இந்த சட்டங்கள் காலனித்துவ கால சட்டங்களின் முடிவைக் குறிக்கின்றன: பிரதமர்
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜனநாயகத்தின் அடித்தளத்தை உருவாக்கும் "மக்களின், மக்களால், மக்களுக்காக" என்ற உணர்வை வலுப்படுத்துகின்றன: பிரதமர்
நியாயச் சட்டம், சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளால் பின்னப்பட்டுள்ளது: பிரதமர்
பாரதிய நியாய சட்டத்தின் தாரக மந்திரம் - குடிமகன் முதலில்: பிரதமர்

இந்திய நியாயச் சட்டம்,  இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம்  மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியதை பிரதமர் திரு நரேந்திர மோடி சண்டிகரில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, சண்டிகரின் அடையாளம், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டும் சக்தி வடிவமான அன்னை சண்டி தேவியுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார். இந்திய நியாயச் சட்டம்,  இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம்  ஆகியவற்றின் முழு வடிவத்திற்கும் இதே தத்துவம்தான் அடிப்படை என்று அவர் கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வால் உத்வேகம் பெற்று இந்திய நியாயச் சட்டம் அமலுக்கு வந்திருப்பது, வளர்ச்சியடைந்த இந்தியா உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான கட்டத்தில் நாடு உள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டை நிறைவு செய்ததை நினைவுகூரும் முக்கியமான தருணம் என்று பிரதமர் கூறினார். நாட்டின் மக்களுக்காக நமது அரசியலமைப்பு வகுத்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான உறுதியான முயற்சி இது என்று அவர் மேலும் கூறினார். சட்டங்கள் எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் இப்போதுதான் பார்த்திருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். சட்டங்களின் நேரடி செயல்விளக்கக் காட்சியை பார்வையிடுமாறு பிரதமர் மக்களை வலியுறுத்தினார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் அவர் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சண்டிகர் நிர்வாகத்தின் அனைத்து பங்குதாரர்களையும் அவர் பாராட்டினார்.

 

நாட்டின் புதிய நியாயச்சட்டத்தை உருவாக்கும் செயல்முறை, ஆவணத்தைப் போலவே விரிவானதாக உள்ளது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இது நாட்டின் பல சிறந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட வல்லுநர்களின் கடின உழைப்பை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார். 2020 ஜனவரியில் உள்துறை அமைச்சகம் ஆலோசனைகளைக் கேட்டிருந்ததை திரு மோடி நினைவுகூர்ந்தார். நாட்டின் பல உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் ஒத்துழைப்புடன் உச்ச நீதிமன்றத்தின் பல தலைமை நீதிபதிகளின் ஆலோசனைகளும் அடங்கியிருப்பதாக அவர் கூறினார். உச்ச நீதிமன்றம், 16 உயர் நீதிமன்றங்கள், நீதித்துறை அகாடமிகள், சட்ட நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பல வல்லுநர்கள் உட்பட பல பங்குதாரர்கள், விவாதம் நடத்தி, தங்களது  பல ஆண்டு கால பரந்த அனுபவத்தைப் பயன்படுத்தி புதிய நியாயச் சட்டங்களுக்கு தங்கள் ஆலோசனைகளையும், யோசனைகளையும் வழங்கியதாக அவர் கூறினார். இன்றைய நவீன உலகில் தேசத்தின் தேவைகள் குறித்து விவாதங்கள் நடந்தன என்றும் அவர்  குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் நீதித்துறை சந்தித்த சவால்கள் குறித்தும், ஒவ்வொரு சட்டத்தின் நடைமுறை அம்சம் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். நியாயச் சட்டத்தின் எதிர்கால அம்சம்  குறித்தும்  ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தீவிர முயற்சிகள்தான் நியாயச் சட்டத்தின் தற்போதைய வடிவத்தை நமக்குத் தந்துள்ளன என்று அவர் கூறினார். உச்சநீதிமன்றம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்கள், குறிப்பாக அனைத்து நீதிபதிகளுக்கும், திரு மோடி தமது நன்றியைத் தெரிவித்தார். தாமாக முன்வந்து அதன் உரிமையை எடுத்துக் கொண்டதற்காக அவர் வழக்கறிஞர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். அனைவரின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த நியாயச் சட்டம், இந்தியாவின் நீதித்துறை பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கான வழிமுறையாக, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்று குறிப்பிட்ட திரு மோடி, 1857-ம் ஆண்டு நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து 1860-ம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய சாட்சியச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் சிஆர்பிசியின் முதல் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தது என்று அவர் கூறினார். இந்த சட்டங்களின் நோக்கம் இந்தியர்களை தண்டிப்பதும், அவர்களை அடிமைப்படுத்துவதும் என்று திரு மோடி குறிப்பிட்டார். நாடு சுதந்திரம் அடைந்து பல பத்தாண்டுகளுக்குப் பிறகும், நமது சட்டங்கள் ஒரே தண்டனைச் சட்டம் மற்றும் தண்டனை மனப்பான்மையைச் சுற்றியே சுழல்வது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் தெரிவித்தார். அவ்வப்போது சட்டங்கள் மாற்றப்பட்டாலும், அவற்றின் தன்மை அப்படியே இருந்ததாக அவர் மேலும் கூறினார். அடிமைத்தனம் குறித்த இந்த மனப்பான்மை இந்தியாவின் முன்னேற்றத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார்.

 

காலனி ஆதிக்க மனப்பான்மையிலிருந்து நாடு தற்போது வெளியே வர வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், தேச நிர்மாணத்திற்கு தேசத்தின் வலிமை பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு தேசிய சிந்தனை தேவைப்பட்டது. இந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது, அடிமைத்தனத்திலிருந்து விடுபட நாட்டுக்கு உறுதியளித்ததை அவர் நினைவு கூர்ந்தார். புதிய நியாயச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், இந்தத் திசையில் நாடு மேலும் ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்துள்ளது என்பதை திரு மோடி சுட்டிக் காட்டினார். ஜனநாயகத்தின் அடிப்படையான 'மக்களின், மக்களால், மக்களுக்காக' என்ற உணர்வை நியாயச் சட்டம் வலுப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

நியாயச் சட்டம், சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி ஆகிய கருத்துக்களால் பின்னப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்றாலும், நடைமுறை யதார்த்தம் வேறுபட்டது என்றார். ஏழைகள் சட்டங்களைக் கண்டு பயந்து, நீதிமன்றத்திலோ அல்லது காவல் நிலையத்திலோ கூட கால் பதிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். சமுதாயத்தின் உளவியலை மாற்றியமைக்க புதிய நியாயச் சட்டம் பாடுபடும் என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் சட்டம் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்ற நம்பிக்கை ஒவ்வொரு ஏழைக்கும் இருக்கும் என்றும் அவர் கூறினார். இது நமது அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உண்மையான சமூக நீதியின் உருவகமாக உள்ளது என்று அவர் கூறினார்.

இந்திய நியாயச் சட்டம்,  இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம்  ஆகியவை பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் உணர்வுப்பூர்வமாக செயல்படுகின்றன என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். அதன் விவரங்களை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். சண்டிகரில் இன்று ஒளிபரப்பான நேரடி செயல் விளக்கத்தை அனைத்து மாநில காவல்துறையும் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட திரு மோடி, இந்த செயல் விளக்கத்தை அனைத்து மாநில காவல்துறையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். புகார் அளித்த 90 நாட்களுக்குள், பாதிக்கப்பட்டவருக்கு வழக்கின் முன்னேற்றம் குறித்த தகவல்களை வழங்க வேண்டும், இந்த தகவல் எஸ்எம்எஸ் போன்ற டிஜிட்டல் சேவைகள் மூலம் நேரடியாக அவரை சென்றடையும். காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பணியிடம், வீடு மற்றும் சமூகத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒரு தனி அத்தியாயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக சட்டம் இருப்பதை நியாய சட்டம் உறுதி செய்தது என்று திரு மோடி குறிப்பிட்டார். பாலியல் பலாத்காரம் போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களில், முதல் விசாரணையிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும்,  விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பை வழங்குவது கட்டாயமாக்கப்படுவதாகவும், எந்தவொரு வழக்கிலும் இரண்டு முறைக்கு மேல் ஒத்திவைக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

 

"மக்களுக்கு முதலிடம் என்பதே நியாய சட்டத்தின் அடிப்படை மந்திரம்" என்று கூறிய திரு மோடி, இந்தச் சட்டங்கள் சிவில் உரிமைகளின் பாதுகாவலர்களாகவும், நீதியை எளிமைப்படுத்துவதற்கான அடிப்படையாகவும் மாறி வருவதாகக் கூறினார். முன்பு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்று குறிப்பிட்ட திரு மோடி, இப்போது ஜீரோ எஃப்.ஐ.ஆர் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது என்றும், இனி எங்கு வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிட்டார். எஃப்.ஐ.ஆரின் நகலை பெறுவதற்கான உரிமை, பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இப்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான எந்தவொரு வழக்கும் பாதிக்கப்பட்டவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே திரும்பப் பெறப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இப்போது காவல்துறையினர் தாங்களாகவே எந்தவொரு நபரையும் காவலில் வைக்க முடியாது என்றும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பது நியாயச் சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மனிதநேயம் மற்றும் உணர்திறன் ஆகியவை புதிய நியாய சட்டத்தின் மற்ற முக்கிய அம்சங்களாக எடுத்துரைத்த திரு மோடி, குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டனை இல்லாமல் மிக நீண்ட காலத்திற்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்றும், இப்போது 3 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தில், உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் மட்டுமே கைது செய்ய முடியும் என்றும் கூறினார். சிறு குற்றங்களுக்கும் கட்டாய ஜாமீன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர், சாதாரண குற்றங்களில், தண்டனைக்குப் பதிலாக சமூக சேவை என்ற விருப்பத்தேர்வும் வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சமூகத்தின் நலனுக்காக நேர்மறையான திசையில் முன்னேற புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் கூறினார். புதிய நியாயச் சட்டம் முதல் முறை குற்றவாளிகள் மீது மிகவும் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டது என்றும்,  நியாயச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பழைய சட்டங்கள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கைதிகள் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்றும் திரு மோடி சுட்டிக் காட்டினார். புதிய நியாயச் சட்டம் சிவில் உரிமைகளுக்கு அதிகாரமளித்தலை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

சரியான நேரத்தில் நீதி கிடைப்பதே நீதிக்கான முதல் அளவுகோல் என்று வலியுறுத்திய பிரதமர், புதிய நியாயச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் விரைவான நீதியை நோக்கி நாடு  சென்று கொண்டிருக்கிறது என்றார். எந்தவொரு வழக்கிலும் ஒவ்வொரு கட்டத்தையும் முடிப்பதற்கான கால வரம்புகளை நிர்ணயிப்பதன் மூலம், நியாயச் சட்டத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கும் விரைவாக தீர்ப்புகளை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று அவர் கூறினார். புதிதாக அமல்படுத்தப்பட்ட நியாயச் சட்டம் முதிர்ச்சியடைய கால அவகாசம் தேவை என்று குறிப்பிட்ட திரு மோடி, இவ்வளவு குறுகிய காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகள் மிகவும் திருப்திகரமாக இருந்தது குறித்து மகிழ்ச்சி  தெரிவித்தார். சண்டிகரில் ஒரு வாகன திருட்டு வழக்கு வெறும் 2 மாதங்கள் மற்றும் 11 நாட்களில் முடிக்கப்பட்டதையும், ஒரு பகுதியில் அமைதியின்மையை பரப்பிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வெறும் 20 நாட்களில் முழுமையான விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதையும் அவர் மேற்கோள் காட்டினார். தில்லி மற்றும் பீகாரில் விரைவான நீதிக்கான உதாரணங்களை சுட்டிக்காட்டிய அவர், இந்த விரைவான தீர்ப்புகள் இந்திய நியாயச்சட்டத்தின் சக்தியையும், தாக்கத்தையும் காட்டுகின்றன என்றார். சாதாரண மக்களின் நலன்களுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும்போது, மாற்றங்களும், விளைவுகளும் நிச்சயம் காணப்படுகின்றன என்பதை இந்த மாற்றம் காட்டுகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த தீர்ப்புகள் நாட்டில் முடிந்தவரை விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார், இதனால் நீதிக்கான அவரது சக்தி எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள முடியும். இது குற்றவாளிகளை பழைய மற்றும் இல்லாத தாமதமான நீதி அமைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வைக்கும் என்றும் அவர் கூறினார்.

 

"விதிகளும், சட்டங்களும் காலத்திற்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே அவை பயனுள்ளதாக இருக்கும்" என்று திரு மோடி கூறினார். இன்று குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளின் முறைகள் மாறிவிட்டன. இது நவீன சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் ஆதாரங்களை ஒரு முக்கியமான ஆதாரமாக வைத்திருக்க முடியும் என்று குறிப்பிட்ட திரு மோடி, விசாரணையின் போது ஆதாரங்கள் சேதப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒட்டுமொத்த செயல்முறையின் வீடியோகிராஃபி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, புதிய சட்டங்களை அமல்படுத்த இ-சாக்ஷா, நியாய் ஸ்ருதி, நியாய் சேது, இ-சம்மன் இணையதளங்கள் பயனுள்ள சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். இனி மின்னணு ஊடகங்கள் மூலம் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரால் தொலைபேசியில் நேரடியாக சம்மன் வழங்க முடியும் என்று அவர் மேலும் கூறினார். சாட்சிகளின் வாக்குமூலங்களை ஒலி-வீடியோ பதிவு செய்யவும் முடியும் என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் ஆதாரங்கள் தற்போது நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் என்று குறிப்பிட்ட திரு மோடி, இது நீதியின் அடிப்படையாக மாறும் என்றும், குற்றவாளி பிடிபடும் வரை தேவையற்ற நேரத்தை வீணடிப்பதை தடுக்கும் என்றும் கூறினார். இந்த மாற்றங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு சம அளவில் முக்கியமானவை என்று குறிப்பிட்ட அவர், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது, பயங்கரவாதத்திற்கு எதிராக போராடவும் உதவும் என்றும் குறிப்பிட்டார். பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத அமைப்புகள் புதிய சட்டங்களின் கீழ் சட்டத்தின் சிக்கல்களைப் பயன்படுத்த முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

புதிய நியாயச் சட்டம் ஒவ்வொரு துறையின்  செயல்பாட்டை அதிகரிக்கும் என்றும், நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என்றும் குறிப்பிட்ட திரு மோடி, சட்ட தடைகள் காரணமாக அதிகரித்துள்ள ஊழலைக் கட்டுப்படுத்த இது உதவும் என்றார். நீண்ட மற்றும் தாமதமான நீதிக்கு பயந்து பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள், முன்பு இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்று அவர் கூறினார். இந்த அச்சம் நீங்கும் போது, முதலீடுகள் அதிகரிக்கும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும்  என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டின் சட்டம் மக்களுக்கானது என்று குறிப்பிட்ட பிரதமர், எனவே, சட்ட நடைமுறைகளும் பொதுமக்களின் வசதிக்காக இருக்க வேண்டும் என்று கூறினார். இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளையும், குற்றவாளிகளுக்கு எதிராக நேர்மையானவர்களுக்கு சட்டம் குறித்த அச்சத்தையும் சுட்டிக்காட்டிய திரு மோடி, புதிய நியாயச் சட்டம் மக்களை இதுபோன்ற இன்னல்களில் இருந்து விடுவித்துள்ளது என்றார். பிரிட்டிஷ் ஆட்சியின் 1500-க்கும் மேற்பட்ட பழைய சட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

நமது நாட்டில் மக்களுக்கு அதிகாரமளித்தல் பெறும் ஊடகமாக சட்டம் மாறுவதற்கு நமது தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று திரு மோடி வலியுறுத்தினார். விவாதங்கள் மற்றும் விவாதங்கள் இல்லாத பல சட்டங்கள் உள்ளன என்று அவர் கூறினார். சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் முத்தலாக் ஆகியவற்றை உதாரணம் காட்டிய திரு மோடி, இது குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன என்றார். இந்த நாட்களில், வக்பு வாரியம் தொடர்பான சட்டமும் விவாதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். மக்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையை அதிகரிக்க உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அதே முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அமல்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டிய பிரதமர், இது மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமின்றி,  சமுதாயத்தை மேலும் உள்ளடக்கியதாகவும், உணர்வுப்பூர்வமானதாகவும் மாற்றுவதற்கான இயக்கமாகவும் இருந்தது. நாரி சக்தி வந்தன் சட்டம் இதேபோன்ற பெரிய மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கப் போகிறது என்றும் அவர் கூறினார். அதேபோல், திருநங்கைகள் தொடர்பான சட்டங்கள், சமரசச் சட்டம், ஜிஎஸ்டி சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டதாகவும், அவற்றின் மீது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தேவை என்றும் அவர் கூறினார்.

"எந்தவொரு நாட்டின் வலிமையும் அதன் மக்கள்தான், நாட்டின் சட்டம் என்பது மக்களின் வலிமை" என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இது மக்களை சட்டத்தை மதித்து நடக்க ஊக்குவிக்கும் என்றும், சட்டத்தின் மீதான மக்களின் இந்த விசுவாசம் தேசத்தின் மிகப்பெரிய சொத்து என்றும் திரு மோடி கூறினார். மக்களின் நம்பிக்கை சிதைந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று அவர் மேலும் கூறினார். நியாயச் சட்டத்தின் புதிய விதிகளை அறிந்து, அவற்றின் உணர்வைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு முகமையையும், ஒவ்வொரு அதிகாரியையும், ஒவ்வொரு காவலரையும் திரு மோடி வலியுறுத்தினார். நியாயச் சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதை உறுதி செய்ய மாநில  அரசுகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த புதிய உரிமைகள் குறித்து குடிமக்கள் முடிந்தவரை விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்காக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், நியாயச் சட்டம் எந்த அளவுக்கு திறம்பட செயல்படுத்தப்படுகிறதோ, அந்த அளவுக்கு நாட்டிற்கு சிறந்த, பிரகாசமான எதிர்காலத்தை நம்மால் வழங்க முடியும் என்றும், இது நமது குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிப்பதோடு, நமது சேவை திருப்தியை தீர்மானிக்கும் என்றும் கூறினார். தமது உரையின் நிறைவாக இந்த திசையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, தேச நிர்மாணத்தில் தமது பங்கை அதிகரிப்போம் என்று திரு மோடி, நம்பிக்கை தெரிவித்தார்.

 

பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான திரு குலாப் சந்த் கட்டாரியா, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, மாநிலங்களவை உறுப்பினர் திரு சத்னம் சிங் சந்து ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்திய நியாயச் சட்டம்,  இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம்  மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியதை பிரதமர் திரு நரேந்திர மோடி சண்டிகரில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நடைமுறையில் இருந்த காலனித்துவ சகாப்த சட்டங்களை அகற்றவும், தண்டனையிலிருந்து நீதிக்கு கவனத்தை மாற்றுவதன் மூலம் நீதி அமைப்பை மாற்றியமைக்கவும் பிரதமரின் பார்வையால் மூன்று சட்டங்களின் கருத்துருவாக்கம் உந்தப்பட்டது. இதை மனதில் கொண்டு, இந்த நிகழ்ச்சியின் மையக்கருத்து "பாதுகாப்பான சமூகம், வளர்ச்சியடைந்த இந்தியா- தண்டனையிலிருந்து நீதி வரை" என்பதாகும்.

 

2024 ஜூலை 1, அன்று நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள், இந்தியாவின் சட்ட அமைப்பை மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையாகவும், சமகால சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த மைல்கல் சீர்திருத்தங்கள் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பின் வரலாற்று மாற்றத்தைக் குறிக்கின்றன, சைபர் குற்றங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போன்ற நவீனகால சவால்களைச் சமாளிக்க புதிய கட்டமைப்புகளைக் கொண்டுவருகின்றன மற்றும் பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்கின்றன.

இந்த சட்டங்களின் நடைமுறை பயன்பாட்டை இந்த நிகழ்ச்சி காட்சிப்படுத்தியது, அவை ஏற்கனவே குற்றவியல் நீதி முறையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை நிரூபிக்கிறது. ஒரு நேரடி செயல்விளக்கமும் நடத்தப்பட்டது. இது ஒரு குற்றம் நடந்த இடத்தை உருவகப்படுத்தியது, அங்கு புதிய சட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 5, 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions