சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், பசுமை போக்குவரத்திற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினமான 2025 ஜூன் 5 அன்று புதுதில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் நடைபெறும் சிறப்பு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்குவார்.
தாயின் பெயரால் ஒரு மரக்கன்று முன்முயற்சியின் கீழ் ஒரு ஆலமரக்கன்றை பிரதமர் நடுவார். இது 700 கி.மீ. ஆரவல்லி பகுதியை மீண்டும் வனமாக்கும் ‘ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தின்’ ஒரு பகுதியாக இருக்கும்.
தில்லி, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 29 மாவட்டங்களை உள்ளடக்கிய ஆரவல்லி குன்றுப்பகுதியில் 5 கி.மீ. பரப்பளவை பசுமையாக்கும் ஒரு பெரிய திட்டமாக இது இருக்கும். வன வளர்ப்பு, வன மீட்டுருவாக்கம், நீர்நிலைகளை மீட்டமைத்தல் மூலம் ஆரவல்லி பகுதியில் பல்லுயிர் பெருக்கத்தை ஊக்கப்படுத்துவது இதன் நோக்கமாகும். இந்தப் பகுதியில் மண்வளம், தண்ணீர் சேமிப்பு, பருவநிலை தாங்குதிறன் ஆகியவற்றை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் உள்ளூர் சமூகங்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும்.
தூய்மையான நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு தேசத்தின் கூட்டான பொறுப்பின் அடையாளமாக தில்லி அரசின் நீடிக்கவல்ல போக்குவரத்து முன்முயற்சியின் கீழ் 200 மின்சார பேருந்துகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைப்பார்.


