இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின், டிசம்பர் 04-05, 2025 அன்று 23-வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் ஆதரவை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். அக்டோபர் 2000-ல் அதிபர் திரு விளாடிமிர் புதினின் முதல் அரசு முறை வருகையின் போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிறுவப்பட்ட உத்திசார் கூட்டாண்மை குறித்த பிரகடனத்தின் 25-வது ஆண்டு நிறைவை இந்த வருடம் குறிக்கிறது.
பரஸ்பர நம்பிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய தேசிய நலன்களுக்கான மரியாதை மற்றும் உத்திசார் ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் இந்த நீண்டகால மற்றும் காலத்தால் சோதிக்கப்பட்ட உறவின் சிறப்புத் தன்மையை தலைவர்கள் வலியுறுத்தினர். பகிரப்பட்ட பொறுப்புகளைக் கொண்ட பெரிய சக்திகளாக, இந்த முக்கியமான உறவு, சமமான மற்றும் பிரிக்க முடியாத பாதுகாப்பின் அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டிய உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நங்கூரமாகத் தொடர்கிறது என்பதை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
பரஸ்பர நலன்களைக் கொண்ட துறைகளை உள்ளடக்கிய பொருட்கள் மீதான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டுப் பணிகள் இந்தியாவிற்கும் யூரேசிய பொருளாதார ஒன்றியத்திற்கும் இடையே தொடர்ந்து தீவிரமடைவதைத் தலைவர்கள் பாராட்டினர்.
எரிபொருள் சுழற்சி, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்குவதற்கான வாழ்க்கை சுழற்சி ஆதரவு மற்றும் மின்சாரம் சாராத பயன்பாடுகள் உள்ளிட்ட அணுசக்தியில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கும் தொடர்புடைய உயர் தொழில்நுட்பங்களுக்கும் புதிய தொடர்பு திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தினர். மீதமுள்ள அணுமின் நிலைய அலகுகளின் கட்டுமானம் உட்பட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் செயல்படுத்தலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருதரப்பும் வரவேற்றதுடன், உபகரணங்கள் மற்றும் எரிபொருள் வழங்கலுக்கான காலக்கெடுவைப் பின்பற்றவும் ஒப்புக்கொண்டன.
பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய நடமாட்டம், பயங்கரவாத நிதியுதவி வலையமைப்புகள் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உட்பட அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும் எதிர்ப்பதற்கும் இரு தலைவர்களும் தங்கள் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். 2025 ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையும், 2024 மார்ச் 22 அன்று மாஸ்கோவில் உள்ள குரோகஸ் நகர மண்டபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையும் அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். எந்த ஒரு மதம் அல்லது சித்தாந்த சாக்குப்போக்குகளால் தூண்டப்பட்டாலும், எந்த ஒரு பயங்கரவாதச் செயலும் நியாயப்படுத்த முடியாதவை என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:


