தில்லி கரியப்பா மைதானத்தில் நாளை நண்பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ள தேசிய மாணவர் படை பிஎம் பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
குடியரசு தின என்சிசி முகாமின் நிறைவாக இந்தப் பேரணி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 அன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் என்சிசி பிரிவினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக் கொள்வார். ராணுவ நடவடிக்கை, சறுக்குதல், மைக்ரோலைட் பறத்தல், பாராசெய்லிங் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தும் தேசிய மாணவர் படையினரின் திறமைகளை அவர் பார்வையிடுவார். சிறந்த என்சிசி மாணவர்கள் பிரதமரிடம் இருந்து பதக்கங்களையும், பிரம்பு கோல்களையும் பெறுவர்.