மாண்புமிகு, எனது இளைய சகோதரி, பிரதமர் டகாய்ச்சி அவர்களே,

நமது இரு நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்களே,

நமஸ்காரம்,

கொன்னிச்சிவா ,

இந்தியா-ஜப்பான் கூட்டுப் பொருளாதாரக் கூட்டமைப்பில் உங்கள் அனைவருடனும் கலந்துகொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கே இடம்பெற்றுள்ள பல நிறுவனங்கள் பல தசாப்தங்களாக இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவின் பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன.

இந்தக் கூட்டமைப்பில் புதிதாக இணையும் எங்களது புதிய கூட்டாளிகளுக்கு, இந்தியா-ஜப்பான் வெற்றிப் பயணத்தின் ஒரு அங்கமாக மாறியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

இந்தியா-ஜப்பான் உறவு உண்மையிலேயே சிறப்பானது.

எங்களது பொருளாதாரக் கூட்டாண்மையின் வெற்றிக்கு பல சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன.

சற்று நேரத்திற்கு முன்புதான், ஹரியானாவின் கர்கோடாவில் மாருதி சுஸுகியின் புதிய உற்பத்தி ஆலையை நாங்கள் தொடங்கி வைத்தோம். இன்று, உலகம் முழுவதும் விற்பனையாகும் சுஸுகி கார்களில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பிரதமர் டகாய்ச்சி அவர்களே, உங்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று நான் கேள்விப்பட்டேன். கவாசகி, யமஹா மற்றும் ஹோண்டா நிறுவனங்களால் இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் இன்று உலகம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அதேபோல், ஏர் கண்டிஷனர்கள், மின் கட்டமைப்பு உபகரணங்கள், துல்லியமான உற்பத்தி அல்லது மருத்துவத் தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும், ஜப்பானின் நிபுணத்துவமும் முதலீடும் இந்தியாவின் வேகம் மற்றும் அளவீட்டுடன் இணையும்போது, ஒட்டுமொத்த உலகமும் பயனடைகிறது.

நண்பர்களே,

இன்று, உலகப் பொருளாதாரம் விநியோகச் சங்கிலி இடையூறுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறது...

ஆனால், "நெருக்கடியான காலங்களில் உறுதியானவர்கள் செயல்படத் தொடங்குவார்கள்"  என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாகத் திகழ்கிறது.

கடந்த நிதியாண்டில், இந்தியா 7.7 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது.

 

அதுமட்டுமல்லாமல், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக, 'கைசென்'  - அதாவது தொடர்ச்சியான முன்னேற்றத்தின் தத்துவம் - என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் பொருளாதார டிஎன்ஏ-வை  நாங்கள் மாற்றியமைத்து வருகிறோம்.

சில மாதங்களுக்கு முன்புதான், வரி விதிப்பு, நிர்வாகம் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகிய துறைகளில் புதிய தலைமுறை சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.

நாங்கள் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் தனியார் துறை அதிக அளவில் பங்கேற்கும் வகையில் திறந்து விடுகிறோம்.

அதே நேரத்தில், பல்வேறு முக்கியத் துறைகளில் சலுகைகளை வழங்கி வருகிறோம்; இதன் மூலம் உங்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

இதனால்தான், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி நடத்திய ஆய்வில், தொடர்ந்து நான்காவது ஆண்டாக, ஜப்பானிய வணிகங்களுக்கு மிகவும் நம்பிக்கையூட்டும் இடமாக இந்தியா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று, உங்களுடன் ஒரு புதிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பிரதமரின் அலுவலகம் (PMO) ஒரு பிரத்யேக 'ஜப்பான் வணிக வாரத்தை' (Japan Business Week) ஏற்பாடு செய்யும். இந்த முயற்சியின் போது, பிரதமரின் அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உங்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, உங்கள் கவலைகளைக் கேட்டு, இந்தியாவில் ஜப்பானிய முதலீடுகள் மற்றும் கூட்டாண்மையை மேலும் எளிதாக்கும் நோக்கத்தில், வணிகம் செய்வதை மேலும் சுலபமாக்குவது குறித்து ஆழமான விவாதங்களை நடத்துவார்கள்.

 

நண்பர்களே,

இன்று, பிரதமர் டகாய்ச்சி அவர்களும் நானும், நமது கூட்டாண்மையை இன்னும் ஆற்றல் மிக்கதாகவும் ஆழமானதாகவும் மாற்ற தீர்மானித்துள்ளோம்.

பொருளாதார பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாங்கள் ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம். இவை நமது கூட்டாண்மையை எதிர்கால நோக்குடையதாகவும், எல்லையற்றதாகவும் மாற்றும்.

எங்கள் இரு அரசாங்கங்களுக்கு இடையே  உத்திசார் ஒருங்கிணைப்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தெளிவு உள்ளது.

இந்த பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை உறுதியான முடிவுகளாக மாற்றுவது இப்போது உங்கள் பொறுப்பாகும்.

நண்பர்களே,

அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் ஜப்பானிய முதலீடு 10 டிரில்லியன் யென் இலக்கை அடைவது மட்டுமல்லாமல், அதைத் தாண்டிச் செல்வதை நீங்கள் கூட்டாக உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் செயல்படும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க நாம் பாடுபட வேண்டும்.

நண்பர்களே,

உங்களுடன் ஒரு தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் சந்தை ஆற்றலும் இணைந்து, செமிகண்டக்டர்கள், மருந்துகள் மற்றும் முக்கியமான கனிமங்கள்  ஆகியவற்றில் உலகிற்கு வலுவான விநியோகச் சங்கிலிகளை வழங்கும் ஒரு உலகத்தை நான் கற்பனை செய்கிறேன்.

 

ஜப்பானின் மூலதனமும் இந்தியாவின் லட்சியமும் இணைந்து கப்பல் கட்டுதல், போக்குவரத்து மற்றும் தூய எரிசக்தி துறைகளில் புதிய உலகளாவிய தலைமைத்துவத்தை உருவாக்கும் இடமாக அது இருக்கும்.

இந்தியா மற்றும் ஜப்பானின் புத்தொழில் சூழலமைப்புகள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகின் அடுத்த தலைமுறை தீர்வுகளை முன்னெடுக்கும் இடமாக அது இருக்கும்.

மேலும், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் முன்னெப்போதும் இல்லாத ஒத்துழைப்பு, உலகளாவிய பாதுகாப்பிற்கு நாம் இன்னும் வலுவான பங்களிப்பை வழங்க உதவும் இடமாக அது இருக்கும்.

நண்பர்களே,

நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தப் பங்களிப்பின் மூலம், பரஸ்பர வளர்ச்சிக்கும் உலகளாவிய நன்மைக்கும் வழிவகுப்போம்.

டொயோட்டா  நிறுவனம் சொல்வது போல, "வாருங்கள், புதிய இடங்களுக்குச் செல்வோம்" .

மிக்க நன்றி.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Give mothers, sisters their due rights’: PM Modi pushes for women's reservation from the ramparts of Red Fort

Media Coverage

‘Give mothers, sisters their due rights’: PM Modi pushes for women's reservation from the ramparts of Red Fort
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 16, 2026
August 16, 2026

Aatmanirbhar Ambitions Meet Global Alliances: The Modi Doctrine in Action