-
பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவிக்காலத்தில், இதுவரை அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களுக்கான இருவார கால ஏலம், சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
இந்த ஏலத்திற்கு இந்திய மக்களிடமிருந்து அமோக வரவேற்பு காணப்பட்டது. தேசிய கலைப்பொருட்கள் அருங்காட்சியகத்தில் நேரில் இரண்டு நாட்களும், மின்னணு முறையில் pmmementos.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் இரண்டு பிரிவுகளாக இந்த ஏலம் நடைபெற்றது.
இந்த காலகட்டத்தில், 1,800-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள், அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர்களுக்கு வெற்றிகரமாக ஏலத்தில் விடப்பட்டது.
இந்த ஏலம் மூலம் கிடைத்த தொகை, கங்கையை தூய்மைப்படுத்தும் உன்னத பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
ஏலத்தின் முக்கிய அம்சங்கள்
தேசிய கலைப்பொருட்கள் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஏலத்தின் போது, பிரத்யேகமாக கையால் தயாரிக்கப்பட்ட மரத்தாலான மோட்டார் சைக்கிள் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனது. ரயில்வே துறையுடன் நரேந்திர மோடிக்கு உள்ள சிறப்பு பிணைப்பை எடுத்துரைக்கும் விதமாக பிரதமர் மோடி ரயில் நிலைய நடைமேடையில் இருப்பது போன்ற, அரிய கலை அம்சத்துடன் தயாரிக்கப்பட்ட ஓவியமும் இதேபோன்று அதிக விலைக்கு ஏலம் போனது.
மின்னணு ஏல முறையிலும் சில பொருட்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டன.
- ரூ.5000/- மதிப்புள்ள சிவபெருமான் சிலை, அதன் அடிப்படை விலையைவிட 200 மடங்கு அதிகமாக ரூ.10 லட்சத்திற்கு ஏலம் போனது.
- அசோகா ஸ்தூபி போன்ற ரூ.4000/- மதிப்புள்ள மரத்தாலான பரிசுப் பொருள் ரூ.13 லட்சத்திற்கு ஏலம் போனது.
- அசாம் மாநிலம் மஜூலியில் பெறப்பட்ட ரூ.2000/- மதிப்புள்ள பாரம்பரிய “ஹோராய்” (அசாம் மாநிலத்தின் பாரம்பரிய சின்னம் – தாங்கியுடன் கூடிய பன்னீர்செம்பு) ரூ.12 லட்சத்திற்கு ஏலம் போனது.
- அமிர்தசரஸ், சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டியால் வழங்கப்பட்ட “தெய்வீகத்தன்மை” என்ற பெயரிட்ட ரூ.10,000/- மதிப்புள்ள பரிசுப் பொருள் ரூ.10.1 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
- ரூ.4,000/- மதிப்புள்ள கௌதம புத்தர் சிலை ரூ.7 லட்சத்திற்கு விற்பனையானது.
- நேபாள முன்னாள் பிரதமர் திரு சுஷில் கொய்ராலாவால் வழங்கப்பட்ட பாரம்பரிய முறையிலான பித்தளையாலான சிங்கம் சிலை ரூ.5.20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
- ரூ.10000/- விலையுள்ள சித்திரங்கள் பொறிக்கப்பட்ட வெள்ளி கிண்டி (Kalash) ரூ.6 லட்சத்திற்கு விற்பனையானது.




இதேபோன்று வேறு ஏராளமான பரிசு பொருட்களும் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலையை விட, பன்மடங்கு அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளன.
பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதும், தமக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை ஏலத்தில் விட்டு, அதன்மூலம் கிடைத்த தொகையை பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தினார். அதே நடைமுறையை தற்போதும் பின்பற்றி, அதன் மூலம் கிடைத்த தொகையை கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்த உள்ளார்.


