பகிர்ந்து
 
Comments

1.இந்தியப் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி, பூடான் பிரதமர் மாண்புமிகு டாக்டர் லோட்டே ட்ஷெரிங் அழைப்பை ஏற்று பூடானுக்கு 2019 ஆகஸ்ட் 17-18 தேதிகளில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். 2019 மே மாதம் இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் திரு. நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதலாவது இருதரப்புப் பயணத்தில் இது இடம் பெற்றிருந்தது.

2. பாரோ விமான நிலையத்தை அடைந்தபோது பிரதமர் திரு. நரேந்திர மோடியை, பிரதமர் டாக்டர் ட்ஷெரிங் மற்றும் அமைச்சர்களும், அரசின் மூத்த அதிகாரிகளும் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

3. பூடான் அரசர் மேன்மைமிக்க ஜிக்மே கேசர் நாம்கியே வாங்சுக் –ஐ  பிரதமர் திரு. மோடி சந்தித்துப் பேசினார். மேன்மைமிகு மன்னரும், ராணியும், அவருக்கு மதிய உணவு விருந்து அளித்தனர். மேன்மைமிகு மன்னரும், ராணியும் தங்களுக்கு சவுகரியமான சமயத்தில்,விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

4. பிரதமர் திரு. மோடியும், பிரதமர் டாக்டர் ட்ஷெரிங்கும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். தூதுக் குழு நிலையிலும் அவர்களுடைய பேச்சுவார்த்தை நடந்தது. பிரதமர் திரு மோடிக்கு மரியாதை அளிக்கும் வகையில் பிரதமர் டாக்டர் ட்ஷெரிங் அரசு விருந்து அளித்தார்.

5. பூடான் தேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் பெமா ஜியாம்ட்ஷோ -வும் பிரதமர் திரு. மோடியை சந்தித்தார்.

6. 2019 மே 30 ஆம் தேதி தாம் பதவியேற்ற போது நேரில் வந்திருந்து வாழ்த்தியதற்காக பிரதமர் டாக்டர் ட்ஷெரிங்கிற்கு பிரதமர் திரு. மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். அந்த சமயத்தில் தாங்கள் விவாதித்த விஷயங்கள் பற்றி அவர் நினைவுகூர்ந்தார். இந்தியா மற்றும் பூடான் இடையில் உயர்நிலை அளவில் தொடர்பு கொள்ளும் பாரம்பரிய நடைமுறைகள் விசேஷ மற்றும் முன்விருப்ப உரிமை அடிப்படையிலான உறவுகளின் சிறப்பம்சமாக உள்ளது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

7. பேச்சுவார்த்தைகளின்போது, இரு தரப்பு உறவுகளில் அனைத்து அம்சங்களையும் இரு பிரதமர்களும் விரிவாக ஆய்வு செய்தனர். பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் முக்கிய மாறுதல்கள் பற்றியும் அவர்கள் பேசினர். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையில் இருதரப்பு உறவுகள் செம்மையாக இருப்பதாக இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். வரலாற்று ரீதியிலும், கலாச்சார ரீதியிலும், பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் மக்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளின் அடிப்படையில் இவை அமைந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தியாவுக்கும் பூடானுக்கு இடையில் உள்ள நட்புறவு, பக்கத்து நாடுகளுக்கு இடையில் நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு உதாரணமாக அமையும் வகையில் இருப்பதற்கு ஏற்ப, உறவுகளை வளர்ப்பதில் பூடானின் தொலைநோக்கு சிந்தனை கொண்ட ராஜவம்சத்தினரும், இந்தியா மற்றும் பூடானில் அடுத்தடுத்து வந்த தலைமைகளும் கவனம் செலுத்தியதற்கு இரு தரப்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

8. பாதுகாப்பு அம்சங்களில் இரு தரப்புக்கும் உள்ள அக்கறை பற்றியும் உறுதி அளிக்கப்பட்டது. பரஸ்பரம் பாதுகாப்பு மற்றும் தேச நலன்களைப் பாதிக்கும் விஷயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பு வைத்துக் கொள்வது என்பதை இரு தரப்பாரும் வலியுறுத்தினர்.

9. பூடானின் பொருளாதார மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு இந்திய அரசு உதவி அளிக்கும் என பிரதமர் திரு. மோடி உத்தரவாதம் அளித்தார். அரசு மற்றும் பூடான் மக்களின் விருப்பங்கள் மற்றும் முன்னுரிமைகளின் படி அவை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். நடுத்தர வருவாய் நாடாக வகைப்பாடு மாறியதற்காக பூடான் அரசுக்கும், மக்களுக்கும் பிரதமர் திரு. மோடி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். `ஒட்டுமொத்தமான தேசிய மகிழ்ச்சி' என்ற பூடானின் தனித்துவமான வளர்ச்சிக் கோட்பாட்டின்படி, மிகுந்த கலாச்சார பாரம்பரியம் மற்றும் மதிப்புமிக்க சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியவாறு இந்தச் சாதனையை நிகழ்த்தியதற்காக பூடான் மக்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

10. பிரதமர் டாக்டர் ட்ஷெரிங் 2018 டிசம்பரில் இந்தியாவுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தை கனிவுடன் நினைவுகூர்ந்தார்; 2018 நவம்பர் மாதம் பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அது இருந்தது. பூடானின் தற்போதைய 12வது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த தசாப்தங்களில் பூடானின் வளர்ச்சிக்கு இந்தியா அளித்த பங்களிப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

11. நீர்மின் உற்பத்தி மேம்பாடு திட்டங்கள், இருதரப்புக்கும் பயன்தரக் கூடிய முக்கியமான திட்டங்களாக இருக்கும் என்று இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில் முடிக்கப்பட்ட 720 மெகாவாட் திறன் கொண்ட மாங்டெச்சு நீர்மின் உற்பத்தி நிலையத்தை இரு பிரதமர்களும், முறைப்படி தொடங்கி வைத்தனர்.  குறித்த காலத்துக்குள் இத் திட்டம் முடிக்கப்பட்டதை இருவரும் பாராட்டினர். கடமை உணர்வுடன், திறனை நிரூபிக்கும் வகையில் பணிகளை முடித்த திட்ட ஆணையம் மற்றும் நிர்வாகத்தினரை அவர்கள் பாராட்டினர். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, பூடானின் மொத்த மின் உற்பத்தி 2000 மெகாவாட் அளவைத் தாண்டிவிட்டது என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த முக்கியமான மைல்கல் எட்டப்பட்டதற்கு இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். தற்போது பணிகள் நடைபெற்று வரும் புனாட்சங்ச்சு -1, புனாட்சங்ச்சு -2 மற்றும் கோலோங்ச்சு போன்ற திட்டங்களை விரைந்து முடிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்க இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது. சன்கோஷ் நீர்த்தேக்க நீர்மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவு செய்யப்பட்டால், இரு நாடுகளுக்கும் பெரிய பயன்கள் கிடைக்கும் என்ற நிலையில், பணிகள் தொடங்குவதை விரைவுபடுத்தும் நடைமுறைகளை விரைவில் இறுதி செய்வதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். நீர்மின் உற்பத்தித் துறையில் இந்தியா – பூடான் இடையில் பரஸ்பர ஆதாய ஒத்துழைப்பின் ஐம்பது ஆண்டு கால உறவைக் குறிக்கும் வகையில் பூடான் தபால் தலைகளை இரு பிரதமர்களும் கூட்டாக வெளியிட்டனர்.

12. இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள ரூப்பே (RuPay) கார்டுகளை பூடானில் பயன்படுத்தும் வசதியை இரு பிரதமர்களும் முறைப்படி தொடங்கி வைத்தனர். இதனால் பூடானுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் ரொக்கமாக எடுத்துச் செல்வதன் கட்டாயம் குறைவதுடன்,பூடான் பொருளாதாரம் உயரவும், இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இது உதவியாக இருக்கும். அடுத்த கட்ட திட்டம் பற்றி,அதாவது பூடான் வங்கிகளில் ரூப்பே கார்டுகள் வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்த இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு செல்லும் பூடான் பயணிகளும் பயன் பெறுவார்கள். மேலும், இரு நாடுகளிலும் ரூப்பே கார்டுகளை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். ரூப்பே கார்டு திட்டம் தொடங்கப் பட்டதுடன், இந்தியாவின் பீம் ஆப்-ஐ பூடானில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், இரு நாடுகளுக்கு இடையில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

13. தெற்காசிய செயற்கைக் கோள் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை திம்புவில் இரு பிரதமர்களும் தொடங்கி வைத்தனர். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்(இஸ்ரோ) ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் தெற்காசிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதில் பிரதமர் திரு. மோடிக்கு இருந்த தொலைநோக்கு சிந்தனைக்கு பிரதமர் டாக்டர் ட்ஷெரிங் பாராட்டு தெரிவித்தார். தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு ஒரு பரிசாக இதை திரு. மோடி அளித்தார். அதன் மூலம் பூடான் ஒலிபரப்பு சேவைகள் கிடைக்கும் எல்லைகளை விரிவுபடுத்த முடிந்ததுடன், அதற்கான செலவு குறைந்தது. மேலும் பூடானுக்குள் பேரிடர் மேலாண்மை திறன்கள் மேம்படுவதற்கும் உதவியாக இருந்தது.

14. பூடானின் சமூகப் பொருளாதார மேம்பாட்டில் தெற்காசிய செயற்கைக்கோள் ஏற்படுத்தும் ஆக்கபூர்வ தாக்கத்தை அங்கீகரித்த பிரதமர் திரு மோடி, பூடானின் தேவைகளின்படி கூடுதல் டிரான்ஸ்பான்டரில் அதிக அலைவரிசையை பூடானுக்குப் பரிசாக அளிக்கவும் முன்வந்தார். நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் பயன் கிடைக்கும் வகையில் விண்வெளி ஆதாரங்களை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மேன்மைமிகு மன்னரின் தொலைநோக்கு சிந்தனையை முன்னெடுத்துச் செல்வதில், இந்தப் பரிசு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்று பிரதமர் டாக்டர் ட்ஷெரிங் வரவேற்பு தெரிவித்தார். இரு தரப்பு உறவுகளும் விண்வெளியிலும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது என்ற புதிய அத்தியாயம் இதன் மூலம் உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

15. பூடானுக்காக சிறிய செயற்கைக்கோள் ஒன்றை கூட்டாக உருவாக்குவதில் ஒத்துழைக்கவும் இரு தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்தனர். இந்தத்திட்டத்தை அமல்படுத்த கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க அவர்கள் உத்தரவிட்டனர். மேலும்,இயற்கை வள ஆதாரங்கள், பேரிடர் மேலாண்மைக்கு தரைக் கட்டுப்பாட்டு முறைமை ஒன்றை உருவாக்குவதற்கும், தொலை உணர்வு மற்றும் தரைப்பரப்பு இடைவெளி தகவல்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களையும் இந்தக் குழு கவனிக்கும்.

16. டிஜிட்டல் மற்றும் புதிதாக உருவாகும் தொழில்நுட்பங்களுடன், விண்வெளி தொழில்நுட்பமும் சேர்ந்து ஒரு நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் உதவியாக இருக்கும் என்பதை அங்கீகரித்த இரு தலைவர்களும், இந்த விஷயங்களில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான தேவை உள்ளது என ஒப்புக்கொண்டனர்.

17. இந்திய தேசிய அறிவுசார் நெட்வொர்க் மற்றும் பூடான் ஆராய்ச்சி மற்றும் கல்வி நெட்வொர்க் இடையில் தொடர்பு வசதியை இரு பிரதமர்களும் தொடக்கி வைத்தனர். இரு நாடுகளிலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையில் பெரிய அளவில் கலந்தாடலை ஊக்குவிப்பதாகவும், தகவல் பரிமாற்ற வசதியை உருவாக்குவதாகவும் இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

18. பயணத்தின் போது பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன:

i) தெற்காசிய செயற்கைக்கோள் பயன்பாட்டுக்கு சேட்காம் நெட்வொர்க் உருவாக்குவதற்கு பூடான் ராயல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைக்கும்,இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ii) தேசிய அறிவுசார் நெட்வொர்க் மற்றும் பூடானின் துருக் ஆராய்ச்சி மற்றும் கல்வி நெட்வொர்க் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

iii) இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுக் குழுவுக்கும், பூடானின் விமான விபத்து புலனாய்வுக் குழுவுக்கும் இடையில், விமான விபத்து மற்றும் சம்பவம் பற்றிய புலனாய்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

iv – vii) பூடான் ராயல் பல்கலைக்கழகத்திற்கும், கான்பூர், டெல்லி, மும்பை ஐ.ஐ.டி.கள் மற்றும் சில்சார் என்.ஐ.டி.க்கும் இடையில் கல்வி ரீதியிலான பரிமாற்றங்களுக்கான நான்கு(04) புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

viii) பெங்களூருவில் உள்ள இந்தியப் பல்கலைக்கழக தேசிய சட்டக் கல்லூரிக்கும்,திம்புவில் உள்ள ஜிக்மே சிங்யே வாங்சுக் சட்டக் கல்லூரிக்கும் இடையில், சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ix) பூடான் தேசிய சட்டக் கல்வி நிலையம் மற்றும் போபால் தேசிய நீதித் துறை அகாடமி இடையில், நீதித்  துறை கல்வி மற்றும் பரஸ்பர பரிமாற்றங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

x) மாங்டெச்சு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சார கொள்முதல் செய்வது தொடர்பாக பி.டி.சி. இந்தியா லிமிடெட் மற்றும் பூடானின் துருக் பசுமை மின் கார்ப்பரேஷன் இடையிலான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம்.

19. பூடானின் ராயல் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பூடான் இளைஞர்கள் மத்தியில் பிரதமர் திரு. மோடி உரையாற்றினார். மக்களை மையமாகக் கொண்ட இரு தரப்பு உறவுகள் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள ஆழமான ஆன்மிக மற்றும் புத்த மதத் தொடர்புகள் பற்றியும் பேசினார். இந்தியா – பூடான் உறவுகளைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதில், கல்வி மற்றும் உயர் தொழில்நுட்பங்களில் இரு நாடுகளின் இளைஞர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பூடானில் வளர்ச்சி, சுற்றுச்சூழல், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடையே உரசல் ஏதும் இல்லாமல்,ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.  இந்த நல்லிணக்கமும், `மகிழ்ச்சிக்கான' அழுத்தமும், மனிதகுலத்துக்கு பூடான் அளிக்கும் முன்மாதிரி தகவல் என்றார் அவர். விண்வெளி, டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் இரு தரப்பு பங்கேற்பின் புதிய அத்தியாயங்களை அவர் கோடிட்டுக் காட்டினார். புதுமை சிந்தனைகளுக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் இவற்றை இளைஞர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் டாக்டர் ட்ஷெரிங், தேசிய நாடாளுமன்றம் மற்றும் பூடான் தேசியக் கவுன்சில் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

20. பூடான் குடிமக்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்கச் செய்வதில் பிரதமர் டாக்டர் ட்ஷெரிங் காட்டும் உறுதிக்கு பிரதமர் திரு. மோடி பாராட்டு தெரிவித்தார். பூடானில் பன்முக வசதி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றைப் புதிதாக அமைப்பதற்கான திட்டமிடலில் தொழில்நுட்ப ஆதரவு அளிப்பதற்காக இந்தியாவில் இருந்து நிபுணர் குழு ஒன்று சமீபத்தில் பூடானுக்கு சென்றிருந்தது பற்றி இரு தரப்பிலும் குறிப்பிடப்பட்டது.

21. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்த இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பிரதமர் டாக்டர் ட்ஷெரிங் 2018 டிசம்பரில் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, இரு தரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை பலப்படுத்துவதற்காக 400 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக ஆதரவு வசதி அளிக்க இந்திய அரசு முன்வந்ததற்கு பூடான் ராயல் அரசு நன்றி தெரிவித்துக் கொண்டது. முதல் தவணையாக 80 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு இந்திய அரசுக்கு பூடான் அரசு நன்றி தெரிவித்துக் கொண்டது. சார்க் ரொக்க பரிமாற்ற கட்டமைப்பு வசதியின் கீழ், ரொக்கம் பரிமாற்றத்துக்கான வரம்பை உயர்த்த வேண்டும் என்ற பூடானின் கோரிக்கையை சாதகமாக பரிசீலனை செய்வதாக பிரதமர் டாக்டர் ட்ஷெரிங்கிற்கு, பிரதமர் திரு. மோடி உறுதி அளித்தார். இடைக்கால நடவடிக்கையாக, தற்காலிக ரொக்கப் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ரொக்கப் பரிமாற்றத்துக்கு பிரதமர் திரு. மோடி ஒப்புக்கொண்டார்.

22. பூடான் ராயல் அரசின் கோரிக்கையின்படி, பூடானுக்கான மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு ஒதுக்கீட்டு அளவை மாதத்துக்கு 700 எம்.டி. என்பதில் இருந்து 1000 எம்.டி.யாக உயர்த்துவதாக பிரதமர் திரு. மோடி அறிவித்தார். அதிகரித்து வரும் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும், கிராமப் பகுதிகளில் சமையல் எரிவாயு கிடைக்கச் செய்யவும் இந்த ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்கப் பட்டுள்ளது.

23. திம்புவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செம்டோக்கா ட்ஜோங்கில் பிரதமர் திரு. மோடி வழிபாடு செய்தார். பூடான் அரசை உருவாக்கிய மரியாதைக்குரிய ஜாப்ட்ரங் நிகாவாங் நம்கியால் -ன் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது. கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான நெருக்கமான பிணைப்புகளை மனதில் கொண்டு, கடன் காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பதாக பிரதமர்  திரு. மோடி அறிவிப்பு செய்தார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயிலும் பூடான் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை எண்ணிக்கையை 2-ல் இருந்து 5 ஆக உயர்த்துவதாகவும் அவர் அறிவித்தார்.

24. பாரம்பரிய ஒத்துழைப்பு அம்சங்களில் பங்கேற்பை பலப்படுத்துவதற்கு இரு தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பூடான் இளைஞர்களுக்கு இடையில் பெரிய அளவில் பரிமாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

25. பிரதமர் திரு. மோடியின் வருகையின் போது நிகழ்ந்த கனிவான, நட்புணர்வுடன் கூடிய கலந்துரையாடல்கள், நம்பகத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வெளிக்காட்டுவதாக இருந்தன. பூடான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் உள்ள தனித்துவமான மற்றும் சிறப்பு நட்புறவின் நீண்ட சிறப்புகளை வெளிக்காட்டுவதாகவும் இருந்தன.

 
Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Robust activity in services sector holds up 6.3% GDP growth in Q2

Media Coverage

Robust activity in services sector holds up 6.3% GDP growth in Q2
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 1, 2022
December 01, 2022
பகிர்ந்து
 
Comments

India Begins its G-20 Presidency With a Vision of ‘Vasudhaiva Kutumbakam’ for Global Growth and Development

Citizens Appreciate India’s Move Towards Prosperity and Inclusion With The Modi Govt.