பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மர் 2025 அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் திரு ஸ்டார்மருடன் வர்த்தக அமைச்சர் பீட்டர் கைல், ஸ்காட்லாந்து அமைச்சர் திரு டக்லஸ் அலெக்சாண்டர், முதலீட்டுத்துறை அமைச்சர் திரு ஜேசன் ஸ்டாக்வுட், 125 தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கலாச்சார தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலை குழு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.
இது பிரதமர் திரு ஸ்டார்மரின் முதலாவது அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும். 2025 ஜூலை 23-24 அன்று இந்தியப் பிரதமர் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர், இந்தியா வருகை தந்துள்ளார். அப்போது இரு தரப்பினரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-இங்கிலாந்து இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும், இந்தியா-இங்கிலாந்து தொலைநோக்கு பார்வை 2035 மற்றும் பாதுகாப்பு தளவாட தொழில்துறை திட்டத்தையும் ஏற்றுக்கொண்டனர்.
மும்பையில் 2025 அக்டோபர் 09 அன்று நடைபெற்ற உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவில் பிரதமர் திரு மோடியும் பிரதமர் திரு ஸ்டார்மரும் முக்கிய உரையாற்றினார்கள். பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுகளிலும் தலைவர்கள் ஈடுபட்டனர். இந்தியா-இங்கிலாந்து இடையேயான விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். மேலும், உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கான பொதுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். பரஸ்பரம் இருதரப்பு ஆர்வமுள்ள உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
வளர்ச்சி:
இந்தியா-இங்கிலாந்து உச்சிமாநாட்டின் போது மும்பையில் நடைபெற்ற தலைமை செயல்அதிகாரிகள் மன்றத்தின் கூட்டத்திற்கு பிரதமர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்தியா-இங்கிலாந்து இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் அங்கீகரித்து அதன் நன்மைகளை உணர இரு தலைவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
விமானப் போக்குவரத்துத் துறையில் இணைப்பை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இரு பிரதமர்களும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர், மேலும் விமானப் போக்குவரத்து தொடர்பான பிற விஷயங்களுடன் இந்தியா-இங்கிலாந்து விமான சேவை ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து இரு தரப்பினரும் விவாதித்து வருவதை வரவேற்றனர். இது விண்வெளித் துறை முழுவதும் நெருக்கமான ஒத்துழைப்புக்கான இரு நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள்:
முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், உலகளாவிய புதுமை கண்டுபிடிப்புகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு நாட்டு பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். தொழில்நுட்ப பாதுகாப்பு முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, தொலைத்தொடர்பு, முக்கியமான கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, சுகாதார தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள உறுதியான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர்.


