எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நண்பர்களே, இன்றைய மனதின் குரலில் நாட்டின் மகத்துவம் வாய்ந்த ஆளுமையைப் பற்றி நான் பேச இருக்கிறேன். நம்மனைவரின் மனங்களிலுமே அவர் மீதான பெரும் மரியாதை இருக்கிறது, பிடிப்பு இருக்கிறது. அவர் மீது மரியாதை கொண்டிராத, அவருக்கு மதிப்பு அளிக்காத இந்தியக் குடிமகன் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவர், வயதில் நம்மனைவரையும் விட மிகவும் மூத்தவர், நாட்டின் பல்வேறு நிலைகளிலும், வேறுவேறு காலகட்டங்களிலும் சாட்சியாக அவர் விளங்கியவர். நாமெல்லாரும் அவரை தீதி, அதாவது சகோதரி என்று அழைப்போம் – லதா தீதி. அவருக்கு இந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் தேதியன்று 90 வயதாகிறது. அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக சகோதரியோடு தொலைபேசியில் உரையாடும் பேறு எனக்குக் கிட்டியது. இந்த உரையாடல் எப்படி இருந்தது தெரியுமா? கரிசனமான மனமுடைய ஒரு இளைய சகோதரன், தனது மூத்த சகோதரியோடு எப்படி உரையாடுவானோ அப்படி இருந்தது. நான் பொதுவாகத் தனிப்பட்ட உரையாடல்கள் பற்றிப் பேசுவது இல்லை, ஆனால் இன்று பேச விரும்புகிறேன், நீங்களும், லதா தீதி கூறுவதைக் கேளுங்களேன், எங்கள் உரையாடலைக் கேளுங்களேன். மூப்பு நிறைந்த இந்த நிலையிலும் லதா தீதி, நாடு தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் எத்தனை உற்சாகமாக இருக்கிறார், எத்தனை முனைப்போடு இருக்கிறார் என்பது உங்களுக்கே விளங்கும். வாழ்க்கையின் சந்தோஷங்கள் கூட, இந்தியாவின் முன்னேற்றத்தில் இருக்கிறது, மாறிவரும் இந்தியாவில் இருக்கிறது, புதிய சிகரங்களைத் தொடும் இந்தியாவில் இருக்கிறது. இவை அவரது சொற்களில் பிரதிபலிக்கிறது.
மோதி ஜி: லதா தீதி, வணக்கம்! நான் நரேந்திர மோதி பேசுகிறேன்.
லதா ஜீ: வணக்கம்.
மோதி ஜீ: நான் ஏன் ஃபோன் செஞ்சேன்னா, இந்த முறை உங்க பிறந்த நாள் அன்னைக்கு….
லதா ஜீ: ஆமாம் ஆமாம்.
மோதி ஜி: நான் விமானத்தில பயணம் செஞ்சிட்டு இருப்பேன்.
லதா ஜீ: சரி.
மோதி ஜி: அதனால நான் என்ன நினைச்சேன்னா முன்னமேயே…
லதா ஜீ: ஓ சரி சரி.
மோதி ஜி: உங்க பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்க நினைச்சேன், முதல் வாழ்த்துக்கள் என்னோடது தான். நீங்க ஆரோக்கியமா இருக்கணும், உங்க ஆசிகளால நாங்க எல்லாரும் நல்லா இருக்கணும், இது தான் நான் உங்க கிட்ட வைக்கற வேண்டுதல், உங்களுக்கு என் வணக்கங்களைத் தெரிவிச்சுக்கத் தான், நான் அமெரிக்கா போகறதுக்கு முன்னாடி உங்களுக்குப் ஃபோன் செஞ்சேன்.
லதா ஜீ: உங்க ஃபோன் வரும்னு நான் கேட்டதிலிருந்தே ரொம்ப சந்தோஷமாயிட்டேன், காத்துக்கிட்டு இருந்தேன். சரி, நீங்க எப்ப திரும்பி வருவீங்க.
மோதி ஜீ: சொல்லப்போனா நான் 28ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, இல்லை 29 காலையில தான் வருவேன், ஆனா அதுக்குள்ள உங்க பிறந்த நாள் கடந்து போயிருக்குமே!!
லதா ஜீ: ஓ ஆமாம் ஆமா. என்ன பெரிசா பிறந்த நாளைக் கொண்டாடப் போறேன், எல்லாம் வீட்டுல இருக்கறவங்க தான்…..
மோதி ஜி: தீதி ஒரு வேண்டுதல்…
லதா ஜீ: உங்க ஆசிகள் வேணும்.
மோதிஜி: அட, உங்க ஆசிகளை நாங்க வேண்டறோம், நீங்க என்னடான்னா…… நீங்க எங்க எல்லாரையும் விடப் பெரியவங்க.
லதா ஜீ: வயதில ரொம்ப பெரியவங்க சிலர் இருப்பாங்க, ஆனா யாரு தாங்கள் செய்யற வேலையில மகத்தானவங்களா இருக்காங்களோ, அவங்களோட ஆசிகள் கிடைக்கறது தான் பெரிய விஷயம்.
மோதி ஜி: தீதி, நீங்க வயதிலயும் மூத்தவங்க, பணியிலயும் மூத்தவங்க. நீங்க செய்திருக்கற சாதனை, இதெல்லாம் இடைவிடாத சாதகத்தாலயும், தவம் காரணமாகவும் அடைஞ்சிருக்கீங்க.
லதா ஜீ: ஐயா, நான் இதெல்லாம் என் பெற்றோரோட ஆசிகளால தான்னு நம்பறேன், மேலும் என் பாட்டைக் கேட்கறவங்களோட ஆசிகளும் கூடத் தான். நான் ஒண்ணுமே கிடையாதுங்க.
மோதி ஜி: தீதி, இது தான் உங்களோட பணிவு. நம்ம புதிய தலைமுறையைச் சேர்ந்தவங்க மட்டுமில்லாம, எங்க எல்லாருக்குமே இது ஒரு பெரிய கற்றல் அனுபவம், நீங்க எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய கருத்தூக்கமா விளங்கறீங்க, உங்க வாழ்க்கையில இத்தனை சாதனைகளை நீங்க நிகழ்த்திய பிறகும் கூட, நீங்க எப்பவுமே உங்க பெற்றோருடைய வளர்ப்புக்கும், பணிவான நடத்தைக்குமே முதன்மை அளிச்சு வந்திருக்கீங்க.
லதா ஜி: ஆமாம்.
மோதி ஜீ: உங்க அம்மா குஜராத்திக்காரங்கன்னு நீங்க பெருமிதம் பொங்க சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
லதா ஜீ: ஆமாம்.
மோதி ஜீ: நான் எப்ப எல்லாம் உங்களைப் பார்க்க வந்திருக்கேனோ
லதா ஜீ: ஆமாம்
மோதி ஜீ: நீங்க ஏதாவது ஒரு குஜராத்தி உணவுப்பொருளை உண்ணக் கொடுத்திருக்கீங்க.
லதா ஜீ: ஆமாம். நீங்க யாருங்கறது உங்களுக்கே தெரியாது. நீங்க வந்த பிறகு பாரத நாட்டோட திருவுருவம் மாறிவருதுங்கறது எனக்குத் தெரியும், இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை அளிக்குது. எனக்கு இந்த உணர்வு ரொம்ப அருமையா இருக்கு.
மோதி ஜி: நன்றி தீதி, உங்க ஆசிகள் என்னைக்கும் எனக்குக் கிடைக்கணும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் உங்க ஆசிகள் கிடைச்சுக்கிட்டே இருக்கணும், எங்களை மாதிரி ஆளுங்க ஏதாவது நல்லது செய்துக்கிட்டே இருக்கணும், இதுக்கான உத்வேகம் அளிக்கறவங்களா நீங்க என்னைக்கும் இருந்து வந்திருக்கீங்க. நீங்க எழுதற கடிதங்கள் எனக்குத் தொடர்ந்து கிடைச்சிட்டு இருக்கு, உங்களை சந்திக்கறதுக்கான பேறும் எனக்கு கிடைச்சு வந்திட்டு இருக்கு. என்னை உங்களோட சொந்தமா நினைக்கற ஒரு குடும்பப்பாங்கான உறவு, எனக்கு சிறப்பான ஆனந்தத்தை அளிக்குது.
லதா ஜீ: சரி சரி. நிஜமா நான் உங்களுக்கு எந்த சிரமமும் கொடுக்க விரும்பலை. ஏன்னா, நீங்க எத்தனை சுறுசுறுப்பா இயங்கறீங்க, உங்களுக்கு எத்தனை வேலை இருக்குன்னு எல்லாம் நான் பார்க்கவும் செய்யறேன், எனக்கும் தெரியும். நீங்க உங்க தாயாரோட பாதங்களைத் தொட்டு ஆசிகளைப் பெறுவதைப் பார்த்துட்டு, நானும் ஒருத்தரை அவங்க கிட்ட அனுப்பி அவங்க ஆசிகளைப் பெற்றேன்.
மோதி ஜீ: ஆமாம், எங்கம்மாவுக்கு நினைப்பு இருந்திச்சு, அவங்க என் கிட்ட சொன்னாங்க.
லதா ஜீ: சரி.
மோதி ஜீ: ஆமாம்.
லதா ஜீ: மேலும் டெலிஃபோன்ல அவங்க எனக்கு ஆசியளிச்சாங்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.
மோதி ஜீ: உங்க அன்பு காரணமா, எங்கம்மா ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க.
லதா ஜீ: ஓஹோ, அப்படியா?
மோதி ஜீ: என் மேல நீங்க தொடர்ந்து காட்டி வந்திருக்கற அக்கறைக்கு நான் என்னைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன். மறுபடி ஒருமுறை உங்களுக்கு என் அன்புநிறை பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.
லதா ஜீ: சரி.
மோதி ஜீ: இந்தமுறை மும்பை வந்த போது, உங்களை சந்திச்சுப் பேச நினைச்சேன்.
லதா ஜீ: ஆஹா, வந்திருக்கலாமே!!
மோதி ஜீ: ஆனா நேரம் ரொம்ப குறைவா இருந்த காரணத்தால என்னால வர முடியலை.
லதா ஜீ: ஓஹோ, சரி.
மோதி ஜீ: ஆனா நான் சீக்கிரமாவே வருவேன்.
லதா ஜீ: அவசியம் வாங்க.
மோதி ஜீ: நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க கையால சில குஜராத்தி உணவுகளை கண்டிப்பா சாப்பிடுவேன்.
லதா ஜீ: ஆஹா, கண்டிப்பா, கண்டிப்பா, அது எனக்குப் பெரிய பாக்கியம்.
மோதி ஜீ: வணக்கம் சகோதரி.
லதா ஜீ: வணக்கம்.
மோதி ஜீ: பலப்பல நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
லதா ஜீ: பலப்பல நல்வணக்கங்கள். நன்றி.
மோதி ஜீ: வணக்கம் சகோதரி.
லதா தீதியுடனான இந்த உரையாடல் உண்மையிலேயே என் மனதுக்கு மிகுந்த ஆசுவாசத்தையும் சந்தோஷத்தையும் அளித்தது நண்பர்களே.