ரயில்வே ஊழியர்களின் சிறந்த செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு 78 நாட்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 10,91,146 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி வழங்கப்பட உள்ளது.
தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இத்தொகை துர்கா பூஜை மற்றும் தசரா விடுமுறை நாட்களுக்கு முன்னதாக வழங்கப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் சுமார் 10.91 லட்சம் அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட உள்ளது. ரயில்வே ஊழியர்களின் பணிகளை மேம்படுத்தும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்த இத்தொகை அளிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.17,951 அளவிற்கு தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியருக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்படுகிறது. ரயில்தடப் பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள் (கார்டு) நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அமைச்சக ஊழியர்கள், மற்றும் இதர குரூப் “சி” ஊழியர்கள் போன்ற பல்வேறு பிரிவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது.
2024-25-ம் ஆண்டில் ரயில்வேயின் பணி நடவடிக்கை சிறப்பாக இருந்தது. 1,614.90 மில்லியன் டன் சரக்குகளையும் சுமார் 7.3 பில்லியன் பயணிகளையும் ரயில்வே கையாண்டுள்ளது.


