என்பது உலகின் மிகப்பெரிய விஷயமாக இன்று ஆகியிருக்கும் நிலையில், பாரதத்தின் கரைப்பகுதிப் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் இந்திய கடலோரக் காவற்படைக்கு அவர்களது 40ஆவது ஆண்டை முன்னிட்டு நெஞ்சுநிறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிப்ரவரி 1ஆம் தேதி வசந்த பஞ்சமிப் பண்டிகை. வசந்தகாலம் – மிகச்சிறந்த ஒரு பருவகாலம் என்ற வகையில் இது கொண்டாடப்படுகிறது. வசந்தகாலம் பருவகாலங்களின் அரசன். நம் நாட்டில் வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜைக்கான ஒரு மிகப்பெரிய பண்டிகையாகத் திகழ்கிறது. இது கல்வியைத் துதிக்கும் சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது. அது மட்டுமில்லாமல், இது வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு காலம். மேரா ரங் தே பஸந்தி சோலா, என்னை வசந்தகாலத்துக்கு உரியவனாக ஆக்கு - இது உத்வேகம் அளிக்க கூடிய கருத்து. இந்தப் புனிதமான வசந்த பஞ்சமி பண்டிகையை முன்னிட்டு நான் எனது நாட்டுமக்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் ஆகாசவாணியும் தனது படைப்புத் திறனுக்கு ஏற்ப எப்போதுமே புதிய புதிய வார்ப்புக்களில், புதிய புதிய வண்ணங்களைக் குழைத்துத் தந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் என் மன் கீ பாத் நிறைவடைந்த உடனேயே மாநில மொழிகளில் மனதின் குரலை ஒலிபரப்புகிறார்கள். இது வெகுவான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தொலைவான இடங்களிலிருந்தெல்லாம் மக்கள் கடிதங்கள் எழுதுகிறார்கள். தங்களுக்குத் தாங்களே உத்வேகம் ஏற்படுத்திக் கொண்டு செயல்படும் ஆகாசவாணிக்கு நான் பலப்பல வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். நாட்டுமக்களே, நான் உங்களுக்கும் அளப்பரிய எனது நல்வாழ்த்துகளை செலுத்துகிறேன். மனதின் குரல் வாயிலாக உங்களோடு இணைந்து பயணிக்க எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. நெஞ்சம்நிறை நல்வாழ்த்துகள். நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Rabi acreage tops normal levels for most crops till January 9, shows data

Media Coverage

Rabi acreage tops normal levels for most crops till January 9, shows data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Diplomatic Advisor to President of France meets the Prime Minister
January 13, 2026

Diplomatic Advisor to President of France, Mr. Emmanuel Bonne met the Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

In a post on X, Shri Modi wrote:

“Delighted to meet Emmanuel Bonne, Diplomatic Advisor to President Macron.

Reaffirmed the strong and trusted India–France Strategic Partnership, marked by close cooperation across multiple domains. Encouraging to see our collaboration expanding into innovation, technology and education, especially as we mark the India–France Year of Innovation. Also exchanged perspectives on key regional and global issues. Look forward to welcoming President Macron to India soon.

@EmmanuelMacron”