இந்தியா துணிச்சலான முடிவுகளை நம்பிக்கையுடன் எடுத்துக் கொண்டிருப்பதுடன், அவற்றை வேகமாக நிறைவேற்றி வருவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்தியா பெரும் செயல்களைச் செய்வதுடன், அவற்றை சிறப்பாகவும் செய்வதாக பிரதமர் கூறினார். அகமதாபாத் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பூமி பூஜை மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டத் தொடக்கவிழாவில் இன்று காணொலி மூலம் பங்கேற்ற பின்னர் அவர் உரையாற்றினார்.
உலகின் மிக உயரமான சிலை, உலகின் குறைந்த விலையிலான பெரிய வீட்டு வசதித் திட்டம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆறு லட்சம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு, அண்மையில் தொடங்கப்பட்ட உலகின் பெரும் தடுப்பூசி இயக்கம் ஆகியவை இந்த சிந்தனையின் உதாரணங்கள் என அவர் விளக்கினார்.
ஹசிரா, கோங்காவுக்கு இடையே ரோ-பாக்ஸ் படகு சேவைகள், கிர்னார் ரோப்-வே ஆகியவை உள்ளூர் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் விரைவான திட்ட செயல்பாட்டுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இத்திட்டங்கள், கோங்கா மற்றும் ஹசிராவுக்கு இடையிலான 375 கி.மீ தூரம், படகு போக்குவரத்து மூலம் 90 கி.மீட்டராக குறைவதால், நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது. இந்தச் சேவையை இரண்டு மாதங்களுக்குள் 50 ஆயிரம் பேர் பயன்படுத்தியுள்ளனர். 14 ஆயிரம் வாகனங்கள் இந்தச் சேவை மூலம் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. இது, இந்தப் பகுதியின் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு உதவியுள்ளது. இதுபோல், கிர்னார் ரோப்-வே-யை இரண்டரை மாதங்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர்.
மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்து கொண்டு வேகமாக உழைப்பதன் மூலம் மட்டுமே புதிய இந்தியாவின் இலக்கை அடைய முடியும் என பிரதமர் தெரிவித்தார். இந்த வழியில் தமது பிரகதி திட்டத்தை திரு மோடி முன்வைத்தார். பிரதமர் தலைமையிலான பிரகதி, நாட்டின் செயல்பாட்டு கலாச்சாரத்துக்கு புதிய உத்வேகத்தை கொண்டு வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாம் மறு ஆய்வு செய்துள்ளதாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த திட்டங்கள் நிறைவை எட்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.