Ro-Pax service will decrease transportation costs and aid ease of doing business: PM Modi
Connectivity boost given by the ferry service will impact everyone starting from traders to students: PM Modi
Name of Ministry of Shipping will be changed to Ministry of Ports, Shipping and Waterways: PM Modi

குஜராத்தின்,  ரோ–பாக்ஸ் முனையத்தை காணொலிக்காட்சி மூலம்  தொடங்கிவைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஹசீரா மற்றும் கோகா இடையேயான ரோ–பாக்ஸ் படகுப் போக்குவரத்தையும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.   உள்ளூர் பயன்பாட்டாளர்களிடமும் அவர் கலந்துரையாடினார். கப்பல்துறையின் பெயரும், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை என மாற்றம் செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.  

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், குஜராத் மக்களுக்கு இன்று தீபாவளிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்றார்.  இந்த மேம்பட்ட போக்குவரத்து மூலம், அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள்.   போக்குவரத்து விரைவாக நடைபெறுவதுடன், வர்த்தகமும் ஊக்கம் அடையும் என்றார். ஹசீரா – கோகா இடையிலான ரோ–பாக்ஸ் படகுப் போக்குவரத்து,  சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதி மக்களின் நீண்டநாள் கனவை நனவாக்கியிருப்பதோடு,  பயண நேரமும், 10-12 மணி நேரங்களிலிருந்து, 3-4 மணி நேரமாக குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   இது, நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.  இந்த புதிய சேவை மூலம், ஓராண்டு காலத்தில் சுமார் 80,000 பயணிகள் ரயில்களும், 30,000 டிரக்குகளும் பயனடையும் என்றும் அவர் தெரிவித்தார். 

சவுராஷ்டிரா மற்றும் சூரத் இடையேயான போக்குவரத்து வசதிகள் மேம்படுவது,  இப்பகுதி மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என திரு.நரேந்திரமோடி தெரிவித்தார்.   இந்த புதிய படகு சேவை மூலம், பழங்கள், காய்கறிகள், மற்றும் பால் போன்றவற்றை விரைவாகவும், எளிதாகவும் கொண்டுசெல்ல வழிவகை ஏற்பட்டிருப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் வெகுவாகக் குறையும் என்றார்.   பல்வேறு சவால்களுக்கிடையே, துணிச்சலுடன் இந்த வசதியை ஏற்படுத்த பாடுபட்ட பொறியாளர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தமது நன்றியை உரித்தாக்குவதாகவும் அவர் கூறினார்.   பவநகர் மற்றும் சூரத் இடையேயான இந்த புதிய கடல்சார் போக்குவரத்து வசதியை பயன்படுத்தவுள்ள மக்களுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.  

கடந்த இருபது ஆண்டுகளில், தனது கடல்சார் வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட மாநிலமாக குஜராத் திகழ்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர்,  துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருவது, குஜராத்தி மக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமிதம் அளிக்கக் கூடியது என்றும் தெரிவித்தார்.   மாநிலத்தின் கடல்சார் வளங்களை மேம்படுத்த குஜராத் மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்ட அவர்,  கப்பல்கட்டும் கொள்கை உருவாக்கம், கப்பல்கட்டும் தொழிற்பூங்கா மற்றும் பிரத்யேக முனையங்கள் அமைப்பு, கடல்சார் போக்குவரத்து மேலாண்மை நடைமுறை ஊக்குவிப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க போக்குவரத்து இணைப்புத் திட்டங்களை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.   இதுபோன்ற முன்முயற்சிகள் காரணமாக, மாநிலத்தின் துறைமுகங்கள் துறை புதிய பாதையை நோக்கிச் செல்லும் நிலை உருவாகியிருப்பதாகவும் கூறினார்.   கடலோரப் பகுதியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் நவீனப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும்,  கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.  

கடலோரப் பகுதிகளின் அனைத்து வகையான கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதை உறுதிசெய்ய அரசு மேற்காண்டுவரும் முயற்சிகள் காரணமாக,  வளங்களின் நுழைவாயிலாக குஜராத் உருவெடுத்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.    கடந்த இருபது ஆண்டுகளில், குஜராத்தின் பாரம்பரிய துறைமுக செயல்பாடுகளிலிருந்து, ஒருங்கிணைந்த, பிரத்யேக துறைமுக மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் உச்சகட்டத்தை இன்று எட்டியிருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.    இதுபோன்ற முன்முயற்சிகள் காரணமாக, குஜராத்திலுள்ள துறைமுகங்கள், நாட்டின் முக்கிய கடல்சார் மையங்களாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.  கடந்த ஆண்டு நடைபெற்ற  நாட்டின் மொத்த கடல்சார் வர்த்தகத்தில், 40 சதவீதத்திற்கும் மேல் குஜராத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

குஜராத்தின் கடல்சார் வர்த்தகம் சார்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன் உருவாக்கம் தற்போது, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.   குஜராத் கடல்சார் தொழில்வளாகம், குஜராத் கடல்சார் பல்கலைகழகம் மற்றும் பவநகரில், நாட்டின் முதலாவது சி.என்.ஜி. முனையம் அமைக்கப்பட்டிருப்பது போன்றவற்றின் மூலம், குஜராத்தில் பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரங்கள் திட்டத்தின் கீழ், குஜராத்தில் உருவாக்கப்படும் துறைமுக வளாகங்கள், கடல்வழி போக்குவரத்தால் துறைமுகங்களில் ஏற்படும் நெரிசலைப் போக்க மேற்கொள்ளப்பட்ட பிரத்யேக அமைப்பு ஆகும்.  இதுபோன்ற வளாகங்கள், அரசு, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதோடு, இந்தத் துறையின் மதிப்புக் கூட்டுதலுக்கும் உதவிகரமாக இருக்கும். 

அன்மைக் காலத்தில், இந்தியாவின் முதலாவது ரசாயண வளாகம் தாஹேஜ் பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, இந்தியாவின் முதலாவது எல்.என்.ஜி முனையமும் ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது,  இந்தியாவின் முதலாவது சி.என்.ஜி. முனையமும் பவநகரில் அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.   இவை தவிர, பவநகர் துறைமுகத்தில் அமைக்கப்படும் ரோ–ரோ முனையம், திரவ சரக்குப் போக்குவரத்து முனையம், புதிய சரக்குப் பெட்டக முனையம் போன்ற வசதிகளும், உருவாக்கப்பட்டு வருகின்றன.   இதுபோன்ற புதிய முனையங்கள் அமைக்கப்படுவதன் மூலம்,  பவநகர் துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.  

கோகா – தாஹேஜ் இடையேயும், வெகு விரைவில் மீண்டும் படகுப் போக்குவரத்தை தொடங்குவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.   இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில், பல்வேறு இயற்கை சவால்கள் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,  நவீன தொழில்நுட்பம் வாயிலாக அவற்றைக் களைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.   பயிற்சிபெற்ற மனிதவளத்தை உருவாக்கும் மாபெரும் மையமாக குஜராத் கடல்சார் பல்கலைகழகம் இருப்பதோடு, கடல்சார் வர்த்தக நிபுனர்களும் இங்கு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.   தற்போது கடல்சார் சட்டப்படிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக சட்டப் படிப்புகளுடன்,  கடல்சார் மேலாண்மை, கப்பல் மற்றும் சரக்குப் போக்குவரத்து  பிரிவுகளில் எம்.பி.ஏ. படிப்பையும் இந்தப் பல்கலைகழகம் வழங்கி வருகிறது.  இந்தப் பல்கலைகழகம் மூலம், நாட்டின் கடல்சார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய அருங்காட்சியகம் ஒன்றை லோத்தலில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

இன்று தொடங்கப்பட்டுள்ள ரோ–பாக்ஸ் படகுப் போக்குவரத்து அல்லது சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நீர்வழி விமான சேவை போன்ற வசதிகள், நீர்வளம் சார்ந்த பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.   அன்மைக் காலமாக, நாட்டின் நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   மீனவர்கள் நவீனப் படகுகள் வாங்குவதற்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் பருவநிலை, கடல்வழிப் பாதை பற்றிய தகவல்களை துல்லியமாக தெரிவிக்கக் கூடிய கடல்சார் போக்குவரத்து சாதனங்கள் வினியோகம் போன்ற நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.    மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த பணிகளுக்கு, அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.   அன்மையில் தொடங்கப்பட்ட பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், மீன் சார்ந்த வர்த்தகத்தை ஊக்குவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   இத்திட்டத்தின் கீழ், வரும் ஆண்டுகளில், ரூ.20ஆயிரம் கோடி செலவில் மீன்வள கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 

தற்போது, நாடு முழுவதும் துறைமுகங்களின் திறன் அதிகரிக்கப்பட்டு வருவதோடு, புதிய துறைமுகங்களை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.   நாட்டிலுள்ள சுமார் 21,000 கிலோமீட்டர் தொலைவுள்ள நீர்வழிகளை இயன்ற அளவிற்குப் பயன்படுத்ததுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   சாகர்மாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தற்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.   சாலை மற்றும் ரயில் போக்குவரத்து செலவுகளை ஒப்பிடும்போது, நீர்வழிப் போக்குவரத்து செலவுகள் பன்மடங்கு  குறைவாக இருப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிப்புகளும் பெருமளவுக்கு குறையும் என்றும் அவர் கூறினார்.  2014-ம் ஆண்டுக்குப் பிறகே, இத்துறையின் வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டன.  தரை மார்க்கமாக, கடல்பகுதிக்குச் செல்லும் வசதி இல்லாத மாநிலங்களை இணைப்பதற்காக, நாடு முழுவதுமுள்ள ஆறுகளில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவதத்தை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.   சுயசார்பு இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சமாக, நாட்டின் கடல்சார் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

மத்திய கப்பல்துறை, இனி, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை என பெயர்மாற்றம் செய்யப்படுவதாகவும் பிரதமர் அறிவித்தார்.   பெரும்பாலான வளர்ந்த நாடுகளில்,  கப்பல்துறை தான் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகளை நிர்வகிப்பதாகவும் அவர் கூறினார்.   மேலும், தற்போது தெளிவான பெயர் சூட்டப்பட்டிருப்பதன் மூலம், பணிகளை மேலும் தெளிவாக மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

சுயசார்பு இந்தியா திட்டத்தில், நீலப் பொருளாதாரத்தின் பங்களிப்பை வலுப்படுத்த, கடல்சார் போக்குவரத்தை பெருமளவிற்கு மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.   மற்ற நாடுகளைவிட நம் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான செலவு தற்போது மிக அதிகமாக உள்ளது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.   நீர்வழிப் போக்குவரத்து மூலம், சரக்குப் போக்குவரத்து செலவு பெருமளவு குறைக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.  எனவே, தடையற்ற சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.  சரக்குப் போக்குவரத்து  செலவுகளை குறைக்க ஏதுவாக,  பன்முகப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாடு, சாலை, ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு இடையேயான இணைப்பு வசதிகள் மற்றும் கப்பல்போக்குவரத்துக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.   பன்முக சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.   நமது அண்டை நாடுகளிலும் பன்முக இணைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   இதுபோன்ற முயற்சிகள் காரணமாக, நாட்டின் சரக்குப் போக்குவரத்து செலவு வெகுவாகக் குறைவதோடு, பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் கூறினார். 

தற்போதைய பண்டிகை காலத்தில், மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை பெருமளவிற்கு வாங்கி, ஊக்கமளிக்கமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.  சிறு வியாபாரிகள், சிறிய அளவிலான கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களை  வாங்கி, கிராமப்புற மக்களுக்கு ஊக்கமளிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.  இதுபோன்ற முயற்சிகள் வாயிலாக,  தீபாவளி பண்டிகையின்போது, கிராமப்புற கைவினைஞர்களின் இல்லங்களில் ஒளியேற்ற முன்வருமாறும் பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார்.  

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
More than 1.55 lakh candidates register for PM Internship Scheme

Media Coverage

More than 1.55 lakh candidates register for PM Internship Scheme
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை அக்டோபர் 14, 2024
October 14, 2024

Green Initiatives and Economic Growth: Dual Focus for Sustainable Future under PM Modi