பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை

February 12th, 03:22 pm

பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள், கல்வித்துறை பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுகூடினர். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறை பொது நலனுக்காக நன்மை பயக்கும் என்பதையும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு நல்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர். பிரான்சின் செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமர் மோடி, அதிபர் மக்ரோனை வாழ்த்தினார். அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதை பிரான்ஸ் வரவேற்றது.