வளரும் இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் வளர்ச்சியின் மாதிரியாக தில்லியை நாங்கள் மாற்றுகிறோம்: பிரதமர்
மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே எங்களது தொடர்ச்சியான நடவடிக்கை - அதுவே ஒவ்வொரு கொள்கையையும் ஒவ்வொரு முடிவையும் வழிநடத்தும் குறிக்கோளாக உள்ளது: பிரதமர்
எங்களைப் பொறுத்தவரை, சீர்திருத்தம் என்பது நல்லாட்சியின் விரிவாக்கம்: பிரதமர்
அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் மக்களுக்கு இரட்டை நன்மைகளைக் கொண்டுவரும்: பிரதமர்
இந்தியாவை வலிமையாக்க ஸ்ரீ கிருஷ்ணரிடம் உத்வேகம் பெற வேண்டும் - இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்ற மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
உள்ளூர் மக்களுக்கு ஆதரவு அளித்து இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவோம்: பிரதமர்

எனது அமைச்சரவை நண்பர் திரு நிதின் கட்கரி அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் சக்சேனா அவர்களே, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திரு ஹர்ஷ் மல்கோத்ரா அவர்களே, தில்லி மற்றும் ஹரியானாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாநில அமைச்சர்களே, இதர பிரதிநிதிகளே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே,

விரைவுச் சாலையின் பெயர் துவாரகா, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் பெயர் ரோகிணி, ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்துடன் தற்செயலாக நானும் துவாரகாதீஷ் அமைந்துள்ள பகுதியை சேர்ந்தவராக இருப்பதுடன் ஒட்டுமொத்த சூழலும் பகவான் கிருஷ்ணரின் ஆசிகளால் நிரம்பியுள்ளது.

நண்பர்களே,

நடைபெறும் ஆகஸ்ட் மாதம், சுதந்திரம் மற்றும் புரட்சியின் வண்ணங்களால் நிறைந்துள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு இடையே, நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சியை நோக்கிய புரட்சிகரமான நடவடிக்கைகளை தேசிய தலைநகர் தில்லி சந்தித்து வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு துவாரகா விரைவுச் சாலை மற்றும் நகர விரிவாக்க சாலைத் திட்டங்களின் இணைப்பை தில்லி பெற்றது. இதன் மூலம் தில்லி, குருகிராம் மற்றும் ஒட்டுமொத்த தேசிய தலைநகர் பிராந்திய மக்களின் வசதிகள் அதிகரிக்கும். அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பயணம் எளிதாவதுடன், அனைவரது நேரமும் சேமிக்கப்படும். வர்த்தகப் பிரிவினரும் நமது விவசாயிகளும் இதனால் சிறப்புப் பயன்களை அடைவார்கள். இத்தகைய நவீன சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றதற்காக தில்லி-தேசியத் தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

 

நண்பர்களே,

நேற்று முன்தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாட்டின் பொருளாதாரம், தன்னிறைவு மற்றும் தன்னம்பிக்கை பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் நான் செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து உரையாற்றினேன். இந்தியாவின் சிந்தனை, கனவுகள் மற்றும் அதன் தீர்மானங்கள் பற்றி இன்று ஒட்டுமொத்த உலகமும் பேசுகிறது.

நண்பர்களே,

இந்தியா பற்றிய பார்வை என்று வரும்போதும், அதை மதிப்பீடு செய்யும் போதும், உலக நாடுகளின் கவனத்திற்கு முதலில் வருவது நமது தலைநகரான தில்லி தான். எனவே வளர்ந்து வரும் இந்தியாவின் தலைநகரம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தில்லியை வளர்ச்சியின் மாதிரியாக நாம் மாற்ற வேண்டும்.

நண்பர்களே,

இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த 11 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. போக்குவரத்து இணைப்பு சார்ந்த விஷயத்தைப் பொறுத்தவரை, தில்லி-தேசிய தலைநகர் பிராந்தியம் இடையேயான இணைப்பு கடந்த தசாப்தத்தில் முன் எப்போதும் இல்லாத முன்னேற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இங்கு நவீன மற்றும் விரிவான விரைவுச் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தில்லி- தேசிய தலைநகர் பிராந்தியத்தின் மெட்ரோ இணைப்பைப் பொறுத்தவரை உலகின் பிரம்மாண்டமான இணைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நமோ பாரத் போன்ற நவீன விரைவு ரயில் அமைப்பு முறையும் இங்கு உள்ளது. அதாவது, தில்லி- தேசிய தலைநகர் பிராந்தியம் இடையேயான பயணம், கடந்த 11 ஆண்டுகளில் முன்பை விட மேலும் எளிமையானதாக மாறி உள்ளது.

 

நண்பர்களே,

தில்லியை தலைசிறந்த நகரமாக மாற்றுவதற்கு நாம் மேற்கொண்டுள்ள பணிகள் தொடர்கின்றன. இன்றும் கூட நாம் இதைக் காண்கிறோம். துவாரகா விரைவுச் சாலை, நகர விரிவாக்க சாலை முதலியவை போற்றத்தக்க வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. புற விரைவுச் சாலையைத் தொடர்ந்து, தற்போது நகர விரிவாக்க சாலையும் தில்லி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகிறது.

நண்பர்களே,

நகர விரிவாக்க சாலையில் மற்றொரு அம்சமும் உள்ளது. மலை போல குவிந்திருக்கும் கழிவுகளில் இருந்து தில்லியை மீட்கவும் இது உதவுகிறது. நகர விரிவாக்க சாலையின் கட்டமைப்பில் ஏராளமான கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குவிந்திருக்கும் கழிவுகளைக் குறைத்து,  அவற்றை சாலைகளைக் கட்டமைப்பதற்கு கழிவுப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்தப் பணி அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பால்ஸ்வா குப்பை கிடங்கு அருகில் உள்ளது. அதைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு அதனால் ஏற்படும் இன்னல்களை நாம் அனைவரும் அறிவோம். இதுபோன்று ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் தில்லி மக்களை விடுவிப்பதற்காக எங்கள் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

தில்லியில் திருமதி ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு, யமுனை நதியை  புனரமைக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். குறுகிய காலத்தில் 16 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். இது மட்டுமல்லாமல், சொற்ப காலத்தில் தில்லியில் 650 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 2000 ஆக உயரக்கூடும். பசுமை தில்லி- தூய்மையான தில்லி என்ற தாரக மந்திரத்தை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது.

 

நண்பர்களே,

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தலைநகர் தில்லியில்  பாஜக அரசு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் நீண்ட காலம் ஆட்சியில் இல்லை, முந்தைய அரசுகள் தில்லியை எப்படி நாசமாக்கியுள்ளன, தில்லி எப்படி ஒரு குழிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் காண்கிறோம், நீண்ட காலமாக அதிகரித்து வரும் பிரச்சினைகளிலிருந்து தில்லியை மீட்டெடுப்பது புதிய பாஜக அரசுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். முதலில், குழியை நிரப்புவதில் ஆற்றல் செலவிடப்படும், பின்னர் மிகுந்த சிரமத்துடன் சில வேலைகள் கண்களில் தென்படும். ஆனால் தில்லியில்  நீங்கள் தேர்ந்தெடுத்த குழு கடுமையாக உழைத்து, கடந்த பல தசாப்தங்களாக தில்லி சந்தித்து வரும் பிரச்சினைகளிலிருந்து தில்லியை மீட்டெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் என எல்லா இடங்களிலும் பாஜக அரசு இருக்கும் தற்செயல் நிகழ்வு, முதல் முறையாக நடந்துள்ளது. இந்த முழு பிராந்தியமும் பாஜகவையும் எவ்வளவு ஆசீர்வதித்துள்ளது என்பதை இது காட்டுகிறது. எனவே, எங்கள் பொறுப்பைப் புரிந்துகொண்டு, தில்லி- தேசிய தலைநகர் பிராந்தியத்தின் வளர்ச்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும், மக்களின் இந்த ஆசீர்வாதத்தை இன்னும் ஜீரணிக்க முடியாத சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் மக்களின் நம்பிக்கையிலிருந்தும், கள யதார்த்தத்திலிருந்தும் மிகவும் துண்டிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு தில்லி மற்றும் ஹரியானா மக்களை ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டி, அவர்களுக்கு இடையே பகைமையை உருவாக்க சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதை நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள்.  ஹரியானா மக்கள் தில்லியின் தண்ணீரை விஷமாக்குவதாகக் கூட கூறப்பட்டது. தில்லியும் முழு  தேசிய தலைநகர் பிராந்தியமும் அத்தகைய எதிர்மறை அரசியலிலிருந்து விடுபட்டுள்ளன. இப்போது நாம்  தேசிய தலைநகர் பிராந்தியத்தை  மாற்றும் உறுதியுடன் முன்னேறி வருகிறோம். அதைச் செய்வோம் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,

நல்லாட்சி என்பது பாஜக அரசுகளின் அடையாளம். பாஜக அரசுகளைப் பொறுத்தவரை, பொதுமக்கள்தான் உயர்ந்தவர்கள். நீங்கள்தான்  எங்கள்  உயர் அதிகாரிகள்; மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே எங்கள் நிலையான முயற்சி. இது எங்கள் கொள்கைகளில் பிரதிபலிக்கிறது, இது எங்கள் முடிவுகளில் தெரியும். காங்கிரஸ், ஹரியானாவை ஆட்சி செய்த காலம் ஒன்று இருந்தது, அப்போது பணம் அல்லது சலுகைகள் இல்லாமல் ஒரு நியமனம் கூட பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் ஹரியானாவில், பாஜக அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்கியுள்ளது. திரு நயப் சிங் சைனி தலைமையில் இந்த செயல்முறை தொடர்கிறது.

நண்பர்களே,

தில்லியிலும், குடிசைகளில் வசித்து வந்தவர்கள், சொந்த வீடுகள் இல்லாதவர்கள், கான்கிரீட் வீடுகளைப் பெறுகிறார்கள். மின்சாரம், தண்ணீர், எரிவாயு இணைப்பு போன்ற வசதிகள் இல்லாத இடங்களில், இவை  அனைத்தும் வழங்கப்படுகின்றன. நாட்டைப் பற்றி நான் பேச வேண்டுமானால், கடந்த 11 ஆண்டுகளில், நாட்டில் சாதனை எண்ணிக்கையிலான சாலைகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் நமது ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் நம்மை பெருமைப்படுத்துகின்றன. சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தேசிய தலைநகர் பிராந்தியத்தில்  எத்தனை விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன என்று பாருங்கள். இப்போது ஹிண்டன் விமான நிலையத்திலிருந்தும் பல நகரங்களுக்கு விமானங்கள் செல்லத் தொடங்கியுள்ளன. நொய்டாவில் உள்ள விமான நிலையமும் மிக விரைவில் தயாராகப் போகிறது.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில் நாடு தனது பழைய நடைமுறைகளை மாற்றியமைத்தபோதுதான் இது சாத்தியமானது. நாட்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பு நிலை, அது உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய வேகம், கடந்த காலத்தில் நடக்கவில்லை. இப்போது நம்மிடம் கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச் சாலை உள்ளது. தில்லி-தேசிய தலைநகர் பிராந்தியம்  பல தசாப்தங்களாக இதன் தேவையை உணர்ந்து வந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தின் போது, இது தொடர்பான கோப்புகள் நகரத் தொடங்கின. ஆனால் நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தபோது, மத்தியிலும் ஹரியானாவிலும் பாஜக அரசுகள் அமைக்கப்பட்டபோது,  பணிகள் தொடங்கின. இன்று இந்த சாலைகள் மிகுந்த பெருமையுடன் சேவைகளை வழங்குகின்றன.

 

நண்பர்களே,

வளர்ச்சித் திட்டங்களை நோக்கிய  இந்த அலட்சிய நிலை தில்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் காணப்பட்டது. முதலாவதாக, உள்கட்டமைப்பிற்கான பட்ஜெட் முன்பு மிகக் குறைவாக இருந்தது, அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் கூட பல ஆண்டுகளாக முடிக்கப்படவில்லை. கடந்த 11 ஆண்டுகளில், உள்கட்டமைப்பு பட்ஜெட்டை 6 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளோம். இப்போது திட்டங்களை விரைவாக முடிக்க  முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால்தான் இன்று துவாரகா விரைவுச் சாலை போன்ற திட்டங்கள் முடிக்கப்படுகின்றன.

சகோதர சகோதரிகளே,

இவ்வளவு பணம் முதலீடு செய்யப்படுவதால், வசதிகள் உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல், இந்தத் திட்டங்கள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. இவ்வளவு கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது, தொழிலாளர்கள் முதல், பொறியாளர்கள் வரை லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களுடன் தொடர்புடைய தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை மையங்களில் வேலைகள் அதிகரிக்கின்றன. போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

நண்பர்களே,

நீண்ட காலமாக அரசுகளை அமைத்து வருபவர்களுக்கு, மக்களை ஆள்வதே மிகப்பெரிய குறிக்கோளாக இருந்தது. மக்களின் வாழ்க்கையில் அரசின் அழுத்தம் மற்றும் தலையீடு இரண்டையும் முடிவுக்குக் கொண்டுவருவதே எங்கள் நோக்கம். தில்லியில்  முன்பு இருந்த நிலைமைக்கு மற்றொரு உதாரணத்தை நான் உங்களுக்குத் தருகிறேன். இதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். தில்லியில்  உள்ள எங்கள் தூய்மை நண்பர்கள், துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள சக ஊழியர்கள் அனைவரும் மிகப் பெரிய பொறுப்பை வகிக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன், முதலில் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் முந்தைய அரசுகள் இந்த மக்களை தங்கள் அடிமைகளாகக் கருதின. நான் என்னுடைய துப்புரவு சகோதரர்களைப் பற்றிப் பேசுகிறேன். அரசியலமைப்பை தலையில் சுமந்து நடனமாடுபவர்கள், அரசியலமைப்பை எவ்வாறு நசுக்கினார்கள், பாபா சாகேப்பின் உணர்வுகளை எவ்வாறு காட்டிக் கொடுத்தார்கள் என்று இன்று நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் திகைத்துப் போவீர்கள். தில்லியில்  துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் என் சகோதர சகோதரிகளுக்கு, இந்த நாட்டில், தில்லியில்  ஒரு ஆபத்தான சட்டம் இருந்தது. தில்லி மாநகராட்சிச் சட்டத்தில் ஒரு விஷயம் எழுதப்பட்டுள்ளது. அதாவது, ஒரு துப்புரவுத் தொழிலாளி தகவல் தெரிவிக்காமல் வேலைக்கு வரவில்லை என்றால், அவரை ஒரு மாதம் சிறையில் அடைக்கலாம். நீங்களே சிந்தித்துப் பாருங்கள், ஒரு சிறிய தவறுக்காக அவர்களை சிறையில் அடைப்பீர்களா? இன்று சமூக நீதியைப் பற்றிப் பெரிதாகப் பேசுபவர்கள், நாட்டில் இதுபோன்ற பல விதிகள் மற்றும் சட்டங்களைப் பராமரித்து வருகின்றனர். இதுபோன்ற தவறான சட்டங்களைத் தோண்டித் தேடி அவற்றை நீக்குவது மோடிதான். எங்கள் அரசு ஏற்கனவே இதுபோன்ற நூற்றுக்கணக்கான சட்டங்களை ஒழித்துள்ளது, இந்தப் பிரச்சாரம் தொடர்கிறது.

 

நண்பர்களே,

எங்களைப் பொறுத்தவரை, சீர்திருத்தம் என்பது நல்லாட்சியின் விரிவாக்கம் ஆகும். எனவே, நாங்கள் தொடர்ந்து சீர்திருத்தத்தை வலியுறுத்துகிறோம். வரும் காலங்களில், வாழ்க்கை மற்றும் வணிகம் ஆகிய அனைத்தையும் எளிதாகும் வகையில் பல பெரிய சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறோம்.

நண்பர்களே,

இந்த வரிசையில், அடுத்த தலைமுறை சீர்திருத்தம் ஜிஎஸ்டியில் நடக்கப் போகிறது. இந்த தீபாவளியில், நாட்டு மக்கள் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் இரட்டை போனஸைப் பெறப் போகிறார்கள். அதன் முழுமையான வடிவத்தை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளோம். இந்திய அரசின் இந்த முயற்சிக்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன். இந்த தீபாவளி இன்னும் சிறப்பாக இருக்கும் வகையில் இந்த செயல்முறையை விரைவில் நிறைவு செய்வோம். ஜிஎஸ்டியை மேலும் எளிமைப்படுத்தி வரி விகிதங்களை திருத்துவதே எங்கள் முயற்சி. ஒவ்வொரு குடும்பமும், ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும், ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய தொழில்முனைவோரும், ஒவ்வொரு வர்த்தகரும், தொழிலதிபரும் இதன் மூலம் பயனடைவார்கள்.

 

நண்பர்களே,

இந்தியாவின் மிகப்பெரிய சக்தி நமது பண்டைய கலாச்சாரம், நமது பண்டைய பாரம்பரியம். இந்தத் கலாச்சார பாரம்பரியம் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டுள்ளது, ஒரு வாழும் தத்துவத்தைக் கொண்டுள்ளது, மேலும் இந்த வாழ்க்கைத் தத்துவத்திற்குள்தான் ”சக்கரதாரி மோகன்” மற்றும் ”சர்க்கதாரி மோகன்” ஆகிய இருவரையும் நாம் எதிர்கொள்கின்றோம். சக்கரதாரி மோகன் என்றால் சுதர்சன சக்கரத்தைத் தாங்கிய பகவான் கிருஷ்ணர், அவர் மக்களை சுதர்சன சக்கரத்தின் சக்தியை அனுபவிக்கச் செய்தார், சர்க்கதாரி மோகன் என்றால் மகாத்மா காந்தி, அவர் மக்களை ராட்டை (சர்க்கா) சுழற்றுவதன் மூலம் சுதேசியின் சக்தியை அனுபவிக்கச் செய்தார்.

நண்பர்களே,

இந்தியாவுக்கு  அதிகாரம் அளிக்க, சக்கரதாரி மோகனிடமிருந்து உத்வேகம் பெற்று முன்னேற வேண்டும், மேலும் இந்தியாவை தன்னிறைவு கொண்டதாக மாற்ற, சர்க்கதாரி மோகனின் பாதையைப் பின்பற்ற வேண்டும். உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்பதை நமது வாழ்க்கை மந்திரமாக்க வேண்டும்.

 

நண்பர்களே,

இந்தப் பணி எங்களுக்குக் கடினமானதல்ல. நாங்கள் எப்போது உறுதிமொழி எடுத்தாலும், அதைச் செய்து முடித்துள்ளோம். காதியின்  ஒரு சிறிய உதாரணத்தைத் தருகிறேன்,. காதி அழிவின் விளிம்பை எட்டியது, அதைப் பற்றிக் கேட்க யாரும் இல்லை, நீங்கள் எனக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தபோது, நான் நாட்டிடம் முறையிட்டேன், நாடு ஒரு உறுதிமொழி எடுத்தது, அதன் பலனும் காணப்பட்டது. ஒரு தசாப்தத்தில் காதி விற்பனை கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல்  என்ற மந்திரத்துடன் நாட்டு மக்கள் காதியை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொலைபேசிகள் மீதும்  நாடு நம்பிக்கை கொண்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு, நமக்குத் தேவையான பெரும்பாலான தொலைபேசிகளை இறக்குமதி செய்தோம். இன்று, பெரும்பாலான இந்தியர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். இன்று நாம் ஒவ்வொரு ஆண்டும் 30-35 கோடி செல்பேசிகளை உற்பத்தி செய்கிறோம், மேலும் அவற்றை ஏற்றுமதியும் செய்கிறோம்.

நண்பர்களே,

நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, நம் ஒருங்கிணைந்த கட்டண இடையீடு (யுபிஐ), இன்று உலகின் மிகப்பெரிய நிகழ்நேர டிஜிட்டல் கட்டண தளமாக மாறியுள்ளது, இது உலகின் மிகப்பெரியது. ரயில்வே பெட்டிகளாக இருந்தாலும் சரி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் எஞ்சின்களாக இருந்தாலும் சரி, உலகின் பிற நாடுகளிலும் அவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

 

நண்பர்களே,

சாலை உள்கட்டமைப்பு, உள்கட்டமைப்பு என்று வரும்போது, இந்தியா ஒரு விரைவு சக்தி தளத்தை உருவாக்கியுள்ளது, அதில் 1600 அடுக்கு தரவுகள் உள்ளன. எந்தவொரு திட்டமும் எந்த மாதிரியான நிலைமைகளைக் கடந்து செல்ல வேண்டும், என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும்-அது வனவிலங்குகளாக இருந்தாலும் சரி, காடாக இருந்தாலும் சரி, ஒரு நதியாக இருந்தாலும் சரி, வடிகாலாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் நிமிடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு திட்டங்கள் வேகமாக முன்னேறுகின்றன. இன்று, விரைவு சக்தியின் தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் விரைவு சக்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த பாதையாக மாறியுள்ளது.

 

 

நண்பர்களே,

ஒரு தசாப்தத்திற்கு முன்பு வரை, வெளிநாட்டிலிருந்து பொம்மைகளை இறக்குமதி செய்து வந்தோம். ஆனால், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதாக நாம் உறுதிமொழி எடுத்தபோது, இந்தியாவில் பொம்மைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது மட்டுமல்லாமல், இன்று உலகின் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பொம்மைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம்.

நண்பர்களே,

எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை நம்ப வேண்டும் என்று உங்களையும், நாட்டு மக்கள் அனைவரையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ஒரு இந்தியராக இருந்தால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்கவும். இப்போது பண்டிகைக் காலம் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் உள்ளூர் தயாரிப்புகளின் மகிழ்ச்சியை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட பரிசுகளை வழங்குங்கள்.

நண்பர்களே,

இன்று, வணிக சமூகத்திற்கும் விற்பனையாளர்களுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்; ஒரு காலத்தில், நீங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்றிருக்கலாம், அதனால் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் லாபம் கிடைக்கும் என்று நினைத்திருக்கலாம். இப்போது நீங்கள் செய்த அனைத்தும் முடிந்து விட்டது, ஆனால் இப்போது நீங்களும் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் என்ற மந்திரத்தில் என்னை ஆதரிக்க வேண்டும். உங்களது  இந்த ஒரு நடவடிக்கை நாட்டிற்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பயனளிக்கும். நீங்கள் விற்கும் ஒவ்வொரு பொருளும் நாட்டின் தொழிலாளிகள் அல்லது ஏழைகளுக்குப் பயனளிக்கும். நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கான பணம் இந்தியாவில் இருக்கும், மேலும் சில இந்தியர்களுக்கு வழங்கப்படும். அதாவது இது இந்தியர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்தும், எனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மிகுந்த பெருமிதத்துடன் விற்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று, தில்லி, இந்தியாவின் கடந்த காலத்தையும் அதன் எதிர்காலத்தையும் இணைக்கும் ஒரு தலைநகராக மாறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, நாட்டிற்கு ஒரு புதிய மத்திய செயலகமான கடமை மாளிகை கிடைத்தது. ஒரு புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. கடமைப் பாதை, புதிய வடிவத்தில் நம் முன் உள்ளது. பாரத மண்டபம் மற்றும் யசோபூமி போன்ற நவீன மாநாட்டு மையங்கள் இன்று தில்லியின் மகிமையை மேம்படுத்துகின்றன. இவை தில்லியை வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான சிறந்த இடமாக மாற்றுகின்றன. இந்த மக்களின் பலத்தாலும் உத்வேகத்தாலும், நமது தில்லி உலகின் சிறந்த தலைநகராக வெளிப்படும் என்று நான் நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், மீண்டும் ஒருமுறை, இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக, உங்களுக்கும், தில்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மக்கள்  அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முழு பிராந்தியமும் வளர்ச்சியடையப் போகிறது. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Homecooked Food Gets Cheaper! Per-Plate Thali Price Levels Drop As Inflation Cools: Report

Media Coverage

Homecooked Food Gets Cheaper! Per-Plate Thali Price Levels Drop As Inflation Cools: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives in the blast in Delhi Reviews the situation with Home Minister Shri Amit Shah
November 10, 2025

The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives in the blast in Delhi earlier this evening."Condolences to those who have lost their loved ones in the blast in Delhi earlier this evening. May the injured recover at the earliest. Those affected are being assisted by authorities. Reviewed the situation with Home Minister Amit Shah Ji and other officials", Shri Modi said.

The Prime Minister posted on X:

“Condolences to those who have lost their loved ones in the blast in Delhi earlier this evening. May the injured recover at the earliest. Those affected are being assisted by authorities. Reviewed the situation with Home Minister Amit Shah Ji and other officials."

@AmitShah